Monday, 27 August 2007

யானை ( பொன்ஸ் அல்ல)

நம்ம ஊரில பார்க்காத யானையா என்ன என யோசிக்கிறீர்களா? இவை கனடாவில் பார்த்த யானைகள்.
இடம்


06/08/2007 ஆபிரிக்கன் சபாரி, ஹாமில்டன், ஒன்ராரியோ, கனடா


தலையணை போட்டால் தான் படுப்பேன் என காத்திருந்த யானையும் இன்னும் பல யானை விளையாட்டுகளும்.....

Sunday, 26 August 2007

இரசித்தவையும் இரசிக்க முடியாது போனவையும்

90 கும் 95 க்கும் இடைப்பட்ட காலங்களில் ஈழத்தில் குறிப்பா யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சிகள் பற்றி அந்த நேரத்தில் இருந்தாக்களுக்கு ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறன். மின்சாரமற்ற, பொருளாதார தடைகளுடன், ஹெலி (உலங்கு வானூர்தி), விமான குண்டுவீச்சுக்கள், இருந்தால் போல் பலாலி முகாமில் இருந்து ஏவப்படும் தொலைதூர எறிகணைகள் இவற்றுக்குள்ளும் எங்கட கோயில்களிலை திருவிழாக்கள் இரவிரவா நடக்கும். பள்ளிகூட திறந்த வெளி அரங்குகளிலை நாடகங்கள், சாந்தன், இராஜா, தமிழீழ், இசை குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் என அடிக்கடி ஏதாவது இரவிரவா நடக்கும். என்ன இரவிலை ஜெனரேற்றர்/ லைற் என்ஜின் போன்றவற்றில் இருந்து எடுக்கிற மின்சாரத்தை கொண்டு தான் கோயிலில் மின் விளக்குகள் ஒளிரும். இரவிலை ஹெலி சத்தம், அல்லது விமான இரைச்சல் கேட்டல் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு கோயிலே இருட்டில் முழ்கும். ஆனாலும் அந்த திருவிழாக்கள் உணர்வு பூர்வமாகவும், எங்களை போல இருக்கிற பதின்ம வயது பொடியழுக்கு ரசிக்கத்தகவையாகவும் இருந்தன. அதிலும் கொடியேறி தீர்த்த திருவிழா முடிஞ்சு அடுத்த நாள் நடக்கும் பூங்கவன திருவிழா முழுக்க முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டதா இருக்கும்.

பூங்கவனத்தண்டு சாமி ஒரு ஆறு அல்லது எழுமணியளவில் எழுந்தருளி வந்து வெளிலை அதுக்கென அமைக்கப்பட்ட பந்தல் ஒண்டிலை இருந்தாரெண்டால் அர்த்தன் நிகச்சி தொடங்க போகுதெண்டது தான்.

பூங்காவனத்திலை நடை பெறும் நிகழ்ச்சிகள் என பார்த்தால்

1. மேளச் சமா/ தவில் கச்சேரி

கோயில் வித்துவாங்கள்/ கத்துகுட்டிகள்
பஞ்சாபிகேசன் குழு,
நாகேந்திரன் குழு (பஞ்சாபிகேசனின் மகன்)
இன்னும் யாரும் பிரபலாமான ஒரு குழு

2. வில்லுப்பாட்டு

சின்னமணி குழுவினர் அல்லது
சிறிதேவி குழு?? ஒரு ஐயர் ஒராள் தான் பாடுவார் (பெயர் ஞாபகம் இல்லை)


3. இசை குழு

ஈழ நல்லூர் அருணா குழு
அல்லது வேறு யாராவது


என்னுடைய மாமா (அவர் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்) யாழ்ப்பாணத்திலை இருந்து பூங்காவனம் பாக்க மட்டும் தான் வருவார் அதிலை அவருக்கு பிடிச்சது மேளச்சமா தான். ஆனா நாங்கள் பூங்காவனம் போறது வில்லுபாட்டு பாக்கவும், இசை நிகச்சி பாக்கவும் தான். ஆறு ஏழு மணிக்கே போடுவம். மேளச்சமாவை ஒழுங்கா பாக்கிறமோ இல்லையோ ஒழுங்கா கச்சானும், ஐஸ்கிறீமும் சாப்பிட்டு கொள்ளுவம். அதைவிட ஊர் கதை, எந்த பொடியன் யாரை சுத்துறான் எண்ட கதையள் பொக்கும் சில பேர் படுத்து நித்திரையா போவாங்கள் வில்லு பாட்டு தொடங்க எழுப்ப சொல்லி போட்டு. எப்பிடியும் அருணா குழுவின் பாட்டு தொடங்க விடியப்புறம் 3அல்லது 4 மணியாகும். முடிய விடிஞ்சிடும். ஆனாலும் முழு இரவும் நித்திரை கொள்ளாம கண் கொட்ட கொட்ட முழிச்சு கொண்டு இருப்பம்.

