Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Sunday, 16 August 2009

River walk






River walk, San Antonio, TX.

Tuesday, 22 July 2008

பட விளையாட்டு

12/07/08
Kenora, ON, Canada

இது சும்மா விளையாடி பார்த்தது.









Posted by Picasa








Wednesday, 2 July 2008

யாழில் இருந்து லங்கா முடித்தவில் திருமலைக்கு - 1

யாழ் குடா நாடு 95 இல் இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் யாழ் குடா மக்களுக்கான பாதையாக இருந்து வந்த, அதே நேரம் பல பேரை பலி கொண்டதுமான கிளாலி பாதையூடான பயணம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் யாழ் மக்களுக்கான போக்கு வரத்துக்கு காங்கேசன் துறையில் இருந்து திருகோணமலைவரையான கப்பல் மார்க்கமும், பலாலியில் இருந்தான விமான பயணமுமே அமைந்திருந்தது. முதலில் கப்பலிலும், பின்னர் விமானத்திலும் பயணம் செய்திருக்கிறேன். அந்த பயணங்களை மேற்கொள்ள முன்னர் நாம் பட்ட அலைச்சல்கள் கொஞ்ச நஞமல்ல. இந்த பதிவில் கப்பல் பயணத்தின் அனுமதி, பயணசீட்டு பெறல், கப்பலில் பயணித்து திருகோணமலையை சென்று சேரும்வரை பட்ட அவஸ்தைகளை பார்க்கலாம். கப்பல் என்றால் அது பயணிகள் கப்பல் அல்ல, சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு கப்பலில் எந்த அடிப்படை வசதியும் இன்றி பயணிக்க வேண்டும்.
அந்த கப்பல் கீழே உள்ள கப்பலின் தரத்தில் அல்லது அதை விட சிறிது நல்ல நிலையில் இருக்கும்.






**********


இப்போதும் யாழ் குடா நாட்டு மக்கள் வெளியே பயணிப்பதற்கான பாதைகளாக விமான பயணமும், கப்பல் பயணமுமே அமைந்திருக்கிறது. முன்னரை விட இப்போது பயண அனுமதியை பெறுவதற்கு இன்னும் சிரமப்பட வேண்டியிருப்பதாக அறிய முடிந்தது.


**************


யாழ் குடாநாடு இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் திறந்த வெளிச்சிறைசாலையான யாழில் இருந்து மக்கள் வெளியே மக்கள் செல்வதற்கு நிறைய கட்டுப்படுகள் இருந்தன. யாரும் தமக்கு தேவையான நேரத்தில் யாழ் குடா நாட்டுக்கு வெளியே சென்றுவிட முடியாது. பயணத்துக்கான அனுமதியை பெறுவதற்கு குறைந்தது ஒரு மாதங்களாவது காத்திருக்க வேண்டும். அலுவலக, கல்வி நிமித்தம் செல்பவர்களுக்கு வேறு நடைமுறையும், சாதாரண பொதுமக்களுக்கு/ தனிப்பட்ட காரணமாக பயணிப்பவர்களுக்கு வேறு நடைமுறையும் இருந்தன.

