Wednesday 2 May 2007

பனை

பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். இலங்கை, மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆபிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பார்.






படம்: மானிப்பாய் இந்து இணைய தளம்

உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இந்தியா: 60 மில்லியன்
மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன்
இலங்கை - 11.1 மில்லியன்
இந்தோனெசியா - 10 மில்லியன்
மடகஸ்கார் - 10 மில்லியன்
மியன்மார் - 2.3 மில்லியன்
கம்பூச்சியா - 2 மில்லியன்
தாய்லாந்து - 2 மில்லியன்

இலங்கையை எடுத்து கொண்டால் 10.5 மில்லியன் பனை மரங்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய 4 மாவட்டங்களிலும் பரம்பி இருக்க மிகுதி 0.6 மில்லியன் மரங்கள் மட்டுமே ஏனைய இடங்களில் காணப்படுகிறது.



பனையின் பயன்கள்

1. பனை ஓலை


குருத்து ஓலையில் இருந்தே அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப்படுகிறன்.
கைவினைப்பொருட்களான: பூக்கள், பூச்சாடிகள், போன்றவை
நாளாந்த பாவனைப்பொருட்களான: பெட்டி, சுளகு, பாய், கடகம், திருகணை, நித்துபெட்டி, இடியப்ப தட்டு என பல பொருட்கள் செய்ய உதவுகிறது.

முற்றிய ஓலை மாட்டுக்கு உணவாக பயன்படுத்த படுவதுடன், வீடு வெய, வெலிகள் அடைக்க, தோட்ட நிலத்துக்கு, தென்னைக்கு பசளையாக பயன்படுத்தப்படுகிறது.

2. நார்

பனம் ஓலை/ இலை யில் இருக்கும் தண்டு/ மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார் நீண்ட நாள் பாவனைக்குரிய தூரிகைகள் (Brush), துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

3. மரம்/ தண்டு



கட்டுமான பணிகளுக்கு குறிப்பாக வீட்டு கூரைகளுக்கு சிலாகை, தீரந்தி, வளை, என்பவை தயாரிக்க பயன்படுத்த படுகிறது.

4. பூந்துணர் சாறு/ பதநீர் (Infloresence sap)

மதுவத்தால் (Yeast) நொதித்தல் அடையாத பூந்துணர் சாறு
பதநீராக அருந்தவும், பன்ஞ்சீனி, பனங்கட்டி, பனம் பாணி, பனங்கற்கண்டு செய்யவும் பயன்படுத்தபடுகிறது. பதநீரை கருப்பணி என பேச்சு வழக்கில் அழைப்பது வழக்கம். பதநீர் காலங்களில் பச்சரிசி, பயறு என்பனவும், பதநீரும் கொண்டு கருப்பணி கஞ்சி தயாரிப்பதும் வழக்கம். பொதுவாக பத நீர் இறக்க சுண்ணாப்பிடுவார்கள். சுண்ணாம்பு மதுவங்களின் நொதித்தல் செயற்பாட்டை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பு பதநீரின் சுவையை மற்றிவிட கூடியது. யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட ஆய்வில் நாவல் பட்டையையும் நொதித்தல் செயற்பாட்டை கட்டுபடுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

பதநீரில் வெல்லம் 12-13% ம், அமினோ அமிலங்கள், விற்றமின் பி, கனியுப்புக்கள் ஆகியவை நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. ஊரில் சின்னமுத்து, அம்மை நோய் வந்தவர்கள் உடன் கள்ளு குடித்தால் நோய் தாக்கம் குறையும் என்று சொல்லுவார்கள்.

மதுவத்தால் நொதித்தல் (Fermentation) அடைந்த பின் கள்ளு என அழைக்கப்படுவதுடன், இது சாரயாம் வடிக்கவும் பயன் படுகிறது.


5. நுங்கு

முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம். ஆனால் அதனை நாம் தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. 2 மில்லியன் பனைமரங்களே இருக்கும்தாய்லாந்தில் இருந்து நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாக அதிக பனைமர வளத்தை கோண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை கொசுறு செய்தி.













