Tuesday 1 May 2007

உணவு மூலம் பரவும் நோய்கள்- 1: அறிமுகம்

உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1: அறிமுகம்

முன்னர் இரண்டு பதிவுகளில் உணவு மூலம் பரவும் நோயாக்கிகளான
1. Listeria monocytogenes
2.
Escherichia coli O157: H7


இரண்டையும் பற்றி விபரித்து இருந்தேன். ஆனால் முறையாக உணவு மூலம் பரவும் நோய்கள் என்றால் என்ன? எவை முக்கியமானவை என்பவை பற்றி எந்த அறிமுகமும் தராமலே அவற்றை பதிவு செய்திருந்தேன். இந்த பதிவில் உணவு மூலம் பரவும் நோய்கள், நோயாக்கிகள் பற்றிய சிறு அறிமுகமும் அதை தொடர்ந்து முக்கியமான சில நோயாக்கிகள் பற்றி தொடர் பதிவுகளை நேரம் கிடைக்கும் :) பொழுதுகளில் தரலாம் என்று நினைக்கிறேன்.
உங்களில் யாருக்கும் ஏதாவது சிறப்பாக தெரிய வேண்டி இருந்தால் குறிப்பிட்டீர்கள் என்றால் அவை பற்றி என்னால் முடிந்த அளவுக்கு தர முயற்சிப்பேன்.



உணவு மூலம் பரவும் நோய்கள் - 1: அறிமுகம்


மாசாக்கம் அடைந்த உணவுகளை (contaminated foods) உட்கொள்ளுவதால் பல நோய்கள் பரவமுடியும். பல வகையான நுண்ணங்கிகள் உணவை மாசாக்கம் அடைய செய்யலாம், நுண்ணங்கிகளுக்கு அடுத்ததாக நச்சு தன்மையான இரசாயன (poisonous chemicals) பொருட்கள் உணவில் கலப்பதனாலும் நோய்கள் பரவல் அடையலாம்.

பொதுவாக உணவு மூலம் பரவும் நோய்களை இரண்டு பெரும் வகையாக வகைப்படுத்தலாம்

1. உணவு மூலம் ஏற்படும் தொற்றுக்கள்
உயிருள்ள நோயாக்கிகள் உணவு மூலம் பரவி மனித உடலில் நோய்களை ஏற்படுத்துவதை குறிக்கும்

2. உணவு நஞ்சாக்கம்
உணவில் பக்ரீரியா அல்லது வேறு நுண்ணங்கிகள் வளர்ச்சியடைந்து அவை நச்சு பொருட்களை சுரப்பதால் அல்லது வேறு நச்சு தன்மையான பொருடகள் உணவில் கலப்பதால் உணவு நஞ்சாக்கம் அடையலாம். அவ்வாறு நச்சு தன்மையடைந்த உணவை உண்பதால் மனிதருக்கு நோய்கள் ஏற்படலாம்.

உலகளாவிய ரீதியில் 250 க்கு மேற்பட்ட நோய்கள் உணவு மூலம் பரவுவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறு நோயை ஏற்படுத்தும் இரசாயன பொருட்கள் தவிர்ந்த நோயாக்கிகளை.

1. பக்ரீரியாக்கள் (bacteria)
2. வைரசுக்கள் (viruses)
3. ஒட்டுண்ணிகள் (parasites)
என மூன்றாக வகைப்படுத்தலாம்

பொதுவாக உணவு மூலம் பரவும் நோய்கள் என நாம் அடையாளப்படுத்தினாலும் பல நுண்ணங்கிகள் பல வழிகளில் மனிதனை அடைந்து நோயை ஏற்படுத்த முடியும். உதாரணாமாக
Escherichia coli O157: H7 பக்ரீரியா உணவு மூலம் மட்டுமன்றி, மாசடைந்த குடி நீர், மாசடைந்த நீச்சல் குளம், ஒரு நோயாளியில் இருந்து இன்னுமொருவருக்கு என பல வழிகளில் பரவலடைய முடியும்.

அண்மைய காலமாக சில நுண்ணங்கிகள் அதிக அளவில் நோயை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது. உலக சுகாதார தாபனம் (WHO) உலக அளவில் அதிகரித்த அளவில் நோயை ஏற்படுத்தி வரும் நுண்ணங்கிகள் என பின்வருவனவற்றை அடையாளப்படுத்தி உள்ளது.