சாதாரண பொதுமக்களாக/ தனிப்பட்ட தேவைகளுக்கு பயணிப்பவர்களாக இருந்தால்

இராணுவத்திடம் இருந்து பாதுக்கப்பு பயண அனுமதி பெறும் விண்ணப்பப்படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம், 2 அல்லது 3 (சரியாக நினைவில் இல்லை) புகைப்படங்களுடன் கிராம அதிகாரியிடம் சான்று படுத்தவேண்டும், பின்னர் உதவி அரசாங்க அதிபர் (இந்தியாவில் சப்-கலக்டர்) அலுவலகத்தில் சான்றுபடுத்தி, குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ முகாம் அதிகாரியிடம் உறுதிபடுத்தல் கையொப்பம் வாங்க வேண்டும். இவர்கள் அனைவரது உறுதிப்படுத்தலும் குறிப்பிட்ட நபர் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர் என்ற சாரப்பட இருக்க வேண்டும். சிவில் அரச அலுவலர்களின் கையொப்பத்தை 2 நாட்களில் பெற்றுவிட முடியும். ஆனால் குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியின் கையொப்பம் பெற பல முறை அலைந்து கையொப்பத்தை பெற ஒரு வாரம் ஆகிலும் தேவைப்படும். அத்துடன் குறிப்பிட்ட நபர் நேரடியாக இராணுவ முகாமுக்கு செல்ல வேண்டியிருக்கும். இந்த மூன்று பேரிடமும் கையொப்பம் பெற்ற பின் அந்த பிராந்தியத்திற்கு பொறுப்பான இராணுவ முகாமில் விண்ணப்பத்தை கையளிக்க வேண்டும். அவர்கள் அதை உறுதிப்படுத்தி பலாலியில் உள்ள இராணுவ சிவில் (இராணுவம் அதில் என்ன பின் சிவில் என்று ஆச்சரிய படுகிறீர்களா? பொதுமக்களின் பயண ஒழுங்கு அனுமதியை வழங்கும் அலுவலகம் அப்படி தான் அழைக்கப்படும்) அலுவலக்கம் எல்லா தகவல்கள், ஆவணங்களையும் சரி பார்த்து நிராகரிக்கும் அல்லது அனுமதிக்கும். அந்த அனுமதி கிடைக்க குறைந்தது 2 வாரங்களாவது செல்லும். ஆனால் இரண்டு வாரத்தில் கிடைக்கும் என்று வீட்டில் இருந்தால் 2 மாதம் ஆனாலும் கிடைக்காது. இரண்டு வாரம் முடியும் தறுவாயில் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு பொறுப்பான இராணுவ முகாமுக்கு போனால் இன்று வா, நாளை வா என இழுத்தடித்து பயணத்துக்கான அனுமதி முன்று அல்லது நான் கு வார முடிவில் கையில் கிடைக்கும். கிடைத்த அனுமதி கூட 1 அல்லது 2 மாதம் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் கப்பலில் அல்லது விமானத்தில் இடம் கிடைக்காவிட்டால் மீண்டும் பாதுகாப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுவே அலுவலக காரியமாக/ அல்லது கல்வி காரணங்களுக்காக செல்வோருக்கு பதுகாப்பு அனுமதி முறை வேறானது, சற்று இலகுவானது. எனது பயணம் கல்வி பயணமாக இருந்ததால் இந்த முறையிலேயே நானும் எனது பள்ளி தோழர்கள், மற்றும் எம்முடன் துணை வந்த ஆசிரியர்களும் அனுமதி பெற்றோம். அதைப்பற்றியும், கப்பல் பயண சீட்டு பெறுவது பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.





தொடரும்...............

Friday, 2 March 2007

சிகிரியா.....

சிகிரியா, இலங்கையை ஆண்ட சிங்கள மன்னன் காசியப்பனால் (கிபி 447-495) எதிரிகளில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட கோட்டை.
இங்கு சில ஓவியங்கள் உள்ளன. அவற்றை ஒளிப்படம் எடுக்க முடியவில்லை.

(படங்களில் அழுத்தி பெரிதாக்க முடியும்)

சிகிரியா குன்றின் தோற்றம்.



இரண்டு பெரும் பாறைகளுக்கூடு செல்லும் பாதை





உச்சிக்கு ஏறுவதற்காக அமைக்கப்பட்ட படிகள்



உச்சியில் அமைக்கப்பட்ட நீர்த்தடாகம்




மேலிருந்து பார்க்கும் போது குன்றின் முன் அமைக்கப்பட்ட மண்டபம், பாதைகளின் அழிந்த பகுதிகள்




உச்சியில் இருந்து குன்றின் இடைத்தளதின் பார்வை



மேலிருந்து ஒரு காட்சி :)

Tuesday, 13 February 2007

வல்லிபுரக்கோயில்......

யாழ்க்குடா நாட்டில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய விஸ்ணு கோயில் களில் வல்லிபுரக்கோயில் முக்கியமானது. (ஏனையவை யாழ்ப்பாணம் பெருமாள் கோயில், பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில்) யாழ்குடா நாட்டில் இருக்கும் கோயில்களில் மிகபெரிய இராஜ கோபுரம் உடைய கோயில்.


Image Hosted by ImageShack.us


முதன் முதலாய் கோயிலுக்கு போனது கடல் தீர்த்ததுக்கு.அதுக்கு பிறகு ஒரு நாளும் கடல் தீர்த்ததுக்கோ, அல்லது திருவிழாக்களுக்கோ போனதில்லை. ஈழத்தில் சைக்கிள் தான் பிரதான போக்குவரத்து சாதனம். அது எங்களுக்கும் விதி விலக்கல்ல. அந்த நேரம் தான் இந்திய ஆமி வந்து இருந்த நேரம், சண்டை ஏதும் தோடங்கேல்லை. நானும் சின்ன பொடியன். அக்காவும், அக்கவுடைய சினேகிதிகள், சகோதரர்கள் என ஒரு பட்டாளமே போச்சுது நானும் அவையோட சேர்ந்து போய் வந்தன்.
அதுக்கு பிறகு இந்திய இராணுவந்த்துடனான சண்டை தொடங்கி, இராணுவம் வெளியேறும் மட்டும் கோயிலுக்கு போனதில்லை.

இந்திய இராணுவம் போன பிறகு யாழ்குடா நாடு முழுக்க முழுக்க புலிகளின் கட்டுபாட்டுக்குள் வந்த பின் பல முறை போய் இருக்கிறேன்.


விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அப்பப்போ நடக்கும் விமான குண்டு வீச்சு, ஹெலி மூலமான தாக்குதல் என்பவற்றை தவிர்த்து எந்த நேரத்திலையும், எங்கையும் போய் வரலாம் எண்டு இருந்தது.

92/ 93 ஆண்டுகளிலை, ரீயுசனிலை படிச்ச பொடியள் கொன்ச பேரச்சேந்து சைக்கிளிலை மார்கழி ஞாயிறு க்கு வெளிக்கிடுவம். காலமை 6.30 /7 மணிக்கு எல்லாருமா செந்து வெளிக்கிட்டமெண்டா கண்டி வீதி (ஏ9) , கொடிகாமம் பருத்திதுறை வீதி வழியே பயணம் இருக்கும் ( பயண பாதையை வரைபடதிலை பச்சை கோட்டாலை போட்டு காட்டி இருக்கிறன். படத்திலை அழுத்தி பெரிசாக்கலாம்).

Free Image Hosting at www.ImageShack.us

(வரைபடம்: www.eelamweb.com இணையம்)
வழிலை சுட்டிபுரம் (சிட்டிபுரம்) அம்மன் கோயிலிலை நிண்டு கும்பிடுவம். அப்பிடியே பொன முள்ளி வெளி வரும், அதாலை தான் உப்பாறு பாயிறது.

காத்து எதிர் காத்தா இருக்கும். சைக்கிள் உழக்கிறது கஸ்டம். வெளிமுடிய கோயில் கோபுரம் தெரியும். எப்பிடியும் ஒரு எழேமுக்கால்/ எட்டு மணிக்கு கோயிலுக்கு போய் செந்திடுவம்.

கொயிலடிக்கு போனா முதல் போறது வல்லிபுர கோயிலுக்கு பின் பக்கமா உள்ள பிள்ளையார் கோயிலுக்கு. அங்க உள்ள கேணிலை குளிச்சு போட்டு பிள்ளையார கும்பிட்டு, அங்க வாற பிள்ளையளையும் கும்பிட்டு கொண்டு வல்லிபுர கோயிலுக்கு போவம்.

அங்க போய் ஆழுக்கொரு அரிச்சனை ரிக்கற் எடுத்து அரிச்சனைனை எவ்வளவு கெதியா முடிக்கேலுமோ முடிச்சு கொண்டு கடற்கரைக்கு போறதிலை தான் எங்கட தவனம் இருக்கும். அரிச்சனை முடிச்சு, கச்சான் வாங்கி கொண்டு, கடற்கரைக்கு போவம்.