6. பனம் பழம்

பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழ கூழ் (Fruit pulp) பழபாகு (ஜாம்), பனாட்டு, குளிர் பானம் என்பன செய்ய பயன்படுத்த படுகிறது. அதை விட சுவையான சிற்றுண்டியான பனங்காய் பணியாரம் ஈழத்தில் பிரபலம். அதை வைத்து காதல்கடிதம் படத்தில் ஒரு பாடலும் வருக்றது. போர் காலத்தில் பனம் பழம் கொண்டு உடுப்பு தோய்த்தவர்கள் பலர். பனம் பழத்தின் வாசதில் மாடு உடைகளை சாப்பிட்டதாக கூட சொல்லுவார்கள். அதை விட பனம் பழம் தீயில் வாட்டி சாப்பிடுபவர்களும் உண்டு.





7. பனம் கிழங்கு






பனங்கிழங்கை அவிக்காது எடுக்கப்படும் ஒடியலில் இருந்து ஒடியல் மா எடுப்பார்கள். ஒடியல் மாவில் இருந்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ்1 (ஒடியல் கூழ் 2)ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவை ஈழத்தில் மிகவும் பிரபலாமான உணவுகள்.





பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல், புளுக்கொடியல் மா சிற்றுண்டியாக பயன் படுத்தப்படுகிறது.

பனம் பொருடகள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மிக குறைவாகவே நடைபெறுகிறன. அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பேற்றாலும் இன்னும் ஆராய்ச்சிகள் தேவையாக உள்ளது.

பெரும்பாலான ஆய்வுகள் அதிகம் பயன்படுத்தப்படாத பழ கூழ் பற்றியே நடைபெற்றுள்ளன.


பழகூழ் (Fruit pulp)



1. கரோட்டினோயிட் (Carotenoids)

எனும் மஞ்சள் நிறபொருளை கொண்டிருக்கிறது. பனம் பழத்தில் 2-253 மில்லிகிராம் கரோட்டினொயிட் 100கிராம் பழத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது விற்றமின் எ யிற்கான ஒரு மூலமாகும்

2. பெக்ரின்
இது உணவு உற்பத்தியில் உணவு பொருகளை உறுதியாக்க/
கூழ் நிலையில் பேண உதவும்.

3. Flabelliferin

இதுவெ பனம் பழத்தில் காணப்படும் கசப்பு, காறல் சுவைக்கு காரணமான பதார்த்தமாகும். இதனை பழ கூழில் இருந்து பிரித்தெடுப்பதன் மூலம், பழ கூழை வேறு உணவு பொருட்கள், ஜாம் போன்றவற்றில் நிரப்பியாக பயன் படுத்த முடியும்.

அத்துடன் இந்த Flabelliferin எனும் பதார்த்தம் நுண்ணங்கிகளை கொல்லும் இயல்பும் கொண்டது.

இலங்கையில் எலிகளில் செய்த ஆராய்சியில் Flabelliferin குருதியில் வெல்ல அளவை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் நீரிழிவு நோயளிகளுக்கு 6 கிராம் பனாட்டை கொடுத்து சோதனை செய்த போது அவர்களின் குருதியில் இருக்கும் வெல்ல அளவில் குறைவு ஏற்பட்டதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணாம் பனாட்டில் இருக்கும் Flabelliferin ஆக இருக்க முடியும்.

இலங்கையில் பனை அபிவிருத்தி சபை பழகூழில் இருந்து பற்பசை செய்து மாதிரிகளை சந்தைக்கு விட்டிருந்தது.



கேட்காமலே பயன் தரும் பனையை நாம் இன்னும் சிறப்பாக பயன் படுத்தி பொருளாதார பயன் பெற முடியும். ஆனால் அதற்கு நிறைய ஆய்வுகள் தேவை.

26 comments:

said...

விஜே ஒவ்வொரு ஆக்கத்துக்கும் நிறையத் தகவல்கள் சேர்த்திட்டுத்தான் எழுதுவீங்கிள் போல்

நுங்கைப் பார்த்ததும் நுங்கை நொங்கு என்று எழுதியதெல்லாம் ஞாபகம் வருது.

பனஞ்சீனி பனங்கற்கண்டு இதெல்லாம் புதுசா இருக்கு.படங்கள் இருக்கா?

said...