அதே போல எங்கட பள்ளிகூட மைதானத்திலை நடக்கிற நாடக நிகழ்வு, இசை நிகழ்ச்சி என எல்லத்தையும் தப்ப விடாம போய் இரவிரவா இருந்து பாப்பம்.

இந்தியனாமி போன உடன தேனிசை செல்லப்பாவினுடடய இசை கச்சேரி எல்லா ஊரிலையும் நடந்தது. எங்கட ஊரிலையும் நகரசபை மைதானத்திலை நடந்த நிகழ்ச்சிக்கு நானும் போன்னான். கரை கொள்ளாத சனம்.
தேனிசை செல்லப்பாவின் கணீர் என்ற குரல், அந்த மேடை எல்லாமே இன்றும் நிழல் போல நினைவில்.

அடுத்து ஒரு நாடகம் எங்கட ஊர் கலைஞர்கள் கொண்டு அரங்கேறியது. அதிலை ஒரு பாட்டு வரும்

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்...


அதன் பிறகு நிறைய பாத்திருக்கிறன் எது எது என வரிசையா சொல்ல வராட்டிலும் ஞாபகத்தில் உள்ளதை சொல்லுறன்

முத்தமிழ் விழா எண்டு சொல்லி யாழ் குடா நாட்டின் முக்கியமான பிரிவுகளிலை 2 நாள் நிகவுகள் நடைபெற்றன. எங்கடை ஊரிலை நடந்த முதல் நாள் நிகழ்வுக்கு போய் இருந்தன். அதிலை காத்தவராயன் கூத்து , நாடகங்கள் என நிறைய நிகழ்ச்சிகள் நடந்திச்சு அதே நேரம் பலாலிலை இருந்து அடிச்ச எறிகணைகள் விழா நடந்த இடத்துக்கு கிட்ட விழுந்து வெடிச்சிச்சு. அதாலை இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு போகாமல் விட்டிட்டன். அதாலை ஒரு முக்கியமான சந்தர்ப்பம், யாருக்கும் இலகுவிலை கிடைக்காத வாய்ப்பு ஒண்டை தவற விட்டிட்டன்.

பிறகு எங்கட பள்ளி கூட திறந்த வெளியரங்கிலை
சந்தன காடு முக்கியமா ஞாபகம் இருக்கிற நாடகம் அத விட இன்னும் நிறைய நாடகங்களும் நடந்திச்சு அண்டு.
பிறகு சாந்தன் இசைகுழு?? , இராஜா இசை குழுவும் இணைஞ்சு போட்டிக்கு பாட்டு நிகழ்ச்சி ஒண்டு அதிலை சாந்தன் குழு ஒரு பாட்டு பாடினா அதுக்கு இணையா ஒரு பதில் பாட்ட இராஜா குழு பாடும்.

உதாரணமா பத்தமெண்டா இராஜா குழு வீட்டுக்கு வீடு வாசல் படி வேணும் எண்ட இளையராஜாவின் பாட்டை பாடிச்சினம் அதுக்கு போட்டியா சாந்தன் குழு ஒரு போட்டி பாட்டு பாடிச்சினம்.

அத விட தமிழீழ இசைகுழு என்ற போராளி கலைஞர்களின் இசை நிகழ்ச்சி எண்டு கனக்க நடந்திச்சு. ஒரு நிகச்சியை கூட தப்ப விட்டதில்லை. எப்பிடியும் ஒரு ஆறேழு பேரா சேர்ந்து தான் போவம். இரவு பசிக்கு வயிறு நிறைக்கிறது கச்சானும், ஐஸ்கிறீமும் தான்.ஒரு நிகழ்ச்சிக்கு கூட போக பொறன் எண்டு கேக்க அப்பா அம்மா அனுமதி மறுத்ததில்லை அதே போல நிகழ்ச்சி முடிஞ்சு விடியப்பறம் 4 மணிக்கு கதவிலை தட்ட சினக்காம அப்பா/ அம்மா வந்து கேற்றை திறப்பினம்.

இராணுவ தாக்குதல் பயம், பொருளாதர தடைகள், எங்க போற எண்டாலும் சைக்கிள் தான். ஆனா அனைத்தையும் எம்மால் மனம் விட்டு இரசிக்க முடிந்தது.
காலம் 11/08-12/08/ 2007, இடம் மார்கம் பேயர் மைதானம், ஒன்ராரியோ, கனடாஎந்த வித உயிர் பயமும் அற்ற சூழல், இதமான மாலை நேரம். அங்கு ஹெலிக்கு உயிரை காக்க பனை மரத்தை சுற்றிய சம்பவங்களுக்கு பதிலா இஞ்சை ஹெலியிலேயே ஏறி ஒரு சவாரி போய் வர வசதியுடன் கூடிய ஒரு களியாட்ட நிகழ்வு இரண்டு நாட்கள் நடந்தது. இரண்டு நாட்களும் போய் இருந்தேன்.ஈழத்தை போல மைதானம் நிறைந்த சனக்கூட்டம்.


