Showing posts with label நட்சத்திர வாரம். Show all posts
Showing posts with label நட்சத்திர வாரம். Show all posts

Sunday, 6 May 2007

விடை பெறும் நேரம்...

வணக்கம்

ஒரு வாரமாக எனது நட்சத்திர வார பதிவுகளை வாசித்து கருத்துக்களை பகிர்ந்த, பகிராத அனைவருக்கும் நன்றி. ஒரு வாரகாலம் நட்சத்திர பதிவராக தெரிவு செய்து ஊக்கப்படுத்திய தமிழ்மண நிர்வாகத்துக்கு நன்றி.

ஒரு வாரமாக எழுதிய பதிவுகள் எவ்வளவுக்கு அனைவரையும் கவர்ந்தது என தெரியவில்லை. எழுதியவற்றில் ஏதாவது ஒரு பதிவாவது உங்களுக்கு பிரயொசனமான தகவலை கொடுத்ததாகவோ அல்லது சுவாரசியமாகவோ இருந்திருக்குமாக இருந்திருக்குமானால் எனக்கு மகிழ்ச்சியே.


விடை பெற முன்னர் சில பாடல்கள். இந்த பாடல்கள் எந்த நோக்கமும் அற்று எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்டவை.

Powered by eSnips.com



இது நட்சத்திர வாரத்தில் இருந்து விடைபெறும் நேரம்.




மீண்டும் என்னை தெரிவு செய்தமைக்கு தமிழ்மணத்துக்கும், ஊக்கம் தந்த வலைப்பதிவர்களுக்கும் நன்றி கூறி வரும் வார நட்சத்திரத்தை வரவேற்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

Saturday, 5 May 2007

உள்ளி நாத்தம் தாங்கலை.....

உள்ளி, வெங்காயம், லீக்ஸ் (leeks)போன்ற மரக்கறிகளிள் சாதாரண மரக்கறி வகைகளிலும் பார்க்க உடல் நலனுக்கு நன்மை பயக்க கூடியவை என சொல்லப்படுகிறன. உள்ளி, வெங்காயத்தின் வாசனை நீடித்து இருப்பதால் அதை விரும்பாதவர்கள் பலர்.






உள்ளி, வெங்காயம் போன்ற வற்றில் இருக்கும் கந்தத்தை கொண்ட சேதன (Organosulfur) சேர்வைகள் உடல் நலனுக்கு உகந்தவை என சொல்லப்படுகிறன.

முக்கியமான பயன்களாக

1. புற்று நோயை எதிர்த்தல்

இத்தாலி, மற்றும் சுவிஸ்லாந்து நாடுகளில் வெங்காயம், உள்ளி உண்பவர்கள், உண்ணாதவர்கள், உண்பவர்களின் உள்ளி, வெங்காயம் உண்ணும் அளவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளில் வாய் (mouth), களம் (esophagus) குதம் (colon) மார்பகம் (breast), சூலகம் (ovary) சிறுநீரகம் (Kidneys)போன்ற வற்றில் புற்று நோய் ஏற்படும் சாத்தியம் வெங்காயம், உள்ளி போன்றவற்றை உண்பவர்களில் குறைவு என அறியப்பட்டுள்ளது.

2. இதய நோய்களை குறைத்தல்

மனிதரில் இதய சம்பந்தமான நோய்களை குறைப்பதில் உள்ளியின் பங்களிப்பு குறித்த ஆய்வுகள் முதலில் 1926 இலேயே ஆரம்பிக்கப்பட்டாலும், 1960 ஆம் ஆண்டுகளிலிருந்து அதிகளவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்ளி உண்பதன் மூலம், குருதியில் கொலஸ்திரோல் அளவு, மற்றும் கொழுப்பின் அளவு குறைவடையும் என அறியப்பட்டுள்ளது.

விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில்
உள்ளி, வெங்காயம் என்பன உயர் குருதி அழுத்தத்தை குறைத்தல், குருதி கொலஸ்திரோல் அளவை குறைத்தல், விரைவில் குருதி உறைதலை தடுத்தல், குருதியில் வெல்ல அளவு உயர்தலை குறைத்தல் ஆகிய நன்மையான விளைவுகள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

3. உணவு மூலம் பரவும் நோயாக்கிகளை கொல்லும்/ வளர்ச்சியை தடுக்கும் இயல்பு பற்றி செய்யப்பட்ட ஆய்வுகளிலும், குறிப்பிடத்தக்க சாதகமான விளைவுகள் பெறப்பட்டுள்ளன.

வெங்காயம், உள்ளி மணம் பிடிக்காதவர்களும் இனி இவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Friday, 4 May 2007

"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது"

"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" இது பழமொழி. அதுவே அறிவியல் ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய புது மொழியானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எமது சமையலில் கடுகுக்கு முக்கிய இடம் இருக்கும் அதன் வாசனைக்காக. ஆனால் அறிவியலில் அதன் பயன் உணவு பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.










முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிகள் நடைபெற்று வருகிறன. சில ஆய்வுகளில் கடுகு மா/ பொடியை மாட்டிறைச்சியின் மீது தூவி இந்த நுண்ணங்கியை கட்டுப்படுத்த செய்யப்பட்ட ஆய்வுகள் சாதகமான பலனை கொடுத்துள்ளன.

கடுகில் காணப்படும் நுண்ணங்கி எதிர்ப்பு இயல்புக்கும் அதன் வாசனைக்கும் allyl isothiocyanate (AIT) எனும் இலகுவில் ஆவியாக கூடிய ஒரு இரசாயன பதார்த்தமே முக்கிய காரணம் என அறியப்பட்டுள்ளது. பின்னர் கடுகில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate (AIT) இரசாயனத்தை இறைச்சி, sausage ஆகியவற்றில் பிரயோகித்து செய்யப்பட்ட ஆய்வுகளிலும்; allyl isothiocyanate ஆனது Escherichia coli O157: H7 நுண்ணங்கியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதுடன், அதை கொல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், கடுகை அல்லது பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate உணவு/ இறைச்சியில் பாவிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை அதன் கார இயல்பும், கடுமையான மணமுமாகும். பொதுவாக இவற்றுக்கு பழக்கப்படாத ஐரோப்பியர்கள், மற்றும் அமெரிக்கர்களால் இது அதிகம் விரும்பப் படுவதில்லை.


கடுகில் இருக்கும் இந்த allyl isothiocyanate நுண்ணுயிர் கொல்லியாக (antimicrobial) மட்டும் அல்லாது மனிதரில் புற்று நோய் எதிர்ப்பிலும் (anticarcinogens) பயன் பட கூடியது என அறியப்படுள்ளது.

கடுகு மட்டுமல்லாமல் மற்றைய வாசனை பொருட்களான கராம்பு (Clove) இருக்கும் eugenol , கறுவா/ பட்டை (Cinnamon) இல் இருக்கும் CINNAMALDEHYD ஆகிய இரசாயன பதார்த்தஙளும் பல்வேறு உணவு மூலம் பரவி நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கிகளை கொல்லும் திறன் வாய்ந்தவை என அறியப்பட்டுள்ளது.

என்ன " கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" எனும் பழ மொழி அறிவியலிலும் உண்மை தானே.

Thursday, 3 May 2007

ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், இன்ன பிற...

ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், அவர்கள் என்மீது செலுத்திய செல்வாக்கு



"எழுத்தறிவித்தவன் இறைவன் " இப்படி சொல்லுவார்கள். ஆனால் பள்ளி பருவத்தில் அப்படி தோன்றுவதில்லை.எல்லா ஆசிரியர்களாலும் மாணவர்களின் விருப்பத்திற்குரிய ஆசிரியராக முடிவதில்லை. ஒரு சில ஆசிரியர்கள் கடமைக்கு வந்துவிட்டோம் என கற்பித்தாலும் அவர்களை வைத்து ஆசிரிய பணியை குறைத்து மதிப்பிட முடியாது.
எமது பள்ளிகூடத்தை பொறுத்தவரை ஆண்டு 6 (தரம் 5) இல் ஒரு வகுப்பசிரியரும், கணிதம், விஞ்ஞானம் (அறிவியல்), தமிழ், சமயம் ... என 8 (இப்போது 10) பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் ஆண்டு 11 (தரம் 10/ க. பொ.த சா/த) வரையும் அவர்கள் தான் எமக்கு ஆசிரியர்கள். சொல்ல போனால் பெற்றாருக்கு அடுத்து எம்முடன் நீண்டகாலம் தொடர்ந்து எம் வளர்ச்சியை கண்டு வருபவர்கள் அவர்களாக தான் இருப்பர். (இது எமது பாடசாலையில் இருந்த முறை. வேறு பாடசாலைகளிலும் அவ்வாறா இருந்தது என்பதை மற்றவர்கள் கூறினால் தான் தெரியும்.)

கற்பிக்க வருபவர்களுக்கு பட்டம் சூட்டுவதும், பட்டப்பெயர் கொண்டே அந்த ஆசிரியர்கள் இல்லாத நேரம் அவர்களை மாணவர்கள் அழைப்பது வழக்கம்.

சுகாதாரம் கற்பிக்க வந்த ஆசிரியர் அல்லூட்ட குறைபாடுகள் பாடத்தை தாண்டி அடுத்த பாடத்துக்கு போகாத அவரது அல்லூட்டத்தால் அவரை அல்லூட்டம் என அழைத்ததும்

கணிதம் கற்பித்த ஆசிரியை குதிரை வேகத்தில் கணிதம் கற்பித்தல் குதிரை என பட்டம் வைத்து அழைத்ததும், பாலர் பிரிவில் கற்று கொண்டிருந்த அவரது மகன் வரும் போதெல்லாம் அவனையும் குதிரை என்றே அழைத்து அவனை வெறுப்பேற்றியதும்

ஒரு கதை.


ஆங்கிலம் கற்பித்த ஆசிரியருக்கு வைத்த பெயர் சவாரி: ஆங்கிலம் என்பதே வேம்பாக கசக்கும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலம் அவர்களுக்கு இரண்டாம் மொழி என்பதை உணராது அவரது கற்பித்தல் இருந்தது. சொல்ல போனால் எமக்கு ஆங்கிலம் மீதிருந்த ஆர்வமின்மையை மேலும் அதிகரிக்க வைத்த பெருமை அப்பெருமகனாரையே சாரும்.


