Friday 25 May 2007

Listeria monocytogenes


உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் அறிமுகம் -1


Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3



படம் பெறப்பட்டது : http://wishart.biology.ualberta.ca/BacMap/includes/species/Listeria_monocytogenes.png

Listeria monocytogenes ஆனது உணவு பொருட்களோடு மனிதனை அடைந்து மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியா (Bacteria) ஆகும். இது 2 பாகை டிகிரி செல்சியசில் இருந்து 45 பாகை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடிய பக்ரீரியா ஆக இருந்த போதும், இது வளர்வதற்கு மிகவும் உவப்பன வெப்பநிலை 30-37 பாகை டிகிரி செல்சியஸ் ஆகும். Listeria monocytogenes மனிதனில் ஏற்படுத்தும் நோயை (லிஸ்ரிரியோசிஸ்) listeriosis என அழைப்பர்.
இது பிரதானமாக


1. நிர்பீடன குறைபாடு உள்ளவர்கள் (immunocompromised): உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
2. பிறந்த குழந்தைகள்
3. வயது வந்தோர்
4. கர்ப்பிணி பெண்கள்

ஆகிய மக்கள் குழுமத்தை அதிகம் தாக்குவதனால் இதை opportunistic pathogen என அழைப்பர். இது பொதுவாக சுக தேகிகளை பாதிப்பதில்லை.


இதனால் ஏற்படும் நோயின் விளைவுகளாக

1. மூளைகாய்ச்சல் ? / மூளை அழற்சி (meningitis): மூளை, முண்ணான் மென்சவ்வுகளில் (membrane) ஏற்படும் அழற்சி (inflammation).
2. Septicaemia : குருதியில் அதிக அளவில் பக்ரீரியா காணப்படல்/ பெருக்கம்/ குருதி நஞ்சாக்கம்
3. கருச்சிதைவு (abortion)

ஆகியவை குறிப்பிடப்படுகிறன.



உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள்



80 ஆண்டுகளுக்கு முன்னர் Listeria monocytogenes ஆய்வுகூட விலங்குகளில் Septicaemia நோயை ஏற்படுத்துவதாக அறியப்பட்டது. 1929 ஆம் ஆண்டில் மனிதனில் முதன் முதலாக இதன் நோய்த்தாக்கம் அறியப்பட்டாலும் மிக நீண்ட காலமாக மனிதனில் இதன் தாக்கம் இருப்பதாக அறியப்பட்டிருக்கவில்லை.

1981 ஆம் ஆண்டில் முதலாவாது மிகவும் அதிக அளவிலான நோய்த்தாக்கம் கனடாவில் அறியப்பட்டது. இதன் போது 41 மக்கள் பாதிக்கப்பட்டார்கள், அவர்களில் 34 பேர் கர்ப்பிணி பெண்களாவர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் முட்டை கோசு (கோவா/cabbage) மூலம் பரவியது அறியப்பட்டது. பின்னர் 1985 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எட்டு மாத காலப்பகுதியில் மெக்சிக்கன் வகை சீஸ் (Mexican style cheese) ஐ உட்கொண்ட 142 பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் முன்றில் ஒரு பங்கினர் நோய் காரணமாக உயிர் இழந்தனார். 1987- 1989 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இங்கிலாந்தில் pâté (spreadable paste made from meat) எனும் உணவை உட்கொண்ட 350 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். பிரான்ஸ் நாட்டில் 1992 ஆம் ஆண்டில் பன்றி இறைச்சியில் (Pork tongue in aspic) செய்யப்பட்ட உணவை உட்கொண்ட 279 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவற்றை விட இன்னும் பல நாடுகளில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் இதன் நோய்த்தாக்கம் சரியானமுறையில் மருத்துவ பதிவேடுகளில் குறிப்பிட படாமை, ஆங்காங்கு சிதறலாக நடை பெறும் ஓரிரு சம்பவங்கள் போதுமான கவனத்தை பெறாமை போன்ற காரணங்களால் இதன் தாக்கம் குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் இருக்க முடியும்.




