Friday, 8 July 2011

தேசிகாய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

1. இறாத்தல் (lb) மெக்சிக்கன் தேசிக்காய்/ எலுமிச்சம் காய்
(ஊரில் உள்ள தேசிக்காய்களிலும் சிறிது, கனடாவில் Key lime என்ற பெயரில் ஒரு இறத்தல் பைகளில் கிடைக்கும், இது கிடைக்காவிட்டால் பெரிய தேசிகாயை பாவிக்கலாம்)Key lime image from : http://pintsizebaker.com/key-lime-pie

2 . மேசை உப்பு - 1 1 /2 கப்

3 . மஞ்சள் போடி - 3 மேசை கரண்டி

4 . 600 மில்லி லிட்டர்/ 1 லிட்டர் கொள்ளளவு உள்ள வாய் அகன்ற, இறுக்கமான மூடி உடைய கண்ணாடி போத்தல் (pasta souse போத்தல் பொருத்தமாக இருக்கும்)

5 . பேக்கிங் தட்டு (Baking tray) , மெழுகு கடதாசி (Parchment paper)

6 . 20 சாதாரண/பெரிய தேசிகாய் ( இது 3 கிழமைகளின் பின் தான் தேவைப்படும் )


செய்முறை

1. மெக்சிக்கன் தேசிகாய்களை குளிர் நீரில் 2 முறை கழுவி உலர விடவும் ( ஒரு துளி நீரும் தேசிக்காய்களின் மேல் இருக்க கூடாது.

2. உப்பையும் மஞ்சள் பொடியையும் ஒரு பத்திரத்தில் இட்டு நன்கு கலக்கவும்.

3. தேசிகாய்களை நான்காக பிளக்கவும், பிளக்கும் போது கவனம் தேவை, நன்கு துண்டுகளும் தனியே வரக்கூடாது , அடிப்பகுதியில் நான்கு துண்டுகளும் இணைந்து இருக்க வேண்டும்.

4. உப்பு-மஞ்சள் கலவையை நான்காக பிளந்து வைத்த தேசிக்கய்களுக்குள் நிரப்பவும்/ அடையவும். உப்பு-மஞ்சள் கலவை தேசிக்காய்களின் அடிப்பகுதி வரை செல்ல வேண்டும்.

5. உப்பு-மஞ்சள் கலவை நிரப்பிய தேசிகாய்களை போத்தலினுள், (உப்பு-மஞ்சள் கலவை வெளியே கொட்டுப்படதபடி) கவனமாக நிரப்பவும்.

6. நிரப்பிய போத்தலை இறுக்கமாக மூடி 3 கிழமைகள் வைக்கவும். மூன்று கிழமைகளில் தேசிக்காய் நிறம் மாறி, வெளியே தேசிகாய் சாறு, கசிந்து வந்திருக்கும்.

7. 3 கிழமைகளின் பின் தேசிக்கய்களை போத்தலில் இருந்து கைபடாமல், கரண்டி முலம் ஒவ்வொன்றாக எடுத்து மெழுகு கடதாசி விரித்த பேக்கிங் தட்டில் பரப்பவும். போத்தலில் இருக்கும் சாறை இறுக்கமாக மூடி வைக்கவும்.

8. oven ஐ 76 பகை செல்சியசில் (170 F ) இற்கு சூடாக்கவும்.

9. தட்டில் பரப்பிய தேசிகாய்களை சூடாக்கிய oven 5 மணி நேரம் உலர வைக்கவும், பின் வெளியே எடுத்து பின் தேசிகாயின் நான்கு பிளந்த பகுதிகளையும் பிரித்து மேலும் ஒரு 6 - 8 மணி நேரம் உலரவைக்கவும்.


10 . 20 பெரிய தேசிகாய்களை கடையில் சென்று வாங்கவும்.

