Monday, 30 April 2007

போருள்ளும் எதிர் நீச்சலிட்டு வெல்லும் மாணவர்கள்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர (கா.பொ. தா சா/த) முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. இந்த பரீட்சை முடிவுகளை கொண்டே மாணவர்கள் தமது உயர் தரத்திற்கு அனுமதி பெறவும் தமக்கு விரும்பிய துறைகளை தெரிவு செய்யவும் முடியும். கடந்த வருடம் முதலே தமிழர் தாயக பிரதேசத்தில் இயல்பு நிலை கேட்டு போய் இருந்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். இடம்பெயர்ந்த சிங்கள மாணவர்கள் சிறப்பு பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுத, வாகரையில் இடம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்க படாத சம்பவமும் நடந்து முடிந்தது.
பரீட்சை நடந்த தமிழ் பிரதேச முடிவுகள் எப்படி இருந்தன என்பதை சரியாக அறிய முடியவில்லை. யாழ்குடா நாட்டை சேர்ந்த ஒரு சில பிரபல பாடசாலைகளின் முடிவுகள் உதயன் பத்திரிகையில் வெளியாகி இருந்தன.

அப்படி உதயனில் வெளியான 5 பிரபல பாடசாலைகளில் மட்டும்

33 மாணவர்கள் 10 பாடங்களிலும் A தரத்திலும்
39 மாணவர்கள் 9 பாடங்களில் A தரத்திலும்
சித்தி பெற்றிருந்தார்கள் என்ற தகவலை பெற முடிந்தது.
இதில் வேம்படி மகளிர் கல்லூரியில் 100% ஆனா மாணவிகள் சித்தி பெற்று கா.பொ.தா உ/த கற்க போவதாகவும், செய்தி வந்திருந்தது.

அதை விட அதிகம் பிரச்சனைகளையும், மாணவர் கைதுகளையும் சந்தித்த ஹாட்லி கல்லூரி மாணவர்கள் (மாணவர்கள் கைது செய்யப்பட்டதும், அது தொடர்பாக தொடர்ச்சியான பல போராட்டங்கள் நடைபெற்றதும் பலரும் இணைய செய்திகள் மூலம் அறிந்திருக்கலாம்.)
6 மாணவர்கள் 10 பாடங்களிலும்
8 மாணவர்கள் 9 பாடன்ங்களிலும் A சித்தி பெற்றதாக உதயனில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த வருட பெறுபேற்று மட்டங்கள் கடந்த காலத்தில் பெறப்பட்ட பெறு பேறுகளில் இருந்து வீழ்ச்சி அடைந்ததாக கூட இருக்கலாம்.

ஆனால் அவர்கள் நாளாந்தம் எதிர்கொண்ட பிரச்சனைகள், கடுமையான உணவு தட்டுப்பாடு நாளாந்தம் தெருவில் பயணிக்கையில் என்ன நடக்குமோ என்று தெரியாத ஒரு நிச்சயமற்ற நிலை, ஆட்கடத்தல்.... என பல பிரச்சனைகள். இரவில் வீட்டில் படிப்பதற்கு விளக்கிற்கு மண்ணெண்ணெய் (Kerosene), மின்சாரம் என்பன சரியாக கிடைக்காத நிலை கடினமான சூழ் நிலைகளிலும் அவர்கள் கற்று தேறி இருக்கிறார்கள் அதற்கு அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

அப்போது 1கிலோ அரிசியின் விலை 250 ரூபாக்கும், தீக்குச்சிகள் தீபெட்டிகளாக அல்லாமல் குச்சிகளாக வாங்க வேண்டி இருந்ததாகவும் தொலைபேசி உரையாடல் மூலம் அறிந்து கொண்டேன். நான் தொலைபேசி மூலமும் இணைய செய்திகள் மூலமும் அறிந்ததை வைத்து அங்குள்ள சூழ் நிலையை வர்ணிப்பதை விட நேரே அங்கிருப்போராலேயே எழுதப்பட்ட முரண்வெளி கட்டுரை அங்குள்ள சூழ் நிலையை தெளிவாகவே உங்களுக்கு தரும் என்று நம்பலாம்.

இந்த பெறு பேறுகளை வைத்து கொண்டு அங்கு நிலவும் சூழல் எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தியது என்பதை கணிப்பது சிரமம். உயர்தர பரீட்சை முடிவுகளையும், அதன் பின்னான பல்கலைகழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் தெரியவரும் போதே இப்போதைய சூழ் நிலையின் தாக்கத்தை சரியாக உணர முடியும்.

1990 களில் இருந்தே பொருளாதார தடை, மின்சாரமின்மை, மண்ணெணெய் தடை, இதனால் விளக்கொளி கூட சரியாக கிட்டாத நிலை, இடப்பெயர்வு, பாடசாலைகள் சீராக இயங்காமை என்பவற்றுக்குள்ளால் தான் மாணவர்களின் கல்வியும் மக்களின் வாழ்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் 2000 ஆம் ஆண்டில் இருந்து நிலவிய ஒரு தற்காலிக சுமூக நிலை அதற்கு பழக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக ஏற்படும் நெருக்கீடுகளை சகித்து அவர்களின் திறமையை வெளிகொண்டு வர முடிந்ததில் மகிழ்ச்சியே.1990 களிலான பொருளாதார தடையை எப்படி மக்கள் எதிர் கொண்டார்கள் என்பதை எழுத மட்டுமே பல பதிவுகள் வேண்டும்.

அப்போதைய வாழ் நிலை, குழந்தைகள், சாதாரண பேச்சு வழக்கு சொற்களை அறியும் முன்னமே போர் உபகரணங்களின் பெயர்களை உச்சரிக்க தொடங்கி இருந்தார்கள். அதை பற்றி சக பதிவரான ஹரனின் பதிவில் இருந்து

" 'சீ' பிளேன் (கோள் மூட்டி) அஃப்ரோ, புக்காரா, சகடை, கெலி (மணிக் கெலி, முதலைக் கெலி, மற்றும் பல), பொம்பர், சுப்பர் சோனிக், கிஃபிர் ஆகிய சொற்களே எம் ஈழத்துக் குழந்தைகள் அம்மா, அப்பா சொல்லும் முன்னரே சொல்லத் தெரிந்து கொள்ளும் வார்த்தைகள். ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவராலுமே எவ்வகையான பிளேன், அல்லது கெலி வானில் வருகின்றது என்பதனை அதனைப் பார்க்காமலேயே, அதன் சத்தத்தினை வைத்துக் கூறக் கூடியதாக இருந்தது.

சிறுபிள்ளைப் பராயத்தில், ஏதுமறியா வயதினிலே வானில் பறக்கும் விமானத்தைப் பெருமூச்சுடன் அண்ணார்ந்து வேடிக்கை பார்த்த காலம் மாறிப் போய்; தலைதெறிக்கக் கால் கடுக்க உயிரைக் கையிற் பிடித்தபடி ஓடத் தொடங்கிய காலம் வந்தது, ஓடிப் பதுங்கு குழிக்குள் பகல் இரவாய்ப் பதுங்கும் நிலை வந்தது."அப்போதும் மண்ணெண்ணெய்க்கான தடை இருந்தது. உழவு இயந்திரங்கள் டீசலுக்கு பதிலாக மரக்கறி எண்ணெய் (Palm oil)பாவித்தும், மோட்டர் சைக்கிள்கள் மண்ணெண்ணெயிலும் ஓடி திரிந்தன. அப்போதைய காலத்து படம் பார்த்தலை பற்றி கானா பிரபா அண்மையில் ஒரு பதிவை எழுதி இருந்தார்.

மண்ணெண்ணேய் தட்டுபாடான சூழலில் படிப்பதற்கு விளக்கிற்கு மண்ணெண்ணெய் வாங்குவதே மாணவர்கள் உள்ள வீடுகளில் ஒரு பெரும் சுமையான விடயம். அந்த நேரம் பாவனையில் இருந்த விளக்கான ஜாம் போத்தல் விளக்கு பற்றி வசந்தன் ஒரு பதிவு எழுதி இருந்தார்.எங்கள் வீட்டில் நான் ஒராள் மட்டும் தான் படிக்கும் வயதில், அதனால் எனக்கென படிப்பதற்கு ஒரு பெரிய மேசை விளக்கு தரப்பட்டிருந்தது. இது எல்லா வீடுகளிலும் சாத்தியபடும் விசயமாக இருக்காது.
அத்தோடு முழுமையாக விவசாயம் செய்வதற்கு போதுமான மண்ணெணெய் கிடையாத சூழல், பல தொழில் துறைகளும் முடங்கி போய் இருந்த காரணத்தால் பலர் விறகு, தேங்காய் பொச்சு என்பவற்றை சைக்கிளில் கட்டி விற்று வாழ்க்கையை ஓட்டினார்கள்.படம்: அப்பால் தமிழ் இணையம்படம்: கூகுல் தேடுபொறியின் தேடலில் கிடைத்தது

இப்படியானா வாழ்க்கை போராட்டங்களோடு தான் நாளாந்த வாழ்க்கை இருந்தது அப்போது.

ஆனால் பல்கலை கழக அனுமதிக்காக நடாத்தப்படும் க.பொ.த. உ/த பரீடசையில் பல தடவை யாழ்மாவட்ட மாணவர்கள் கணித பிரிவில் அகில இலங்கை மட்டத்தில் முதல், இரண்டாம் , அல்லது முதல் 10 மாணவர்களில் ஒருவராக பெறு பேறுகளை பெற்ற சந்தர்ப்பங்கள் அதிகம்.

போரின் தாக்கத்தால் உயர் தர பெறு பேறுகளில் யாழ்மாவட்டம் சடுதியான வீழ்ச்சியை சந்தித்த 2 சந்தர்பங்களை அவதானித்திருக்கிறேன்.

1. 1995 இடப்பெயர்வுக்கு பின் நடந்த 1996 உயர் தர பரீட்சை பெறு பேறுகள்.
2. 1999- 2000 யாழ்குடாவை மீள கைப்பற்றும் முயற்சியின் போதான காலப்பகுதி.


1995 முன்னேறி பாய்தல் நடவடிக்கை நடந்த அண்மைய காலப்பகுதியில் தான் 1995 ஆம் ஆண்டுக்கான உயர் தரபரீட்சைகள் நடை பெற்றன. ஆனால் அந்த பரீட்சை பெறு பேறுகளில் அதிக வீழ்ச்சி தெரியவில்லை. ஏன் எனில் மாணவர்கள் பரீட்சைக்கு தயார் படுத்தும் காலப்பகுதியில் போர் பயம் இருந்தாலும் படிக்க முடிந்தது. ஆனால் அதன் பின்னர் மக்களின் பாரிய இடப்பெயர்வின் பின் நடந்த உயர் தரபரீட்சை பெறு பேறுகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

அதற்கு உதாரணமாக
வருடாந்தம் 60- 64 மாணவர்கள் அனுமதி பெறும் மருத்துவத்துறைக்கு அந்த வருடம் 39 மாணவர்கள் மட்டுமே அனுமதி பெற்றிருந்தனர் என்பதை வைத்து சொல்ல முடியும்.

பொதுவாக அப்போதிருந்த பல்கலை கழக அனுமதி வெட்டு புள்ளி முறையை பார்த்தால் (இப்போது Z-score எனும் முறை எப்படி செயற்படுத்துகிறார்கள் தெரியாது).

மருத்துவ துறைக்கு 900 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்
அவர்களில்
a) 40% (சரியாக ஞாபகம் இல்லை) அகில இலங்கை ரீதீயிலான திறமை அடிப்படையிலும், அதாவது முழு இலங்கை ரீதியிலும் முதல் 360 இடங்களுக்குள் வந்தவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
b) மிகுதி 60% மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை அடிப்படையிலும் கல்வி, பின் தங்கிய மாவட்டம் எனும் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.(இதில் மாவட்ட அடிப்படை என தனியாகவும், பின் தங்கிய மாவட்டங்கள் என பட்டியல் இடப்பட்ட மாவட்டங்களுக்கு ஒரு குறிபிட்ட சதவீதமும் அனுமதி இருகும்)

(இலங்கை பல்கலைகழக அனுமதி பற்றிய விபரங்களையும் யாரோ வலைப்பதிவில் எழுதி இருந்தார்கள் யார் என தெரியவில்லை)


அதன் படி அண்ணளவாக 24 மாணவர்கள் யாழ்மாவட்டதிலிருந்து தெரிவு செய்யப்படுவர்.

மருத்துவ துறைக்கு 64 மாணவர்கள் மொத்தமாக யாழ்மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யபடும் போது அவர்களில் 40 பேர் அகில இலங்கை திறமை அடிப்படையிலும், 24 மாணவர்கள் யாழ்மாவட்ட அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள் என எடுத்து கொள்ள முடியும்.

(மேலே சொல்லப்பட்ட கணித்தல் பல்கலைகழக மனியங்கள் ஆணைக்குழு மாணவர்களுக்கு அனுப்பும் கையேட்டை வாசித்து நான் புரிந்து கொண்டதை வைத்து சொல்லி இருக்கிறேன்)

ஆனால் எமது மாணவர்களில் பலர் வருடாந்தம் 64 பேருக்கு சராசரியாக மருத்துவத்துறைக்கு அனுமதி கிடைக்கிறது. அதே போல 1996 ஆம் வருடமும் கிடைக்கும் என கணக்கு போட்டனரே தவிர, அகில இலங்கை ரீதியில் யாழ்மாவட்டத்தில் இருந்து திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்படக்கூடிய எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததை கவனிக்கத் தவறி விட்டனர். இதனால் மருத்துவத் துறை கிடைக்கும் என கற்பனையில் இருந்து அது கிடைக்காது ஏமாற்றம் அடைந்தனர்.


ஆனாலும் தொடர்ச்சியாக பல்கலை கழக அனுமதிக்கான வெட்டு புள்ளிகளில் கொழும்புக்கு அடுத்த படி பொறியியல் பிரிவுக்கு அதிக வெட்டு புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் மாவட்டமாக யாழ்மாவட்டமே இருந்து வந்திருக்கிறது. மருத்துவ துறைக்கு கொழும்பு, காலிக்கு அடுத்து முன்றாம்/ நான்காம் நிலையில் வெட்டு புள்ளிகள் யாழ் மாவட்டத்துகே நிர்ணயிக்கப்படுவது வழமை.
அதாவது இடப்பெயர்வு, பொருளாதார தடை, போரின் தாக்கத்துக்கு முகம் கொடுத்து இலங்கையின் போரின் வீச்சுக்கு முகம் கொடுக்காத ஏனைய மாணவர்களுக்கு சமனாக பெறு பேறுகளை பெறுவதென்பது பாராட்டப்பட வேண்டிய விசயம்.
ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் அனுமதி பெறும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் வீழ்ச்சியடைந்து வரும் என்றே நினைக்கிறேன். அது கவலைக்குரியது.

இறுதியாக
"நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக பெறு பேறுகளை பெறுகிறார்கள்"
என்ற நிறை அன்பு I.A.S என்ற கூற்று ஈழத்து தமிழ் மாணவர்களுக்கும் பொருந்தும்.

Sunday, 29 April 2007

உணவு அறிவியலும் தொழில் நுட்பமும்: ஓர் அறிமுகம்

முற்குறிப்பு: எமது சொந்த நாடுகளில் உள்ள மக்களும் சரி, எமது புலம் பெயர் மக்களும் சரி மகனை/ மகளை பொறியலாளராக/ மருத்துவராக உருவாக்க வேண்டும் என்பதும், அதை மட்டுமே பிள்ளைகளிடம் திணிக்க முற்படுவதும் ஒரு மாறாத நோய். இளம் சந்ததியிடமும் அவை பற்றிய கனவுகளே பெரும்பாலும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. அவற்றுக்கப்பாலும் பல நல்ல வேலைவாய்ப்புகளை கொண்ட துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான உணவு அறிவியலும் தொழில் நுட்பமும் பற்றி ஒரு மேலோட்டமான பார்வையை தருகிறேன்.


உணவு அறிவியலும் தொழில் நுட்பமும் - ஓர் அறிமுகம்
(Food Science and Technolgy - An Introduction)
படம் பெறப்பட்டது:http://www.ssi-world.com/food/images/GilesFoods.jpg


உணவு விஞ்ஞானம் என்பதை, உணவின் இயல்புகளையும் அவற்றில் இயற்கையாகவோ அல்லது அவற்றின் பரிகரிப்பின் (processing) போதோ எற்படும் மாற்றங்களையும் பற்றிய கற்கை என வரைவிலக்கணப்படுத்தலாம். உணவுத் தொழில் நுட்பம் எனப்படுவது உணவு விஞ்ஞானத்தில் பெற்ற அறிவை உணவுத் தயாரிப்பு, பாதுகாப்பு, வினியோகம் என்பவற்றில் பயன்படுத்துதலை குறிக்கும்.


பொதுவாக எமது மக்களிடையே இக்கற்கை பற்றிய ஆர்வம் இருப்பதில்லை. அத்தோடு "இதென்ன சமைக்கிறதைப் பற்றி என்ன படிப்பென" எண்ணுவோரும் உண்டு. இதை நட்சத்திர விடுதி (hotel) முகாமைத்துவத்தோடு சேர்த்து குழம்புவோரும் உண்டு.


'உணவு தொழில்நுட்பக்கல்வி' என்பது மிகவும் முக்கியமான ஒரு துறையாகும். உணவின்றி மனிதனில்லை; எனவே என்றுமே உணவிற்கான கேள்வி குறையாது. அத்துடன் உணவு உற்பத்தி எல்லா இடங்களிலும் சீராக இருப்பதில்லை. ஒரு பிரதேசத்தில் வரட்சி, இன்னுமொரு பிரதேசத்தில் வெள்ள பெருக்கு இப்படி இயற்கையின் சவால்களையும் மீறி உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும் மிகையான உற்பத்தி காலத்தில் இருக்கும் மிகை உணவை உணவு உற்பத்தி அற்ற காலத்துக்கு சேமிப்பதற்கு அல்லது பாதுகாப்பதற்கு சரியான முறையை பின் பற்ற வேண்டும். ஒரு நாட்டில் விளையும் மரக்கறியை இன்னும்மொரு நாட்டிற்கு உதாரணமாக அவுஸ்திரேலியாவில் விளையும் அப்பிள், நியுசிலாந்தின் கீவி, மலேசியா/ தாய்லாந்தில் இருந்து டூரியான் என பல வகை பழங்கள் கப்பல் மூலம் ஐரோப்பா/ கனடாவுக்கு எடுத்துவரப்படுவதற்கு பல வாரங்கள் எடுக்கும். எனவே அவற்றை சரியான முறையில் சுத்தமாக்கி, தரம் பிரித்து, பழுதுபடாது இருக்கும் பொருத்தமான ஒரு குளிரூட்டல் வெப்ப நிலையை தெரிவு செய்து; அவ் வெப்பநிலையுள்ள குளிரூட்டிய அறைகளில் நிரப்பி ஏற்று மதி செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வோரு பழத்துக்கும், மரக்கறிக்கும் சிறப்பான குளிரூட்டல் வெப்ப நிலைகள் தேவைப்படலாம். உதாரணமாக வாழைப்பழம், மாம்பழம் போன்ற வெப்ப வலய பழங்களை 13 பாகை டிகிரி செல்சியசிலும் குறைந்த வெப்ப இலையில் சேமித்தால் அவை பழுக்கும் போது சீரற்ற தன்மையும், பழங்களின் உட்பகுதி சேதமானதால் சரியான சுவையற்றும் போகலாம்.
எனவே ஒவ்வொரு உணவு பொருளையும் சேமிக்கும் போதும் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.


உதாரணமாக எமது ஊரில் கிடைக்கும் ஒரு மாம்பழத்தை கப்பல் மூலம் ஐரோப்பா/ வட அமெரிக்காவுக்கு முதல் முதலாக ஏற்றுமதி செய்ய இருக்கிறோம் என வைத்து கொள்ளுங்கள்.

எமக்கு மாம்பழத்தை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் பல தகவல்கள் தேவைப்படும்.

மாம்பழத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால்


1. முதலில் எத்தனை நாட்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் அவற்றை பிடுங்க வேண்டும்? என்பதை சரியாக தெரிய வேண்டும்(அதாவது முத்திய மாங்காய் ஆனால் பிடுங்கி ஓரிரு நாளில் பழுக்கும் நிலை என்றால் ஏற்றுமதி செய்ய முடியாது)


2. சரியான சேமிப்பு வெப்ப நிலை என்ன?
3. அவ்வெப்ப நிலையில் எத்தனை நாட்கள் சேமிக்க முடியும்
4. சேமிக்கும் போது அவற்றின் (பழம்/ மரக்கறி) சுவை, மணம், நிறம் என்பவற்றில் எப்படியான மாற்றங்கள் நிகழும்?
5. அம்மாற்றங்கள் தரத்தை பாதிக்குமா? இல்லையா?
6. குளிரூட்டியில் இருந்து வெளியே எடுத்த பின் எத்தகைய மாற்றங்கள் நிகழும்?
7. அவை இயல்பான வெப்ப நிலையில் பழங்கள்/ மரக்கறிகள் இருக்கும் போது ஏற்படும் மாற்றத்தை ஒத்தவையா இல்லையா?
8. இவ்வாறு சேமிக்கும் காலத்தில் ஊட்டசத்துக்களில் (வெல்லம், புரதம், விற்றமின்கள்) எப்படியான மாற்றம் நிகழும்
9. சேமிப்பின் போது நோயாக்கும் நுண்ணகிகள், மற்றும் உணவை பழுதடைய செய்யும் நுண்ணங்கிகளின் சனத்தொகை/ எண்ணிக்கை எப்படி மாற்றமடைகிறது?
10. அவை மனிதனை பாதிக்கும் நிலையை அடைகிறதா இல்லையா?
11. சேமிப்பின் இறுதியில் பாவனையாளரை அடையும் போது அது பாவனையாளரை அது திருப்தி செய்ய கூடியதாக இருக்குமா?


இவ்வாறே ஒவ்வோரு உணவு பொருளையும் பாதுகாக்கும் போது சரியான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கு அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக தேவைப்படுவர்.'உணவுத் தொழில் நுட்பக்கல்வி' என்பது உணவு தயாரிப்போடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்பதை வரைவிலக்கணத்தில் பார்த்தோம். ஒரு உணவுத் தொழில் நுட்பவியலாளர் இரசாயனவியலாளராக, பொறியியலாளராக , நுண்ணுயிரியலாளராக, புள்ளிவிபரவியலாளராக, பொருளியல் மற்றும் வணிகவியலாளராக என்று பல் புலமை சார்ந்தவராக இருத்தல் அவசியமானது.

உணவு தொழில் நுட்பக்கல்வியில் உள்ள அடிப்படைப் பெரும் பிரிவுகளாக


1. உணவு இரசாயனவியல் (Food Chemistry)

இப்பாடப்பரப்பை பற்றி மேலோட்டமாகச் சொன்னால் உயிர் இரசாயனவியல், உணவின் இரசாயனக்கூறுகள், அவறின் பெளதீக - இரசாயன இயல்புகள், அவற்றின் அளவறி பகுப்பு, பண்பறிபகுப்பு என்பவற்றை உள்ளடக்கியது. உணவு என்பது விஞ்ஞானத்தில் பிரிக்க முடியாத ஒருபகுதி. இதன் முக்கியத்துவத்தை பற்றி ஒரு சிறிய உதாரணம் மூலம் பார்ப்போம்.இறால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை உண்ணும் போது சிலருக்கு ஒவ்வாமை வருவதை அறிந்திருப்பீர்கள். அவ்வொவ்வாமைக்கு காரணமான கூறை அறிய இரசாயனவியல் சார் அறிவு முக்கியமானது.


2. உணவு நுண்ணுயிரியல் (Food Microbiology)


உணவு நுண்ணுயிரியலில் அடிப்படை நுண்ணுயிரியல், உணவை பழுதடையச்செய்யும் நுண்ணுயிரிகள் , உணவை நஞ்சாக்கும் நுண்ணுயிரிகள், உணவு பாதுகாப்பில் உதவும் நுண்ணுயிரிகள், போன்றவற்றை கண்டறிதல், அவற்றினியல்புகள் போன்றவையும் உணவு உயிர் தொழில் நுட்பம் பற்றிய அடிப்படைகள், தற்சுத்தம், உணவு உற்பத்தி, பரிமாறும் நிலையங்களின் சுத்தப் பராமரிப்பு, நீர் பரிகரிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது.


3. உணவு பரிகரிப்பு பொறியியல் (Food Process Engineering)

இதை மேலும் உணவை குளிர் மூலம் பரிகரித்தல், வெப்பம் மூலம் பரிகரித்தல், உலர்த்துதல் மூலம் பரிகரித்தல் என வகைப்படுத்தலாம். இதற்கு பொறியியல் சார் அறிவும் தேவை.


4. அறுவடைக்கு பின்னான தொழில் நுட்பப்பொறியியல் (Posthavest Technology and Engineering)


பயிர், விலங்குகளின் அறுவடைக்கு பின்னாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், அறுவடைக்கு பின் உயிர் பொருட்களில் ஏற்படும் உடற் தொழிலியல், உயிர் இரசாயன மாற்றங்கள், அவற்றை பரிகரிக்கும் பொறிமுறைகள் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.


5. உணவும் போசாக்கும் (Food and Nutrition)

உணவில் காணப்படுப் போசாக்குக் கூறுகள், அவற்றின் முக்கியத்துவம் , அவற்றின் உடற் தொழியியல் செயற்பாடு, குறைபாட்டு நோய்கள், அதிகமான உணவு உள்ளெடுத்தலால் வரும் பிரச்சனைகள் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது.


இவற்றிற்குப் பக்கத்துணையாக ஆனால் அத்தியாவசியமாக கற்கவேண்டிய பாடங்களாக உயிர் புள்ளிவிபரவியல், பொருளியல், சந்தைபடுதல் முகாமைத்துவம் என்பவை விளங்குகின்றன.


மேலே சொன்ன பாகுபடுத்தல் ஆனது பெரும்படியானதும் அடிப்படையானதுமாகும். ஆனால் இன்றைய நவீன உலகில் உணவுப்பொருட்களின் சிறப்பான வகைக்கும் பயன்பாடுக்கும் எற்ப பல கிளைகளாக உள்ளன. அவை மெற்சொன்ன அனைத்து அடிப்படை கூறுகளையும் கொண்டு சிறப்பான பொருள்களை உற்பத்திசெய்வதோடு சம்பந்தப்பட்டவை.


அவையாவன:

1. தானிய விஞ்ஞானமும் தொழில் நுட்பமும்,(Cereal Science and Technology)
2. பால் பதனிடல் தொழில் நுட்பம் (Dairy Technology)
3. இறைச்சி பதனிடல் தொழில் நுட்பம் (Meat Technology)
4. பழங்கள் மரக்கறிகள் பதனிடல் தொழில் நுட்பம் (Fruit and Vegetable Processing Technology)
5. வாசனை விஞ்ஞானம் (Flavour science)
6. வெல்ல தயாரிப்பு, மதுபான தயாரிப்பு சார் தொழில் நுட்பம் (Sugar and Alcoholic Beverage Technology)
7. உணவு உயிர் தொழில் நுட்பம் (Food Biotechnology)
8. மீன் பதனிடுதல் தொழில் நுட்பம் (Fish Processing Technology)
9....
10....

இவ்வாறு பல வகையாக பிரிக்கலாம்

எந்த நாட்டிலும் உணவு தரக்கட்டுபாடு என்பது மிக அதியத்தியாவசியமானது. அதிலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் மிக இறுக்கமான நடைமுறைகள் உள்ளபோதும் அத்துறைசார் நிபுணர்களின் தேவையானது அரசுத்துறை தரக்கட்டுப்பாட்டு நிறுவகங்களிலும், உணவு பதனிடும் தொழில் நிறுவனங்களிலும் என்றுமே இருந்தவண்ணமே இருக்கும். அதோடு பல பல புதிய வகை உணவுகள் நாளாந்தம் சந்தையில் குவிவதைப் பார்ப்பீர்கள். பாற்கட்டியில் மட்டும் பல நூறுவகைகள் உண்டு. அதேபோல் இருவருடங்களுக்கு முன் இருந்த ஐஸ் கிறீம் வகைகளின் எண்ணிக்கையிலும் பார்க்க இன்று பல வேறு சுவைகளில் பலவிதமான ஐஸ்கிறீம்கள் சந்தையில் உண்டு. சாதாரண "யோகட்" Yogurt போய் இன்று பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது. அதாவது இத்துறை நாளாந்தம் வளர்வதோடு அத்துறைசார் உணவு தொழில்நுட்ப வல்லுனர்கள் என்றும் inovative ஆக இருக்க வேண்டும்.


எமது பாரம்பரிய உணவுகளின் உடல் நலன் சார் முக்கியதுவம் பற்றிய ஆய்வுகள் மிக முக்கியமானது.
ஒரு உதாரணம்: நாம் நாளாந்தம் பாவிக்கும் எமது வேம்பினதும் மஞ்சளினதும் முக்கியத்துவத்தை நாம் இன்றுவரை சரியாக உணரவில்லை. அது தொடர்பில் ஆரய்ச்சி செய்து அமேரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற பின் தான் இந்தியாவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் கிளம்பின. அதே போன்றே இன்னும் பல பாரம்பரிய உணவு பொருட்களினது நிலையும். இந்த குறையை போக்கப்பட வேண்டும்.