Listeria monocytogenes தாக்கம் தற்போது அதிகரித்து செல்வதற்கான காரணங்கள்



இது சூழலின் அனைத்து பகுதிகளிலும் அதாவது மண், நீர், கழிவுகள், மனித விலங்கு கழிவுகள் ஆகியவற்றில் காணப்படுகிறது. அத்துடன் மண்ணில் இது அழுகலடையும் அல்லது பிரிந்தழியும் (decaying) தாவர கழிவுகளில் வாழக்கூடியது. மேலும் பாதமான சூழ்நிலைகளிலும் (அதிகரித்த உப்பு செறிவு, அமில தன்மை, குளிரூட்டப்பட்ட இடங்கள்) வாழக்கூடியதாக இருப்பதால் உணவு தயாரிக்கும் இடங்களில் இருந்து இதை அப்புறப்படுத்துவது மிக கடினமானது.

1. உணவு பொருட்களில் இயற்கையாக அவற்றை பழுதடைய (Spoilage) செய்யும் நுண்ணங்கிகள் குறிப்பாக பக்ரீரியாக்கள் காணப்படுகிறன. இவற்றுடன் Listeria monocytogenes போட்டி போட்டு உணவில் பெருகும் வல்லமை அற்றது. ஆனால் தற்போதைய உணவு பாதுகாப்பு முறைகளால் உணவை பழுதடைய செய்யும் நுண்ணங்கிகள் (Food spoilage microorganisms) உணவு பொருட்களில் இருந்து அகற்றப்படுகிறன அல்லது எண்ணிக்கையில் குறைக்கப்படுகிறன. இதனால் Listeria monocytogenes உடன் போட்டிக்கு நுண்ணங்கிகள் இல்லாது போவதால் இலகுவில் உணவுப்பொருட்களில் பெருகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2. தற்போதைய அதிகரித்த சுகாதார வசதிகளால், வயது வந்தோர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரித்து செல்கிறது. வயது வந்தோர் Listeria monocytogenes இன் தாக்கத்துக்கு இலகுவில் உள்ளாக கூடியவர்கள்.

3. தற்போது உணவு பொருட்கள் பெரும் நிறுவனங்களில் தயாரிக்கப்படுவதுடன், திடீர் உணவு வகைகளை தயாரிப்பதற்காக மிகப்பெரிய சமையலிடங்கள் பயன்படுத்தப்படுகிறன. இதன் போது துப்பரவு பேணுவதில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இதன் தொற்று உணவில் இலகுவில் ஏற்பட முடியும்.

4. தற்போது மக்கள் அதிக அளவில் குளிரூட்டியை (Refrigerator) பாவித்து வருகிறார்கள். Listeria monocytogenes குளிரூட்டல் நிபந்தனைகளில் வாழ்ந்து பெருகக்கூடியது. தற்செயலாக குளிரூட்டியில் ஒரு முறை தொற்று ஏற்பட்டால், அது தொடர்ச்சியாக குளிரூட்டியில் நிலைத்திருந்து அடுத்து அங்கு பேணப்படும் உணவுகளில் தொற்றை ஏற்படுத்தி அதை உண்ணுவோரை பாதிக்க முடியும்.

5. உலக அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் இயற்கை உணவுகள், மற்றும் அதிக உணவு பாதுகாப்பு செயன்முறைகளுக்கு உட்படாத உணவு வகைகள்.

6. தற்போதைய நவீன கணினி வலைப்பின்னல் உலகின் மூலை முடுக்குகளில் நடைபெறும் இதன் தாக்கம் பற்றிய தரவுகளை ஒன்றிணைக்க உதவி செய்கிறது. இதனால் முன்னர் கணிப்புக்கு வராத சம்பவங்கள் அனைத்தும் தற்போது கணிப்பில் சேர்த்துகொள்ளப்படுகிறது.