10 . தேசிக்காய் காய்ந்த பின் நான்கு துண்டுகளையும் தனியே பிரிக்கவும், (கையால் நான்கு துண்டுகளையும் உடைக்க துண்டுகள் உடையும் சத்தம் கேட்க வேண்டும் இல்லை என்றால் மேலும் 1 - 2 மணிநேரம் உலர வைக்கவும்).11 . உடைத்த துண்டுகளை முன்னர் தேசிகாய் ஊற வைத்த (சாறு இருக்கும்) போத்தலினுள் போட்டு நிரப்பவும்


12 . 20 தேசிகாய்களையும் சாறு பிழிந்து காய்ந்த தேசிக்காய் போட்ட போத்தலினுள் விட்டு போத்தலை இறுக்கமாக மூடி மேலும் ஒரு கிழமை வைக்கவும்.
13 . இப்போ ஊறு காய் தயார்.இந்த ஊறு காயை அறை வெப்பநிலையில் ஒரு வருடம் வரை வைத்துருக்கலாம். குளிருட்ட தேவையில்லை.குறிப்பு:
1. ஊறுகாய் உலர/ கைய விடும் போது தொடர்ச்சியாக 10 மணி நேரம் வைக்க வேண்டியதில்லை. ஒருநாள் 5 மணி நேரம்,மறுநாள் 5 - 7 மணிநேரம் வைக்கலாம். ஆட்கள் யாரும் இல்லாத நேரம் oven ஐ பாவிக்க கூடாது என்பார்கள். oven ஐ நிப்பாட்டிய பின் மறுநாள் சூடாக்கும் வரை தேசிக்காய்களை oven உள்ளேயே வைத்திருக்கலாம்.

2 . ஊரில் சூரிய ஒளியில் உலர வைப்பார்கள், நான் இருப்பது தொடர் மாடி குடியிருப்பு, பல்கனி இல்லை. அதனால் தான் oven இல் உலர வைத்தேன். சூரிய ஒளியில் உலர வைக்க வசதியிருப்பவர்கள் சூரிய ஒளியில் உலர வைக்கலாம். ஆனால் சூரிய ஒளியில் உலர குறைந்தது 5 - 6 நாட்கள் எடுக்கும் என நினைக்கிறேன்.

Wednesday, 23 September 2009

நாம் எதை உண்கிறோம்? எவ்வளவு உண்கிறோம்? பகுதி 1?

உணவு, உடை, உறையுள் இம்மூன்றும் மனிதனின் அடிப்படைத்தேவைகள். இவற்றில் உணவு ஏனைய இரண்டையும் விட அதி அத்தியாவசியமானது. நாம் எப்படிப்பட்ட உணவை உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பதில் எமது உடல் நலன் தங்கியுள்ளது.

உணவு, அவற்றின் ஊட்டச்சத்துக்கள், எந்த வகையான உணவுகள் உடலுக்கு அதிகம் நன்மை தருவன, எப்படிப்பட்ட உண்வை நாம் தவிர்க்க வேண்டும்? என்பனவற்றி தெளிவான அறிவு எம்மிடையே இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு ஆம் இல்லை என நான் ஒரு பதிலை சொல்வதிலும், வாசிக்கும் ஒவ்வோருவரும் உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள்.

ஊரில் உள்ள ஒரு சிலரின் கணிப்பில் உடல் மெலிவாக இருக்க கூடாது, உடல் மெலிவாக/ அல்லது ஒருவரின் வயதுக்கும், உயரத்தும் ஏற்ற நிறையில் இருப்பவர்களை பார்த்து சிலர் கேட்கும் கேள்வி என்ன ஒழுங்காய் சாப்பிடுறேல்லியோ என்பதாக தான் இருக்கும். என்னையே பலர் பல முறை கேட்டுள்ளார்கள். சிறுவயது முதலே நான் மரக்கறி உணவுகளும், பாலும் மட்டுமே உட்கொண்டு வந்துளேன். ஒரு கட்டத்தில் முட்டை சாப்பிட பழகினேன். அதற்கு அப்பால் போனதில்லை. நான் மெலிவாக இருப்பதாக சுட்டிய பலர், உப்பிடியே மெலிஞ்சு போய் இருக்கிறதுக்கு, ஏன் இறைச்சி மீன் என்பவற்றை சாப்பிட்டு உடலை தேற்ற சொல்லியும் ஆலோசனை சொல்லுவார்கள். அப்படி கேட்பவர்கள் அளவுக்கு அதிகமாக உண்டு, உடல் கொழுத்து, உடல் கொலஸ்திரோல் அளவு கூடி அதற்கு மருந்து உட்கொள்வர் அல்லது சலரோகம்/ நீரிழிவு நோய்க்கு மருந்து உட்கொள்வர். இந்நோய்கள் எல்லாம் கணக்கு வழக்கின்றி உண்டதன் விளைவு என்பதை ஏனோ சிந்திப்பதில்லை என்று சொல்வதிலும், அவர்களுக்கு எந்த உணவுகள் உடலுக்கு நல்லவை, எவை பாதகமானவை எனும் போதிய அறிவின்மை தான் காரணம் என நினைக்கிறேன்.