சந்திரன்,
நல்ல பதிவு. பனை ஒரு கற்பகதரு என யோகன் அண்ணை ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.
பனை எமது வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

மதி கந்தசாமி, யோகன் அண்ணை போன்றோரும் பனைபற்றிப் பதிவுகள் போட்டிருந்தனர்.

said...

பனம் பொருட்களுக்காகவே கற்பகம் என்ற அமைப்பு செயற்பட்டு வருகிரது. வெள்ளத்தையிலும் ஒன்று உண்டு. எமது பிரதேச மக்களின் வாழ்வியலோடு பனம்பொருட்கள் பின்னிப் பிணைந்துள்ளன.

நன்றாக விபரம் திரட்டி எழுதியிருக்கிறீர்கள்.

said...

//விஜே ஒவ்வொரு ஆக்கத்துக்கும் நிறையத் தகவல்கள் சேர்த்திட்டுத்தான் எழுதுவீங்கிள் போல்

நுங்கைப் பார்த்ததும் நுங்கை நொங்கு என்று எழுதியதெல்லாம் ஞாபகம் வருது.

பனஞ்சீனி பனங்கற்கண்டு இதெல்லாம் புதுசா இருக்கு.படங்கள் இருக்கா?//

நொங்கு எண்டு தானே பேச்சு வழக்கிலை சொல்லுறது.

பனஞ்சீனி, கற்கண்டு படங்கள் இல்லை. அவற்றை கண்ட நேரம் கையில் கமராவும் இல்லை.

//மதி கந்தசாமி, யோகன் அண்ணை போன்றோரும் பனைபற்றிப் பதிவுகள் போட்டிருந்தனர். //

வெற்றி கருத்துக்கு நன்றி.
மதி அவர்களது பதிவுக்கு பனங்கட்டி எனும் இடத்தில் இணைப்பு உள்ளது. யோகன் அவர்களது பதிவை வாசிக்கவில்லை அதானால் அவரது பதிவுக்கு இணைப்பு கொடுக்க முடியவில்லை. வசந்தன் எழுதிய 2 பதிவுகளுக்கும் இணைப்பு கொடுத்துள்ளேன்.


//பனம் பொருட்களுக்காகவே கற்பகம் என்ற அமைப்பு செயற்பட்டு வருகிரது. வெள்ளத்தையிலும் ஒன்று உண்டு. எமது பிரதேச மக்களின் வாழ்வியலோடு பனம்பொருட்கள் பின்னிப் பிணைந்துள்ளன.

நன்றாக விபரம் திரட்டி எழுதியிருக்கிறீர்கள்.//

பிரபா கற்பகம், பற்றி ஞாபகம் வந்தது ஆனால் குறிப்பிட மறந்துவிட்டேன்.

யாழிலும் கச்சேரியடியில் உள்ள ஒரு விற்பனையிடத்தில் கூழ், மற்றும் பனம் பழ பானம் (சோடா) விற்பார்கள்.

அத்துடன்

தவற விட்ட தகவல்
பனம் பழ கூழ் இலை இருந்து பனை அபிவிருத்தி சபை பற்பசை செய்ய முயற்சித்தது. மாதிரிகள் விற்பனைக்கும் விடப்பட்டிருந்தது.

said...

மீண்டும் ஒரு நல்ல பதிவு...

போர்க் காலத்தில், பனம் பழத்தில் உடுப்புக்கள் தோய்த்த ஞாபகம் இப்பொழுதும் இருக்கின்றது. நமது வீட்டினைச் சுற்றிக் குறைந்தது 50 பனை மரங்கள் இருந்தன... இப்பொழுது இராணுவத்தினர் பெரும்பான்மையான மரங்களைத் தறித்து விட்டதாகக் கேள்வி.

said...

விஜே!அருமையாக திரட்டிய தகவல்கள்! பள்ளியில் படித்த,'பனை
மரமே பனை மரமே ஏன் வளர்ந்தாய்
பனைமரமே' என்ற பாடல் நினைவுக்கு
வந்தது.இனி யாரும் உதவாக்கரைப்
பிள்ளையை,'பனைமரம் மாதிரி வளர்ந்திருக்கிறாயே!'என்று திட்டமாட்டார்கள்.தமிழ்நாட்டில் கோ-ஆப்டெக்ஸ் மூலம் பனை பொருட்க்ளை பாட்டில்,பாக்கெட்களில் விற்கிறார்கள்.
ஆனாலும் பெரிய அளவில் மக்களை
சென்றடையவில்லை.
பனங்கற்கண்டு போட்டு சுக்குவெந்நீர்
அருந்தினால் சளி,இருமலுக்கு நல்லது.
பனை மட்டை bowl-லில் இளம் நொங்கும் பதநீரும் விட்டு குடித்தால்
குடித்துக்கொண்டேயிருக்கலாம்
இம்மாதிரி அருமைகளெல்லாம் வெளியிலிருந்து யாராவது சொன்னால்
தான் நமக்கு உறைக்கும்.

said...