கோயிலில் நெல்லிகாய் பிடுங்க போய், அந்த கோயிலின் நிர்வாகியாக இருந்த ஆசிரியர் திரத்த தறிகெட்டு ஓடிய என் நண்பர்கள் அவருக்கு வைத்த பெயர் நெல்லிகாய்.

10 ஆம் ஆண்டில் புதிதாக சமூக கல்வி கற்பிக்க வந்த வழுக்கை தலை வாத்தியாரின் கற்பித்தல் பிடிக்காமல், வந்த முதல் நாளில் உலகத்தில் இருக்கும் மலைகள் பற்றிய பாடத்தில் அவர் சொன்ன காப்பந்தெரியன் மலை தொடருக்கும் அவரது மொட்டைதலையில் ஓடிய குருதி குழாய் முனைப்புக்கும்/ மண்டை ஓட்டு தவாளிப்பு அடையளத்துக்கும் தொடர்பு படுத்தி (இதை தான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறதெண்டு சொல்லுவார்கள் :) அவருக்கு காபன்தேரியன் என பெயரும் சூட்டினோம். அந்த ஆசிரியர் எமக்கு வேண்டாம் என பாடசாலை நிர்வாகத்திடமும், வகுப்பாசிரியரிடமும் சொல்லி அவரை பாடத்தில் இருந்து தூக்கி, முன்னர் இருந்த ஆசிரியரை சமூக கல்வி பாடத்துக்கு மாற்றுவித்தோம். மற்றிய பின்னும் அந்த மாற்றத்தை ஏற்காது தொடர்ந்தும் வகுப்புக்கு வந்து எமக்கு தொந்தரவு தந்தார். அவரை மற்றிய பின் புதிய நேர அட்டவணையில் சமூக கல்வி இருந்த நேரம் வேறு பாடம் வந்து விட்டாலும் பழைய நேர அட்டவணையே தன்னிடம் உள்ளதெனவும், புதிய நேர அட்டவணை தனக்கு கிடைக்கவில்லை எனவும் சொல்லி புதிய நேர அட்டவணைப்படி கற்பிக்க வந்த ஆசிரியர் கற்பிப்பதை அனுமதிக்க மறுத்துவிட்டார். இதை அறிந்த துணையதிபர் அவரிடம் வந்து புதிய நேர அட்டவணையை கருத்தில் எடுக்க கூறிய போது தனக்கு புதிய நேர சூசி கிடைக்க வில்லை என விதண்டாவாதம் செய்தார். துணையதிபர் போன பின் (இச்சம்பவம் நடந்தது மாசி மாதம்) இப்ப மாசி மாதம் தானே அதால அவருக்கு பனி பிடிச்சிட்டு எண்டு ஒரு சொல்லு சொல்லிவைத்தார். நூணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அவர் சொன்ன வாக்கியதை, தொடர்ந்து வகுப்புக்கு அவரை வராது செய்யும் ஆயுதம் ஆக்கி கொண்டது எமது வகுப்பு. அவர் சொன்னது, சொல்லாதது எல்லம் வைத்து, நேர அட்டவணை படி பாடம் கற்பிக்க விடாமல் எமது கல்வியை குழப்புகிறார் என ஒரு கடிதம் எமது வகுப்பு மாணவர்களது கையொப்பத்துடன் பாடசாலை அதிபருக்கு போனது. அடுத்த வாரம் ஆசிரியர் பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இடம் மாறறம் செய்யப்பட்டதில் எமது வகுப்பினருக்கு ஒரே புழுகம்.

எமது வகுப்பு மாணவர்களால் சூட்டப்பட்ட பட்ட பெயர்கள் தன் மேலே சொன்னவை. ஆனால் சில ஆசிரியர்களது பட்ட பெயர்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதும் நடக்கும்.

நாம் கற்பதற்கு 20 வருடத்துக்கும் முன் இருந்தே பௌதீகவியல் கற்பிக்கும் ஆசிரியை ஐ காகம் என அழைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. அதே போல துணையதிபரை "பாம்" என அழைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.


எவ்வளவு தான் ஆசிரியர்களை நக்கல்/ பட்ட பெயர் சூட்டி அழைத்தாலும் அவர்கள் ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியிலும், அவர்கள் அடையும் அடைவுகளுக்கு முக்கிய காரண கர்த்தாக்கள்.

ஆனால் நாம் பாடசாலையில் கற்ற போது எந்த ஒரு ஆசிரியரும் நானறிந்த வரையில் மாணவர்களை ஆசிரிய தொழிலுக்கு வாருங்கள் என கூறியது கிடையாது. பொடியளே ஒழுங்கா படிச்சு, கம்பசுக்கு போய் ஏதும் ஒழுங்கான வேலைக்கு போக பாருங்கோ இந்த வாத்தி வேலைக்கு மட்டும் வந்திடாதங்கோ என சொல்லிய ஆசிரியர்களே அதிகம்.


ஆரம்பத்தில் உயர் தர பாடத்தெரிவின் போது நான் வர்த்தக துறையை தெரிவு செய்வதா, அல்லது உயிரியல் துறையை தெரிவதா என குழம்பி வர்த்தக துறை எனும் முடிவுக்கு வந்திருந்தேன். வர்ததக துறை வகுப்புகளுக்கும் போக தொடங்கிவிட்டேன். ஆனால் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் பலருக்கும் அது ஏற்புடையதாக இருக்கவில்லை. அதே பாடசாலையில் கற்பித்த எனது அப்பாவிடம் எல்லாருமாக செர்ந்து என்னை உயிரியல் துறைக்கு மாற்றி விடுமாறு கொடுத்த ஆலோசனை/ நச்சரிப்பு தாங்காமல் அது வரை எனது சுதந்திரம் என விட்டிருந்த அப்பாவும் எல்லா ஆசிரியர்களும் சொல்லுகிறார்கள், நீங்கள் (அப்பா நீங்கள் என தான் சுட்டுவது வழக்கம்) உயிரியல் கற்க கூடிய மாணவன், வீணாக வர்த்தகம் கற்க வேண்டாம் என சொல்லுகிறார்கள் எனவே உயிரியலை மாறி படியுங்கள் உங்களால் அப்பாடத்தை சிறப்பாக கற்க முடியாவிட்டால் இரண்டாம் தடவை வர்த்தகத்தை படியுங்கள் என சொன்னார். ஆனால் கட்டாயமல்ல யோசித்து முடிவெடுங்கள் எனவும் சொன்னார். சரி என்னதான் நடக்கிறது பார்ப்போம் என உயிரியலை கற்க முடிவெடுத்து அதையே படித்தேன்.


எல்லா ஆசிரியர்களும் வர்த்தக துறையை தெரிவு செய்ய வேண்டாம் (எமக்கு 9, 10, 11 ஆம் ஆண்டுகளில் வர்த்தகம் கற்பித்த ஆசிரியர் உட்பட) என கூறியதன் காரணம் வர்த்தம் கற்றால் ஈழத்தை பொறுத்தவரை பொதுவாக செய்ய கூடிய வேலை ஆசிரியர் வேலை மட்டும். ஆசிரியர் பணிக்கு தமது மாணவர்கள் வருவதை விரும்பாத ஆசிரியர்கள் அதை விட வேறு எதை சொல்லுவார்கள்.

இரண்டு வருட காலம் தற்காலிகமாக ஆசிரியராக கற்பித்த அனுபவத்தில் இருந்து எனக்கு ஆசிரியர் பணி மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அதில் கிடைத்த ஆத்ம திருப்தி எனது தற்பொதைய கற்றலை முடித்த பின் தேடி பெற போகிற வேலையில் கிடைக்குமா தெரியவில்லை.

Wednesday, 2 May 2007

ஆக்காண்டி ஆக்காண்டி......

"ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்" இப்படி தொடங்கும் ஒரு பாடலின் சில வரிகள் மட்டும் முதல் முதலாக எமது "பள்ளிகூடத்தில்" நடித்த நாடகத்தில் பயன் படுத்தும் போது தற்செயலாக தெரிய வந்தது. அப்போதும் முழுமையான பாடலை கேட்கவோ அல்லது அதன் வரிகளை அறியும் ஆர்வமோ அதிகம் இருக்கவில்லை. அப்போதைய நாட்டு நடப்புடன் சம்பந்தப்பட்டதாக அதாவது அப்போது நடந்த பண்டாரவளை பிந்துனுவேவா சிறை கைதிகளின் படுகொலையை சுட்டுவதாக அமைந்த குறியீட்டு நாடகத்தில் திரை விலகும் போது இந்த பாடலை பயன்படுத்தியிருந்தோம்.


















அதன் பிற்பாடு ஒரு சந்தர்பத்தில் இப்பாடலின் முதல் வரிகள் ஞாபகம் வந்து நான் உச்சரித்த போது என்னுடன் இருந்த நண்பன் அப்பாடலின் மேலும் சில வரிகளை பாடி காட்டினான்
அந்த வரிகளில்


" நான் அழுத கண்ணீரும் என் குஞ்சழுத கண்ணீரும் வாய்க்கால் வழியோடி வழிபோக்கர் கால் நனைக்க"
எனும் வசனமும் சேர்ந்து வந்தது.

அண்மையில் புலரும் வேளை இறுவட்டில் இப்பாடலை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது அதில் நான் மேலே சொன்ன வரிகளை காணவில்லை.







http://www.esnips.com/displayimage.php?pid=33979630

பாடியவர்கள்: ஞான ஆனந்தன் (சங்கீத் வர்மன், பிரகீத் வர்மன், டிலீப்குமார்)



சரி கூகுல் தேடலில் தட்டுபடுகிறதா என தேடிய போது

இப்பாடலை இயற்றியவர் சண்முகம் சிவலிங்கம் எனும் ஈழத்து கவிஞர் என்றும் அவர் மட்டகளப்பை சேர்ந்தவர் எனும் தகவலோடு



சசி??