அதற்காக இறைச்சி, மீன் என்பவை உடல் நலனுக்கு உகந்ததல்ல என்று சொல்லவில்லை. ஆனால் இறைச்சி, மீன் முட்டை என்பவற்றை எவ்வளவு உண்கிறோம் என்பதில் தான் பிரச்சனையே உள்ளது.

இணையத்தில்/வலைப்பதிவில் எழுதும் பலரும் ஆங்காங்கு எழுதியதில் இருந்தும், நேரடியாக நண்பர்கள், உறவினர்களுடன் உரையாடும் போதும் கேட்டவற்றில் இருந்து

இறைச்சி, மீன் கறி இருந்தால் சந்தோசமாக சாப்பிடுவோம், அதிகம் சாப்பிடுவோம்.
இறைச்சி/ மீன் கறி இருந்தால் வேற கறி ஒண்டும் தேவையில்லை.
மரகறிச் சாப்படு கண்ணிலையும் காட்ட கூடா
மரக்கறி சமையல் எண்டா 2-3 கறி வைக்க வேணும். அதாற்கு நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இறைச்சி/ மீன் எண்டா ஒரு கறியோட வேலை முடிஞ்சுது.
மரக்கறி சாப்பிட்டா வயிறு முட்டா கிடக்கும்.
...

.....

இப்படி பல கருத்துக்கள்.

உடல் நல ரீதியாக பார்த்தால் தனியே இறைச்சியும் சோறும் உண்பது உடல் நலனுக்கு உகந்ததல்ல.

ஊரில் இருக்கும் போது எனக்கு மிக நெருக்கமான உறவினர்கள், கொஞ்சம் வசதியானவர்களும் கூட. வாரத்தில் 5 நாட்கள் அவர்கள் வீட்டில் மீன் இறைச்சி போன்ற உடனவுகள் இருக்கும். கொழி இறைச்சி கறி, மீன் கறி,மீன் பொரியல் இறால் பொரியல் என எல்லாம் ஒரே நாளில் இருக்கும் இப்படியே சாப்பிட்டு அந்த வீட்டின் ஆண்களில் பலருக்கும் 42 + inches இல் தான் காற்சட்டை இருக்கும், சேட், அல்லது ரீ சேட் வந்த வேணும் என்றால் XXL அளவில் இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் உடல் பருமனை தாங்க மாட்டாமலும் அதி உயர் குருதி அழுத்தம் காரணமாக அவர்களாகவே உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தார்கள்.
படம் பெறப்பட்டது : http://www.tampabay.com/features/food/


இதை ஏன் சொல்கிறேன் என்றால் எந்த கவனமும் இல்லாமல், எங்களிடம் போதுமான வசதியிருக்கிறது ஆகவே மேலே சொன்னது போல் உண்பது தான் மதிப்பு என நினைத்து அளவுக்கு அதிகமாக உண்டு, பணக்கார வருத்தங்கள் என்று சொல்கிற உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு/சலரோகம் போன்றவற்ரை வாங்கி, அதன் காரணமாக பல உணவுகள் உண்ன முடியாது போய் வாயை கட்டி வைத்திருப்பதிலும் நாளாந்தம் என்ன உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பதை கவனித்து செயற்படுவது வாழ் நாள் பூராகவும் அனைத்து உணவுகளையும் எந்தவித பிரச்சனையும் இன்றி உண்ண வழிசமைக்கும்.


எவ்வாறு உணவு பழக்கத்தை மறு சீரமைக்க வேண்டும் என்பதை பார்க்க முதல்

எமது உடல் நிறை சரியான அளவில் இருக்கிறதா? அல்லது குறைவாக இருக்கிறதா? அல்லது சற்று அதிகமாக இருக்கிறதா? மிக அதிகமாக இருக்கிறதா? இதை எவ்வாறு கணக்கிடுவது?

எமது உடல் நிறை சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை கணிக்க உடல் திணிவு சுட்டி பயன்படுகிறது (Body Mass Index -BMI)

உடல் திணிவு சுட்டியை எவ்வாறு கணிப்பது?

மிக சுலபம்.