Listeria monocytogenes இன் தொற்றும் நோய் உருவாக்கமும்



அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வருடாந்தம் மில்லியன் மக்களில் 2- 14 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

மனிதரில் உணவு உள்ளேடுக்கப்படும் போது தொற்று ஏற்பட்ட உணவின் மூலம் இது குடல் பகுதியை அடைகிறது. குடல் பகுதியில் இருக்கும் Peyer's patches ஐ அடைந்து பெருக்கமடைவதுடன், குருதி (Blood), நிண நீர் (Lymph) மூலம், ஈரல் (Liver) , சதையி (Spleen) போன்றவற்றை அடைந்து அங்கு பெருக்கமடைகிறது. ஆனால் மைய நரம்பு தொகுதியை எப்படி சென்றடைகிறது என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.

இது ஒரு கலத்தினுள் பெருக்கமடையும் நோயாக்கி (Intracellular pathogen). ஒரு கலத்தினுள் உள் நுளைந்து அங்கு பெருக்கமடைந்து, பின்னர் ஜெட் போன்ற ஒரு அசைவின் மூலம் பெறும் உந்து சக்தியால் அடுத்த கலத்தை துளைத்து உள் நுளைகிறது. இதனால் சாதாரணமான நுண்ணுயிர் கொல்லிகளினால் (antibiotic) இதனை கட்டுபடுத்த முடிவதில்லை.




படம் பெறப்படது:http://mcb.berkeley.edu/labs/portnoy/Listeria%20Cycle%20(original).gif

Listeria monocytogenes பிரதானமாக மைய நரம்பு தொகுதி (Central nervous system - CNS) பகுதியிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இதன் பாதிப்புக்கு உட்பட்ட 20 - 30% மக்கள் இறப்பை சந்திக்கிறனர்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் அவர்களின் கர்ப்ப காலத்தில் எந்த நேரமும் நோய் தாக்கத்துக்கு உட்பட முடியும் ஆயினும் கர்ப்ப காலத்தின் மூன்றாம் ( இறுதி 3 மாதகாலம்) பகுதியிலேயே இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் தொற்று கர்ப்பிணி பெண்ணில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது இருக்க முடியும், அல்லது

குளிருடன் சேர்ந்த காய்ச்சல் (Flu-like syndrome with chills)
தலையிடி
தசை, மூட்டு நோக்கள்
வயிற்று உபாதைகள்

என்பவற்றையும்

கருப்பையில் ஏற்படும் தொற்று

கருச்சிதைவை,
இறந்த குழந்தை பிறப்பை
அல்லது நோய் தாக்கத்துக்கு உட்பட்ட குழந்தைப் பிறப்பையும்

விளைவாக தரமுடியும்.


பிறந்த குழந்தையில்



படம் பெறப்பட்டது: www.leighday.co.uk/cat.asp?cat=997

பிறந்து சில நாட்கள் ஆன குழந்தையில்


இந்த தொற்று தாயில் இருந்து ஏற்பட்டதாக இருக்கும்
பிரதானமாக
Sepsis
மற்றும்
Granulomatosis infantiseptica எனும் அறிகுறிக்குரிய இயல்புகளாக உடல் முழுமையும் பரவலடைந்த pyogranulomatous microabscesses உடன் அதிகரித்த இறப்பும் காணப்படும்.

பிறந்து பல நாட்கள்/ வாரங்கள் ஆன குழந்தையில்

மூளைகாய்ச்சல் / மூளை அழற்சி (meningitis)யை ஏற்படுத்துவ்தாக அறியப்பட்டுள்ளது.


வயது வந்தவர்களில்

பிரதானமாக நிர்பீடன தொகுதி பாதிக்கபட்ட முதியவர்கள், எயிட்ஸ் நோயாளிகள், நிர்பீடன தொகுதியை கட்டுப்படுத்தும் மருந்துகளை உள்ளெடுக்கும் புற்று நோயளிகளை இலகுவில் தாக்குகிறது.
50-70% சந்தர்ப்பங்களில் மைய நரம்பு தொகுதியை தாக்குகிறது.


நோய் அறிகுறி இரண்டு பகுதிகளை கொண்டது

முதல் பகுதியில்

தலைவலி, வாந்தி, பார்வை குறைபாடு, தலைச்சுற்று போன்றவையும்,

இரண்டாம் பகுதியில்
மைய நரம்பு தாக்கத்தால் உடல் அவையவங்கள் செயற்பாடுஇழத்தல், இறப்பையும் ஏற்படுத்துகிறது.