சந்திரவதனா

இரா முருகன்

ஆகியோருடைய பதிவுகளில் பாடலில் வரிவடிவத்தை பெற முடிந்தது. ஆனால் அந்த மூன்று வரிவடிவத்திலும் நான் கேட்ட வசனம் இல்லை.

சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எந்த வருடத்தில், எச்சூழ்நிலையில் இப்பாடலை இயற்றினார் என தெரியவில்லை. ஆனால் ஈழத்தின் போர்க்கால வாழ்நிலையை இப்பாடலுன் பொருத்தி பார்க்க முடியும்
.




அப்பால் தமிழில் ஒரு கட்டுரையில் இப்பாடல் மட்டகளப்பில் வழங்கும் நாட்டார் பாடல் என்றும் அதை அடியொற்றியே சண்முகம் சிவலிங்கம் அவர்கள் இக்கவிதையை எழுதியதாகவும் ஒரு குறிப்பு கிடைத்தது.

சரி என இணையத்தில் சந்தித்த நண்பர்களிடம் விசாரித்த போது, ஒரு நண்பர் தமிழக கவிஞார் அறிவுமதி எழுதி, சின்னபொண்ணு என்பவர் பாடியதாக அன்னை தமிழ் இறுவட்டில் இடம்பெற்ற ஆக்காண்டி என தொடங்கும் வேறொரு வடிவத்தை எனக்கு தந்திருந்தார். அப்பாடலை கீழே இணைத்துள்ளேன்.




http://www.esnips.com/displayimage.php?pid=33979630





இவை இரண்டையும் விட தமிழ்.நெட் இணையத்தின் முன்றாவது ஒரு வடிவமும் கிடைத்தது. அதன் வரிவடிவை கீழே இணைத்துள்ளேன்.


ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைச்சாய்?

ஆறு போன இடமெல்லாம்
புற் படுக்கை முட்டை வைச்சேன்.

முட்டையெல்லாம் குஞ்சானா,
முழு வுலகும் குருவிச்சத்தம்.

குருவிச்சத்தம் கேக்கத்தானே
குழி பறிச்சு முட்டை வைச்சேன்.
சத்தம் மட்டும் போட்டு விட்டா,
உன் பிறப்பு முற்றா குமா?

சத்தம் போடத் தெரியா விட்டால்
பின்னே என்ன கருங் குருகு?

கூட்டை வேடன் கலைக்குறானா?
குருவி பிடிச்சுத் தின்னுறானா?

ஐயோ ஐயோ என்ன செய்வேன்!!
ஆகாதய்யா இவ் வேடர் கூட்டம்!!
வாயைக் கொஞ்சம் பொத்திக்கொண்டு
பாழ் வயிற்றைக் குருவி பார்க்கலாமே?

ஓஹோ! நீரும் (கொல்) வேடர்தாமோ?
எம் அலறல் கேட்டும் தின்போர்தாமோ?

ஐயோ குருவி! (முழுப்)பொய்யோ சொல்வாய்?
வையம் காணும் கவிமெய்யை அறிவாய்.

இல்லை இல்லை! கொல் வேடர் நீரே.
என் குஞ்சு இரண்டு கொன்றோன் நீயே.

கொஞ்ச வந்தேன்; கொல்வோன் என்றாய்
(கொல்)நஞ்சும் (நல்)நெஞ்சும் கிஞ்சித்து மறியாய்.

நீயே வேடன்! நின் நினைவோ கொல்லல்.
நாயே போடா! குறுநரி நினைவோனே!

ஓஹோ அறிவேன் உன் குலத்தழிவு
ஓரோர் நினைவும் உலகொவ்வா நிலையுலவு.

போ போ மூடா! உயிர்கொல் வேடா!
குருகும் புள்ளுமே உலகினி லுயர்வு
புவியே சுழல்வது புட்கட்குத் தாமே!
துயர்பட்டாலும் குருகே உயர்ந்தோன்.

முறையோ குருவி முறைதலை மறத்தல்
குருகும் அருகும் அர்த்தமில் கருத்தில்
பெருகிட வேண்டில் (வாழ்) வழிதனிற் கூர்க்க.
வரும் வளமும் பலமும் குருவிகள் வசமே.
கவி உட்பொருள்தனை உணர்க;
வெறும் கறைப்புலம்பலை ஒழிக்க.
வருவேன்குருவி, வணக்கமும் வாழ்த்தும்.

ஆனால் இப்போதும் விடை கிடைக்காத கேள்வி என்னிடம் இருப்பது நான் கேட்ட வரிவடிவத்துடனு இப்படியான பாடல் ஒன்று உண்டா என்பதே?

பனை

பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். இலங்கை, மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆபிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பார்.






படம்: மானிப்பாய் இந்து இணைய தளம்

உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இந்தியா: 60 மில்லியன்
மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன்
இலங்கை - 11.1 மில்லியன்
இந்தோனெசியா - 10 மில்லியன்
மடகஸ்கார் - 10 மில்லியன்
மியன்மார் - 2.3 மில்லியன்
கம்பூச்சியா - 2 மில்லியன்
தாய்லாந்து - 2 மில்லியன்

இலங்கையை எடுத்து கொண்டால் 10.5 மில்லியன் பனை மரங்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய 4 மாவட்டங்களிலும் பரம்பி இருக்க மிகுதி 0.6 மில்லியன் மரங்கள் மட்டுமே ஏனைய இடங்களில் காணப்படுகிறது.



பனையின் பயன்கள்

1. பனை ஓலை


குருத்து ஓலையில் இருந்தே அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப்படுகிறன்.
கைவினைப்பொருட்களான: பூக்கள், பூச்சாடிகள், போன்றவை
நாளாந்த பாவனைப்பொருட்களான: பெட்டி, சுளகு, பாய், கடகம், திருகணை, நித்துபெட்டி, இடியப்ப தட்டு என பல பொருட்கள் செய்ய உதவுகிறது.

முற்றிய ஓலை மாட்டுக்கு உணவாக பயன்படுத்த படுவதுடன், வீடு வெய, வெலிகள் அடைக்க, தோட்ட நிலத்துக்கு, தென்னைக்கு பசளையாக பயன்படுத்தப்படுகிறது.

2. நார்

பனம் ஓலை/ இலை யில் இருக்கும் தண்டு/ மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார் நீண்ட நாள் பாவனைக்குரிய தூரிகைகள் (Brush), துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

3. மரம்/ தண்டு



கட்டுமான பணிகளுக்கு குறிப்பாக வீட்டு கூரைகளுக்கு சிலாகை, தீரந்தி, வளை, என்பவை தயாரிக்க பயன்படுத்த படுகிறது.

4. பூந்துணர் சாறு/ பதநீர் (Infloresence sap)

மதுவத்தால் (Yeast) நொதித்தல் அடையாத பூந்துணர் சாறு
பதநீராக அருந்தவும், பன்ஞ்சீனி, பனங்கட்டி, பனம் பாணி, பனங்கற்கண்டு செய்யவும் பயன்படுத்தபடுகிறது. பதநீரை கருப்பணி என பேச்சு வழக்கில் அழைப்பது வழக்கம். பதநீர் காலங்களில் பச்சரிசி, பயறு என்பனவும், பதநீரும் கொண்டு கருப்பணி கஞ்சி தயாரிப்பதும் வழக்கம். பொதுவாக பத நீர் இறக்க சுண்ணாப்பிடுவார்கள். சுண்ணாம்பு மதுவங்களின் நொதித்தல் செயற்பாட்டை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பு பதநீரின் சுவையை மற்றிவிட கூடியது. யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட ஆய்வில் நாவல் பட்டையையும் நொதித்தல் செயற்பாட்டை கட்டுபடுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

பதநீரில் வெல்லம் 12-13% ம், அமினோ அமிலங்கள், விற்றமின் பி, கனியுப்புக்கள் ஆகியவை நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. ஊரில் சின்னமுத்து, அம்மை நோய் வந்தவர்கள் உடன் கள்ளு குடித்தால் நோய் தாக்கம் குறையும் என்று சொல்லுவார்கள்.

மதுவத்தால் நொதித்தல் (Fermentation) அடைந்த பின் கள்ளு என அழைக்கப்படுவதுடன், இது சாரயாம் வடிக்கவும் பயன் படுகிறது.


5. நுங்கு

முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம். ஆனால் அதனை நாம் தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. 2 மில்லியன் பனைமரங்களே இருக்கும்தாய்லாந்தில் இருந்து நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாக அதிக பனைமர வளத்தை கோண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை கொசுறு செய்தி.













6. பனம் பழம்

பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழ கூழ் (Fruit pulp) பழபாகு (ஜாம்), பனாட்டு, குளிர் பானம் என்பன செய்ய பயன்படுத்த படுகிறது. அதை விட சுவையான சிற்றுண்டியான பனங்காய் பணியாரம் ஈழத்தில் பிரபலம். அதை வைத்து காதல்கடிதம் படத்தில் ஒரு பாடலும் வருக்றது. போர் காலத்தில் பனம் பழம் கொண்டு உடுப்பு தோய்த்தவர்கள் பலர். பனம் பழத்தின் வாசதில் மாடு உடைகளை சாப்பிட்டதாக கூட சொல்லுவார்கள். அதை விட பனம் பழம் தீயில் வாட்டி சாப்பிடுபவர்களும் உண்டு.





7. பனம் கிழங்கு






பனங்கிழங்கை அவிக்காது எடுக்கப்படும் ஒடியலில் இருந்து ஒடியல் மா எடுப்பார்கள். ஒடியல் மாவில் இருந்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ்1 (ஒடியல் கூழ் 2)ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவை ஈழத்தில் மிகவும் பிரபலாமான உணவுகள்.





பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல், புளுக்கொடியல் மா சிற்றுண்டியாக பயன் படுத்தப்படுகிறது.

பனம் பொருடகள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மிக குறைவாகவே நடைபெறுகிறன. அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பேற்றாலும் இன்னும் ஆராய்ச்சிகள் தேவையாக உள்ளது.

