Friday 29 June 2007

மலர் - 4

Thursday 28 June 2007

Chamomilla தேனீர் குடிச்சிருக்கீங்களா?

புலம் பெயர்ந்த புதிதில் உணவகங்களில் தேனீர் அருந்துவதே பெரும் சிக்கலான விடயமாக இருக்கும். பல சுவைகள், எலுமிச்சை, ஸ்ரோபரி, ..... இப்படி பல. அதிலும் நாமே எல்லத்டையும் தெரிவு செய்யும் வகையில் இருக்கும் உணவகங்களில் எந்த தேயிலையை தெரிவு செய்வது என தெரியாமல் கிடைக்கும் ஒன்றை தூக்கி கொண்டு போய் சுடுதண்ணிக்க போட்டா தேத்தண்ணியிம் நிறமும் வராது குணமும் வராது... குடுத்த காசை நினைச்சு மிண்டி விழுங்கி போட்டு எழும்பிவாறது. பால் தேத்தண்ணிக்கு கறுவா போட்ட தேயிலையை தூக்கி கொண்டு போய் அதொட பட்ட அவஸ்தை இன்னும் மறக்கேல்லை.

ஒருமுறை உறவினர் வீட்டுக்கு போய் இருந்த போது குழந்தையின் வயிற்று உபாதையோ? அல்லது வேறு என்னவோ ஒரு சிறிய உடற் பிரச்சனைக்கு Chamomila தேனீர் நல்லாது என கொடுத்தார்கள். ஆனால் நான் அதை சுவைத்து பார்க்கவில்லை. அன்று அந்த தேயிலை பொதியில் பார்த்த பெயரும், பூவின் படமும் மனதில் பதிந்துவிட்டது.

கமராவும் கையுமாக தெருவோரம் திரியும் போது மீண்டும் Chamomile தாவரத்தை தெருவோரம் கண்ட போது தான் மருத்துவ குணமுள்ள தாவரம், தேனீரில் கலக்கப்படுவது என்பதும் ஞாபகம் வந்தது.
சரி என படமும் பிடித்து இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.











Chamomilla, சூரிய காந்தி, மூக்குத்தி பூண்டு, செவ்வந்தி.... ஆகியவை தாவரவியலில் Asteraceae ( பழைய பெயர்: Compositae)எனும் பெயரை கொண்ட குடும்பத்து தாவரங்களாகும். பூக்கும் தாவரங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையான இனங்களை (Genera) (அண்ணளவாக 1100 இனங்கள்)மற்றும் ஒவ்வொரு இனமும் பல சாதிகள் (species) என மொத்தமாக 20, 000 மேற்பட்ட தாவர சாதிகளை கொண்ட ஒரு குடும்பமாகும்.

இந்த குடும்பத்து தாவரங்களில் சூரிய காந்தி சமையல் எண்ணெய்க்கு பயன்படுகிறது. இன்னும் சில மருத்துவ குணம் நிறைந்தவை. ஏனையவை பயிர் நிலங்களில் களைகளாக காணப்படுபவை.

Chamomilla recutita எனும் தாவரவியற் பெயரை கொண்ட இந்த தாவரம் பயிர்ச் செய்கை நிலங்களில் களையாக கருதப்பட்டாலும் பல மருத்துவ குணங்களை கொண்டது.

இதனுடைய பூ, மற்றும் முதிர்ந்த பூவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணேய் என்பன மருத்துவ தேவைக்கு பயன்படுத்தபடுகிறன.

பிரித்தெடுக்கப்படும் எண்ணெயின் தொழிற்பாடுகளாக

anti-inflammatory
spasmolytic
vulnerary
antimicrobial
mild sedative
carminative
antiseptic
anticatarrhal

இதன் மருத்துவ பயன்பாடுகளாக

1. Insomnia, anxiety and nervous tension ஆகியவற்றிற்கு மருந்தாக

2. சமிபாட்டு குழப்பங்களை போக்கும் நிவாரணியாக பயன்படுகிறது. எண்ணேயில் இருக்கும் வெவ்வேறு கூறுகள் வெவேறு வகையில் சமிபாட்டு தொகுதியின் நலனில் பங்களிக்கிறன. குறிப்பாக இரைப்பை, குடல் போன்றவற்றில் காணப்படும் தசைகளை தளர்வடைய செய்தல் (relaxes), குடற்சுவர் எரிவை போக்குதல் (flatulence and irritation of the gut wall), பசியை தூண்டுதல், குடலில் ஏற்படும் அழற்சியை (inflammation)போக்குதல் ஆகியன.

