Tuesday 15 September 2009

நான் எழுதி கிழிச்ச கதை......






வலைப்பதிவு எழுத வந்த கதை தொடர் விளையாட்டு எங்க தொடங்கி எங்க நிக்குதெண்டு தெரியேல்லை. சினேகிதி என்னையும் அந்த விளையாட்டுக்கு கூப்பிட்டுருக்கிறன் எண்டு மின்னஞ்சல் போட்டு, அரட்டையிலும் வந்து அறிவிச்சிருந்தா. போன ஞாயிற்று கிழமைக்கு பிறகு தான் எழுதேலும் எண்டு சொன்னான் ஆனாலும் சொன்ன மாதிரி எழுத ஏலாம போச்சு. சினேகிதி என்ன சொன்ன மாதிரி எழுதேல்லை எண்டும் வந்து கேட்டு போட்டா.

உண்மைய சொல்ல போனா இந்த தொடர் விளையாட்டுகள் தொடங்கினபோது என்னையும் ஆரும் கூப்பிட மாட்டினமோ எண்டெல்லாம் நினைசிருக்கிறன். ஆனா போக போக அதிலை பெரிசா ஆர்வம் இல்லம போனதோடா, ஆரும் உந்த தொடர் விளையாட்டுகளுக்கு ஒரு கிறீட்ட இடம் நிரப்புற மாதிரி ஒரு ரெம்பிளடை உருவாக்கின நல்லம் போலை இருக்கும். பேசாம அந்த இடைவெளியளை எங்கடை விசயங்களை போட்டு நிரப்பி போட்டு போகலாம். நல்ல சுகமான வேலை.

நான் வலைப்பதிய வரமுதல் ஒரு சில பதிவர்கள் சொன்னது போல ஆரம்பத்திலை இணையத்திலை தமிழ் எழுதி பழகின இடம் யாழ் இணையம். ஊரிலை இருந்த போது கருத்துகளம், வலைபதிவு எண்டது பற்றியெல்லாம் ஒண்டும் தெரியா. வேலை செய்ய போன இடத்திலை மின்ஞ்சல்கள், மேல படிக்கிறதுக்கு இடம் தேடுறதுக்கும் போற நேரம் யாழ் இணையம் எதேச்சைய பார்வையிலை வந்துது. அதிலை சின்னப்பு ஹரி எண்டு சில பேர் நல்ல முசுப்பாத்தியா கருத்துக்கள் எழுதியிருக்கிறதை வசிச்சு சிரிச்சு போட்டு போறது, ஆனா அதிலை போய் நானும் இணையலாம், கருத்தெழுதலாம் எண்டெல்லாம் தெரியா. அதோட அதுக்கு மினக்கெடவும் நேரம் இருக்கேல்லை. புலம் பெயர்ந்து வந்தாபிறகு சொந்தமா கணனியும் வாங்கி, ஓசிலை இணைய இணைப்பும் கிடைச்சா பிறகு இரவுகளிலை தனிய இருந்து பொழுது போக்காட்டேலாம, யாழ் இணைய பக்கம் போக தொடங்கி பதிஞ்சு முதாலாவது கருத்து எழுதுறேக்கிடையிலை போதும் போதும் எண்டாகி போச்சு. அப்ப யாழ் இணையம் ஒருங்குறி பாமினியிலை இயங்கினது, எழுதுறேக்கு பாமினி மின் விசைபலகை தெரிஞ்சிருக்க வேணும். ஊரிலை இருக்கேக்கை வேலைக்காக பாமினி பாவிச்சு தட்ட்ச்சியிருந்தாலும் ஒவ்வொரு எழுத்தா தெடித்தேடி தான் எழுதின்னான். யாழிலை எழுத தொடங்கேக்கை எழுத கரைச்சல் பட்டாலும் யாழிலை கருத்தெழுதுற இடத்துக்கு மேலை பாமினி விசைப்பலகையின்ர படம் இருந்ததாலை பாத்து பாத்து எழுதி ஒரளவுக்கு பாமினி விசைப்பலகை பழக்கத்துக்கு வந்திருந்திச்சு. ஒரு கட்டத்திலை சுரதா கீ மான் மென் பொருள் பற்றியும் யாழ் இணையத்திலை அறிமுகம் கிடைச்சுது, அதிலை ஆங்கிலத்திலை Amma எண்டு எழுத தமிழிலை ஒருங்குறிலை அம்மா எண்டு மொழிமாற்றி வரக்கூடிய தட்டச்சு வசதி இருந்த்திச்சு. எனக்கு பாமினிலை எழுத்தை தேடி தேடி தட்டுறதிலும், Romanished to Unicode தமிழ் கீமான் விசைப்பலகை இலகுவா இருந்திச்சு அதையே பாவிச்சு எழுதவும் தொடங்கீட்டன்.

சினேகிதி சொன்ன ஒழுங்க தலை கீழ மாத்தி போட்டன் போல சரி எப்பிடி எழுதினா என்ன வலைபதிய வந்த கதை எழுதினா சரி தானே.