பெரும்பாலான ஆய்வுகள் அதிகம் பயன்படுத்தப்படாத பழ கூழ் பற்றியே நடைபெற்றுள்ளன.


பழகூழ் (Fruit pulp)



1. கரோட்டினோயிட் (Carotenoids)

எனும் மஞ்சள் நிறபொருளை கொண்டிருக்கிறது. பனம் பழத்தில் 2-253 மில்லிகிராம் கரோட்டினொயிட் 100கிராம் பழத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது விற்றமின் எ யிற்கான ஒரு மூலமாகும்

2. பெக்ரின்
இது உணவு உற்பத்தியில் உணவு பொருகளை உறுதியாக்க/
கூழ் நிலையில் பேண உதவும்.

3. Flabelliferin

இதுவெ பனம் பழத்தில் காணப்படும் கசப்பு, காறல் சுவைக்கு காரணமான பதார்த்தமாகும். இதனை பழ கூழில் இருந்து பிரித்தெடுப்பதன் மூலம், பழ கூழை வேறு உணவு பொருட்கள், ஜாம் போன்றவற்றில் நிரப்பியாக பயன் படுத்த முடியும்.

அத்துடன் இந்த Flabelliferin எனும் பதார்த்தம் நுண்ணங்கிகளை கொல்லும் இயல்பும் கொண்டது.

இலங்கையில் எலிகளில் செய்த ஆராய்சியில் Flabelliferin குருதியில் வெல்ல அளவை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் நீரிழிவு நோயளிகளுக்கு 6 கிராம் பனாட்டை கொடுத்து சோதனை செய்த போது அவர்களின் குருதியில் இருக்கும் வெல்ல அளவில் குறைவு ஏற்பட்டதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணாம் பனாட்டில் இருக்கும் Flabelliferin ஆக இருக்க முடியும்.

இலங்கையில் பனை அபிவிருத்தி சபை பழகூழில் இருந்து பற்பசை செய்து மாதிரிகளை சந்தைக்கு விட்டிருந்தது.



கேட்காமலே பயன் தரும் பனையை நாம் இன்னும் சிறப்பாக பயன் படுத்தி பொருளாதார பயன் பெற முடியும். ஆனால் அதற்கு நிறைய ஆய்வுகள் தேவை.

Tuesday, 1 May 2007

எல்லமே அழகு தான்

எது அழகு? எல்லாமே அழகு தான். ஆனால் எல்லாமே எல்லா நேரமும் அழகாய் தோன்றாது. இன்றைக்கு அழகாய் தோன்றுவது நாளைக்கு அழகாய் தோன்றாது போகலாம். மனதும், வயிறும் நிறைந்திருந்தால் எல்லாமே அழகுதான். அழகு பற்றிய சுழற் பதிவில் சினேகிதி என்னை அழைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவருடைய அழைப்பை இன்று தான் நிறைவேற்ற முடிந்தது.

1. கடலழகு அதன் கரை அழகு






பருத்திதுறை கடலோரம்

பதின்மங்களில் மார்கழி ஞாயிறுக்கு வல்லிபுரகோயிலுக்கு போவது பற்றியும், அங்குள்ள கடலோரம் போவது பற்றியும் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அங்கு கடலோரம் இருக்கும் வெண்மணல் திட்டுக்கள், மண்ணில் கால் புதைய புதைய ஏறி இறங்கும் சுகமே தனி. மதியம் மண்டை காயும் வெயில் நேரமாக இருந்தாலும் கடலோரம் வீசும் காற்றில் அந்த வெக்கை தெரியாது. 2005 ஆம் ஆண்டில் கோயிலுக்கு போன போது கடற்கரைக்கு போக வேண்டும் என மனம் தவித்தாலும் போக முடியாத சூழல். அந்த மணற்திட்டை கோயிலுக்கு அண்மையில் இருந்து ஒளிப்படம் எடுக்க மட்டுமே முடிந்தது :(.





யாழ்குடா நாட்டின் தீவு பகுதிகளுக்கு போவதில், அந்த படகு பயணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி, அதிலும் ஊர்காவற்துறையில் இருந்து புறப்படும் படகில் நயினா தீவுக்கு போகும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. ஊர்காவற்துறையில் இருந்து புறப்படும் படகில் நயினா தீவுக்கு போகும் போது மறுகரையில் தெரியும் காரைநகர் (காரைதீவு), அங்குள்ள ஒல்லாந்தர்? கால கடற்கோட்டை, எழுவை தீவு, பருத்தி தீவு?, அனலை தீவு, தீவுகளின் அழகான தோற்றத்தை கடற்காற்றை வாங்கியபடி யாருடனும் எதுவுமே பேசாது அனுபவிப்பது ஒரு சுகமான அனுபவம்.



அப்படியே நயினா தீவு அம்மன் கோயிலை கும்பிட்டு, கோயில் மடத்தில் ஒரு பிடி பிடிக்கலாம். அங்குள்ள மடத்தில் வழங்கப்படும் உணவும் ஒரு தனி சுவை தான்.





புலம் பெயர்ந்த பின் ஒரு கடல் பயணத்தின் போது






2. நெல்வயலழகு


சிறு வயதில் இருந்தே எங்கள் வயலுக்கு அப்பாவுடன் செல்வது வழக்கம். நெல் முளைத்ததில் இருந்து, மட்டம் வெடித்து குடலையாக்கி, கதிர் தள்ளி, பாலடைந்து, கதிர் முற்றி தலை வணங்கி, அருவி வெட்டி சூடடிக்கும் வரை ஓவ்வோரு பருவத்திலும் நெல் வயல் அழகானது. மென் பச்சை இரண்டிலை பயிரும், யூரியா போட்ட பின் கரும் பச்சை நிறமும், நெல் முற்றி தலை வணங்கி சலசலக்கும் போது காட்டும் பொன் நிறமும்.... இன்றும் என்றும் அழகானது. எனக்கு மட்டுமல்ல அங்கிருக்கும் என் உறவுகளுக்கும் இவை இப்போது நினைவுகளே. மிதி வெடி விளையும் வயல்களாகிவிட்ட எம் வயல்களில் எப்போது நெல் விளையும், எம் வீட்டில் எப்போது சொந்த அரிசி சோறு போங்கும் :(









3. மலையழகு




யாழில் இருந்து விட்டு மலை நாட்டுக்கு போகும் போது மலை நாடு மிக குளிரான இடமாகவே இருந்தது (இப்ப அது குளிரே இல்லை எண்டு சொல்ல கூடியதா இருக்கும்). அங்குள்ள தேயிலை தோட்டங்கள், முகில் தவளும் மலை முகடுகள், சல சலத்தொடும் அருவிகள் எல்லாமே அழகு தான். (அட்டை காலில் ஏறாத வரை :))









4. குழவியழகு

சிறு குழந்தைகள் மட்டுமில்லை, ஆடு, மாடு, கோழி, வாத்து எல்லாமே அவற்றின் இளம் பருவத்தில் மிக அழகானவை.


















5. பனியழகு

பார்க்கும் இடம் எங்கும் வெண்மையாய் படர்ந்திருக்கும் பனியழகு. காற்றோடு மறை -53 பாகை டிகிரி செல்சியசாக உணரும் போதில், கையில் போட்டிருக்கும் கையுறையையும், காலில் போட்ட பனி கால காலணியூடும் உட்சென்று நக கண்ணில் குண்டூசி குத்துவது போல் வருத்தம் தந்தாலும் வெண்பனி அழகுதான்.






உணவு மூலம் பரவும் நோய்கள்- 1: அறிமுகம்

உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1: அறிமுகம்

முன்னர் இரண்டு பதிவுகளில் உணவு மூலம் பரவும் நோயாக்கிகளான
1. Listeria monocytogenes
2.
Escherichia coli O157: H7


இரண்டையும் பற்றி விபரித்து இருந்தேன். ஆனால் முறையாக உணவு மூலம் பரவும் நோய்கள் என்றால் என்ன? எவை முக்கியமானவை என்பவை பற்றி எந்த அறிமுகமும் தராமலே அவற்றை பதிவு செய்திருந்தேன். இந்த பதிவில் உணவு மூலம் பரவும் நோய்கள், நோயாக்கிகள் பற்றிய சிறு அறிமுகமும் அதை தொடர்ந்து முக்கியமான சில நோயாக்கிகள் பற்றி தொடர் பதிவுகளை நேரம் கிடைக்கும் :) பொழுதுகளில் தரலாம் என்று நினைக்கிறேன்.
உங்களில் யாருக்கும் ஏதாவது சிறப்பாக தெரிய வேண்டி இருந்தால் குறிப்பிட்டீர்கள் என்றால் அவை பற்றி என்னால் முடிந்த அளவுக்கு தர முயற்சிப்பேன்.



உணவு மூலம் பரவும் நோய்கள் - 1: அறிமுகம்


மாசாக்கம் அடைந்த உணவுகளை (contaminated foods) உட்கொள்ளுவதால் பல நோய்கள் பரவமுடியும். பல வகையான நுண்ணங்கிகள் உணவை மாசாக்கம் அடைய செய்யலாம், நுண்ணங்கிகளுக்கு அடுத்ததாக நச்சு தன்மையான இரசாயன (poisonous chemicals) பொருட்கள் உணவில் கலப்பதனாலும் நோய்கள் பரவல் அடையலாம்.

பொதுவாக உணவு மூலம் பரவும் நோய்களை இரண்டு பெரும் வகையாக வகைப்படுத்தலாம்

1. உணவு மூலம் ஏற்படும் தொற்றுக்கள்
உயிருள்ள நோயாக்கிகள் உணவு மூலம் பரவி மனித உடலில் நோய்களை ஏற்படுத்துவதை குறிக்கும்

2. உணவு நஞ்சாக்கம்
உணவில் பக்ரீரியா அல்லது வேறு நுண்ணங்கிகள் வளர்ச்சியடைந்து அவை நச்சு பொருட்களை சுரப்பதால் அல்லது வேறு நச்சு தன்மையான பொருடகள் உணவில் கலப்பதால் உணவு நஞ்சாக்கம் அடையலாம். அவ்வாறு நச்சு தன்மையடைந்த உணவை உண்பதால் மனிதருக்கு நோய்கள் ஏற்படலாம்.