உடல் திணிவு சுட்டி = உடல் நிறை (கிலோ கிராமில்)/ {உடல் உயரம் * உடல் உயரம் (மீற்றரில்)}

அதாவது உங்கள் உடல் நிறையை (கிலோ கிராமில்) உங்கள் உயரத்தின் (மீற்றரில்) வர்க்கத்தினால் பிரிக்கும் போது வரும் இலக்கம் தான் உடல் திணிவுச்சுட்டி.


உங்களுக்கு கணிக்க சிரமமாக உள்ளதா இந்த இணையத்தில் உங்கள் உயரத்தையும், நிறையையும் கொடுத்து உங்கள் உடல் திணிவு சுட்டியை பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த உடல் திணிவு சுட்டியின் அளவை கொண்டு உடல் நிறை பிரிவுகளை வகுத்துள்ளனர்.

மிக குறைவான உடல் நிறை = <16.5

குறைவான உடல் நிறை = 16.5 - 18.5

சாதாரணம் = 18.5- 25

கூடிய உடல் நிறை = 25- 30

அதி கூடிய உடல் நிறை வகுப்பு I(Obese Class I) = 30-35

அதி கூடிய உடல் நிறை வகுப்பு II (Obese Class II)= 35 - 40

அதி கூடிய உடல் நிறை வகுப்பு III (Obese Class III)= > 40

உங்கள் உடல் திணிவு சுட்டி 25 க்கு அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது என்றால் நீங்கள் வேண்டா விருந்தாளிகளான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை இலகுவில் பெற்று கொள்ளும் திசை நோக்கி போய்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உணவு பழக்கத்தை மறுசீரமைப்பது சற்று சிரமானது போல் தோன்றினாலும் உடல் நலனை, உணவை அளவுக்கதிகமாக உண்டு அதன் காரணமாக வரும் நோய்களின் பின் சில உணவுகளை முழுமையாக உண்ணாது நிறுத்துவதிலும் அளவோடு உண்ண முயல்வது மேல்.

பொதுவாக உணவு பழக்கத்தை மறுசீரமைக்க ஒரு அடிப்படை உதாரணமாக உணவு கூம்பகம்/ Food Pyramid ஐ உதாரணமாக காட்டுவர். உணவு பிரமிட் எந்த உணவுகள் அதிகம் உண்ண வேண்டும் எவற்றை குறைவாக உள்ளெடுக்க வேண்டும் என்பதை பருமட்டாக விளக்கும் ஒரு அமைப்பாகும். இந்த உணவு பிரமிடில் உள்ளடக்கப்படும் உணவுகளில், மற்றும் அவற்றை எந்த அளவுக்கு உண்ண வேண்டும் அட்டவணைபடுத்துவதில் நாடுகளுக்கு நாடு வேறுபாடுகள் உண்டு.

உதாரணமாக ஒரு உணவு கூம்பகம்/ Food Pyramid:


படம் பெறபட்ட இணையம் : http://www.ndlabs.com/weight_management

இதிலே சொல்லப்பட்ட பரிமாறல்(Serving) எனும் அளவு எவ்வளவு என்பதையும், குறிப்பிட்ட உணவுகளில் நாளாந்தம் எவ்வளவு உண்ண வேண்டும் என்பதையும் மேலும் தெளிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்Tuesday, 15 September 2009

நான் எழுதி கிழிச்ச கதை......


வலைப்பதிவு எழுத வந்த கதை தொடர் விளையாட்டு எங்க தொடங்கி எங்க நிக்குதெண்டு தெரியேல்லை. சினேகிதி என்னையும் அந்த விளையாட்டுக்கு கூப்பிட்டுருக்கிறன் எண்டு மின்னஞ்சல் போட்டு, அரட்டையிலும் வந்து அறிவிச்சிருந்தா. போன ஞாயிற்று கிழமைக்கு பிறகு தான் எழுதேலும் எண்டு சொன்னான் ஆனாலும் சொன்ன மாதிரி எழுத ஏலாம போச்சு. சினேகிதி என்ன சொன்ன மாதிரி எழுதேல்லை எண்டும் வந்து கேட்டு போட்டா.

உண்மைய சொல்ல போனா இந்த தொடர் விளையாட்டுகள் தொடங்கினபோது என்னையும் ஆரும் கூப்பிட மாட்டினமோ எண்டெல்லாம் நினைசிருக்கிறன். ஆனா போக போக அதிலை பெரிசா ஆர்வம் இல்லம போனதோடா, ஆரும் உந்த தொடர் விளையாட்டுகளுக்கு ஒரு கிறீட்ட இடம் நிரப்புற மாதிரி ஒரு ரெம்பிளடை உருவாக்கின நல்லம் போலை இருக்கும். பேசாம அந்த இடைவெளியளை எங்கடை விசயங்களை போட்டு நிரப்பி போட்டு போகலாம். நல்ல சுகமான வேலை.