யாழிலை எழுதி கொண்டிருக்கேக்கை வலைப்பூ/ வலைப்பதிவு பற்றின அறிமுகம் கிடைச்சிச்சு. யாழ் இணையத்தில் இணைஞ்சிருந்த கன பேர் அப்ப வலைப்பதிய தொடங்கி இருந்திச்சினம், அதிலை ஞாபகம் வாற ஆக்கள், தமிழினி, கவிதன், சயந்தன், குருவிகள், சண்முகி, சினேகிதி.... இப்பிடி கன பேர். சரி எல்லாரும் எழுதினம் நானும் எழுதினா என்ன எண்டு ஒரு அவாவிலை 2005 பங்குனி மாதம் யாழ் இணையம் வழங்கின .yarl.net இலையும், புளொகரிலையும் ஒவ்வொரு வலைப்பதிவு தொடங்கினன். ஒண்டிலை பொழுதுபோக்கு விசயங்களும், மற்றதிலை துறை சார் பதிவுகளும் எழுதுறதெண்டு சொல்லி கொஞ்ச நாள பதிவுகள், புகைப்படங்கள் எண்டு பதிஞ்சு கோண்டு இருந்தனான். யாழ் இணையத்திலை தான் தமிழ்மணம் வலைப்பதிவு திரட்டி பற்றின அறிமுகமும் கிடைச்சிச்சு. பிறகு யாழ் இணைய வலைப்பூ வழங்கி செயல் இழந்தப்பிறகு, எல்லாத்தையும் புளொக்கர் பதிவிலை எழுதி கொண்டு இருந்தன். அதிலையும் எல்லாருக்கும் கனக்க பின்னூடம் வர எனக்கு மட்டும் ஆரும் பின்னூடம் போடினம் இல்லை எண்டு கவலையா இருக்கும். அதிலையும் பெரும் பதிவர்கள் எண்டு சொல்லுற சில பேரிட்டை பின்னூட்டம் வாங்க வேணும் எண்டும் ஆசையா இருக்கும் ஆனா நான் யாருக்கும் போய் பின்னூட்டம் போடாட்ட எனக்கும் ஆரும் பின்னூட்டம் போட மாடினம் எண்டதும், நான் பின்னூட்டம் போட்டாலும் சிலர் திரும்பியும் பாக்க மாடினம் எண்டதும் விளங்கிச்சு. இப்பிடியிருக்கேக்கை நாடு மாற வேண்டி வந்திச்சு. சரி புது நாட்டுக்கு வந்து புது வலைப்பதிவு தொடங்குவம் எண்டு புளொக்கரிலை புதிசா பதிஞ்சு புது ஆள் மாதிரி 2007 மாசி மாதம் எழுத தொடங்கினன் :) என்ரை பழைய பதிவுகளை வாசிச்ச சில பேர் என்னை அடையாளம் கண்டு பிடிச்சிட்டினம்.

புது வலைப்ப்திவு எழுத தொடங்கி 3 மாதம் ஆகுறேக்குள்ள தமிழ்மணத்திலை இருந்து நட்சத்திர வாரத்தில் எழுத அழைப்பு வந்திச்சு அதாலை எனக்கு கொஞ்சம் அதிகமா வாசகர்கள் கிடைச்சார்கள் எண்டு நினைக்கிறன். ஆனா கிடைச்ச வாசகர்களை தக்க வைக்க தொடர்ந்து எழுதுறேக்கு முடியேல்லை. எனக்கேயுரித்தான சோம்பல் புத்தி, அடுத்தது என்னுடைய வேலை விடயங்களின் சுமை, எல்லாரையும் போல ஊரின் கதைகள் எண்டு எழுத பெரிசா மனம் வரேல்லை. இருந்தாலும் வலைபதியிறன் எண்டு காட்ட இடைக்கிடை புகைப்படங்களை போட்டு கொண்டிருந்தன்.

இன்னொரு முக்கியமான விசயம் என்னெண்டா வலைபதியும் மற்றவர்களின் பதிவுகளை வாசிச்சு போட்டு என்ரை எழுத்தை வாசிக்க எனக்கு பெரிசா பிடிக்கிறேல்லை. என்னாலை அவைய போல வாசிக்க தூண்டும் விதமா எழுத ஏலாது எண்ட நினைப்பும் அடிக்கடி வரும் அதாலையும் வலைப்பதிவில் அதிகம் எழுதுறேல்லை.

சரி இந்தளவும் போதும் எண்டு நினைக்கிறன் நான் எழுதி கிழிச்சதை பற்றி சொல்ல.

இன்னும் ஆர் ஆர் எழுதாம இருக்கினம் எண்டு தெரியேல்லை.
அதாலை இன்னும்
பதிவெழுத வந்த கதையை எழுதாத ஆரும் இந்த பதிவை உங்களுக்கான அழைப்பா எடுத்து தொடரலாம்.



படம் கூகுல் தேடலில் பெறப்பட்டது.

2 comments:

said...

ஓருமாதிரி எழுதியாச்சா :) இன்னும் நிறையப்பேர் எழுதாமல் இருக்கினம்.

\\ ஆரும் உந்த தொடர் விளையாட்டுகளுக்கு ஒரு கிறீட்ட இடம் நிரப்புற மாதிரி ஒரு ரெம்பிளடை உருவாக்கின நல்லம் போலை இருக்கும். பேசாம அந்த இடைவெளியளை எங்கடை விசயங்களை போட்டு நிரப்பி போட்டு போகலாம். நல்ல சுகமான வேலை. \\

இப்பிடித்தான் research papers எல்லாம் வரப்போதா அப்ப:)


\\இன்னொரு முக்கியமான விசயம் என்னெண்டா வலைபதியும் மற்றவர்களின் பதிவுகளை வாசிச்சு போட்டு என்ரை எழுத்தை வாசிக்க எனக்கு பெரிசா பிடிக்கிறேல்லை\\

இது நிறையப்பேருக்கு இருக்கிற பிரச்சனைதான்.

said...

ம் பின்ன குடுத்த ஆக்கினைக்கு எழுதாமல் என்ன செய்ய :)