உலகளாவிய ரீதியில் 250 க்கு மேற்பட்ட நோய்கள் உணவு மூலம் பரவுவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறு நோயை ஏற்படுத்தும் இரசாயன பொருட்கள் தவிர்ந்த நோயாக்கிகளை.

1. பக்ரீரியாக்கள் (bacteria)
2. வைரசுக்கள் (viruses)
3. ஒட்டுண்ணிகள் (parasites)
என மூன்றாக வகைப்படுத்தலாம்

பொதுவாக உணவு மூலம் பரவும் நோய்கள் என நாம் அடையாளப்படுத்தினாலும் பல நுண்ணங்கிகள் பல வழிகளில் மனிதனை அடைந்து நோயை ஏற்படுத்த முடியும். உதாரணாமாக
Escherichia coli O157: H7 பக்ரீரியா உணவு மூலம் மட்டுமன்றி, மாசடைந்த குடி நீர், மாசடைந்த நீச்சல் குளம், ஒரு நோயாளியில் இருந்து இன்னுமொருவருக்கு என பல வழிகளில் பரவலடைய முடியும்.

அண்மைய காலமாக சில நுண்ணங்கிகள் அதிக அளவில் நோயை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது. உலக சுகாதார தாபனம் (WHO) உலக அளவில் அதிகரித்த அளவில் நோயை ஏற்படுத்தி வரும் நுண்ணங்கிகள் என பின்வருவனவற்றை அடையாளப்படுத்தி உள்ளது.

1. Escherichia coli serotype O157:H7
2. Listeria monocytogenes
3. Salmonella serotype Enteritidis
4. Bovine Spongiform Encephalopathy (BSE)
5. Campylobacter

ஏன் இவ்வாறு உணவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கிறன என்பதற்கு உலக சுகாதார தாபனம் பின்வரும் காரணங்களை முன்வைக்கிறது

1. உலக மயமாக்கப்பட்ட உணவு ஏற்றுமதி, இறக்குமதி

அண்மைய காலத்து உதாரணமாக Bovine Spongiform Encephalopathy (BSE) எனும் மாட்டு பைத்திய நோய் பரவல் காரணமாக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டதை கூற முடியும்.

2. ஒரு பிரதேசத்தில் காணப்படாத நோயாக்கிகள் மனித செயற்பாடுகள் மூலம் மறைமுகமாக காவப்பட்டு புதியதொரு இடத்திற்கு பரம்பலடைய செய்யப்படல்
கொலரா நோயை ஏற்படுத்தும் Vibrio cholerae எனும் பக்ரீரியா மாசடைந்த கப்பல் கழிவு நீர் அமெரிக்காவில் உள்ள நீர் நிலைகளில் வெளியேற்றப்பட்டதால் பரம்பலடைந்தமை

3. உல்லாச பயணிகள் ,குடிபெயர்வாளர்கள், அகதிகள் போன்றவர்கள் நோயாக்கிகளின் காவிகளாக செயற்பட்டு, அவர்கள் செல்லும் நாடுகளில் காணப்படாத நோயாக்கிகளை பரவலடைய காரணமாக அமைதல்

4. நுண்ணங்கிகளில் ஏற்படும் இயற்கை தேர்ச்சி/ மாற்றங்கள்
சாதாரணமாக காணப்படும் நுண்ணங்கிகள் குறைவடையா விரியமான நுண்ணங்கிகள் தப்பி பல்கி பெருகுதல். உதாரணமாக நுண்ணுயிர்கொல்லிகளுக்கு எதிர்ப்பு தன்மையுடைய பக்ரீரியாக்கள் விருத்தியடைவதால் மனிதரில் ஏற்படும் நோய்களை சாதாரண நுண்ணுயிர் கொல்லிகளால் கட்டுப்படுத்த முடியாதிருக்கிறமை

5. மனித குடித்தொகையில் ஏற்படும் மாற்றம்
மனித குடித்தொகையில் வயது முதிர்ந்தவர்கள் எண்ணிக்கை;எயிட்ஸ், புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை என்பன அதிகரித்து செல்கிறது. இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகையால் உணவு மூலம் பரவும் நுண்ணங்கிகள் இவர்களை பாதிப்படைய செய்கிறன. ஆனால் சுக தேகிகளில் தாக்கம் குரைவாக காணப்படுகிறது.

6. வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம்
அதிக மக்கள் தற்போது தயாரிக்கப்பட்ட உணவுகளை உணவு விடுதிகள், வேலையிட உணவகங்கள், வேக உணவு கடைகள், தெருவோர உணவகங்களில் உணவுகளை வாங்கி உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறியுள்ளமை. இவ்வாறான இடங்களில் சரியான முறையில் உணவு சுத்தம் கடைப்பிடிக்கப்படா விட்டால அங்கு உணவருந்தும் மக்கள் நோய்வாய்ப்பட சாத்தியங்கள் அதிகம்.



மேலே சொன்ன 5 நோயாக்கிகளையும் விட ஐக்கிய அமெரிக்க நாடுகளில்
Calicivirus, அல்லது Norwalk-like virus எனும் வைரசும் உணவு மூலம் பரவி அதிக நோய்களை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

அடுத்த பகுதியில்

உணவு மூலம் நோயாக்கிகள் அடைந்த பின் மனித உடலில் எப்படி அவை செயற்படுகின்றன என்றும், அதை தொடர்ந்து வரும் பகுதிகளில் வெவ்வேறு வகை நோயாக்கிகள், அவை ஏற்படுத்தும் நோய்கள் பற்றியும் பார்க்கலாம்.

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

தமிழ் மாணவர்கள் எவ்வளவோ சிரமத்தின் மத்தியிலும் சிறப்பாகவே தமது திறமைகளை வெளிக்காட்டி வருகிறனர். அதை பற்றி எனது கடந்த பதிவில் பதிவு செய்திருந்தேன். அதிலே சொல்லப்பட்ட ஜாம் போத்தல் விளக்கு பற்றியும் மற்றும் சில விடயங்கள பற்றியும் சினேகிதி, நந்தியா ஆகியோருடன் நானும் இணைந்து ஒரு உரையாடலை செய்ய முயற்சித்தோம் :). அவசர அவசரமாக செய்யப்பட்ட உரையாடல் ஆகையால் ஒரு சீராக இருக்காது. அத்துடன் எமது உரையாடலில் ஆங்கில வார்த்தைகளும் கலந்தே வருகிறன. அதை பொறுத்து கொள்வீர்கள் என நினைக்கிறோம்.















உரையாடலின் இடையில் வரும் பாடல் விடியலை தேடும் பறவைகள் இறு வட்டில் உள்ளது. யாழ் பல்கலைகழக மாணவர்களால் உருவாக்கப்பட்டு, இசையமைக்கப்பட்டது. அந்த பாடலை தனியாகவும் கீழே இணைத்துள்ளேன்.



Track 9.mp3

Monday, 30 April 2007

போருள்ளும் எதிர் நீச்சலிட்டு வெல்லும் மாணவர்கள்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர (கா.பொ. தா சா/த) முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. இந்த பரீட்சை முடிவுகளை கொண்டே மாணவர்கள் தமது உயர் தரத்திற்கு அனுமதி பெறவும் தமக்கு விரும்பிய துறைகளை தெரிவு செய்யவும் முடியும். கடந்த வருடம் முதலே தமிழர் தாயக பிரதேசத்தில் இயல்பு நிலை கேட்டு போய் இருந்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். இடம்பெயர்ந்த சிங்கள மாணவர்கள் சிறப்பு பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுத, வாகரையில் இடம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்க படாத சம்பவமும் நடந்து முடிந்தது.
பரீட்சை நடந்த தமிழ் பிரதேச முடிவுகள் எப்படி இருந்தன என்பதை சரியாக அறிய முடியவில்லை. யாழ்குடா நாட்டை சேர்ந்த ஒரு சில பிரபல பாடசாலைகளின் முடிவுகள் உதயன் பத்திரிகையில் வெளியாகி இருந்தன.

அப்படி உதயனில் வெளியான 5 பிரபல பாடசாலைகளில் மட்டும்

33 மாணவர்கள் 10 பாடங்களிலும் A தரத்திலும்
39 மாணவர்கள் 9 பாடங்களில் A தரத்திலும்
சித்தி பெற்றிருந்தார்கள் என்ற தகவலை பெற முடிந்தது.
இதில் வேம்படி மகளிர் கல்லூரியில் 100% ஆனா மாணவிகள் சித்தி பெற்று கா.பொ.தா உ/த கற்க போவதாகவும், செய்தி வந்திருந்தது.

அதை விட அதிகம் பிரச்சனைகளையும், மாணவர் கைதுகளையும் சந்தித்த ஹாட்லி கல்லூரி மாணவர்கள் (மாணவர்கள் கைது செய்யப்பட்டதும், அது தொடர்பாக தொடர்ச்சியான பல போராட்டங்கள் நடைபெற்றதும் பலரும் இணைய செய்திகள் மூலம் அறிந்திருக்கலாம்.)
6 மாணவர்கள் 10 பாடங்களிலும்
8 மாணவர்கள் 9 பாடன்ங்களிலும் A சித்தி பெற்றதாக உதயனில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த வருட பெறுபேற்று மட்டங்கள் கடந்த காலத்தில் பெறப்பட்ட பெறு பேறுகளில் இருந்து வீழ்ச்சி அடைந்ததாக கூட இருக்கலாம்.

ஆனால் அவர்கள் நாளாந்தம் எதிர்கொண்ட பிரச்சனைகள், கடுமையான உணவு தட்டுப்பாடு நாளாந்தம் தெருவில் பயணிக்கையில் என்ன நடக்குமோ என்று தெரியாத ஒரு நிச்சயமற்ற நிலை, ஆட்கடத்தல்.... என பல பிரச்சனைகள். இரவில் வீட்டில் படிப்பதற்கு விளக்கிற்கு மண்ணெண்ணெய் (Kerosene), மின்சாரம் என்பன சரியாக கிடைக்காத நிலை கடினமான சூழ் நிலைகளிலும் அவர்கள் கற்று தேறி இருக்கிறார்கள் அதற்கு அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

அப்போது 1கிலோ அரிசியின் விலை 250 ரூபாக்கும், தீக்குச்சிகள் தீபெட்டிகளாக அல்லாமல் குச்சிகளாக வாங்க வேண்டி இருந்ததாகவும் தொலைபேசி உரையாடல் மூலம் அறிந்து கொண்டேன். நான் தொலைபேசி மூலமும் இணைய செய்திகள் மூலமும் அறிந்ததை வைத்து அங்குள்ள சூழ் நிலையை வர்ணிப்பதை விட நேரே அங்கிருப்போராலேயே எழுதப்பட்ட முரண்வெளி கட்டுரை அங்குள்ள சூழ் நிலையை தெளிவாகவே உங்களுக்கு தரும் என்று நம்பலாம்.

இந்த பெறு பேறுகளை வைத்து கொண்டு அங்கு நிலவும் சூழல் எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தியது என்பதை கணிப்பது சிரமம். உயர்தர பரீட்சை முடிவுகளையும், அதன் பின்னான பல்கலைகழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் தெரியவரும் போதே இப்போதைய சூழ் நிலையின் தாக்கத்தை சரியாக உணர முடியும்.

1990 களில் இருந்தே பொருளாதார தடை, மின்சாரமின்மை, மண்ணெணெய் தடை, இதனால் விளக்கொளி கூட சரியாக கிட்டாத நிலை, இடப்பெயர்வு, பாடசாலைகள் சீராக இயங்காமை என்பவற்றுக்குள்ளால் தான் மாணவர்களின் கல்வியும் மக்களின் வாழ்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் 2000 ஆம் ஆண்டில் இருந்து நிலவிய ஒரு தற்காலிக சுமூக நிலை அதற்கு பழக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக ஏற்படும் நெருக்கீடுகளை சகித்து அவர்களின் திறமையை வெளிகொண்டு வர முடிந்ததில் மகிழ்ச்சியே.



1990 களிலான பொருளாதார தடையை எப்படி மக்கள் எதிர் கொண்டார்கள் என்பதை எழுத மட்டுமே பல பதிவுகள் வேண்டும்.

அப்போதைய வாழ் நிலை, குழந்தைகள், சாதாரண பேச்சு வழக்கு சொற்களை அறியும் முன்னமே போர் உபகரணங்களின் பெயர்களை உச்சரிக்க தொடங்கி இருந்தார்கள். அதை பற்றி சக பதிவரான ஹரனின் பதிவில் இருந்து

" 'சீ' பிளேன் (கோள் மூட்டி) அஃப்ரோ, புக்காரா, சகடை, கெலி (மணிக் கெலி, முதலைக் கெலி, மற்றும் பல), பொம்பர், சுப்பர் சோனிக், கிஃபிர் ஆகிய சொற்களே எம் ஈழத்துக் குழந்தைகள் அம்மா, அப்பா சொல்லும் முன்னரே சொல்லத் தெரிந்து கொள்ளும் வார்த்தைகள். ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவராலுமே எவ்வகையான பிளேன், அல்லது கெலி வானில் வருகின்றது என்பதனை அதனைப் பார்க்காமலேயே, அதன் சத்தத்தினை வைத்துக் கூறக் கூடியதாக இருந்தது.

சிறுபிள்ளைப் பராயத்தில், ஏதுமறியா வயதினிலே வானில் பறக்கும் விமானத்தைப் பெருமூச்சுடன் அண்ணார்ந்து வேடிக்கை பார்த்த காலம் மாறிப் போய்; தலைதெறிக்கக் கால் கடுக்க உயிரைக் கையிற் பிடித்தபடி ஓடத் தொடங்கிய காலம் வந்தது, ஓடிப் பதுங்கு குழிக்குள் பகல் இரவாய்ப் பதுங்கும் நிலை வந்தது."



அப்போதும் மண்ணெண்ணெய்க்கான தடை இருந்தது. உழவு இயந்திரங்கள் டீசலுக்கு பதிலாக மரக்கறி எண்ணெய் (Palm oil)பாவித்தும், மோட்டர் சைக்கிள்கள் மண்ணெண்ணெயிலும் ஓடி திரிந்தன. அப்போதைய காலத்து படம் பார்த்தலை பற்றி கானா பிரபா அண்மையில் ஒரு பதிவை எழுதி இருந்தார்.

மண்ணெண்ணேய் தட்டுபாடான சூழலில் படிப்பதற்கு விளக்கிற்கு மண்ணெண்ணெய் வாங்குவதே மாணவர்கள் உள்ள வீடுகளில் ஒரு பெரும் சுமையான விடயம். அந்த நேரம் பாவனையில் இருந்த விளக்கான ஜாம் போத்தல் விளக்கு பற்றி வசந்தன் ஒரு பதிவு எழுதி இருந்தார்.



எங்கள் வீட்டில் நான் ஒராள் மட்டும் தான் படிக்கும் வயதில், அதனால் எனக்கென படிப்பதற்கு ஒரு பெரிய மேசை விளக்கு தரப்பட்டிருந்தது. இது எல்லா வீடுகளிலும் சாத்தியபடும் விசயமாக இருக்காது.
அத்தோடு முழுமையாக விவசாயம் செய்வதற்கு போதுமான மண்ணெணெய் கிடையாத சூழல், பல தொழில் துறைகளும் முடங்கி போய் இருந்த காரணத்தால் பலர் விறகு, தேங்காய் பொச்சு என்பவற்றை சைக்கிளில் கட்டி விற்று வாழ்க்கையை ஓட்டினார்கள்.



படம்: அப்பால் தமிழ் இணையம்



படம்: கூகுல் தேடுபொறியின் தேடலில் கிடைத்தது

இப்படியானா வாழ்க்கை போராட்டங்களோடு தான் நாளாந்த வாழ்க்கை இருந்தது அப்போது.

ஆனால் பல்கலை கழக அனுமதிக்காக நடாத்தப்படும் க.பொ.த. உ/த பரீடசையில் பல தடவை யாழ்மாவட்ட மாணவர்கள் கணித பிரிவில் அகில இலங்கை மட்டத்தில் முதல், இரண்டாம் , அல்லது முதல் 10 மாணவர்களில் ஒருவராக பெறு பேறுகளை பெற்ற சந்தர்ப்பங்கள் அதிகம்.

போரின் தாக்கத்தால் உயர் தர பெறு பேறுகளில் யாழ்மாவட்டம் சடுதியான வீழ்ச்சியை சந்தித்த 2 சந்தர்பங்களை அவதானித்திருக்கிறேன்.

1. 1995 இடப்பெயர்வுக்கு பின் நடந்த 1996 உயர் தர பரீட்சை பெறு பேறுகள்.
2. 1999- 2000 யாழ்குடாவை மீள கைப்பற்றும் முயற்சியின் போதான காலப்பகுதி.


1995 முன்னேறி பாய்தல் நடவடிக்கை நடந்த அண்மைய காலப்பகுதியில் தான் 1995 ஆம் ஆண்டுக்கான உயர் தரபரீட்சைகள் நடை பெற்றன. ஆனால் அந்த பரீட்சை பெறு பேறுகளில் அதிக வீழ்ச்சி தெரியவில்லை. ஏன் எனில் மாணவர்கள் பரீட்சைக்கு தயார் படுத்தும் காலப்பகுதியில் போர் பயம் இருந்தாலும் படிக்க முடிந்தது. ஆனால் அதன் பின்னர் மக்களின் பாரிய இடப்பெயர்வின் பின் நடந்த உயர் தரபரீட்சை பெறு பேறுகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

அதற்கு உதாரணமாக
வருடாந்தம் 60- 64 மாணவர்கள் அனுமதி பெறும் மருத்துவத்துறைக்கு அந்த வருடம் 39 மாணவர்கள் மட்டுமே அனுமதி பெற்றிருந்தனர் என்பதை வைத்து சொல்ல முடியும்.

பொதுவாக அப்போதிருந்த பல்கலை கழக அனுமதி வெட்டு புள்ளி முறையை பார்த்தால் (இப்போது Z-score எனும் முறை எப்படி செயற்படுத்துகிறார்கள் தெரியாது).

மருத்துவ துறைக்கு 900 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்
அவர்களில்
a) 40% (சரியாக ஞாபகம் இல்லை) அகில இலங்கை ரீதீயிலான திறமை அடிப்படையிலும், அதாவது முழு இலங்கை ரீதியிலும் முதல் 360 இடங்களுக்குள் வந்தவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
b) மிகுதி 60% மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை அடிப்படையிலும் கல்வி, பின் தங்கிய மாவட்டம் எனும் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.(இதில் மாவட்ட அடிப்படை என தனியாகவும், பின் தங்கிய மாவட்டங்கள் என பட்டியல் இடப்பட்ட மாவட்டங்களுக்கு ஒரு குறிபிட்ட சதவீதமும் அனுமதி இருகும்)

(இலங்கை பல்கலைகழக அனுமதி பற்றிய விபரங்களையும் யாரோ வலைப்பதிவில் எழுதி இருந்தார்கள் யார் என தெரியவில்லை)


அதன் படி அண்ணளவாக 24 மாணவர்கள் யாழ்மாவட்டதிலிருந்து தெரிவு செய்யப்படுவர்.

மருத்துவ துறைக்கு 64 மாணவர்கள் மொத்தமாக யாழ்மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யபடும் போது அவர்களில் 40 பேர் அகில இலங்கை திறமை அடிப்படையிலும், 24 மாணவர்கள் யாழ்மாவட்ட அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள் என எடுத்து கொள்ள முடியும்.