நிலவிடம் சிக்கிய நட்சத்திரம்..........

உங்களுக்கு வணக்கம்

தமிழ்மணத்தில் இருந்து ஏப்பிரல் 30 ஆம் திகதி தொடங்கும் நட்சத்திர வாரத்தில் நட்சத்திர பதிவராக இருபதற்கு எதிர்பாரா நேரத்தில் ஒரு மடல் கிடைத்திருந்தது.
என்னை நட்சத்திர பதிவராக இருப்பதற்கு தெரிவு செய்தமைக்கு முதலில் தமிழ் மணத்திற்கு நன்றிகள்.கதைகள், கவிதைகள் போன்றவற்றை வாசிப்பதில் இருந்த, இருக்கின்ற ஆர்வம் எழுத வேண்டும் என்பதில் இருப்பதில்லை. கவிதை கதை எழுதும் விசப்பரீட்சையிலும் இறங்கியதில்லை, இறங்கும் எண்ணமும் இல்லை.
வலைப்பதிவு, தமிழ் மணம் ஆகியவற்றின் அறிமுகம் கிடைத்த போது குறிப்பிட்ட ஒரு சிறிது காலம் வாசகர் ஆக மட்டுமே இருந்து வந்தேன். அதன் பின் நானும் ஏதாவது எழுதினால் என்ன என்ற நப்பாசை காரணமாக வலைபதிவு ஒன்றை ஆரம்பித்து எழுத தொடங்கினேன். அதன் பயனாய் இப்போது நட்சத்திரமாக இருக்க சொல்லி தண்டிக்கப்பட்டிருக்கிறேன் :(.

நட்சத்திர வாரத்தை பொறுத்த வரை எனது நிலை
"எல்லாருடைய கண்டும் ஓடுதெண்டு முதலியாரோட பட்டிலை நிண்ட பேத்தை கண்டும் ஓடிச்சுதாம்" என்பதாக தான் இருக்கும்.
என் எழுத்துக்கள் அழகிய வார்த்தைகளின் தொகுப்பாகவோ, அல்லது சலசலத்து ஓடும் அருவி போல ஒரு தொடர்ச்சியாகவோ இருக்காதென்பதும்,
சந்தம் தரும் எந்த விதமான வார்த்தை கோப்புக்களும் அற்றவையாகவே இருக்கும் என்பதையும் இதுவரை வாசித்து வந்த உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஒரு வாரகாலத்துக்கு கல் வீதியில் வண்டில் போகும் போது ஏற்படும் கட கடா எனும் ஒலியை போன்ற ஒரு சீரற்ற எழுத்து நடையை நீங்கள் அனைவரும் பார்க்க, வாசிக்க வேண்டிய துரதிஸ்டமான சூழலில் இருக்கிறீர்கள் :( ஒரு வாரத்துக்கு உங்கள் மனதை ஆற்ற ஒரு பாடலை கீழே இணைத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்
.


வி.ஜெ.சந்திரன் - ந...என்னால் முடிந்த அளவுக்கு நாளுக்கு ஒரு பதிவை தரலாம் என நினைக்கிறேன். அவை இப்படி தான் இருக்கும் என வரையறுத்து கூறிவைக்க விரும்பவில்லை.

எனது வலைப்பதிவை அடிக்கடி வாசித்து கருத்துக்களை பகிர்ந்த/பகிர இருக்கிற மற்றும் கருத்துக்கள் எதையும் பகிராது வாசித்து விட்டு மௌனமாகவே திரும்பிய/ திரும்ப போகிற அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

நட்புடன்
வி.ஜெ. சந்திரன்

மலர்-2

Saturday, 28 April 2007

உருந்த இடியப்பமும் பிரியாணியும்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சமையல் குறிப்பு :)

தேவையான பொருட்கள்

இடியப்பம்
பெரிய வெங்காயம் 1
செத்தல் மிளகாய் (காய்ந்த சிவப்பு மிளாகாய்) 2
மீகுளிரூட்டிய மரக்கறி கலவை (frozen vegetable mix)
கடுகு
சீரகம்
உப்பு
சமையல் எண்ணேய்

இடியப்பம் தேவையான அளவுக்கு அவித்து எடுத்து கொள்ளவும்
இடியப்பம் நன்கு ஆறியதும் அதை சிறிய பகுதிகளாக உருத்தி/ பிய்த்து கொள்ளவும்
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

பெரிய சமையல் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடக்கவும்
அதில் அளவுக்கு எண்ணேய் விட்டு கடுகு சீரகம் போட்டு கடுகு வெடித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
வெங்காயம் பாதி வதங்கியதும் மரக்கறி கலவையை கொட்டி உப்பு தூவி 5-10 நிமிடம் மென்சூட்டில் மூடி வதக்கவும்
மரக்கறி நங்கு வதங்கி அவிந்து வந்ததும் உருத்தி வைத்த இடியப்பத்தை போட்டு கிளறி இறக்கவும்.Friday, 27 April 2007

மொட்டும் மலரும் 1


மலர்-1

Thursday, 26 April 2007

துளிர்-1

கனடா

Wednesday, 25 April 2007

ஊரடங்கில் ஒரு திருவிழா

யாழ்குடாவில் கோயில் இல்லாத ஊர் என்று எதுவும் இருக்காது. எங்கள் ஊரும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும், அல்லது விசேடமான திருவிழாக்கள் நடைபெறும் 3 முருகன் கோயில்களும் ஒரு பிள்ளையார் கோயிலும் இருந்தாலும், பிள்ளையார் கோயில் திருவிழா தான் பிரபலமாகவும், அதிக மக்கள் கூடும் திருவிழா ஆகவும் இருக்கும். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று திருவிழா நடைபெறுவது ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறைக்காலத்தில் என்பதாகும். நல்லுர் கந்தசுவாமி கோயிலிலும் எமது ஊர் பிள்ளையார் கோயிலிலும் ஒரே நாளில் கொடியேற்றம் நடைபெற்றாலும், எமது ஊர் கோயிலில் 10 நாள் திருவிழாவே நடைபெறும்.

