Wednesday 5 September 2007

Boy meets world



படம் பெறப்பட்டது: ABC இணையத தளத்தில் இருந்து.


Boy meets world- பையனின் உலக தரிசனம்? அல்லது பையன் உலகை எதிர் கொள்ளல்? எப்படியோ மொழி பெயர்த்து கொள்ளுங்கள். ஐக்கிய அமெரிக்காவில் 1993 இல் இருந்து 2000 ஆண்டு வரை அமெரிக்க ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பப் பட்ட ஒரு தொலைக்காட்சித் தொடர். மொத்தமாக 7 வெவ்வேறு பருவங்களாக(Seasons) மொத்தம் 158 அங்கங்களை (Episode ) கொண்டு வெளிவந்த நாடகத்தில் நகைசுவை தான் பிரதான விடயம்.
Cory Matthews (Ben Savage) எனும் பிரதான பாத்திரம், அவனது பிரியத்துக்குரிய நண்பன் - Shawn Hunter (Rider Strong), காதலி/ மனைவி Topanga Lawrence-Matthews (Danielle Fishel), மற்றும் பாடசாலை ஆசிரியர்/ அதிபர் (George Feeny- William Daniels) அன்பான அப்பா (Alan Matthews- William Russ), அம்மா (Amy Matthews- Betsy Randle), மற்றும் அண்ணன் (Eric Matthews- Will Friedle) ஆகிய பிரதான பாத்திரங்களும், இன்னும் பல துணைப் பாத்திரங்களையும் கொண்ட ஒரு பையனின் வாழ்க்கையை சொல்லும் கதை. பையனின் 11 வயதில் ஆரம்பிக்கும் கதை, பாடசாலை, கல்லூரி, அவனின் திருமணம், அதன் பின்னான சில வருடங்களையும், இறுதியில் சொந்த ஊரை பிரிந்து நியூ யோர்க நகருக்கு மனைவியின் வேலைக்காக அண்ணன், நண்பனுடன் செல்வதில் முடியும் வரை செல்வதாக இருந்தாலும் நான் முழுமையாக பார்த்தது என்னவோ முழுமையான முதல் 2 இரண்டு பருவங்களும், 3,4, 5 ஆம் பருவங்களில் இடையிடையே சில அங்கங்களையும் தான்.

அமெரிக்காவினதோ அல்லது ஏனைய மேலைத்தேயா நாடுகளினதோ பள்ளிகூட வாழ்க்கை அங்கு ஆசிரிய மாணவ உறவு, நண்பர்களுக்கிடையேயான நெருக்கம், சராசரி குடும்பத்தின் வாழ்கை, குடும்ப உறவுகளுக்கிடையேயான பாச பிணைப்புக்கள் எப்படி இருக்கும் என்பது பற்றிய எந்த முன்னறிவும் எனக்கு இல்லை. ஒரு நகைச்சுவை நாடகம் மக்களது வாழ்க்கை முறையை எந்தளவு தூரம் இயல்பாக பிரதிபலிக்கும் என சரியாக சொல்ல முடியாவிட்டாலும் இந்த தொடர் தொடர் பல சந்தர்பங்களில் நாடுகள் வேறுபட்டாலும் மனிதர்கள் அடிப்படை குணாதிசயங்கள் சிலவற்றில் ஒரே மாதிரியாக இருபார்கள் என்று யாரோ எப்போதோ சொன்னதை ஞாபகப்படுத்தியது.
அப்படியான சந்தர்பங்களை பட்டியலிட விரும்பினாலும் பதிவின் நீளத்தை அதிகரிக்க விரும்பாமையால் தவிர்த்துவிடுகிறேன்.


பையனின் பள்ளிகூட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் வந்து போகும் பல சம்பவங்கள் எங்களது (எனது) வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகையில் பொருத்திபார்க்கக்கூடியதாக இருந்தது. நல்ல பல செய்திகளையும் சொல்லியது. ஒருவர் வளரும் போது தெரிவுகள் எப்படி மாறுபடுகிறன என்பதும், நட்பு என்பது எவ்வாறு நிலைத்திருக்கிறது என்பதும் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.

நான் பார்த்த 2 முழுமையான பருவங்களிலும், எனைய 3,4,5 ஆம் பருவங்களிலும் மிக நெருக்கமாக இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாது இருக்கும் Cory, Shawn இருவரதும் நட்பின் நெருக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே போல ஒரு தொடரான, நெருக்கமான நட்பை நான் அனுபவித்திருக்காவிட்டாலும் அவ்வப்போது நெருக்கமாக இருந்த நண்பர்களை, சில நேரம் நெருக்கமான நண்பர்களாக இருக்க வேண்டும், இணை பிரியாது இருக்க வேண்டும் என கற்பனை பண்ணியிருந்தாலும் போரும், புலம் பெயர்வும் அங்காங்கே பிரித்து போட்ட நண்பர்களை இந்த தொடர் நினைத்து பார்க்க வைத்தது.

பல சந்தர்பங்களில் பிரிந்து போன நண்பர்களுடன் கதைக்க வேண்டும் என நினைப்பு வரும் ஆனால் நாடுகளுக்கிடையேயான பாரிய நேர வேறுபாடுகள் பல சந்தர்பங்களில் நண்பர்களுடன் கதைக்கமுடியாது தள்ளிபோடவைத்து விடுகிறது. நீ, நான், நீர், நான் என கதைத்த நண்பர்களின் நெருக்கம் குறைந்து நீங்கள் என அழைத்து அறிமுகமற்ற அல்லது அதிகம் நெருக்கமற்ற யாருடனோ உரையாடுவது போன்ற இடைவெளியை போரும் அதன் விளைவான புலப்பெயர்வுகளும் தோற்றுவித்து வைத்துள்ளதை நினைத்து யாரை நோவது. தொலைபேசும் போது என்ன நீங்கள், நாங்கள் பழையபடி நீ, நான் என கதைக்க மாட்டியோ 17 வருடங்களின் பின் 2 ஆம்முறையாக தொலைபேசி மூலம் உரையாடிய நண்பன் கேட்கும் போது நீ என்ற வார்த்தையையே வாய் உச்சரிக்க மறுத்து நீங்களிலேயே சிக்கி கோண்டு நின்றதை என்ன வென்பது.




