Wednesday 2 July 2008

யாழில் இருந்து லங்கா முடித்தவில் திருமலைக்கு - 1

யாழ் குடா நாடு 95 இல் இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் யாழ் குடா மக்களுக்கான பாதையாக இருந்து வந்த, அதே நேரம் பல பேரை பலி கொண்டதுமான கிளாலி பாதையூடான பயணம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் யாழ் மக்களுக்கான போக்கு வரத்துக்கு காங்கேசன் துறையில் இருந்து திருகோணமலைவரையான கப்பல் மார்க்கமும், பலாலியில் இருந்தான விமான பயணமுமே அமைந்திருந்தது. முதலில் கப்பலிலும், பின்னர் விமானத்திலும் பயணம் செய்திருக்கிறேன். அந்த பயணங்களை மேற்கொள்ள முன்னர் நாம் பட்ட அலைச்சல்கள் கொஞ்ச நஞமல்ல. இந்த பதிவில் கப்பல் பயணத்தின் அனுமதி, பயணசீட்டு பெறல், கப்பலில் பயணித்து திருகோணமலையை சென்று சேரும்வரை பட்ட அவஸ்தைகளை பார்க்கலாம். கப்பல் என்றால் அது பயணிகள் கப்பல் அல்ல, சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு கப்பலில் எந்த அடிப்படை வசதியும் இன்றி பயணிக்க வேண்டும்.
அந்த கப்பல் கீழே உள்ள கப்பலின் தரத்தில் அல்லது அதை விட சிறிது நல்ல நிலையில் இருக்கும்.






**********


இப்போதும் யாழ் குடா நாட்டு மக்கள் வெளியே பயணிப்பதற்கான பாதைகளாக விமான பயணமும், கப்பல் பயணமுமே அமைந்திருக்கிறது. முன்னரை விட இப்போது பயண அனுமதியை பெறுவதற்கு இன்னும் சிரமப்பட வேண்டியிருப்பதாக அறிய முடிந்தது.


**************


யாழ் குடாநாடு இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் திறந்த வெளிச்சிறைசாலையான யாழில் இருந்து மக்கள் வெளியே மக்கள் செல்வதற்கு நிறைய கட்டுப்படுகள் இருந்தன. யாரும் தமக்கு தேவையான நேரத்தில் யாழ் குடா நாட்டுக்கு வெளியே சென்றுவிட முடியாது. பயணத்துக்கான அனுமதியை பெறுவதற்கு குறைந்தது ஒரு மாதங்களாவது காத்திருக்க வேண்டும். அலுவலக, கல்வி நிமித்தம் செல்பவர்களுக்கு வேறு நடைமுறையும், சாதாரண பொதுமக்களுக்கு/ தனிப்பட்ட காரணமாக பயணிப்பவர்களுக்கு வேறு நடைமுறையும் இருந்தன.

சாதாரண பொதுமக்களாக/ தனிப்பட்ட தேவைகளுக்கு பயணிப்பவர்களாக இருந்தால்

இராணுவத்திடம் இருந்து பாதுக்கப்பு பயண அனுமதி பெறும் விண்ணப்பப்படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம், 2 அல்லது 3 (சரியாக நினைவில் இல்லை) புகைப்படங்களுடன் கிராம அதிகாரியிடம் சான்று படுத்தவேண்டும், பின்னர் உதவி அரசாங்க அதிபர் (இந்தியாவில் சப்-கலக்டர்) அலுவலகத்தில் சான்றுபடுத்தி, குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ முகாம் அதிகாரியிடம் உறுதிபடுத்தல் கையொப்பம் வாங்க வேண்டும். இவர்கள் அனைவரது உறுதிப்படுத்தலும் குறிப்பிட்ட நபர் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர் என்ற சாரப்பட இருக்க வேண்டும். சிவில் அரச அலுவலர்களின் கையொப்பத்தை 2 நாட்களில் பெற்றுவிட முடியும். ஆனால் குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியின் கையொப்பம் பெற பல முறை அலைந்து கையொப்பத்தை பெற ஒரு வாரம் ஆகிலும் தேவைப்படும். அத்துடன் குறிப்பிட்ட நபர் நேரடியாக இராணுவ முகாமுக்கு செல்ல வேண்டியிருக்கும். இந்த மூன்று பேரிடமும் கையொப்பம் பெற்ற பின் அந்த பிராந்தியத்திற்கு பொறுப்பான இராணுவ முகாமில் விண்ணப்பத்தை கையளிக்க வேண்டும். அவர்கள் அதை உறுதிப்படுத்தி பலாலியில் உள்ள இராணுவ சிவில் (இராணுவம் அதில் என்ன பின் சிவில் என்று ஆச்சரிய படுகிறீர்களா? பொதுமக்களின் பயண ஒழுங்கு அனுமதியை வழங்கும் அலுவலகம் அப்படி தான் அழைக்கப்படும்) அலுவலக்கம் எல்லா தகவல்கள், ஆவணங்களையும் சரி பார்த்து நிராகரிக்கும் அல்லது அனுமதிக்கும். அந்த அனுமதி கிடைக்க குறைந்தது 2 வாரங்களாவது செல்லும். ஆனால் இரண்டு வாரத்தில் கிடைக்கும் என்று வீட்டில் இருந்தால் 2 மாதம் ஆனாலும் கிடைக்காது. இரண்டு வாரம் முடியும் தறுவாயில் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு பொறுப்பான இராணுவ முகாமுக்கு போனால் இன்று வா, நாளை வா என இழுத்தடித்து பயணத்துக்கான அனுமதி முன்று அல்லது நான் கு வார முடிவில் கையில் கிடைக்கும். கிடைத்த அனுமதி கூட 1 அல்லது 2 மாதம் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் கப்பலில் அல்லது விமானத்தில் இடம் கிடைக்காவிட்டால் மீண்டும் பாதுகாப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுவே அலுவலக காரியமாக/ அல்லது கல்வி காரணங்களுக்காக செல்வோருக்கு பதுகாப்பு அனுமதி முறை வேறானது, சற்று இலகுவானது. எனது பயணம் கல்வி பயணமாக இருந்ததால் இந்த முறையிலேயே நானும் எனது பள்ளி தோழர்கள், மற்றும் எம்முடன் துணை வந்த ஆசிரியர்களும் அனுமதி பெற்றோம். அதைப்பற்றியும், கப்பல் பயண சீட்டு பெறுவது பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.





தொடரும்...............

1 comments:

said...

இன்னும் இந்த நிலையில் இருந்து யாழ்ப்பாணம் மீளவில்லை என்பது வேதனையான விடயம். அப்படி மீளும் காலஎல்லையும் முடிவிலியாக இருப்பது அதனைவிட வேதனையான விடயம்.

நினைவுகூர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்தும் எழுதவும்.