பதின்ம வயதிற்கு முன்பும், பதின்ம வயதின் ஆரம்ப காலத்திலும் திருவிழா காலத்தில் காலையில் எழுந்து குளித்து, எங்கள் வீட்டில் வேலி போல நிறைய வளர்த்திருந்த செவ்வரத்தை மரங்களில் பூத்திருக்கும் பூக்களை ஆய்ந்து கொண்டு பூசை 9 மணிக்கு ஆரம்பிக்கும் என்றால் 8 மணிக்கே கோயிலுக்கு போய் விடுவது வழக்கம். அங்கு போய் பூக்கள் சேகரிப்பதற்கு என இருக்கும் ஒரு அறையில் மற்றையவர்கள் கொண்டு வரும் பூக்களை சேகரிப்பதும், யாரும் றோஜா பூக்கள் கொண்டு வந்தால் அன்றைய எழுந்தருளி பிள்ளையாருக்கு சாத்துவதற்கு அவற்றை கொடுப்பதும், பெரிய பூக்களை பிரித்து சுவாமி வலம் வரும் போது பூ சொரிவதற்கும் கொடுப்பது வழக்கம்.
சுவாமி வலம் வரும் போது வீசப்படும் சாமரம் பொதுவாக சிறுவர்களிடமே கொடுக்கப்படும் என்பதால் 6-9 வயதுக்கு இடைப்பட்ட வயதில் வசந்த மண்டப பூசை ஆரம்பிக்கும் போது மண்டப வாசலில் முதலாவதாக இடம்பிடித்து இருப்பதும், பூசையின் போது சாமரம் வீச தயாராய் எழுந்து நின்று அதை எனக்கு போட்டிக்கு இருக்கும் சக தோழர்களிடம் சென்று விடாமல் அடிபட்டு வாங்குவதும், அதில் வென்று சாமரம் கையில் கிடைத்தால் வரும் புழுகத்துக்கும் அளவிருக்காது. அதே போல மாலை பூசை என்றால் தீவட்டி பிடிப்பதற்கு போட்டி வரும். தீவட்டி ஏந்துபவர் மாலை சுவாமி வெளி வீதி வலம் வரும் சகடையில் ஏறி இருக்கலாம். அதற்காகவே போட்டி வரும். போட்டி வந்து மாலை பூசை 6 மணிக்கு ஆரம்பமாகும் என்றால் 4.30-5.00 மணிக்கே போய் தீவட்டியை எடுத்து ஒழித்து வைத்து பூசை தொடங்கும் நேரமாக போய் அதை எடுத்து எரிய விடுவதும் நடக்கும். பொதுவாக நான் தீவட்டி பிடிக்க அதிகம் போவதில்லை. 2-3 முறை பிடித்த ஞாபகம்.

பதின்ம வயதின் ஆரம்பத்தை அடைந்து விட்டால் கொஞ்சம் புறமோசன் கிடைச்ச மாதிரி. வீதி வலம் வரும் எழுந்தருளி பிள்ளையார் ,முருகன் விக்கிரகங்களை பெரியவர்களும், சண்டேசுரர் விக்கிரகத்தை சிறுவர்களும் தோளில் காவுவது வழக்கம். பதின்ம வயதிலை சண்டேசுரரை காவுவதற்கு போட்டி. அதனால் சுவாமி காவ பயன்படும் பிள்ளை தண்டை காவ விரும்புபவர்கள் எடுத்து ஒழித்து வைப்பது வழக்கம்.

திருவிழாக்கள் போர் காலங்களிலும் எந்த வித தடங்கலும் இல்லாமல் நடப்பது வழமை (ஆனால் அது பொய்த்து போனது யாழ்குடா இராணுவ கட்டுபாட்டில் வந்த பின்னான 1999-2000 ஆண்டு காலப்பகுதில்)

எத்தனையாம் ஆண்டில் என சரியாக ஞாபகத்தில் இல்லை. 1990 களின் ஆரம்பம்; போர்க்காலம். சிறி லங்காவின் வான்படை யாழ்குடா நாட்டின் வான் பரப்பை ஆக்கிரமித்திருந்த நேரம் அது. இரவு பகல் என்று பாராமல் ஊரடங்கு சட்டம் இடப்பட்டிருந்த ஒரு காலமும் இருந்தது. மக்கள் கூட்டமாகவோ அல்லது தெருவில் வாகனங்களோ சென்றால் ஹெலிகள் திரத்தி திரத்தி தூப்பாக்கி சூட்டை நடத்துவதும், துணைக்கு குண்டு வீச்சு விமானங்களை அழைத்து குண்டு வீச்சு நடப்பதும் அப்போதைய சாதாரண நிக்ழ்வுகள். பிரதான வீதிகளில் சென்று கொண்டிருக்கும் போது ஹெலி சத்தம் கேட்டால் போகும் பாதையை மாத்தி உள்ளே மரங்கள் அடர்ந்த ஒழுங்கைகளுக்குள் சைக்கிளை செலுத்திசெல்வதும் நாளாந்த நிகழ்வுகள்.

ஆனால் அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் தொடரும் என்பது போல நாளந்த நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள் என்பனவும் நடந்து கொண்டிருந்தன.

எமது ஊர் கோயில் திருவிழா ஒரு வருடம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்ட காலத்தில் வந்த காரணத்தால், திருவிழாவை நிறுத்தாமல், நடாத்துவதெனவும், ஆனால் கோயிலின் வெளி வீதியில் எந்த நிகழ்வுகளும் நடாத்துவதில்லை என்பதாகவும் தீர்மானித்தார்கள். அப்படி நடந்து கொண்டிருந்த ஒரு நாள் நானும் வழமை போல காலையில் பூக்களை பிடுங்கி கொண்டு வெள்ளணவே கோயிலுக்கு போய்விட்டேன். அன்று எப்படியும் சண்டேசுரரை காவ வேண்டும் என தீர்மானம். அதானால் வெள்ளணவே போய் பிள்ளை தண்டை எடுத்து பூசேகரிக்கும் அறைக்குள் ஒழித்துவிட்டு வழமை போல பூ சேகரிது முடித்து பூசை ஆரம்பமாக பூசை பார்க்க போய்விட்டேன்.

கொடிதம்ப பூசை நடந்து கொண்டிருந்த நேரம் ஹெலி ஒன்று வந்து சுற்றி சுற்றி சுட தொடங்கி விட்டது. ஹெலி சுடுவதும் மிக அருகாமையில் என்பது சத்தம் மூலம் விளங்கிவிட்டது. எல்லாருக்கும் ஒரு பயம் உளவாளி யாரும் திருவிழா நடப்பதை சொல்லி விட்டார்களோ என. ஐயரும் பூசையை நிறுத்திவிட்டு கொடி தம்பத்துக்கு முன்னால் இருந்து கண்ணை மூடி மந்திரம் உச்சரிக்க தொடங்கிவிட்டார்.
சிறிது நேரந்தில் குண்டு வீச்சு விமானமும் வந்து வானில் வட்டமிட ஆரம்பித்திருந்தது. அந்த சத்ததை கேட்டதும் அதிகம் பயந்தவர்களில் ஒரு பகுதியினர் கோயிலின் மூலஸ் தானத்துக்குள்ளும், சுற்றி இருந்த பரிவார தெய்வங்களின் ஆலயங்களுக்குள்ளும் நுளைந்து விட்டனர். அவை தான் பலமான தளம் கொண்ட கட்டிடங்கள், குண்டின் சிதறல்கள், ஹெலியின் துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத கனமானவை. மிகுதி கட்டிடம் ஓட்டு கூரை இவற்றில் எதையும் தாங்க மாட்டதவை. ஒரு அரை மணி நேரம் ஹெலியும், விமானமும் மாறி மாறி கோயிலுக்கு அண்மையாகவே குண்டு வீசி தள்ளின. எதற்கு என்பது கோயிலுக்குள் இருக்கும் போது தெரியாது. ஹெலியும் விமானமும் போன பின் சண்டேசுரர் தூக்கும் ஆசையும் போய், பிள்ளை தண்டு ஒழித்ததையும் மறந்து வீட்டை போட்டன். பிறகு பூசை தொடர்ந்து நடந்து, சுவாமி சுத்த பிள்ளை தண்டை தேடினா அது எங்க கிடைக்கும், நான் தான் ஒழிச்சு போட்டு வந்திட்டன். சண்டேசுரருக்கு எல்லா விக்கிரகங்களையும் விட சிறிய பிள்ளை தண்டு, மற்ற விக்கிரகங்களை காவ பயன்படும் பிள்ளை தண்டுகள் சண்டேசுரருக்கு பொருந்தாது. பிறகு தேடி களைச்சு, வெள்ளி கிழமையளிலை பிள்ளையார் உள் வீதி சுத்த பயன்படும் சிறிய சகடையிலை சுத்தினார்களாம், மாலை திருவிழாவிற்கு போன போது என்னோடு பூ செகரிக்கும் அறையில் சேர்ந்து நிற்கும் அண்ணா சொன்னார். அவருக்கும் நான் அங்கு தான் பிள்ளை தண்டை ஒழிச்சு வச்சன் எண்டது தெரியாது.