3. நோயெதிர்ப்பு சக்தியை கூட்டல், குறிப்பக பக்ரீரியாக்களை கொல்லுதல்
4. eczema க்கு பூச்சாக, கண், மற்றும் வாய் சுத்தபடுத்தும் பொருளாக ( mouthwash or eyewash) பயன்படுத்த கூடியது.

ஆகியவை சொல்லப்படுவதோடு

5. பாரம்பரியமாக asthma and hayfever போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தபடுவதாகவும் சொல்கிறார்கள்.



ஆனால் மனிதரிற்கு ஏற்படகூடிய சாதக, பாதகங்கள் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் இன்னும் போதுமான அளவில் நடைபெறவில்லை என சொல்லப்படுகிறது.

Wednesday 27 June 2007

ஆடிக்கூழ்







ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்தரப்புலவர்




பாடல்: VSK கானா பிரபா ஆகியோரின் பதிவில் இருந்து.

பிற்குறிப்பு:
1. இது பாட்டுடனான மீள் பதிவு
2. வீட்டுக்கு போய் கொழுகட்டையுடைய படமும் சேர்த்து விடுகிறேன் :)

Monday 25 June 2007

Tornado - Manitoba, Canada

"Tornado" இதற்கு என்ன தமிழ் பெயர்?... சூறாவளி எனும் தமிழ் பதம் இதற்கும் பொருந்துமா? சரியாக தெரியவில்லை.
கடந்த வார இறுதியில் நான் இருக்கும் நகரில் இருந்து 40 கிலோ மீற்றர் தூரம் உள்ள நகரத்தில் நடந்தது. கடந்த சனிக்கிழமை எனது நண்பர் சேதமடைந்த கோதுமை மா ஆலையையும் அது சாந்த இடங்களையும் பார்வையிட்டு வரலாம் என அழைத்த போது என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது. சின்னகுட்டியர் இணைத்த வீடியோவையும், இந்த படங்களையும் பார்க்கும் போது தான் சேதங்களையும், இதன் தாக்கத்தையும் நேரில் அவதானிக்கும் சந்தர்பத்தை தவறவிட்டு விட்டேன் என்பது புரிகிறது.





படங்கள் மின் மடல் மூலம் கிடைத்தவை

Sunday 24 June 2007

வண்ணாத்துப் பூச்சி வயசென்ன ஆச்சு...

Saturday 23 June 2007

வெயிலொடு உறவாடி






Sunday 17 June 2007

ஆலையில்லா ஊருக்கு......

ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை என்று சொல்லுவார்கள்.... அது என்னவோ கடற்கரைக்கு (beach) க்கு பொகும் ஆட்களுக்கும் பொருந்தும் போல. நாம் இங்குள்ள மக்கள் போல சூரிய குளியலுக்கோ அல்லது குளிர்காலம் முழுவதும் வீட்டும் அலுவலகமும் என இருந்து.... வசந்தம்/ கோடை வந்ததும் அதை அனுபவிக்க கடற்கரைக்கு போகும் பழக்கத்தை ஊரில வைத்திருந்ததில்லை. ஆனால் கடற்கரைக்கு போவது நல்ல இனிமையான பொழுது பொக்கு.
இங்கு காணும் குளிர்ச்சியான காட்சிகளை அங்கு காண முடியாது அது வேறுகதை.

இங்கு எமது வகுப்பு தோழர்கள் beach க்கு போக என ஆரவாரமாக ஒழுங்கு செய்து போக முடிவு செய்தனர். Beach இன் பெயர் Grand beach

அப்படி என்ன தான் இருக்கிறதென பார்க்க போனால்

இந்த beachகனடாவில் ஆறாவது பெரிய வாவியான வின்னிபெக்கில் அமைந்திருக்கிறது. முழுமையும் நன்னீர் கொண்டது. 1920 ஆம் ஆண்டில் இருந்து கோடைகாலத்தில் மக்களுக்குரிய முக்கிய பொழுதுபோக்கிடமாக விளங்கிவருகிறது. படகு ஓட்டம், மீன் பிடித்தல் , முகாமிட்டு தங்குதல் .... என பலதரப்பட்ட பொழுதுபோக்கிற்கும் உரிய ஒரு இடமாக விளங்குகிறது.




ஆனால் நீரின் நிறம் படத்தில் தெரிவது போல நீலமோ, அல்லது எமது ஊர் கடற்கரைகளை போல் தெளிந்த பளிங்கு போன்ற நீரோ அல்ல.

கபில நிறத்தில்.... நுளம்பு/ அல்லது பூச்சி குடம்பிகள் களற்றிவிட்ட தோல்கள் மிதக்க....

ஊரில் குளங்களில் குளிப்பதை விரும்பாத எனக்கு ....... பெரிய சோதனை......


one of Canada’s best beaches எனகிறது cbc இணையதளம். :))))))))))))))))))))))))




ஆனால் இவர்களுக்கு அவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதை பார்க்க தெரிந்தது.

Grand beach, Canada 16/06/2007
























இந்த கிணறு தோண்டியது நாமல்ல.. இரண்டு நண்பர்களாக சேர்ந்து தோண்டினார்கள்.

Saturday 16 June 2007

சிறையிருக்கும் pepsi

காலம் செய்த கோலத்தை பாருங்கள்.....

Sunday 10 June 2007

நேற்று நான் பார்த்த தமிழ்ப்படம்

இதுவரை தமிழ் படம் எதிலும் நடித்திராத கதாநாயகன், கதாநாயகி, கதாநாயகனின் நண்பன், பாட்டி, வில்லன்கள் என அனைவருமே புதுமுகங்கள். நியுயோர்க் நகரத்தில் தான் படப்பிடிப்பு நடந்ததாக சொல்கிறார்கள். படம் விறுவிறுப்பாக , பிரமாண்டமாக, கிரபிக்ஸ் எல்லாம் சேர்த்து எடுத்திருந்தார்கள்.

கதாநாயகன் ஊருக்கு நல்லது செய்யும் ஒருவர். ஒரு காதலி, காதலில் ஒரு ஊடல்,
கதாநாயகன் தான் தன் தந்தையை கொன்றான் என தப்பாக நினைத்து கதாநாயகனை கொல்ல முயலும், காதலை பிரிக்க முயலும் நண்பன். படத்தின் இறுதியில் உண்மை அறிந்து கதாநாயகன் இக்கட்டில் இருக்கும் போது அவனை காத்து, அவனுக்காக உயிரை கொடுக்கிறான்.
அதைவிட கதாநாயகனுடன் தொழில் போட்டி காரணமாக கதாநாயகனை கொல்ல நினைக்கும் ஒரு வில்லன்-1. கதாநாயகனை தற்செயலாக பிடித்திருந்த துஸ்ட சக்தியை விரட்டியடிக்க அது வில்லன் - 1 உடன் இணைகிறது. இதனால் வில்லன் -1 அமனுஸ்ய சக்தியை பெறுகிறான், கதாநாயகனை கொல்ல புறப்படுகிறான். இதற்கிடையே கதாநாயகனின் தாத்தா(?) வை கொன்ற ஒரு வில்லன்-2 பொலிசுக்கும் டிமிக்கி கொடுத்து தப்பி திரிகிறான். ஒரு கட்டத்தில் பொலிசுக்கு தப்பி ஓடும் போது திண்மங்களை தனிதனி மூலக்கூறாக்கும் இயந்திரத்தில் தவறி விழுந்து தூள் தூளாகி, இறுதியில் நிரந்தரமற்ற, வேண்டிய நேரம் மனித உருவும் ஏனைய நேரம் மணல் புயலாகவும் மாறும் திறமையை பெற்று விடுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனுடன் கதாநாயகன் சண்டையிட்டு நீரில் கரைய செய்து விடுகிறான். ஆனால் அதில் இருந்து மீண்டு வரும் அவனும் வில்லன் -1 உம் சேர்ந்து கதாநாயகனின் காதலியை கடத்தி பெரிய உயரமான இடத்தில் கட்டி தொங்கவிட்டுவிடுகிறனர்.
இருவருடனும் கதாநாயகனும், நண்பனும் சண்டையிட்டு, நண்பன் கதாநாயகனுக்காக உயிரை கொடுக்க, வில்லன் - 1 அழிக்கப்பட, மற்றைய வில்லன் திருந்தி நல்வழிக்கு வருகிறான். காதலர்கள் இணைகிறார்கள்.

படம் எப்படி?

இந்த படம் எது என்று அறிய ஆவலா?

Spiderman 3 <-(படத்தின் பெயரை ஹைலைட் செய்து பார்க்கவும் :) )

அது தான் படத்தின் பெயர்.

Saturday 9 June 2007

பணச்சடங்கு அல்லது Wedding social

பணச்சடங்கு எனும் நிகழ்வை தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறீர்களா? அதை பற்றி பதிவின் பிற்பகுதியில் பார்போம். முன்னர் நான் இங்கு Wedding social என்பதை பற்றி சொல்கிறேன்.

Wedding social என்றால் திருமணமாக போகும் ஜோடி தமது திருமண செலவை திரட்டுவதற்காக ஒழுங்கு செய்யும் ஒரு சமூக நிகழ்வு என சொல்லலாம். இதை பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல் எனது துறையைச் சேர்ந்த நண்பனின் அழைப்பை ஏற்று எமது துறையில் கற்கும் இன்னொரு மாணவி ஒருவருடைய Wedding social ஒன்றிற்கு முதல் முதல் போய் இருந்தேன். அங்கு போகும் வரை இதன் தாற்பரியம் என்ன? ஏன் அவ்வாறு ஒழுங்கு செய்கிறார்கள்? எப்படி இருக்கும்? என்னவெல்லாம் நடக்கும் என் ஒன்றும் தெரியாமலே அந்த நிகழ்வுக்கு போய் இருந்தேன். அங்கு போனதன் மூலம் அறிந்தது இது தான்.



Wedding social நிகழ்வுக்காக ஏதாவது ஒரு கெளிக்கை விடுதி/ "Bar" ஒன்றில் ஒரு இரவு நேரத்தை பதிவு செய்து எடுபார்கள். பின் தமது நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் ..... என பலருக்கும் 10 கனேடிய டொலர் ( நான் பார்த்தது, இந்த தொகை வேறுபட முடியும்) பெறுமதியுள்ள ஒரு நுளைவு அட்டையை விற்பார்கள். அந்த அட்டையை கொண்டு குறிப்பிட்ட கெளிக்கை விடுதிக்கு போனால் மேலைத்தேய இசை இசைக்கவிடப்பட்டிருக்கும். அவரவருக்கு வேண்டிய குடிவகைக்கு அவரவரே பணம் செலுத்த வேண்டும். அதே போல குலுக்கல்/ அதிஸ்ட சீட்டு முறையில் வழங்குவதற்கு சில பொருட்களும் இருக்கும். அந்த போட்டியில் நுளைவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு மேலாக அங்கு வந்திருப்போரிடம் உண்டியலிலும் பணம் சேகரித்தார்கள்.

இதன் மூலம் அவர்களின் திருமணத்திற்கு போதுமான பணத்தேவையில் எந்தளவுக்கு பூர்த்தியாகும் என்பதை சொல்ல, அங்கு அந்த நிகழ்வு முடியும் வரை எவ்வளவு மக்கள் வந்து சென்றார்கள் என்பதை நின்று கணக்கெடுத்தால் தான் சொல்ல முடியும். ஆனால் அதற்கு பொறுமை இல்லாது போய் அரை மணி நேரத்திலேயே வெளியே கிளம்பிவிட்டேன்.

ஆனால் இந்த நிகழ்வு இங்கு அதாவது நான் இருக்கும் பிரதேசத்தில் ஒரு பொதுவான நிகழ்வு.

கனடாவின் ஏனைய இடங்களிலும் இப்படி நிகழ்வுகள் இங்குள்ள மக்களால் நடாத்த படுகிறதா?
ஏனைய நாடுகளில் எப்படி?


யாராவது சொல்லுங்கள்.



(குறிப்பு:இந்த நிகழ்வு இங்குள்ள தமிழ் சமூகத்தவரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வல்ல)


இதே போன்றே ஈழத்திலும் பணச்சடங்கு எனும் ஒரு நிகழ்வு நடப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன்.

யாழ்குடா நாட்டில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளிலேயே இப்படி நிகழ்வு நடப்பதாக சொல்வார்கள். நான் வாழ்ந்த பகுதிகளில் பணச்சடங்கு எனும் நிகழ்வு நடப்பதில்லை. ஈழத்தின் ஏனைய பகுதிகளில் நடப்பது பற்றி தெரிந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஈழத்தில் நடக்கும் பணச்சடங்கு (நான் அறிந்தவரையில்)

யாராவது குடும்பத்தினர் பண கஸ்டம், அல்லது தொழில் முயற்சிக்கு பணம் தேவைப்படும் போது இப்படியான பணச்சடங்கை நடத்துவார்கள். அதற்கென ஒரு நாளை குறித்து
தமது உறவினர், நண்பர்கள் போன்றவர்களை பணச்சடங்கு எனும் நிகழ்வுக்கு அழைப்பார்கள்.
அதற்கு செல்பவர்கள் தம்மால் இயன்ற பணத்தை அவர்களுக்கு அன்றைய தினம் வழங்குவார்கள். இதன் மூலம் அவர்களது பண கஸ்டம் தீரும், அல்லது தொழில் தொடங்க பணம் கிடைக்கும்.
புலம் பெயர் வாழ் ஈழ மக்களிடையே ஐரொப்பாவில் பணச்சடங்குகள் நடப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். கனடா ரோறாண்டோ வில் எப்படி?

Tuesday 5 June 2007

மலிந்து போன இறப்புக்கள்........

யாரால் எதற்காக என கூட சொல்ல முடியாது நாளாந்தம் கொல்லப்படுவோர் பற்றிய செய்தித் தலைப்புகள் ஊடகங்களை நிரப்பும் மரணங்கள் மலிந்த இன்றைய பொழுதில் எமக்கு தெரிந்தவர்கள் யாருக்கும் ஏதும் ஏற்பட்டுவிடகூடதே, என எண்ணியபடி நமக்கு தெரிந்த யாரும் அகப்படவில்லை என்பதை உறுதி படுத்திகொள்ளும் பொருட்டு மட்டுமே செய்தியை வாசிக்கும் மனநிலையை எப்படி சொல்லுவது? ஆனால் அப்படி ஒரு மனநிலைக்கு கடந்த ஒரு வருடத்துக்குமேலாக ஈழத்தில் நிலவும் சூழல் மனதை மற்றிபோட வைத்திருக்கிறது.

இருந்த போதும் தொலைபேசும் போதும், செய்திகளை வாசிக்கும் போதும், நண்பனின் தம்பியோ, அண்ணனோ சுடப்பட்ட செய்திகள், நாளாந்தம் காலை தினசரி வாங்கும் கடை நண்பன் தெருவில் சுடப்பட்ட செய்தி எல்லாம் மிக பழசாகி போக மீண்டும் மீண்டும் .... தொடரும் படுகொலை, காணாமல் போதலில் தெரிந்த யாரேனும் ஒருவர்

திருமலையில் கொல்லப்பட்ட 17 பட்டினிக்கெதிரான நிறுவன பணியாளரில் ஒருவனாக எமது கல்லூரி நண்பன் ஒருவனும் கொல்லப்பட்ட செய்தி, கல்லூரி காலத்தில் காதலித்து, திருமணமாகி 4 வருடங்கள் கூட கடக்காத நிலையில் அவனது குடும்பத்தில் அது எத்தகைய இழ்ப்பு ......

மீண்டும் நேற்றைய தினம்

பள்ளி தோழன்,தபாலதிபர், திருமணமாகி 4 வருடம் கூட கடக்காத நிலையில் 2 குழந்தைகளின் தந்தை மனைவி குழந்தைகளின் முன்னே சுடப்பட்டு இறந்தான் என்பதும், அவனது உடல் 18 மணி நேரமாக சுடப்பட்ட இடத்திலேயே இருந்தது என்பதையும் வாசித்த போது ஏற்பட்ட கவலை, மன உழைச்சல்....

இப்படி நடக்கும் சம்பவங்களை வாசித்து ஏதுவுமே செய்யமுடியாது இருக்கும் நிலையை எண்ணி நொந்து கொள்வதை தவிர வேறெதுவும் இல்லை.

தொலைபேசும் போது உறவுகள், "இப்ப கொஞ்சம் கொஞ்சம் எல்லா பொருட்களும் கிடைக்கிறன, இடைஇடையே செக்கிங் (சுத்திவளைப்பு), நாளாந்தம் ஆமியின் வாகன தொடரணி போகும் போது தொலைபேசி இணைப்பு துண்டிப்பு, வீதி போக்குவரத்து 1 அல்லது இருமணி நேரம் முடக்கம் அப்பப்போ நடக்கும் சூடுகள் தவிர பறுவாயில்லாமல் இருக்கிறோம்" எனும் கூற்றை எப்படி எடுப்பது.......


நேற்றைய தினம் மட்டும் படுகொலை செய்யப்பட்டதாக வந்த செய்திகள்
1. Red Cross condemns murder of staff
2. 3 civilians killed in Jaffna
3. Postmaster shot dead in Chaavakachcheari