Sunday, 29 June 2008

வின்னிபெக் முருகன் வருடாந்த உற்சவம்

Winnipeg Murugan annual festival 20/06/08


கனடாவின் ஏனைய நகரங்களான ரொறான்ரோ, மொன்றியால், எட்மன்ரன், வன்கூவர் போன்ற நகரங்கள் போன்று அல்லாது வின்னிபெக் நகரில் தமிழ் மக்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால் தென்னிந்திய பாணியிலான கோயில்கள் எதுவும் இல்லை. அதிக அளவில் வட இந்திய மக்கள் இருப்பதால் இங்கு இருக்கும் கோயில்கள் வட இந்திய முறையில் அமைந்திருப்பதுடன், பூசைகளும் வட இந்திய முறையிலேயே நடப்பது வழக்கம். இங்கிருக்கும் தமிழர்களால் வட இந்திய முறையில் அமைந்த கோயிலில் முருகன் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு, அவ்வாறு பிரதிஸ்டை செய்ததன் மூன்றாம் ஆண்டு நிறைவு நிகழ்விற்கு போகும் சந்தர்பம் கிடைத்தது.



நீண்ட நாட்களுக்கு பின்னர் தவில் நாதஸ்வர இசையை நேரடியாக ரசிக்க முடிந்தது. அத்துடன் ஊரில் சுவாமி வீதி வலம் வருவதுபோல இங்கும் செய்திருந்தார்கள்.























கோயிலை பற்றியும் குழறுபடிகள் பற்றியும் சில குறிப்புக்கள்.

சில நல்ல விடயங்கள்

1. கோயிலில் ஒவ்வொரு வெள்ளி கிழமை மாலையும் தமிழர்களது பூசை நடைபெறுமாறும் ஒழுங்கு செய்துள்ளார்கள்.

2. கோயில் பூசகர் வட இந்திய பூசகராக இருப்பதால் பூசையில் பெரும்பாலான நேரம் தேவாரம், திருவாசகம், திருப்புகள், மற்றும் தமிழ் பஜனை பாடல்களாகவே இருக்கும். இதை ரோரன்ரோவிலோ ஏனைய தமிழ் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் உரிய கோயில்களிலோ எதிர்பார்க்க முடியாது. ஆகம வழி பூசை என்று முழுவதும் சமஸ்கிருததிலேயே முடிந்து விடும். இதனாக் இங்குள்ள சிறுவர்கள் தமிழ் பேசுகிறார்களோ இல்லையோ தேவாரம் பாட தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாடல்களுக்கு தபேலா, மிருதங்கம் போன்ற இசை கருவிகளை இசைக்க தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஊரில் பாடசாலைகளில் தேவாரம் பாடி முடிய சொல்வது போல, இங்கும் பூசை முடிய இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க, தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பவை சொல்லி பூசையை முடிக்கிறார்கள். இதை எந்த ஒரு தமிழர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் தென் இந்திய கட்டிட அமைப்பில் அமைந்த கோயில்களில் எதிர் பார்க்க முடியாது.

3. விசேட பூசை தினங்களில் இலவச உணவு நிச்சயம்.

4. கோயில் மண்டபத்தில் தமிழ் வகுப்புக்கள் நடை பெறுவது வழக்கம்.

குழறுபடிகள்

தமிழன் என்றோர் இனமுண்டு, அவனுக்கு தனியே ஒரு குணம் உண்டு. அது ஒருவரையும் முன்னுக்கு வர விடமையும், எதாவது காரியங்கள் நல்லபடி நடந்தால் அதை குழப்புவது எப்படி என்று சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பது.


1. முன்னர் வட அமெரிக்க தமிழ் சங்கங்களையும், கோயில் நிர்வாகத்தையும் கைப்பற்றுவது எப்படி என யாரோ வலைப்பதிவில் எழுதியிருந்தார்கள். வின்னிபெக்கில் இருப்பதோ 30-50 தமிழ் குடும்பங்கள். அவர்களுக்குள் கோயில் நிர்வாகத்தை கூட அல்ல வட இந்திய மக்களுடைய கொயிலில் தமிழ் மக்கள் சிறப்பாக கொண்டாடும் தினங்களில் பூசைகளை ஒழுங்கு செய்யும் குழு நிர்வாகத்தை கைப்பற்றுவதில் போட்டி சண்டை, கைகலப்பு என போய் சிலர் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்படும் பூசைகளுக்கு வருவதில்லை.

2. முருகன் சிலையை வைப்பதற்கு கோயில் நிர்வாகதில் பேசி அவர்களை உடன்பட வைத்த பிற்பாடு யார் முருகன் சிலையை இந்தியாவில் இருந்து செய்து வரவளைப்பது என்பதில் நீயா நானா போட்டி. முதலில் செய்யப்பட்ட முருகன் சிலை போட்டியால் களஞ்சிய அறையில் இருக்க புதிதாக சிலை செய்வித்து வைத்திருக்கிறார்கள்.

3. கோயில் வருடாந்த உற்சவத்தில் ஊரில் சாமி காவும் போது சில உள்ளுர் மைனர் மார் முன் வரிசையில் இடம் பிடிக்க அலைவது போலவும், சாமில் இருப்பில் இருந்து புறப்படும் போதும், சுவாமி இருப்புக்கு திரும்பும் போதும் தங்களே காவ வேண்டும் என்று அலைவது போலவும் இங்கும் சில பேர்.

4. பூசகர் வட இந்தியராக இருப்பதால் வட இந்தியர்கள் சுவாமி விக்கிரகங்களை தொட்டு வணங்கவும், அவர்களே பாலால், அல்லது ஏனைய அபிசேகங்களை செய்யவும் அனுமதிப்பது போல தமிழர்களின் பூசை நேரமும் பூசகர் செய்ய முற்பட்ட போது இங்குள்ள சிலர் எமதூரில் இப்படி அனைவரும் தொட்டு வணங்கக அனுமதிப்பதில்லை. இதன் அடி நாதமே சாதி என்பதில் இருந்து தான் வருகிறது. எனவே தமிழர்களின் பூசை நேரம் அவ்வாறு அனுமதிக்க கூடாது என சண்டை பிடிததாகவும் அறிய முடிந்தது. கடவுள் வழி கொடுத்தாலும் பூசாரி வழி கொடுக்க மாடார் என பழ மொழி சொல்வார்கள். ஆனால் இங்கு பூசைக்கு இருக்கும் பிராமணர் அனைவரையும் அனுமதிக்க தயார். ஆனால் எம்மவர்கள் அதுக்கு குறுக்கே தலைகிழாக நிற்கிறார்கள்.

5. முருகன் என அழகான தமிழ் பெயர் இருக்கிறது. வலைதளத்தையும் வின்னிபெக் முருகன் என வைத்திருக்கிறார்கள். ஆனால் வலைதளத்தில்/ கோயில் விழா நிகழ்ச்சி நிரல்களில் முருகனை வட மொழி பெயரில் கார்த்திக் என எழுதுவதில் ஒரு பெருமை :(.
ஆரிடம் சொல்லியழ.








0 comments: