Sunday, 11 March 2007

உப்பு தூள் மாங்காய்

உப்பு தூள் மாங்காய் யாருக்காவது வாய் ஊறுதா?

பள்ளிப்பருவத்திலை எத்தினை பேர் களவாய் மாங்காய் ஆய்ஞ்சு, உப்பு தூளோட சாப்பிடிருக்கிறியள்? அந்த நேரம் எந்த மாங்காய திண்டாலும் ருசியா தான் இருக்கும். ஆனா மாங்காய சாப்பிட சேலம், பச்ச தின்னி மாங்காய்கள் தான் திறம்.
அதிலையும் மாங்காய கத்தியால வெட்டாம மரத்திலை குத்தி திண்டா அதிலை ஒரு சுவை இருக்கு.

கானா பிரபா நல்ல ஒரு பதிவே போட்டிருந்தவர்.
அப்பிடி எல்லாம் அதிகமா எழுதேல்லை நான் இப்ப சும்மா படங்காட்ட தான் வெளிக்கிட்டனான். அதுக்கு உப்பையும் தூளையும் இழுத்தன் வேற ஒண்டுமில்லை.

அண்டைக்கு இலுப்பங்காய மாங்காய் எண்டு அடையாள படுத்தின்னியள். இண்டைக்கு இதிலை போட்டிருக்கிற மாங்காயளிடை பேருகளை சொல்லுங்கோ ;)

கடைசியா இருக்கிறத மா எண்டு சொல்லி போடதங்கோ :)



























கண்ணகி சிம்மவாகினியாகும் கதை

கண்ணகி சிலப்பத்கார நாயகி அதற்கப்பால் வணக்கத்துகுரிய தெய்வமாகவும் மாற்றம் பெற்றவள். கண்ணகி வழிபாடு எப்படி எங்கு தொடங்கியது என்பதை பற்றியெல்லாம் ஆராயும் எண்ணம் எனக்கு இல்லை. தமிழகத்தில் கண்ணகி வழிபாடு இருக்கிறதா? நான் சந்தித்த தமிழக நண்பர்களிடம் கேட்ட போது இல்லை என்றார்கள்.
ஈழத்தில் கண்ணகி வழிபாடு இருக்கிறதா என்றால் இருக்கிறது. சிங்களவர்களும் பத்தினி தெய்யோ என்பது கண்ணகியை என கேள்விபட்டேன் ஆனால் சரியாக அதுவும் தெரியாது கிழக்கு மாகாணத்தில் இருப்பதாக சொன்னார்கள் அதை பற்றி எனக்கு சரியாக தெரியாது.
யாழ்ப்பாணத்தில் கண்ணகிக்கு கோயில் உண்டா என கேட்டால் பலரும் இல்லை என்பார்கள். என்வயதொத்தவர்களில் பலருக்கு தெரியாத போது இனி வரும் சந்ததிக்கு தெரிய வருமா என்பதை சொல்ல முடியவில்லை. ஏன் எனில் பெண் தெய்வங்களும் அம்மன் எனும் பொதுமைக்குள் அடக்கப்பட்டு விட்டதும்; பாரம் பரிய பூசகர்களிடம் இருந்து, ஆகம விதிக்கு உட்படாத கோயில்கள் ஆகம விதியோடு மாற்றியமைக்கப்படுவதும், பட்டதும் காரணம்.

எனக்கு தெரிந்த கோயில்களை பட்டியல் இடுகிறேன்.

1. பன்றிதலைச்சி மட்டுவில் சாவகச்சேரி- கண்ணகை அம்மன் என்பதாக சொல்லபட்டாலும் ஆகம விதிக்கமைய கோயில் அமைக்கப்பட்டு, பார்வதி, பரமேஸ்வரனாகிவிட்ட ஆலயம். பங்குனி திங்கள் சிறப்பானது. பல ஊர்களிலும் இருந்து மக்கள் பொங்க வருவார்கள். சிலம்பு தாங்கிய கண்ணகி சிலை இருந்ததா/ இல்லையா ஞாபகம் இல்லை.

2. மண்டுவில் கண்ணகை அம்மன், மீசாலை சாவகச்சேரி (சோலையம்மன்)
கோயிலை சுத்தி சோலை/ காடு இருக்கு.









ஆகம விதிக்கமைய கோயில், பூசைகள் நடக்கும் ஆலயம். வருடாந்தம் மகோற்சவம் நடக்கும். ஆனால மூலஸ்தானதில் இருந்த சிற்பங்கள் சிலம்பு தாங்கிய பெண் தெய்வ சிலைகள். யுத்ததால் சேதமான பின் மீளமைக்கப்படும் ஆலயத்தில் கண்ணகி சிங்க வாகனம், சூலாயுததுடன் காட்சி தரும் சிலைகள் அமைக்கப்படுகிறன.


3. சுட்டிபுரம் கண்ணகை அம்மன்- கோயில் ஆகம விதிக்கமைய அமைக்கப்படா விட்டாலும் பூசைகள் ஆகம விதிக்கமைய

4. கச்சாய கண்ணகை அம்மன்- கோயில் ஆகம விதிக்கமைய இல்லை-பூசை ஆகம விதிகமைய
5. விடத்தற்பளை கண்ணகை அம்மன்- பூசை பரம்பரை பூசகர்.