Image Hosted by ImageShack.us




கடற்கரை கோயில்லை இருந்து 3 கிமீ இருக்கும். கோயில்லை இருந்து சைக்கிளிலை போகேலாது,நடை தான். நடக்கிறதிலையும் ஒரு சுகமிருக்கும். கடற்கரையை அடையிறதுக்கிடையிலை எப்பிடியும் இரெண்டு மூண்டு மண் புட்டியளை ஏறி கடக்க வேண்டி இருக்கும். ஒவ்வொண்டும் சரியான உயரமானவை (பனையளவு உயரம் வருமோ??)
யார் அந்த புட்டியளை முதல் ஏறிகடகிறது எண்டதிலை போட்டி வரும். எனக்கும் ஓட்டத்துக்கும் வெகுதூரம் எண்டதாலை நான் தான் கடைசியாளா இருப்பன். கடந்தா வாறது வங்க க்டல்.
கொண்டு போன கச்சானை எடுத்து கொறிச்சு போட்டு, கடறரையிலை ஓடி திரியிற நண்டை திரத்துறது, பிடிக்க போறது. ஆனா ஒரு நண்டும் ஆப்பிடாது.

பொற ஆக்கள் ஒருதருக்கும் நீச்சல் தெரியாது, ஆருக்குமேதும் நடந்தா கூப்பிட்ட குரலுக்கு வாறதுக்கு ஆக்களும் இல்லை. குடிமனையும் இல்லை. எல்லாரும் அரையளவு தழுமட்டும் தான் இறங்கி அடிக்கிற அலையிலை குளியல் போடுவம். ஒருதரும் குளிக்க எண்டு உடுப்பெல்லம் கொண்டு போறதிலை. போட்டு கோண்டு போன உடுப்புகளோட அப்பிடியே தான் குளியல். திரும்பி கோயிலுக்கு 3கிமீ நடக்கிறதுக்கிடையிலை எல்லா உடுப்பும் கடல் காத்துக்கு கய்ந்திடும், பிரச்சனை இல்லை.


Image Hosted by ImageShack.us


கொயிலடிக்கு திரும்ப 1/2 மணி ஆகும். அந்த நேரங்களிலை எப்பிடியும் மடங்களிலை பொங்கிற ஆக்கள் அன்னதானம் குடுக்கிற ஆக்கள் எண்டு கன பேர் இருப்பினம். அதிலை சாப்பிட்டு சைக்கிளை எடுத்து பிடிச்சா அடுத்து போய் நிக்கிறது வெளிச்ச வீட்டா அல்லது பருத்தி துறை துறைமுகமா இருக்கும். வெளிச்ச வீட்டிலை ஒரு முறை ஏறி பாத்திருகிறம்.ஏறும் போது எந்த சிக்கலும் இருக்காது , ஆனா இறங்கும் போது தான் பயமா இருக்கும்.

அப்ப சில வீடுகளிலை எள்ளுபாகு/ புண்ணாகோ? செய்து சுட்டச்சுட செய்து வாசலிலை வச்சிருப்பினம். எனக்கு நல்ல விருப்பமான ஒரு சிற்றுண்டி. அதை வேண்டி சாப்பிட்டு கொண்டு பருத்திதுறை யாழ்ப்பாணம் வீதியால வீட்ட திரும்புவம்.வழிலை 1 ம் கட்டை எண்டு நினைக்கிறன் ஒரு பூங்கா இருந்தது அதோட ஒரு சின்ன வாசிக சாலையும் இருந்தது. அந்த பூங்கவிலை போய் கொன்ச நேரம் இருப்பம், சிலர் ஏதும் புத்தகம் வாசிப்பாங்கள். அங்கயிருந்து வெளிக்கிட எப்பிடியும் 4.30 / 5 மணியாவது ஆகும். அதுக்கு பிறகு தான் வீட்டை வெளிக்கிடுவம் பயணம் பருத்திதுறை-சாவச்சேரி வீதியாலை கனகம் புளியடி புத்தூர் சந்தி போய் வீட்ட போக இரவு 7 மணியாகும்.

மிக மிக இனிமையான நாட்கள். பல முறை இவ்வாறு போய் இருக்கிறம் எத்தனை முறை போனாலும் எங்கடை பயண பாதையும், செய்யிற வேலையளும் ஒண்டு தான். எத்தனை முறை சென்றாலும், சலிக்காத பயணங்கள் அவை.
எனறைக்கு யாழ்குடா நாடு இலங்கை அரச கட்டுபாட்டுக்குள் வந்ததோ அன்றைக்கு துலைந்தது எங்கட சந்தோசங்களும், சுததிரமான பயணங்களும்.