1. Escherichia coli serotype O157:H7
2. Listeria monocytogenes
3. Salmonella serotype Enteritidis
4. Bovine Spongiform Encephalopathy (BSE)
5. Campylobacter

ஏன் இவ்வாறு உணவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கிறன என்பதற்கு உலக சுகாதார தாபனம் பின்வரும் காரணங்களை முன்வைக்கிறது

1. உலக மயமாக்கப்பட்ட உணவு ஏற்றுமதி, இறக்குமதி

அண்மைய காலத்து உதாரணமாக Bovine Spongiform Encephalopathy (BSE) எனும் மாட்டு பைத்திய நோய் பரவல் காரணமாக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டதை கூற முடியும்.

2. ஒரு பிரதேசத்தில் காணப்படாத நோயாக்கிகள் மனித செயற்பாடுகள் மூலம் மறைமுகமாக காவப்பட்டு புதியதொரு இடத்திற்கு பரம்பலடைய செய்யப்படல்
கொலரா நோயை ஏற்படுத்தும் Vibrio cholerae எனும் பக்ரீரியா மாசடைந்த கப்பல் கழிவு நீர் அமெரிக்காவில் உள்ள நீர் நிலைகளில் வெளியேற்றப்பட்டதால் பரம்பலடைந்தமை

3. உல்லாச பயணிகள் ,குடிபெயர்வாளர்கள், அகதிகள் போன்றவர்கள் நோயாக்கிகளின் காவிகளாக செயற்பட்டு, அவர்கள் செல்லும் நாடுகளில் காணப்படாத நோயாக்கிகளை பரவலடைய காரணமாக அமைதல்

4. நுண்ணங்கிகளில் ஏற்படும் இயற்கை தேர்ச்சி/ மாற்றங்கள்
சாதாரணமாக காணப்படும் நுண்ணங்கிகள் குறைவடையா விரியமான நுண்ணங்கிகள் தப்பி பல்கி பெருகுதல். உதாரணமாக நுண்ணுயிர்கொல்லிகளுக்கு எதிர்ப்பு தன்மையுடைய பக்ரீரியாக்கள் விருத்தியடைவதால் மனிதரில் ஏற்படும் நோய்களை சாதாரண நுண்ணுயிர் கொல்லிகளால் கட்டுப்படுத்த முடியாதிருக்கிறமை

5. மனித குடித்தொகையில் ஏற்படும் மாற்றம்
மனித குடித்தொகையில் வயது முதிர்ந்தவர்கள் எண்ணிக்கை;எயிட்ஸ், புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை என்பன அதிகரித்து செல்கிறது. இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகையால் உணவு மூலம் பரவும் நுண்ணங்கிகள் இவர்களை பாதிப்படைய செய்கிறன. ஆனால் சுக தேகிகளில் தாக்கம் குரைவாக காணப்படுகிறது.

6. வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம்
அதிக மக்கள் தற்போது தயாரிக்கப்பட்ட உணவுகளை உணவு விடுதிகள், வேலையிட உணவகங்கள், வேக உணவு கடைகள், தெருவோர உணவகங்களில் உணவுகளை வாங்கி உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறியுள்ளமை. இவ்வாறான இடங்களில் சரியான முறையில் உணவு சுத்தம் கடைப்பிடிக்கப்படா விட்டால அங்கு உணவருந்தும் மக்கள் நோய்வாய்ப்பட சாத்தியங்கள் அதிகம்.



மேலே சொன்ன 5 நோயாக்கிகளையும் விட ஐக்கிய அமெரிக்க நாடுகளில்
Calicivirus, அல்லது Norwalk-like virus எனும் வைரசும் உணவு மூலம் பரவி அதிக நோய்களை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

அடுத்த பகுதியில்

உணவு மூலம் நோயாக்கிகள் அடைந்த பின் மனித உடலில் எப்படி அவை செயற்படுகின்றன என்றும், அதை தொடர்ந்து வரும் பகுதிகளில் வெவ்வேறு வகை நோயாக்கிகள், அவை ஏற்படுத்தும் நோய்கள் பற்றியும் பார்க்கலாம்.

0 comments: