Saturday 9 June 2007

பணச்சடங்கு அல்லது Wedding social

பணச்சடங்கு எனும் நிகழ்வை தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறீர்களா? அதை பற்றி பதிவின் பிற்பகுதியில் பார்போம். முன்னர் நான் இங்கு Wedding social என்பதை பற்றி சொல்கிறேன்.

Wedding social என்றால் திருமணமாக போகும் ஜோடி தமது திருமண செலவை திரட்டுவதற்காக ஒழுங்கு செய்யும் ஒரு சமூக நிகழ்வு என சொல்லலாம். இதை பற்றி எந்த ஒரு விசயமும் தெரியாமல் எனது துறையைச் சேர்ந்த நண்பனின் அழைப்பை ஏற்று எமது துறையில் கற்கும் இன்னொரு மாணவி ஒருவருடைய Wedding social ஒன்றிற்கு முதல் முதல் போய் இருந்தேன். அங்கு போகும் வரை இதன் தாற்பரியம் என்ன? ஏன் அவ்வாறு ஒழுங்கு செய்கிறார்கள்? எப்படி இருக்கும்? என்னவெல்லாம் நடக்கும் என் ஒன்றும் தெரியாமலே அந்த நிகழ்வுக்கு போய் இருந்தேன். அங்கு போனதன் மூலம் அறிந்தது இது தான்.



Wedding social நிகழ்வுக்காக ஏதாவது ஒரு கெளிக்கை விடுதி/ "Bar" ஒன்றில் ஒரு இரவு நேரத்தை பதிவு செய்து எடுபார்கள். பின் தமது நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் ..... என பலருக்கும் 10 கனேடிய டொலர் ( நான் பார்த்தது, இந்த தொகை வேறுபட முடியும்) பெறுமதியுள்ள ஒரு நுளைவு அட்டையை விற்பார்கள். அந்த அட்டையை கொண்டு குறிப்பிட்ட கெளிக்கை விடுதிக்கு போனால் மேலைத்தேய இசை இசைக்கவிடப்பட்டிருக்கும். அவரவருக்கு வேண்டிய குடிவகைக்கு அவரவரே பணம் செலுத்த வேண்டும். அதே போல குலுக்கல்/ அதிஸ்ட சீட்டு முறையில் வழங்குவதற்கு சில பொருட்களும் இருக்கும். அந்த போட்டியில் நுளைவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு மேலாக அங்கு வந்திருப்போரிடம் உண்டியலிலும் பணம் சேகரித்தார்கள்.

இதன் மூலம் அவர்களின் திருமணத்திற்கு போதுமான பணத்தேவையில் எந்தளவுக்கு பூர்த்தியாகும் என்பதை சொல்ல, அங்கு அந்த நிகழ்வு முடியும் வரை எவ்வளவு மக்கள் வந்து சென்றார்கள் என்பதை நின்று கணக்கெடுத்தால் தான் சொல்ல முடியும். ஆனால் அதற்கு பொறுமை இல்லாது போய் அரை மணி நேரத்திலேயே வெளியே கிளம்பிவிட்டேன்.

ஆனால் இந்த நிகழ்வு இங்கு அதாவது நான் இருக்கும் பிரதேசத்தில் ஒரு பொதுவான நிகழ்வு.

கனடாவின் ஏனைய இடங்களிலும் இப்படி நிகழ்வுகள் இங்குள்ள மக்களால் நடாத்த படுகிறதா?
ஏனைய நாடுகளில் எப்படி?


யாராவது சொல்லுங்கள்.



(குறிப்பு:இந்த நிகழ்வு இங்குள்ள தமிழ் சமூகத்தவரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வல்ல)


இதே போன்றே ஈழத்திலும் பணச்சடங்கு எனும் ஒரு நிகழ்வு நடப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன்.

யாழ்குடா நாட்டில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளிலேயே இப்படி நிகழ்வு நடப்பதாக சொல்வார்கள். நான் வாழ்ந்த பகுதிகளில் பணச்சடங்கு எனும் நிகழ்வு நடப்பதில்லை. ஈழத்தின் ஏனைய பகுதிகளில் நடப்பது பற்றி தெரிந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஈழத்தில் நடக்கும் பணச்சடங்கு (நான் அறிந்தவரையில்)

யாராவது குடும்பத்தினர் பண கஸ்டம், அல்லது தொழில் முயற்சிக்கு பணம் தேவைப்படும் போது இப்படியான பணச்சடங்கை நடத்துவார்கள். அதற்கென ஒரு நாளை குறித்து
தமது உறவினர், நண்பர்கள் போன்றவர்களை பணச்சடங்கு எனும் நிகழ்வுக்கு அழைப்பார்கள்.
அதற்கு செல்பவர்கள் தம்மால் இயன்ற பணத்தை அவர்களுக்கு அன்றைய தினம் வழங்குவார்கள். இதன் மூலம் அவர்களது பண கஸ்டம் தீரும், அல்லது தொழில் தொடங்க பணம் கிடைக்கும்.
புலம் பெயர் வாழ் ஈழ மக்களிடையே ஐரொப்பாவில் பணச்சடங்குகள் நடப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். கனடா ரோறாண்டோ வில் எப்படி?

6 comments:

Anonymous said...

அய்யா.. தமிழகத்தில் நாங்கள் இதை விருந்துண்டு மொய்பெய்தல் என்றும், மொய் விருந்து என்றும் பல்வேறு இடங்களில் வழக்காக அழைப்போம். தங்களுக்கு இதைப்பற்றி இன்னும் விபரமாக அறியவேண்டுமானால், சின்னக்கவுண்டர் என்கிற படத்தில் இதைப்பற்றிய விளக்கமான உருக்கமான காட்சிகள் வரும்.

said...

எனக்குத்தெரிந்து இங்கே கியூபெக்கில் அப்படியொன்றைக் கேள்விப்படவில்லை.

நம்மூரில் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும்.

மற்றபடி, தமிழ் சினிமாதான் துணை. விஜயகாந்தின் ஒரு படத்தில் (பெயர் மறந்து போயிடுச்சு. மனோரமா, கவுண்டமணி & செந்தில் மட்டும் நல்லா நினைவிருக்கு. ;) ) சுகன்யா வீட்டில் இம்மாதிரியானதொரு நிகழ்வில் சாப்பாட்டு இலைக்குக்கீழ தாலி வைச்சுட்டு வருவார். மத்தவங்க பணம் வைச்சாங்க.

-மதி

said...

புலம் பெயர் நாடுகளில் பெரும்பாலும் சகல நிகழ்வுகளுமே.. கொடுத்த மொய்ப் பணத்தை திரும்ப பெறும் நிகழ்வுகளாகத் தான் நடக்கின்றன. பெரும்பாலும் அனைவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பதானால் தனியே பணச்சடங்கெல்லாம் நடாத்த தேவையில்லை. பிறந்த நாள் என்ற பெயரில் பணச்சடங்கினை செய்யலாம். கொடுத்ததை பெறுதல்.. பெற்றதை கொடுத்தல் என இது ஒரு சங்கிலி போல நடக்கிறது.

said...

சந்திரன்!
ஈழத்தில் திருமண அழைப்பில் அந்த நாட்களில் கொண்டாட்டம் 4 நாட்கள்
நடைபெறுமெனப் போடுவதே...இந்தப்
பணவிடயமே..எனக் கேள்விப்பட்டுள்ளேன்.
ஈழத்தில் நமது கொண்டாட்டங்கள் யாவுமே, கைகொடுத்தல்,சமயத்துக்கு உதவுதல் என்ற வகையும், திரும்பிக் கொடுத்தல் எனும் வகைக்குள்ளும்
அடக்கமானது.
இளமையில் வீட்டில் ஓரு கொப்பியின் விபரம் குறிப்பிட்டிருந்ததைக் கண்டுள்ளேன்.
அதில் என் தமக்கையாரின் சாமத்தியச் சடங்கு வரவு விபரம் தெளிவாக இருந்தது.
வேறு பக்கத்தில் என் வீட்டார் கொடுப்பனவு விபரம், அதில் குழந்தை பிறப்பு,சாமத்தியம்,திருமணம்,வீடு குடிபூரல்,கடைத் திறப்பு,இறப்புக்குக் கூட கொடுத்த
விபரங்கள் கண்டேன்.
அத்துடன் 50ரூபா கொடுத்தவர்களுக்கு சிறிது கூட்டி 60 ரூபா கொடுத்துள்ளார்கள். என்பதனையும் அவதானித்தேன்.
சிறு வட்டி போலும்...

இந்தப் பணச்சடங்கு எனும் விடயம்
யாழ்ப்பாணத்தில் குருநகர்,பாசையூர்ப்
பகுதிகளில் வெகு விமரிசையாக நடப்பதைக் கண்டுள்ளேன்.
அவர்கள் புதிதாகத் தொழில் தொடங்க வங்கிகள் அற்ற காலத்தில் இந்தக் கைகொடுத்தல் முறை பழக்கத்துக்கு வந்ததாக அறிந்தேன்.
ஒலிபெருக்கி கட்டி , ஆடு,மாடு வெட்டித் தடல் புடலாக விருந்து நடத்துவதாக அறிந்தேன்.
அந்த விருந்து பணத்தை எதிர் பார்த்தே கொடுக்கும் விருந்து, 70 களில் ஒரு லச்சம் ரூபா கூட இதன் மூலம் திரட்டியுள்ளார்கள்.
இவை கட்டாயம் திருப்பிச் செலுத்த
வேண்டிய பணம்...எனக் கூறினார்கள்.
நமது வெளிநாட்டு விழாக்கள்....என்ன? வகை என்பது
தெரியவில்லை.
ஆனால் தமிழர்கள் வட்டிக்குக் கடன்பட்டும் விமரிசையாகத் திருமணம் நடத்துவார்கள்.
இந்த நீங்கள் கூறும் முறை இதுவரையில் இங்கு வரவில்லை.

சமீபத்தில் ஒரு பிறந்தநாள் அழைப்பு- பரிசுகள் ஏற்க்கப்படாது எனக் கூறினார்கள்.

said...

அனனி நண்பரே உங்கள் தகவலுக்கு நன்றி. சின்னகவுண்டர் படம் பார்க்கவில்லை.

மதி
நானும் அப்படியான நிகழ்வுகள் எதையும் ஈழத்தில் நேரில் பார்த்ததில்லை, சொல்லி தான் கேள்விபட்டுள்ளேன். யோகன் அண்ணா அதை பற்றி தெளிவாக சொல்லியுள்ளார்.

சிலவேளை மொன்றியால்- பெருநகரமாகிவிட்டதால் பழைய பழக்கங்கள் இல்லாது போய் இருக்கலாம்.



சயந்தன் திருமண, பிறந்த நாள் விழா மொய் பணத்தை பற்றி சொல்வதற்கு என்ன ஒரு அவர் எமக்கு இவ்வளவு போட்டாரா? நாம் எவ்வளவு போட்டோம் எனும் கணக்கு வழக்கில் தான் எல்லாம் இருக்கிறது....

யோகன் அண்ணா உங்கள் விரிவான தகவல் அடங்கிய பின்னூட்டத்துக்கு நன்றி.

//இந்த நீங்கள் கூறும் முறை இதுவரையில் இங்கு வரவில்லை.//

நான் சொன்ன நிகழ்வு இங்குள்ள தமிழ் மக்களால் நடாத்தப்பட்டதல்ல. ஆனால் அந்த நிகழ்வு எமது பணச்சடங்கை ஒத்திருந்தது. அதை தான் சொன்னேன்.

said...

எனக்குத் தெரிஞ்சு ரொரண்டோவில இப்பிடி ஒன்றும் நடக்கிறேல்ல! இந்த பணச்சடங்கு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.அம்மம்மா சொல்லியிருக்கிறா!