வன்னியில் பூனகரியில் ஒரு கண்ணகை அம்மன் ஆலயம் உண்டு என்பது தெரியும். அதை விட மேலதிகமாக எனக்கு தெரியாது.

அடுதது வன்னியர் கோயில் எனும் ஒரு கோயிலை பற்றியும் சொல்ல வேண்டும்.

இது சாவகச்சேரியில் இருந்து கச்சாயூடாக கிளாலி செல்லும் வீதியில் விடத்தற்பளையில் இருக்கிறது.

வீதியொரம் இருந்தாலும், மிகுதி மூன்று பக்கமும் பற்றைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஒரு குளம்.
கடவுளுக்குரிய உருவமோ சிலைகளோ இல்லை.
தகரத்தால் கூரையிடப்பட்ட பந்தல்கள். நான்கு பக்கமும் திறந்தவை.
வன்னியர் அப்பந்தல்களுக்கு வெளியே மூன்று பக்கமும் கிடுகு வேலியால் சூழப்பட்டு, கூரையற்று மழை வெயில் காய்ந்தபடி இருந்தார். வருடத்தில் ஒரு முறை பொங்கல் படையல் அதை தொடர்ந்து எட்டம் மடை மட்டுமே அவருக்கான பூசை
அண்மையில் (2005) போன போது பார்தால் கூரையற்று இருந்தாருக்கு சிறு சிமேந்து கட்டிடம், ஓட்டு கூரை என ஆலய வடிவம் பெற்றது மட்டுமல்ல கோயில் வாசலி திரையில் வள்ளி தெய்வானை சமேதராக முருகன் காட்சி தந்தார்.
இன்னும் பத்து வருடங்களில் ஆகம விதிக்கமைய கோயில் அமைக்கப்பட்டலாம். வன்னியரோட பெயர் சிறி சுப்பிரமணியர் ஆகலாம்.

இதை எழுதியது எனக்கு தெரிந்த ஒரு இரு பத்தாண்டு காலதுக்குள்ளே கண்ணகி என்று சிறுவயதில் சொல்லப்பட்ட ஆலயங்கள் துர்க்கை/ பார்வதியாக மாறுவதும், வன்னியர் சுப்பிரமணியர் ஆவதும் நடக்கிறதென்றால். இதே போல எவ்வளவு மாறியிருக்கும் என்பதை எண்ணி பார்ப்பதற்கே.

Sunday, 4 March 2007

2 எப்பிடி 42 ஆனது

உண்மையில் ஆச்சரியமாக போய்விட்டது. சயந்தன் குறைந்த பின்னூட்டம் உடைய பதிவை தமிழ்மணம் அதிக பின்னூட்டம் உடையதாக காட்டியதாக. இன்றைக்கு 2 பின்னூட்டமே கொண்ட என்னுடைய பதிவை 42 பின்னூட்டம் கொண்ட பதிவாக காட்டி முன் பக்கத்திலிருந்தும் வெளியேற்றி விட்டது தமிழ்மண திரட்டி. இதே போல வேறு யாருக்கெல்லம் நடந்தது?

எங்கோ ஒரு தவறு....

Saturday, 3 March 2007

என்ன தம்பி கறுத்து போனாய்

இந்த வார நட்சத்திரம் கூத்தாடியின் கறுப்பு சிவப்பு எனும் பதிவு எனது பழைய ஞாபகங்களை கிளறி விட்டது. எங்கட ஆக்களிட்டை இருக்கும் வெள்ளை? , வெளிறிய/ சிவப்பு நிறம் மீது இருக்கும் ஈர்ப்பும் அதை பற்றி அடிக்கடி கதைக்கும் பழக்கமும், பலருக்கு சிறுவயதில் இருந்தே ஆழ்மனதில் பதிவு செய்யப்பட்டு விடுகிறது. அது எங்களுக்கு தெரியாமலே பல சந்தர்ப்பங்களில் எட்டி பார்க்கவும் செய்யும்.

சின்ன வயதிலேயே, இவன் வெள்ளை பொடியன், அந்த பொடியன் நிறம் குறைந்த/ கறுப்பு பொடியன் எண்டு சொல்லி கேட்டு கேட்டு மனதில் நான் வெள்ளை எண்டதும், வெள்ளை எண்டால் ஏதோ பெரியாக்கள் எண்டும் மனதில பதிவு செய்யப்பட்டு இருந்தது. எது சரி பிழை எண்டு பிரித்துணர முடியாத வயது அது. ஆனால் உயர்தர வகுப்பு படிக்கும் போது கூட அந்த மன நிலையிலை பெரிசா ஏதும் மாற்றம் இருக்கேல்லை எண்டது தான் உண்மை. பல்கலைகழகத்தில் பயிலும்போது தான் அந்த உணர்வு சிறிது சிறிதாக குறைய தொடங்கியது.