(மேலே சொல்லப்பட்ட கணித்தல் பல்கலைகழக மனியங்கள் ஆணைக்குழு மாணவர்களுக்கு அனுப்பும் கையேட்டை வாசித்து நான் புரிந்து கொண்டதை வைத்து சொல்லி இருக்கிறேன்)

ஆனால் எமது மாணவர்களில் பலர் வருடாந்தம் 64 பேருக்கு சராசரியாக மருத்துவத்துறைக்கு அனுமதி கிடைக்கிறது. அதே போல 1996 ஆம் வருடமும் கிடைக்கும் என கணக்கு போட்டனரே தவிர, அகில இலங்கை ரீதியில் யாழ்மாவட்டத்தில் இருந்து திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்படக்கூடிய எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததை கவனிக்கத் தவறி விட்டனர். இதனால் மருத்துவத் துறை கிடைக்கும் என கற்பனையில் இருந்து அது கிடைக்காது ஏமாற்றம் அடைந்தனர்.


ஆனாலும் தொடர்ச்சியாக பல்கலை கழக அனுமதிக்கான வெட்டு புள்ளிகளில் கொழும்புக்கு அடுத்த படி பொறியியல் பிரிவுக்கு அதிக வெட்டு புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் மாவட்டமாக யாழ்மாவட்டமே இருந்து வந்திருக்கிறது. மருத்துவ துறைக்கு கொழும்பு, காலிக்கு அடுத்து முன்றாம்/ நான்காம் நிலையில் வெட்டு புள்ளிகள் யாழ் மாவட்டத்துகே நிர்ணயிக்கப்படுவது வழமை.
அதாவது இடப்பெயர்வு, பொருளாதார தடை, போரின் தாக்கத்துக்கு முகம் கொடுத்து இலங்கையின் போரின் வீச்சுக்கு முகம் கொடுக்காத ஏனைய மாணவர்களுக்கு சமனாக பெறு பேறுகளை பெறுவதென்பது பாராட்டப்பட வேண்டிய விசயம்.
ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் அனுமதி பெறும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் வீழ்ச்சியடைந்து வரும் என்றே நினைக்கிறேன். அது கவலைக்குரியது.

இறுதியாக
"நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக பெறு பேறுகளை பெறுகிறார்கள்"
என்ற நிறை அன்பு I.A.S என்ற கூற்று ஈழத்து தமிழ் மாணவர்களுக்கும் பொருந்தும்.

Sunday, 29 April 2007

உணவு அறிவியலும் தொழில் நுட்பமும்: ஓர் அறிமுகம்

முற்குறிப்பு: எமது சொந்த நாடுகளில் உள்ள மக்களும் சரி, எமது புலம் பெயர் மக்களும் சரி மகனை/ மகளை பொறியலாளராக/ மருத்துவராக உருவாக்க வேண்டும் என்பதும், அதை மட்டுமே பிள்ளைகளிடம் திணிக்க முற்படுவதும் ஒரு மாறாத நோய். இளம் சந்ததியிடமும் அவை பற்றிய கனவுகளே பெரும்பாலும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. அவற்றுக்கப்பாலும் பல நல்ல வேலைவாய்ப்புகளை கொண்ட துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான உணவு அறிவியலும் தொழில் நுட்பமும் பற்றி ஒரு மேலோட்டமான பார்வையை தருகிறேன்.


உணவு அறிவியலும் தொழில் நுட்பமும் - ஓர் அறிமுகம்
(Food Science and Technolgy - An Introduction)




படம் பெறப்பட்டது:http://www.ssi-world.com/food/images/GilesFoods.jpg


உணவு விஞ்ஞானம் என்பதை, உணவின் இயல்புகளையும் அவற்றில் இயற்கையாகவோ அல்லது அவற்றின் பரிகரிப்பின் (processing) போதோ எற்படும் மாற்றங்களையும் பற்றிய கற்கை என வரைவிலக்கணப்படுத்தலாம். உணவுத் தொழில் நுட்பம் எனப்படுவது உணவு விஞ்ஞானத்தில் பெற்ற அறிவை உணவுத் தயாரிப்பு, பாதுகாப்பு, வினியோகம் என்பவற்றில் பயன்படுத்துதலை குறிக்கும்.


பொதுவாக எமது மக்களிடையே இக்கற்கை பற்றிய ஆர்வம் இருப்பதில்லை. அத்தோடு "இதென்ன சமைக்கிறதைப் பற்றி என்ன படிப்பென" எண்ணுவோரும் உண்டு. இதை நட்சத்திர விடுதி (hotel) முகாமைத்துவத்தோடு சேர்த்து குழம்புவோரும் உண்டு.


'உணவு தொழில்நுட்பக்கல்வி' என்பது மிகவும் முக்கியமான ஒரு துறையாகும். உணவின்றி மனிதனில்லை; எனவே என்றுமே உணவிற்கான கேள்வி குறையாது. அத்துடன் உணவு உற்பத்தி எல்லா இடங்களிலும் சீராக இருப்பதில்லை. ஒரு பிரதேசத்தில் வரட்சி, இன்னுமொரு பிரதேசத்தில் வெள்ள பெருக்கு இப்படி இயற்கையின் சவால்களையும் மீறி உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும் மிகையான உற்பத்தி காலத்தில் இருக்கும் மிகை உணவை உணவு உற்பத்தி அற்ற காலத்துக்கு சேமிப்பதற்கு அல்லது பாதுகாப்பதற்கு சரியான முறையை பின் பற்ற வேண்டும். ஒரு நாட்டில் விளையும் மரக்கறியை இன்னும்மொரு நாட்டிற்கு உதாரணமாக அவுஸ்திரேலியாவில் விளையும் அப்பிள், நியுசிலாந்தின் கீவி, மலேசியா/ தாய்லாந்தில் இருந்து டூரியான் என பல வகை பழங்கள் கப்பல் மூலம் ஐரோப்பா/ கனடாவுக்கு எடுத்துவரப்படுவதற்கு பல வாரங்கள் எடுக்கும். எனவே அவற்றை சரியான முறையில் சுத்தமாக்கி, தரம் பிரித்து, பழுதுபடாது இருக்கும் பொருத்தமான ஒரு குளிரூட்டல் வெப்ப நிலையை தெரிவு செய்து; அவ் வெப்பநிலையுள்ள குளிரூட்டிய அறைகளில் நிரப்பி ஏற்று மதி செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வோரு பழத்துக்கும், மரக்கறிக்கும் சிறப்பான குளிரூட்டல் வெப்ப நிலைகள் தேவைப்படலாம். உதாரணமாக வாழைப்பழம், மாம்பழம் போன்ற வெப்ப வலய பழங்களை 13 பாகை டிகிரி செல்சியசிலும் குறைந்த வெப்ப இலையில் சேமித்தால் அவை பழுக்கும் போது சீரற்ற தன்மையும், பழங்களின் உட்பகுதி சேதமானதால் சரியான சுவையற்றும் போகலாம்.
எனவே ஒவ்வொரு உணவு பொருளையும் சேமிக்கும் போதும் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.


உதாரணமாக எமது ஊரில் கிடைக்கும் ஒரு மாம்பழத்தை கப்பல் மூலம் ஐரோப்பா/ வட அமெரிக்காவுக்கு முதல் முதலாக ஏற்றுமதி செய்ய இருக்கிறோம் என வைத்து கொள்ளுங்கள்.

எமக்கு மாம்பழத்தை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் பல தகவல்கள் தேவைப்படும்.

மாம்பழத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால்


1. முதலில் எத்தனை நாட்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் அவற்றை பிடுங்க வேண்டும்? என்பதை சரியாக தெரிய வேண்டும்(அதாவது முத்திய மாங்காய் ஆனால் பிடுங்கி ஓரிரு நாளில் பழுக்கும் நிலை என்றால் ஏற்றுமதி செய்ய முடியாது)


2. சரியான சேமிப்பு வெப்ப நிலை என்ன?
3. அவ்வெப்ப நிலையில் எத்தனை நாட்கள் சேமிக்க முடியும்
4. சேமிக்கும் போது அவற்றின் (பழம்/ மரக்கறி) சுவை, மணம், நிறம் என்பவற்றில் எப்படியான மாற்றங்கள் நிகழும்?
5. அம்மாற்றங்கள் தரத்தை பாதிக்குமா? இல்லையா?
6. குளிரூட்டியில் இருந்து வெளியே எடுத்த பின் எத்தகைய மாற்றங்கள் நிகழும்?
7. அவை இயல்பான வெப்ப நிலையில் பழங்கள்/ மரக்கறிகள் இருக்கும் போது ஏற்படும் மாற்றத்தை ஒத்தவையா இல்லையா?
8. இவ்வாறு சேமிக்கும் காலத்தில் ஊட்டசத்துக்களில் (வெல்லம், புரதம், விற்றமின்கள்) எப்படியான மாற்றம் நிகழும்
9. சேமிப்பின் போது நோயாக்கும் நுண்ணகிகள், மற்றும் உணவை பழுதடைய செய்யும் நுண்ணங்கிகளின் சனத்தொகை/ எண்ணிக்கை எப்படி மாற்றமடைகிறது?
10. அவை மனிதனை பாதிக்கும் நிலையை அடைகிறதா இல்லையா?
11. சேமிப்பின் இறுதியில் பாவனையாளரை அடையும் போது அது பாவனையாளரை அது திருப்தி செய்ய கூடியதாக இருக்குமா?


இவ்வாறே ஒவ்வோரு உணவு பொருளையும் பாதுகாக்கும் போது சரியான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கு அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக தேவைப்படுவர்.



'உணவுத் தொழில் நுட்பக்கல்வி' என்பது உணவு தயாரிப்போடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்பதை வரைவிலக்கணத்தில் பார்த்தோம். ஒரு உணவுத் தொழில் நுட்பவியலாளர் இரசாயனவியலாளராக, பொறியியலாளராக , நுண்ணுயிரியலாளராக, புள்ளிவிபரவியலாளராக, பொருளியல் மற்றும் வணிகவியலாளராக என்று பல் புலமை சார்ந்தவராக இருத்தல் அவசியமானது.