வி.ஜெ!

பனை மீதான காதல் எப்போதும் எனக்குக் குறைவதவில்லை. இன்னும் சொல்லப்போனால் யாழ்ழ்ப்பாணத்தின் குறியீடாக பனை விளிக்கப்படும் போதும்,யாழ்ப்பாண சமூகக்கட்டுமானம் பிடிக்காத பலருக்கும், பனையைப் பிடிக்கும். பனைபற்றி வலைப்பதிவில் யோகன், மதி, வசந்தன் என எல்லோரும் நிறையவே எழுதியிருக்கின்றார்கள். ஆனாலும் உங்கள் பதிவில், உங்கள் துறைசார் நுட்பம் தெள்ளனெத் தெரிகிறது. பாராட்டுக்கள். நன்றிகள்.

said...

எங்கட ஊரிலும் காலைல வெறும் வயித்துல பதநீரைக் குடிக்கணும்னு சொல்வாங்க... அதுல இருக்குற டேஸ்ட்டு எவ்ளோ சீனையைக் கொட்டி குடிச்சாலும் ஒண்ணா வராது.. எங்கம்மா உசிரோட இருக்கிறவரைக்கும் அவளுக்காக அப்பப்ப வாங்கிக் குடிப்போம். இப்போ மெட்ராஸ்ல பதநீர் எங்க இருக்குன்னு ரேடியோல விளம்பரம் கொடுத்துத்தான் தேடணும்..

விஜே ஸார்.. இந்த ஆக்கத்துக்கு எனது நன்றிகள்..

said...

//இலங்கை - 11.1 மில்லியன்//
இப்ப இது குறைந்திருக்கும்.
எல்லாம் அழிச்சாச்சு !!!
நிக்கிறதும் வட்டோட தான் நிக்குது.

//பனம் பொருட்களுக்காகவே கற்பகம் என்ற அமைப்பு செயற்பட்டு வருகிரது. வெள்ளத்தையிலும் ஒன்று உண்டு.//
பம்பலப்பிடியில் :)
பனங்காய் பணியாரம் வாங்கினம் வாய்ப்பன் மாதிரி கிடந்தது. ;)

பூந்துணர் சாறு :: (புது சொல்லு)

பனங்குருத்தும் நல்லாயிருக்கும்.

said...

அழகான அந்த பனையை பற்றிய விபரங்களிற்கு நன்றிகள் அண்மையில் பாரிஸ் நகரத்திற்கு சென்றபோது 15 ஆண்டுகளின் பின்னர் அவித்த பனங்கிழங்கு சாப்பிட கிடைத்தது மகிழ்ச்சியாய் இருந்தது மட்டுமல்ல பல பழைய நினைவுகளும் வந்து போனது

said...

ஹரன், திலகன், இப்போது எண்ணிக்கை குறைந்திருக்கலாம் தான்.

நனானி, மலைநாடான், உண்மைதமிழ்ன் உங்கள் வருகை, மற்றும் கருத்துக்களுக்கு நன்றி.

said...

சாத்திரியார் வாங்க பனங்கிழங்கு பரிஸில் கிடைக்கும் இனி அடிக்கடி போங்க.. :)

said...

கை கொடுங்கள் விஐ. அழகாக நிறைய தகவல்களை திரட்டி இந்த ஆக்கத்தை எழுதியிருக்கின்றீர்கள் போல. முதலில் வாழ்த்துக்கள்.
பனம்பழம். பனம்நுங்கு. பனம் கிழங்கு என்றுமே நாவில் சுவையூற வைக்கும் பண்டங்கள்.

said...