ஆசிரியர், மாணவருக்கிடையே இருக்கும் அன்னியோன்னிய உறவும், ஆசிரியர், மாணவர் எனும் மீறப்பட முடியாத கோட்டையும் சொல்லும் பல காட்சிகள் நாடகத்தில் இருந்தாலும் நாடகத்தின் நிறைவு பகுதியில் வருவதாக ( 7 ஆம் பருவத்தின் இறுதி அங்கம்- 6,7 ஆம் பருவங்களை இதுவரை பார்ததிலை) youtube இல் கிடைத்த காட்சி அதை மிக தெளிவாக சொல்வதாக நான் நினைக்கிறேன். அந்த காட்சியை கீழே இணைத்துள்ளேன். இன்றைய ஆசிரியர் தினத்தில் அந்த காட்சி உங்களுக்கு சில நேரம் எதும் ஒரு சேதியை அல்லது உங்கள் விருப்பத்திற்குரிய ஒரு ஆசிரியரிடம் தொடர்ந்து கற்க சந்தப்பம் கிடைக்காதா என எண்ண வைத்த சந்தர்ப்பம் ஒன்றை நினைவுபடுத்தலாம்.




இந்தளவுக்கு ஆசிரிய மாணவ நெருக்கம் எமது பாடசாலைகளில் கிடையாவிட்டாலும் எனது (எங்களது) பாடசாலையிலும் 6 ஆம் தரத்தில் இருந்து 10 ஆம் தரம் வரையும் வகுப்பாசிரியராக ஒருவரே இருந்த ஆசிரியை ஐ அனைத்து மாணவர்களும் அன்பாக, அம்மா என அழைக்கும் வகையில் மிக அன்பாக நடந்து கொண்டவர். அவர் மட்டுமல்ல இன்னும் பல ஆசிரியர்கள் எனது இன்றைய அடைகைக்கு அடித்தளாமிட்டவர்கள். யாரும் மறக்கப்பட முடியாதவர்கள். வாழும் வரை கூடவே வாரும் நினைவுகளில் அடிக்கடி வந்து போவர்கள்.




இறுதி அங்கத்தில் இரண்டு பாகங்களின் முதல் பகுதி கீழே








Boy meets world..... இறுதி அங்கத்தில் வரும் ஒரு காட்சியில் வரும் வரிகள்......










பிற்குறிப்பு: இணையத்தில் ஓசியில் ஆங்கில படம் பார்க்க கிடைக்கும் இணைய தளத்தில் எதேச்சையாக Boy எனும் சொல்லை போட்டு தேடிய போது தான் இந்த நாடகத்தை பார்க்க கூடிய இணைப்பு கண்ணில் அகப்பட்டது.

3 comments:

said...

நான் ரொம்பவே ரசித்து பார்க்கும் தொடர் இது.... இன்னும் ஏதாவது ஒரு சானெலில் வந்துகொண்டு இருக்கிரது....reruns
cosby show வும் என்னுடைய all time favourite....

said...

//நீ என்ற வார்த்தையையே வாய் உச்சரிக்க மறுத்து நீங்களிலேயே சிக்கி கோண்டு நின்றதை என்ன வென்பது.
//



எனக்கும் இந்தக் கொடுமையான அனுபவம் இருக்கு, போன முறை யாழில் சில நண்பர்களைச் சந்தித்தபோது.

கிட்டத்தட்ட இதே மாதிரி விஜய் ரீவியில் கனா காணும் காலங்கள் தொடர் வருகுது, இருக்கிற சிரியலில் ஓரளவு உருப்படியானது.

said...

//நான் ரொம்பவே ரசித்து பார்க்கும் தொடர் இது.... இன்னும் ஏதாவது ஒரு சானெலில் வந்துகொண்டு இருக்கிரது....reruns
cosby show வும் என்னுடைய all time favourite....//

ராதா சிறிராம் உங்கள் கருத்துக்கு நன்றி.
நான் இதுவரை பார்த்த தொடர்கள் 2 மட்டும் தான் ஒன்று மேலே சொன்னது. மற்றையது
Malcolm in the middle

நேரம் கிடைக்கும் போது மற்றையவற்றையும் பார்க்க வேண்டும்.

//கிட்டத்தட்ட இதே மாதிரி விஜய் ரீவியில் கனா காணும் காலங்கள் தொடர் வருகுது, இருக்கிற சிரியலில் ஓரளவு உருப்படியானது. //

கானா பிரபா, ம் கனா காணும் காலங்கள் கிட்டதட்ட இதே போன்றது தான். அதை பற்றி ஒருவரி எழுதுவதா வேண்டாமா என யோசித்துவிட்டு கைவிட்டு விட்டேன்.

கனாகாணும் காலங்களில் வீட்டை வாடகைக்கு விடும் வீட்டு காவல் காரன் போல் இதிலே வீட்டை 2 பையங்களும் வாடகைக்கு விடுகிறார்கள்.....
இன்னும் ஒற்றுமை நிறைய இருக்கலாம்...