அன்று குண்டு விச்சுக்கு இலக்கானது வீதியால் சென்று கொண்டிருந்த, எங்கள் ஊரவர் ஒருவரின் பார ஊர்தி (Ashok leyland lorry). லொறி துப்பாக்கி சூட்டால் சல்லடை இடப்பட்டு, பாவனைக்கு உதவாத நிலைக்கு வந்திருந்தது. போட்ட குண்டுகள் அதன் மீது சரியாக விழாததால் சுக்கு நூறாகமல் உருவம் இருந்தது. அந்த லொறியை வைத்து மிகவும் வசதியக வாழந்த அவர்களது குடும்பம் அதை இழந்த பின் மிகவும் நொடித்து போய் விட்டது. அவரால் பழைய நிலைக்கு மீள முடியவில்லை. இப்போது நாட் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் அவர்.

Saturday, 21 April 2007

தாவணியில் மாட்டிய Boney-M

இந்த இரண்டு கண்ணொளிகளையும் பார்த்து ரசியுங்கள். முதல் கண்ணொளி போல இரண்டாவது இல்லை.

கண்ணொளி உபயம்: பள்ளி தோழன்.

தலைப்பு உபயம்: கானாபிரபா

Tuesday, 17 April 2007

ஏன் இப்படி சிரமப்பட்டு சுவர் ஏறுகிறார்

சிலருக்கு கட்டிடங்களில், சுவர்களில், மலைகளில் ஏறுவதென்றால் தணியாத தாகம் அல்லது பொழுது போக்கு. இங்கும் 4 ஆவது படத்தில் ஒருவர் வருடகணக்காக இந்த சுவரில் ஏறிகொண்டே இருக்கிறார்.இன்னும் ஏறி முடிக்கவில்லை. உங்கள் யாருக்காவது இவர் எந்த நாட்டு சுவரில் இப்படி வருட கணக்காக ஏறிகொண்டிருக்கிறார் என்பது தெரியுமா?


Saturday, 14 April 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வந்தீங்க பொங்கல்; சாப்பிட்டு பாயாசம் குடிச்சிட்டு போங்க.
Monday, 9 April 2007

இரு வெவ்வேறு இசைகளில் சிறு நண்டு மணல்..

மஹாகவியின் சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் எனும் பாடல் ஒலி வடிவம், மற்றும் வரி வடிவங்களை இணைத்திருந்தேன். இன்று அந்த பாடல் இடம் பெற்ற புலரும் வேளையில் இசை தட்டில் உள்ள அனைத்து பாடல்களையும் கேட்ட போது அந்த பாடலிற்கு இன்னுமொரு இசைவடிவம் இருப்பதை அறிந்து கொண்டேன். இப்பாடல் மண்சுமந்த மேனியரில் பயன் படுத்தப்பட்டதாகவும், அதற்கு இசைவாணர் கண்ணன் இசை அமைத்திருக்க வேண்டும் எனவும் வசந்தன், கானாபிரபா, மலை நாடான் ஆகியோரின் பின்னூட்டங்களில் இருந்து அறிய முடிந்தாலும், இந்த இசைத்தட்டில் உள்ள இரு பாடல்களுக்கும் இசை அமைத்தவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை.

முதல் பாடல் ஆண்,பெண் இருவரால் பாடப்பட்டது. (ஏற்கனவே முன்னைய பதிவில் இணைத்திருந்தேன்.

பாடியவர்கள்: வீ.திவ்வியராஜன், சங்கீதா திவ்வியராஜன்

Track 03.mp3
இரண்டாவது பாடல் ஆண்குரல் மட்டும் கொண்டது.


பாடியவர் : மோகன் திருச்செல்வம்


விஜெசந்திரன் சிறுந...

Sunday, 8 April 2007

Hamburger - பிரியர்களுக்கு

Hamburger பிரியர்கள் எல்லோரும் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெரும்பாலான உணவு தரப்படுத்தும் அரச நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள்.
முக்கிய காரணம் Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவதே காரணமாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது.ஒளிப்படம் பெறப்பட்டது: http://anthropik.com/wp-uploads/e-coli.jpgஇந்த பக்ரீரியா ஏற்படுத்தும் நோய்களாக

இதன் தாக்கத்தால் வருடாந்தம் 73 000 பேர் ஐக்கியா அமெரிக்க நாடுகளில் மட்டும் பாதிக்கப்படுகிறனர். அவர்களில் 61 இறப்பை சந்திக்கிறனர்.

1. குருதியுடன் கூடிய வயிற்று போக்கு.

E. coli O157:H7 உணவுடன் சென்றடைந்து 3- 4 நாட்களில் நோய் ஏற்படுகிறது. குருதியுடானான வயிற்று போக்கு, வயிற்று குழப்பம் என்பவற்றை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் குருதி போக்கற்ற வயிற்று போக்கோ அல்லது எந்த அறிகுறிகளுமோ தோன்றாமல் இருக்க கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. சிறிதளவு காய்ச்சல் ஏற்படலாம். நொய் ஏற்பட்டு 5- 10 நாட்களில் பொதுவாக குணமாகிவிடும்.

2. Hemolytic uremic syndrome (HUS)

சில வளர்ந்தவர்கள், மற்றும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரில் குருதி கலங்கள் சிதைவு, சிறு நீரகங்கள் செயலிழப்பு என்பன ஏற்படுகிறது. பொதுவாக வயிற்று போக்கு ஏற்படுபவர்களில் 8% ஆனோர் இப்படியான தீவிர நோய் தாக்கதுக்கு உள்ளாகிறார்கள்.

3. நீண்ட கால தாக்கங்கள்


E. coli O157:H7 நோய் தாக்கம் ஏற்பட்ட ஒரு சிலரில் நீண்ட கால பக்க விளைவுகளாக அவயவங்கள் செயல் இழப்பு (paralysis), சிறு நீரக செயல் இழப்பு (persistent kidney failure), உயர் குருதி அழுத்தம் என்பவை சொல்லப்படுகிறன.
எவ்வாறு E. coli O157:H7 பரவலடைகிறது

இது பொதுவாக மாட்டின் குடல் பகுதியில் காணப்படுவதால்
முறையாக சமைக்கப்படாத hamburger, அரைத்த இறைச்சி என்பவற்றுடன் பரவ முடியும்.

அடுத்து, முளை அரும்புகள் (sprouts), லெற்றியுஸ் (lettuce), கீரை (spinach), சலாமி (salami), பாஸ்ரராக்கம் செய்யப்படாத பால் (unpasteurized milk), பழச் சாறு (juice)
மற்றும் மல கழிவுகள் தொற்றுதலடைந்த குடி நீர்/ நீச்சல் குளம்.