உணவு தொழில் நுட்பக்கல்வியில் உள்ள அடிப்படைப் பெரும் பிரிவுகளாக


1. உணவு இரசாயனவியல் (Food Chemistry)

இப்பாடப்பரப்பை பற்றி மேலோட்டமாகச் சொன்னால் உயிர் இரசாயனவியல், உணவின் இரசாயனக்கூறுகள், அவறின் பெளதீக - இரசாயன இயல்புகள், அவற்றின் அளவறி பகுப்பு, பண்பறிபகுப்பு என்பவற்றை உள்ளடக்கியது. உணவு என்பது விஞ்ஞானத்தில் பிரிக்க முடியாத ஒருபகுதி. இதன் முக்கியத்துவத்தை பற்றி ஒரு சிறிய உதாரணம் மூலம் பார்ப்போம்.இறால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை உண்ணும் போது சிலருக்கு ஒவ்வாமை வருவதை அறிந்திருப்பீர்கள். அவ்வொவ்வாமைக்கு காரணமான கூறை அறிய இரசாயனவியல் சார் அறிவு முக்கியமானது.


2. உணவு நுண்ணுயிரியல் (Food Microbiology)


உணவு நுண்ணுயிரியலில் அடிப்படை நுண்ணுயிரியல், உணவை பழுதடையச்செய்யும் நுண்ணுயிரிகள் , உணவை நஞ்சாக்கும் நுண்ணுயிரிகள், உணவு பாதுகாப்பில் உதவும் நுண்ணுயிரிகள், போன்றவற்றை கண்டறிதல், அவற்றினியல்புகள் போன்றவையும் உணவு உயிர் தொழில் நுட்பம் பற்றிய அடிப்படைகள், தற்சுத்தம், உணவு உற்பத்தி, பரிமாறும் நிலையங்களின் சுத்தப் பராமரிப்பு, நீர் பரிகரிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது.


3. உணவு பரிகரிப்பு பொறியியல் (Food Process Engineering)

இதை மேலும் உணவை குளிர் மூலம் பரிகரித்தல், வெப்பம் மூலம் பரிகரித்தல், உலர்த்துதல் மூலம் பரிகரித்தல் என வகைப்படுத்தலாம். இதற்கு பொறியியல் சார் அறிவும் தேவை.


4. அறுவடைக்கு பின்னான தொழில் நுட்பப்பொறியியல் (Posthavest Technology and Engineering)


பயிர், விலங்குகளின் அறுவடைக்கு பின்னாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், அறுவடைக்கு பின் உயிர் பொருட்களில் ஏற்படும் உடற் தொழிலியல், உயிர் இரசாயன மாற்றங்கள், அவற்றை பரிகரிக்கும் பொறிமுறைகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.


5. உணவும் போசாக்கும் (Food and Nutrition)

உணவில் காணப்படுப் போசாக்குக் கூறுகள், அவற்றின் முக்கியத்துவம் , அவற்றின் உடற் தொழியியல் செயற்பாடு, குறைபாட்டு நோய்கள், அதிகமான உணவு உள்ளெடுத்தலால் வரும் பிரச்சனைகள் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது.


இவற்றிற்குப் பக்கத்துணையாக ஆனால் அத்தியாவசியமாக கற்கவேண்டிய பாடங்களாக உயிர் புள்ளிவிபரவியல், பொருளியல், சந்தைபடுதல் முகாமைத்துவம் என்பவை விளங்குகின்றன.


மேலே சொன்ன பாகுபடுத்தல் ஆனது பெரும்படியானதும் அடிப்படையானதுமாகும். ஆனால் இன்றைய நவீன உலகில் உணவுப்பொருட்களின் சிறப்பான வகைக்கும் பயன்பாடுக்கும் எற்ப பல கிளைகளாக உள்ளன. அவை மெற்சொன்ன அனைத்து அடிப்படை கூறுகளையும் கொண்டு சிறப்பான பொருள்களை உற்பத்திசெய்வதோடு சம்பந்தப்பட்டவை.


அவையாவன:

1. தானிய விஞ்ஞானமும் தொழில் நுட்பமும்,(Cereal Science and Technology)
2. பால் பதனிடல் தொழில் நுட்பம் (Dairy Technology)
3. இறைச்சி பதனிடல் தொழில் நுட்பம் (Meat Technology)
4. பழங்கள் மரக்கறிகள் பதனிடல் தொழில் நுட்பம் (Fruit and Vegetable Processing Technology)
5. வாசனை விஞ்ஞானம் (Flavour science)
6. வெல்ல தயாரிப்பு, மதுபான தயாரிப்பு சார் தொழில் நுட்பம் (Sugar and Alcoholic Beverage Technology)
7. உணவு உயிர் தொழில் நுட்பம் (Food Biotechnology)
8. மீன் பதனிடுதல் தொழில் நுட்பம் (Fish Processing Technology)
9....
10....

இவ்வாறு பல வகையாக பிரிக்கலாம்

எந்த நாட்டிலும் உணவு தரக்கட்டுபாடு என்பது மிக அதியத்தியாவசியமானது. அதிலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் மிக இறுக்கமான நடைமுறைகள் உள்ளபோதும் அத்துறைசார் நிபுணர்களின் தேவையானது அரசுத்துறை தரக்கட்டுப்பாட்டு நிறுவகங்களிலும், உணவு பதனிடும் தொழில் நிறுவனங்களிலும் என்றுமே இருந்தவண்ணமே இருக்கும். அதோடு பல பல புதிய வகை உணவுகள் நாளாந்தம் சந்தையில் குவிவதைப் பார்ப்பீர்கள். பாற்கட்டியில் மட்டும் பல நூறுவகைகள் உண்டு. அதேபோல் இருவருடங்களுக்கு முன் இருந்த ஐஸ் கிறீம் வகைகளின் எண்ணிக்கையிலும் பார்க்க இன்று பல வேறு சுவைகளில் பலவிதமான ஐஸ்கிறீம்கள் சந்தையில் உண்டு. சாதாரண "யோகட்" Yogurt போய் இன்று பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது. அதாவது இத்துறை நாளாந்தம் வளர்வதோடு அத்துறைசார் உணவு தொழில்நுட்ப வல்லுனர்கள் என்றும் inovative ஆக இருக்க வேண்டும்.


எமது பாரம்பரிய உணவுகளின் உடல் நலன் சார் முக்கியதுவம் பற்றிய ஆய்வுகள் மிக முக்கியமானது.
ஒரு உதாரணம்: நாம் நாளாந்தம் பாவிக்கும் எமது வேம்பினதும் மஞ்சளினதும் முக்கியத்துவத்தை நாம் இன்றுவரை சரியாக உணரவில்லை. அது தொடர்பில் ஆரய்ச்சி செய்து அமேரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற பின் தான் இந்தியாவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் கிளம்பின. அதே போன்றே இன்னும் பல பாரம்பரிய உணவு பொருட்களினது நிலையும். இந்த குறையை போக்கப்பட வேண்டும்.

நிலவிடம் சிக்கிய நட்சத்திரம்..........

உங்களுக்கு வணக்கம்

தமிழ்மணத்தில் இருந்து ஏப்பிரல் 30 ஆம் திகதி தொடங்கும் நட்சத்திர வாரத்தில் நட்சத்திர பதிவராக இருபதற்கு எதிர்பாரா நேரத்தில் ஒரு மடல் கிடைத்திருந்தது.
என்னை நட்சத்திர பதிவராக இருப்பதற்கு தெரிவு செய்தமைக்கு முதலில் தமிழ் மணத்திற்கு நன்றிகள்.







கதைகள், கவிதைகள் போன்றவற்றை வாசிப்பதில் இருந்த, இருக்கின்ற ஆர்வம் எழுத வேண்டும் என்பதில் இருப்பதில்லை. கவிதை கதை எழுதும் விசப்பரீட்சையிலும் இறங்கியதில்லை, இறங்கும் எண்ணமும் இல்லை.
வலைப்பதிவு, தமிழ் மணம் ஆகியவற்றின் அறிமுகம் கிடைத்த போது குறிப்பிட்ட ஒரு சிறிது காலம் வாசகர் ஆக மட்டுமே இருந்து வந்தேன். அதன் பின் நானும் ஏதாவது எழுதினால் என்ன என்ற நப்பாசை காரணமாக வலைபதிவு ஒன்றை ஆரம்பித்து எழுத தொடங்கினேன். அதன் பயனாய் இப்போது நட்சத்திரமாக இருக்க சொல்லி தண்டிக்கப்பட்டிருக்கிறேன் :(.

நட்சத்திர வாரத்தை பொறுத்த வரை எனது நிலை
"எல்லாருடைய கண்டும் ஓடுதெண்டு முதலியாரோட பட்டிலை நிண்ட பேத்தை கண்டும் ஓடிச்சுதாம்" என்பதாக தான் இருக்கும்.
என் எழுத்துக்கள் அழகிய வார்த்தைகளின் தொகுப்பாகவோ, அல்லது சலசலத்து ஓடும் அருவி போல ஒரு தொடர்ச்சியாகவோ இருக்காதென்பதும்,
சந்தம் தரும் எந்த விதமான வார்த்தை கோப்புக்களும் அற்றவையாகவே இருக்கும் என்பதையும் இதுவரை வாசித்து வந்த உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஒரு வாரகாலத்துக்கு கல் வீதியில் வண்டில் போகும் போது ஏற்படும் கட கடா எனும் ஒலியை போன்ற ஒரு சீரற்ற எழுத்து நடையை நீங்கள் அனைவரும் பார்க்க, வாசிக்க வேண்டிய துரதிஸ்டமான சூழலில் இருக்கிறீர்கள் :( ஒரு வாரத்துக்கு உங்கள் மனதை ஆற்ற ஒரு பாடலை கீழே இணைத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்
.


வி.ஜெ.சந்திரன் - ந...



என்னால் முடிந்த அளவுக்கு நாளுக்கு ஒரு பதிவை தரலாம் என நினைக்கிறேன். அவை இப்படி தான் இருக்கும் என வரையறுத்து கூறிவைக்க விரும்பவில்லை.

எனது வலைப்பதிவை அடிக்கடி வாசித்து கருத்துக்களை பகிர்ந்த/பகிர இருக்கிற மற்றும் கருத்துக்கள் எதையும் பகிராது வாசித்து விட்டு மௌனமாகவே திரும்பிய/ திரும்ப போகிற அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

நட்புடன்
வி.ஜெ. சந்திரன்