அழகான அந்த பனையை பற்றிய விபரங்களிற்கு நன்றிகள் அண்மையில் பாரிஸ் நகரத்திற்கு சென்றபோது 15 ஆண்டுகளின் பின்னர் அவித்த பனங்கிழங்கு சாப்பிட கிடைத்தது மகிழ்ச்சியாய் இருந்தது மட்டுமல்ல பல பழைய நினைவுகளும் வந்து போனது
.......
ஏன் சாத்திரியார் உங்கள் சாத்திரத்தால் ஒரு பனை மரத்தையே பாரிசில் உருவாக்க வேண்டியது தானே?

said...

// Thillakan said...
//பனம் பொருட்களுக்காகவே கற்பகம் என்ற அமைப்பு செயற்பட்டு வருகிரது. வெள்ளத்தையிலும் ஒன்று உண்டு.//
பம்பலப்பிடியில் :)
//



மன்னிக்கோணும் தம்பி வயசு போட்டுது, முந்தி ஐ.ஏ.எஸ் சில CIMA படிக்கேக்கை கற்பகத்தில தான் மத்தியானம் மீன்குழம்புச் சாப்பாடு

said...

நந்தியா சாத்திரியார் எந்த மந்திரம் போட்டு பனையை பரிஸிலை வளர பண்ணூற :))

Anonymous said...

சந்திரன், பனை பற்றிய பல பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். படங்களும் அருமை. படங்கள் நீங்கள் சுட்டவையா?

பனைவளத்தை ஈழத் தமிழர் முறையாக, முழுமையாகப் பயன்படுத்தமுடியவில்லை என்பது பெரும் குறை.

Anonymous said...

ஹி ஹி ஹி கள்ளு என்றதும் எனக்கு சின்னப்பு நினைவில் வருகின்றார்..
நல்ல பதிவு :) நுங்கு இங்கு கிடைக்காது :(

said...

//நுங்கு இங்கு கிடைக்காது //

தமிழ் கடைகளில் கிடைக்கா விட்டால், சீனா/ தாய்லாந்து கடைகளில் முயற்சித்து பாருங்கள். படத்தில் காட்டிய பெயரில், நுங்கு தனியே/ நுங்கும், பலாப்பழமும் கலந்து இருக்கும்.

said...

கனக்ஸ் நன்றி
//படங்கள் நீங்கள் சுட்டவையா?//

முதலாவது படத்தை தவிர மிகுதி அனைத்தும் நான்/ எனது அண்ணா சுட்டவை.

said...

சந்திரன்
மேற்படி உங்கள் கட்டுரை என்னை கவர்ந்ததுடன் எனது சொந்த ஊருடன் தொடர்புடையதாக இருந்தமையாலும் எனது (www.madaitivu.com)தளத்தில் பதியுமாறு எனது சக நிர்வாகியிடம் கூறினேன்,... அவர் தவறுதலாக உங்கள் பெயர் எழுத மறந்து விட்டார். இதற்காக உங்களிடம் கோடிமுறை மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளேன்...

said...

சந்திரன்
மேற்படி உங்கள் கட்டுரை என்னை கவர்ந்ததுடன் எனது சொந்த ஊருடன் தொடர்புடையதாக இருந்தமையாலும் எனது (www.madaitivu.com)தளத்தில் பதியுமாறு எனது சக நிர்வாகியிடம் கூறினேன்,... அவர் தவறுதலாக உங்கள் பெயர் எழுத மறந்து விட்டார். இதற்காக உங்களிடம் கோடிமுறை மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளேன்...தவறு திருத்தப்பட்டுள்ளது ..

said...

தங்கள் பனை பற்றிய கட்டிரையை படிக்கும் போது சொந்த் ஊர் போய் வந்த உணர்வு ...

said...

அருமையான கட்டுரை. இந்தக் கட்டுரை மட்டுமில்லாம, நிறைய அறிவியல் சம்பந்தமான கட்டுரைகளும் எழுதுறீங்க போல. வாழ்த்துக்கள்.

said...

PANAI OOLAI KUDISAI PATRI ETHAVATHU TAGAVAL IRUNTHAL SOLLUNGAL NANBARE...

said...

PANAI OOLAI KUDISAI PATRI ETHAVATHU TAGAVAL IRUNTHAL SOLLUNGAL NANBARE...