இவற்றுக்கு மேலதிகமாக தோற்று ஏற்பட்ட மனிதர்களில் இருந்து சரியான சுகாதார பழக்கவழக்கம் இன்மையால் இலகுவில் பரவலடைய முடியும்.
எவ்வாறு தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது


1. வீடுகளில் hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சியையோ சமைக்கும் போது இறைச்சி முழுமையக நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை (FDA) அரைத்த இறைச்சி, hamburger என்பவற்றை சமைக்கும் போது அவற்றின் வெப்ப நிலை 71.1 பாகை டிகிரி செல்சியஸ் (160 டிகிரி பரனைட்) வெப்ப நிலையை அடையும் வரை நன்கு சமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.
மேலும் சமைக்கப்பட்ட இறைச்சி, hamburger என்பவற்றை 40 - 140 பாகை பரனைட் வெப்ப நிலையில் 3- 4 மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுதுகிறது.

2. உணவகங்களில் சரியாக சமைக்கப்படாத hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சி வழங்கப்பட்டால் அவற்றை சரியான முறையில் சமைத்து தருமாறு கேட்பதுடன், புதிதாக பண், சாப்பாடு பாத்திரம் என்பவற்றை கேட்பது முக்கியமானது.

3. சமைத்த உணவுகளை சமைக்காத இறைச்சி, hamburger என்பவற்றுடன் கலந்து வைப்பது, அல்லது இரண்டு வகை உணவுகளையும் ஒரே பாத்திரங்களில் சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில் வைப்பது, கைகளை சரியாக சுத்தம் செய்யமை என்பன தவிர்க்கப்பட வேண்டும்

4. பால், பழச்சாறு, அப்பிள் சிடர் என்பவை பாஸ்ரராக்கம் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

5. குளோரின் பரிகரிப்பு அல்லது வேறு வகை தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்த வேண்டும்.

6. சமைக்காது உண்ணும் மரக்கறி, இலை வகை, பழ வகைகளை ஓடும் நீரில் நன்கு கழுவிய பின் உண்ணுதல்.

7. நீச்சல் குளத்து நீரை அருந்துவதை தவிர்த்தல்.


8. நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் கைகளை சவர்காரம் கொண்டு சரியாக சுத்தம் செய்தல், நோய் ஏற்பட்டவர்கள் பொதுவான நீச்சல் தடாகங்களில் நீந்துவதை தவிர்த்தல்.என்ன நண்பர்களே இனி கவனமாக இருப்பீர்களா?

Thursday, 5 April 2007

மே. இ. தீவுகளை வென்ற இந்தியர்களை கொண்ட சிறி லங்கா அணி

தலைப்பை பார்க்க என்ன தோன்றுகிறது?
" மேற்கிந்திய தீவுகளை முழுக்க முழுக்க இந்தியர்களை கொண்ட சிறிலங்காவின் அணி நன்றாக விளையாடி வென்றது. மேற்கிந்திய தீவு அணியில் 2 அல்லது 3 இந்தியர்களும், மிகுதி கறுப்பர்களாகவும் இருந்தமையால் குறிப்பாக கறுப்பர்களின் திறமையற்ற ஆட்டத்தால் தோற்றது"

இப்படி யராவது சொன்னால்??


கிரிக்கெட் விளையாட்டின் இரசிகனோ, அல்லது விளையாட்டு பற்றி அதிக ஆர்வமோ இல்லாத எனக்கே இந்த கூற்றை தாங்கவோ ஜீரணித்து கொள்ளவோ முடியாவில்லை. இதையே சிறிலங்கா அணியை சேர்ந்த யாரும், அல்லது சிறிலங்கா ரசிகர்கள் அல்லது சிறிலங்காவின் மக்கள் கேட்டிருந்தால் ??

கறுப்பர்கள் பற்றி அவர் வைத்திருக்கும் மதிப்பீடு பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை. ஏன் எனில் எம்மவர்கள் பலரும் கறுப்பின மக்களை மதிக்கும் மன பக்குவததை கொண்டிருக்கவில்லை என்பது நன்கு தெரிந்த விடயம்.நேற்று ஒரு விருந்துபசாரத்தில் கயான நாட்டை சேர்ந்த ஒருவரை சந்தித்தேன். பரஸ்பர விசாரணைகளின் போது எனது நாட்டை பற்றி அவருக்கு கூறிய போது நான் கிரிக்கெட் ரசிகரா என கேட்டதன் பிற்பாடு அவரால் கூறப்பட்ட கூற்று தான் மேலே சொன்னது. அவருடைய பெயர் "ரிஷி" தென அமெரிக்காவின் சில நாடுகளில் காலனிய காலத்தில் குடியெற்றம் செய்யப்பட்ட இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரது கூற்று ஆரம்பத்தில் எனக்கு அசௌகரியமாக இருந்தாலும், அதை தொடர்ந்து அவர் கேட்ட கேள்விகள் என்னை மேலும் ஆச்சரியபட வைத்தாலும், இலங்கை கிரிகெட் அணி பற்றிய அவர் கூற்றுக்கான காரணத்தை புரிந்து கொள்ளகூடியதாக இருந்தது.

அவர் கேட்ட அடுத்த கேள்வி

"உங்கள் நாட்டில் எவ்வளவு விகிததினர் கறுப்பர்கள், வேள்ளையர்கள், இந்தியர்கள்; கயானாவில் 60% க்கு மேல் கறுப்பர்கள், மிகுதி இந்தியர்களும், ஏனையவர்களும் என்றார். ஏன் ஒரு கறுப்பர்களும் உங்கள் நாட்டு அணியில் இல்லை? ".

இது என்னை மேலும் ஆச்சரியப்பட வைத்தது. அப்போது தான் புரிந்து கொண்டேன் அவரது சிந்தனை மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான கயானாவில் காலனிய காலத்தில் இந்தியர்களும், கறுப்பினத்தவர்களும் குடியேற்றப்பட்டது போல, இலங்கையிலும், அவ்வாறான குடியேற்றம் நிகழ்ந்திருக்கும் என்பதாகவே அவரது கற்பனை இருக்கிறது.

தெற்காசிய மக்களில் பெரும் பகுதியினர், அறிமுகமற்ற மக்களுக்கு ஒரே மாதிரியான தோற்றத்தையே தருவர், என்பது புலம் பெயர்ந்து வந்த பின் நான் அறிந்து கொண்டது. பல சந்தர்பங்களில், என்னையே பலர் தவறாக அடையாளம் கண்டு தங்கள் நாட்டு மொழிகளில் வணக்கம் சொல்லி, பதிலுக்கு நான் உங்கள் நாட்டவன் அல்ல என விளக்கமும் சொல்லி ஆங்கிலத்தில் பதில் வணக்கம் அனுபவ பட்டதால் அவரது பொது அறிவில் உள்ள போதமையை புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் அவர் சொன்ன வாக்கியம் ஒரு பக்கம் சிரிப்பை தந்தாலும், மறுபக்கம் அதை இப்போது வரை ஜீரணித்து கொள்ள கடினமாகவே இருக்கிறது.

Sunday, 1 April 2007

நான் பாடும் மௌனராகம்

பாடல் கேட்பதில் ஒரு தனி சுகம். சிறு வயதிலிருந்தே சோகப்பாடல்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களாக இருந்து வருகிறது. அதற்காக மற்றைய பாடல்கள் பிடிக்காதென்பதல்ல அர்த்தம். இந்த பாடல் வெளிவந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறு வயதில் கேட்ட, இன்றும் மிகவும் பிடிக்கின்ற ஒரு பாடல் இது.

படம் : இதய கோயில்
பாடியது. எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை இளையராஜா

சரி நீங்களும் கேட்டு ரசியுங்க
Nan Paadum.mp3