நான் வலைப்பதிய வரமுதல் ஒரு சில பதிவர்கள் சொன்னது போல ஆரம்பத்திலை இணையத்திலை தமிழ் எழுதி பழகின இடம் யாழ் இணையம். ஊரிலை இருந்த போது கருத்துகளம், வலைபதிவு எண்டது பற்றியெல்லாம் ஒண்டும் தெரியா. வேலை செய்ய போன இடத்திலை மின்ஞ்சல்கள், மேல படிக்கிறதுக்கு இடம் தேடுறதுக்கும் போற நேரம் யாழ் இணையம் எதேச்சைய பார்வையிலை வந்துது. அதிலை சின்னப்பு ஹரி எண்டு சில பேர் நல்ல முசுப்பாத்தியா கருத்துக்கள் எழுதியிருக்கிறதை வசிச்சு சிரிச்சு போட்டு போறது, ஆனா அதிலை போய் நானும் இணையலாம், கருத்தெழுதலாம் எண்டெல்லாம் தெரியா. அதோட அதுக்கு மினக்கெடவும் நேரம் இருக்கேல்லை. புலம் பெயர்ந்து வந்தாபிறகு சொந்தமா கணனியும் வாங்கி, ஓசிலை இணைய இணைப்பும் கிடைச்சா பிறகு இரவுகளிலை தனிய இருந்து பொழுது போக்காட்டேலாம, யாழ் இணைய பக்கம் போக தொடங்கி பதிஞ்சு முதாலாவது கருத்து எழுதுறேக்கிடையிலை போதும் போதும் எண்டாகி போச்சு. அப்ப யாழ் இணையம் ஒருங்குறி பாமினியிலை இயங்கினது, எழுதுறேக்கு பாமினி மின் விசைபலகை தெரிஞ்சிருக்க வேணும். ஊரிலை இருக்கேக்கை வேலைக்காக பாமினி பாவிச்சு தட்ட்ச்சியிருந்தாலும் ஒவ்வொரு எழுத்தா தெடித்தேடி தான் எழுதின்னான். யாழிலை எழுத தொடங்கேக்கை எழுத கரைச்சல் பட்டாலும் யாழிலை கருத்தெழுதுற இடத்துக்கு மேலை பாமினி விசைப்பலகையின்ர படம் இருந்ததாலை பாத்து பாத்து எழுதி ஒரளவுக்கு பாமினி விசைப்பலகை பழக்கத்துக்கு வந்திருந்திச்சு. ஒரு கட்டத்திலை சுரதா கீ மான் மென் பொருள் பற்றியும் யாழ் இணையத்திலை அறிமுகம் கிடைச்சுது, அதிலை ஆங்கிலத்திலை Amma எண்டு எழுத தமிழிலை ஒருங்குறிலை அம்மா எண்டு மொழிமாற்றி வரக்கூடிய தட்டச்சு வசதி இருந்த்திச்சு. எனக்கு பாமினிலை எழுத்தை தேடி தேடி தட்டுறதிலும், Romanished to Unicode தமிழ் கீமான் விசைப்பலகை இலகுவா இருந்திச்சு அதையே பாவிச்சு எழுதவும் தொடங்கீட்டன்.

சினேகிதி சொன்ன ஒழுங்க தலை கீழ மாத்தி போட்டன் போல சரி எப்பிடி எழுதினா என்ன வலைபதிய வந்த கதை எழுதினா சரி தானே.

யாழிலை எழுதி கொண்டிருக்கேக்கை வலைப்பூ/ வலைப்பதிவு பற்றின அறிமுகம் கிடைச்சிச்சு. யாழ் இணையத்தில் இணைஞ்சிருந்த கன பேர் அப்ப வலைப்பதிய தொடங்கி இருந்திச்சினம், அதிலை ஞாபகம் வாற ஆக்கள், தமிழினி, கவிதன், சயந்தன், குருவிகள், சண்முகி, சினேகிதி.... இப்பிடி கன பேர். சரி எல்லாரும் எழுதினம் நானும் எழுதினா என்ன எண்டு ஒரு அவாவிலை 2005 பங்குனி மாதம் யாழ் இணையம் வழங்கின .yarl.net இலையும், புளொகரிலையும் ஒவ்வொரு வலைப்பதிவு தொடங்கினன். ஒண்டிலை பொழுதுபோக்கு விசயங்களும், மற்றதிலை துறை சார் பதிவுகளும் எழுதுறதெண்டு சொல்லி கொஞ்ச நாள பதிவுகள், புகைப்படங்கள் எண்டு பதிஞ்சு கோண்டு இருந்தனான். யாழ் இணையத்திலை தான் தமிழ்மணம் வலைப்பதிவு திரட்டி பற்றின அறிமுகமும் கிடைச்சிச்சு. பிறகு யாழ் இணைய வலைப்பூ வழங்கி செயல் இழந்தப்பிறகு, எல்லாத்தையும் புளொக்கர் பதிவிலை எழுதி கொண்டு இருந்தன். அதிலையும் எல்லாருக்கும் கனக்க பின்னூடம் வர எனக்கு மட்டும் ஆரும் பின்னூடம் போடினம் இல்லை எண்டு கவலையா இருக்கும். அதிலையும் பெரும் பதிவர்கள் எண்டு சொல்லுற சில பேரிட்டை பின்னூட்டம் வாங்க வேணும் எண்டும் ஆசையா இருக்கும் ஆனா நான் யாருக்கும் போய் பின்னூட்டம் போடாட்ட எனக்கும் ஆரும் பின்னூட்டம் போட மாடினம் எண்டதும், நான் பின்னூட்டம் போட்டாலும் சிலர் திரும்பியும் பாக்க மாடினம் எண்டதும் விளங்கிச்சு. இப்பிடியிருக்கேக்கை நாடு மாற வேண்டி வந்திச்சு. சரி புது நாட்டுக்கு வந்து புது வலைப்பதிவு தொடங்குவம் எண்டு புளொக்கரிலை புதிசா பதிஞ்சு புது ஆள் மாதிரி 2007 மாசி மாதம் எழுத தொடங்கினன் :) என்ரை பழைய பதிவுகளை வாசிச்ச சில பேர் என்னை அடையாளம் கண்டு பிடிச்சிட்டினம்.

புது வலைப்ப்திவு எழுத தொடங்கி 3 மாதம் ஆகுறேக்குள்ள தமிழ்மணத்திலை இருந்து நட்சத்திர வாரத்தில் எழுத அழைப்பு வந்திச்சு அதாலை எனக்கு கொஞ்சம் அதிகமா வாசகர்கள் கிடைச்சார்கள் எண்டு நினைக்கிறன். ஆனா கிடைச்ச வாசகர்களை தக்க வைக்க தொடர்ந்து எழுதுறேக்கு முடியேல்லை. எனக்கேயுரித்தான சோம்பல் புத்தி, அடுத்தது என்னுடைய வேலை விடயங்களின் சுமை, எல்லாரையும் போல ஊரின் கதைகள் எண்டு எழுத பெரிசா மனம் வரேல்லை. இருந்தாலும் வலைபதியிறன் எண்டு காட்ட இடைக்கிடை புகைப்படங்களை போட்டு கொண்டிருந்தன்.

இன்னொரு முக்கியமான விசயம் என்னெண்டா வலைபதியும் மற்றவர்களின் பதிவுகளை வாசிச்சு போட்டு என்ரை எழுத்தை வாசிக்க எனக்கு பெரிசா பிடிக்கிறேல்லை. என்னாலை அவைய போல வாசிக்க தூண்டும் விதமா எழுத ஏலாது எண்ட நினைப்பும் அடிக்கடி வரும் அதாலையும் வலைப்பதிவில் அதிகம் எழுதுறேல்லை.

சரி இந்தளவும் போதும் எண்டு நினைக்கிறன் நான் எழுதி கிழிச்சதை பற்றி சொல்ல.

இன்னும் ஆர் ஆர் எழுதாம இருக்கினம் எண்டு தெரியேல்லை.
அதாலை இன்னும்
பதிவெழுத வந்த கதையை எழுதாத ஆரும் இந்த பதிவை உங்களுக்கான அழைப்பா எடுத்து தொடரலாம்.படம் கூகுல் தேடலில் பெறப்பட்டது.

Sunday, 16 August 2009

River walk


River walk, San Antonio, TX.

Mission San Jose


San Antinio, TX