சிறுவயதில் என் மனதில் ஊட்டப்பட்ட எண்ணம் எப்படி வெளிப்பட்டது எண்டதுக்கு ஒரு சின்னா உதாரணம் இது.


பாலர் வகுப்புக்கு பள்ளிகூடம் போன போது நடந்த சம்பவம். அப்ப அம்மாவும் அங்க தான் படிப்பிச்சு கொண்டிருந்தவ. அப்ப எங்கட பள்ளிகூடத்திலை ஏ, பி எண்டு இரண்டு பிரிவுகள். என்னை ஏ வகுப்பு எண்ட பிரிவுக்க விட்டாச்சு. வகுப்புக்க கொண்டு போய் அம்மா எனது வகுப்பு ரீச்சரிடம் சொல்லி போட்டு விட்டிட்டு போட்ட. ஆனா எனக்கு ரீச்சரை பாத்த உடனம் அந்த வகுப்புக்க இருக்கவே பிடிக்கேல்லை. எனேண்டா ரீச்சர் கறுப்பா இருந்தா. பக்கது பி வகுப்பு ரீச்சார் நிறமான ரீச்சர். அவவை கண்டிட்டு நான் பக்கத்து வகுப்புக்கை போய் இருந்திட்டன், என்ரை வகுப்புக்குரிய ரீச்சர் எவ்வளவு கூப்பிட்டும் போகேல்லை.
பள்ளிகூடம் முடிஞ்சு வீட்ட போன பிறகு அம்மாட்டை கறுப்பு ரீச்சரின் வகுப்பிலை இருக்க மாட்டன் எண்டு சொல்ல்லி அடம் பிடிச்சன். ஆனா அம்மா என்ன செய்ய முடியும். என்னை ரீச்சர் வகுப்பிலை வச்சிருக்க கண்டு பிடிச்ச வழி என்னெண்டா, எனக்கு அ, ஆ, மற்றும் பெயர்கள், படங்களை இணைக்கும் அட்டைகள், சிறுவர்களுக்கான பாட்டு பாட பயன் படுத்தும் கிலிகட்டி?? எல்லாம் தந்து, வீட்ட கொண்டு போய் விளையாட ஒரு மாதமா விட்டது தான். உண்மையில் நானும் ஒரு ரீச்சரின் பிள்ளையாக இருந்தது தான் இவ்வளவு தன்மையாக விளையாட்டு பொருட்காளை தந்து என்னை வகுப்புக்குள் வைத்திருக்க முயன்றதன் காரணமாக இருக்குமோ எண்டு யோசிசிருக்கிறன். இதையே வேறயாரும் போடியள் செய்திருந்தா அந்த ரீச்சர் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார் எண்டாதை சொல்ல முடியவில்லை.

இதே மன நிலை வளந்தா பிறகும் அடி மனதிலை இருக்கும். வெள்ளையா வரோணும் எண்டதுக்காகவே fair and lovely பூசிய பல நண்பர்கள் இருக்கிறார்கள். இது தான் எங்கட நாட்டிலை நடக்கிற நிகழ்வெண்டா, எங்கட ஆக்கள் புலம்பெயர்ந்து வந்தா பிறகும் அதை மறக்காம கவிவச்சிருக்கிறதை நேரையே கண்டனுபவித்திருக்கிறேன். நான் புலம் பெயர்ந்தது மிக அண்மையில் தான். என்னை சின்ன பொடியனா ஊரிலை கண்டிட்டு இஞ்சை வந்து கன காலமா என்னை காணத ஆக்கள் எல்லாம் என்னை கண்டோடனம் சொல்லுற சொல்லு என்ன ஊரிலை நல்ல வெள்ளை பொடியனா இருதாய் இங்க வந்து கறுத்து போனாய் எண்டுறது தான்.

எங்கட ஆக்கள் ஊரிலை இருந்து கனக்க விசயத்தை காவி வந்தது போல, உந்த வெள்ளை, கறுப்பு எண்டதையும் காவி வந்து இன்னும் அதை கைவிடாம தான் வச்சிருக்கினம்.

Friday, 2 March 2007

சிகிரியா.....

சிகிரியா, இலங்கையை ஆண்ட சிங்கள மன்னன் காசியப்பனால் (கிபி 447-495) எதிரிகளில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட கோட்டை.
இங்கு சில ஓவியங்கள் உள்ளன. அவற்றை ஒளிப்படம் எடுக்க முடியவில்லை.

(படங்களில் அழுத்தி பெரிதாக்க முடியும்)

சிகிரியா குன்றின் தோற்றம்.



இரண்டு பெரும் பாறைகளுக்கூடு செல்லும் பாதை





உச்சிக்கு ஏறுவதற்காக அமைக்கப்பட்ட படிகள்



உச்சியில் அமைக்கப்பட்ட நீர்த்தடாகம்




மேலிருந்து பார்க்கும் போது குன்றின் முன் அமைக்கப்பட்ட மண்டபம், பாதைகளின் அழிந்த பகுதிகள்




உச்சியில் இருந்து குன்றின் இடைத்தளதின் பார்வை



மேலிருந்து ஒரு காட்சி :)