இதனை கட்டுபடுத்த உலக நாடுகளில் உள்ள கட்டுபாடுகள்.

பொதுவாக Listeria monocytogenes காணப்படும் உணவுகளாக சூடக்கப்படத/ பாஸ்ரராக்கம் (Pasteurization) செய்யப்படாத பால், புகையூட்டப்பட்ட மீன், பன்றி இறைச்சி சொசெச், உப்பிடப்பட்ட காளான், ஹொட் டொக்ஸ், சிக்கின் நகட்ஸ், அரைத்த இறைச்சி, சீஸ், மரக்கறி சலாட் என்பவற்றை குறிப்பிடலாம்.

உலகின் பல அபிவிருத்தி அடைந்த நாடுகள் Listeria monocytogenes முற்றாக இல்லாத உணவுகளை சந்தை படுத்த வேண்டும் என்பதையே விரும்புகிறன. பொதுவாக 25 கிராம் உணவில் எந்த ஒரு Listeria monocytogenes காணப்படாத இடத்து அந்த உணவு பாதுகாப்பானதாக அங்கிகரிக்கப்படுகிறது.

மக்கள் நன்கு சூடாக்கிய பாலை அருந்துவதும், இறைச்சியை முழுமையாக சமைத்து உண்பதும், மரக்கறிகளை முழுமையாக, நன்றாக கழுவிய பின் பாவிப்பதும் அத்தியாவசியமானது என அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன் சமைத்த உணவை சமைக்கத உணவுடன் தொடர்புறுமாறோ அல்லது கைகளை சுத்தம் செய்யாது மாறி மாறி உணவுகளை கையாழுவதோ தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.




குறிப்பு: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் பதிவின் தொடர்ச்சிக்காக இப்பதிவு மீள்பதிவு செய்யப்படுகிறது.

6 comments:

said...

விஜே மிகவும் பயனுள்ள கட்டுரை.
குழந்தையின் படத்தைப் பார்த்துவிட்டு வாசிக்காமல் போவமா என்று நினைச்சன்....

தாக்கம் தற்போது அதிகரித்து செல்வதற்கான காரணங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளவை மிகவும் முக்கியமானவை.கவனிக்கப்பட வேண்டியவை.

said...

சினேகிதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி

//விஜே மிகவும் பயனுள்ள கட்டுரை.
//

அப்பிடியா, அப்பச்சரி

Anonymous said...

இப்பிடி ஏதும் ஒழுங்கா எழுதலாமே

said...

//இப்பிடி ஏதும் ஒழுங்கா எழுதலாமே //

நல்ல ஆலோசனை ஆனா அத உங்க பெயரோட வந்து சொல்லி இருந்தா நல்லா இருக்குமே.

said...

என்ன விஐ வேலை செய்து களைத்து விழுந்து பசிக் கொடுமையில் காசை கொடுத்து வாங்கி பசியை போக்கின்ற எங்களுக்கு இப்படி படம் போட்டு பயப்பிடுத்துகின்றீர்கள். நல்ல தகவல்கள் விஐ. நன்றிகள்.

said...

//என்ன விஐ வேலை செய்து களைத்து விழுந்து பசிக் கொடுமையில் காசை கொடுத்து வாங்கி பசியை போக்கின்ற எங்களுக்கு இப்படி படம் போட்டு பயப்பிடுத்துகின்றீர்கள். நல்ல தகவல்கள் விஐ. நன்றிகள். //

நந்தியா வாங்கோ. உண்மையிலை சாப்பட்டை ஒழுங்கா சமைச்சா சிக்கல் இல்லை. சில இடத்தைலை ஒரு கறி அடுப்பிலை, மற்ற கறிக்கு இறைச்சியோ மரக்கறியோ வெட்டல் நடக்கும். இப்பிடி மாறி மாறி செய்யும் போது வீட்டிலும் சரி, உணவகங்களிலும் சரி இப்பிடியான பிரச்சனைகள் வரலாம். ஆனால் எப்போதும் வரும் என்பதல்ல.