ஊரில் இருந்த காலத்தில் இலங்கை சர்வதேச வானோலியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு எனும் நிகழ்ச்சியில் அறிமுகமான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ஒன்று அந்த நிகழ்சியை செய்த அப்துல் ஹமித் இனாலேயே இங்குள்ள ஆக்களுக்காக நடாத்தப்பட்டது.அதை விட தென்னிந்திய திரைப்பட பாடகர்கள் சிலருடன் சென்னை ரிதம்ஸ்??? குழுவின் இசை நிகச்சி,
நடன நிகச்சி... என பல. ஆனால் விளம்பரம் செய்த சன் ரிவி அசத்தபோவது யாரு குழுவினர் வந்து சேரவில்லை. வந்தவர்களில் பாதிப்பேர் அவர்களை பார்க்க வந்திருப்பார்கள் என நினைக்கிறன். இங்குள்ள இசை நிகழ்ச்சிகளின் ஒலியமைப்பு போல் ஈழத்தில் பார்த்த நிகழ்ச்சிகளில் ஒலியமைப்பு சீராக இருந்ததில்லை. அத்துடன் அங்கு சில நேரங்களில் அருணா குழு இசை நிகழ்ச்சியில் டிரம் வாத்திய ஒலி பாடலின் குரலையும் தாண்டி ஒலிக்கும்.
அத்துடன் பசி தீர்க்க விதம் விதமான ஈழத்து உணவு வகைகள் சுடச்சுட வாங்கி உண்ணும் வசதி.


கொத்துரொட்டி கடைகள்,


கரம் சுண்டல் கடைகள்
வள்ளி கிழங்கு அவியல்
அப்பம், தோசை இட்டலி
வறுத்த கச்சான்,
இடியப்பம்
கூழ்


இவற்றுடன் மேலைதேய உணவுகளான

பீஸ்ஸா, சூடான நாய் :) (Hot dog)


ஐஸ் கிறீம் கடைகள் அதிலும் யாழ்ப்பாண சுவை மாறாத எனும் விளம்பரத்துடன்


என பல உணவுகள்.


இருந்த போதும் இவற்றில் ஒன்றில் கூட என்மனம் இலயிக்கவில்லை. என்னக்கு அங்கு ஒருமணி நேரத்துக்கு மேல் நிற்க பிடிக்கவில்லை. எப்படா விட்டுக்கு போவன் எண்ட மாதிரி இருந்திச்சு. ஊரிலை இரவிரவா நிகழ்ச்சி பார்த்த எனக்கு இரவு 11 மணி வரையும் இருந்து பொறுமை காக்க முடியாமல் இரண்டு நாளும் பாதியிலேயே வெளியேறிவிட்டேன்.

ஏன் என்னால் இரசிக்க முடியவில்லை? காரணம் என்ன என யோசித்து யோசித்து பாக்கிறன்?

ஏன்?....

Saturday, 25 August 2007

பள்ளிக்கூடம் போகலாம்- 1

பள்ளிகூடம் ஒவ்வோருவரது வாழ்கையிலும் மறக்கமுடியாத அத்தியாயங்களை கொடுக்கும் உன்னதமான இடம். பள்ளிகூடம் படம்; சினேகா, நரேன், சீமான், தங்கர்பச்சன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஒரு பள்ளிகூடத்தின் கதையை மட்டுமல்ல, நட்பின் நெருக்கம், பள்ளி காதல் என பலதை சொல்லி சென்றுள்ளது. படத்தை பற்றிய விமர்சனங்களை பலரும் செய்துவிட்ட நிலையில் பள்ளிகூடம் படம் பற்றி நான் எதையும் நான் சொல்லப்போவதில்லை. இங்கு சொல்ல போவது எனது பள்ளிகூட நண்பர்களில் சிலர் பற்றிய ஞாபக குறிப்புக்கள்/ அல்லது ஞாபகத்தில் இருப்பவர்களை பெயரிடாமல் பட்டியலிடல் மற்றும் பள்ளிகூட வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்கள் பற்றிய ஒரு மீள் பார்வை மட்டுமே.

ஏற்கனவே நான் எழுதிய சில
1.குண்டு போட்டவர்கள் மீது விழுந்த குண்டு.....
2.ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், இன்ன பிற...
3. உயிர் பயத்தோடு கழிந்த ஒரு பாடசாலை நாள்


அடிக்கடி பழைய நண்பர்களை ஞாபகப்படுத்தி பார்த்தாலும் பலரோடு தொடர்பறுந்த நிலையில் பலர் எங்கு எந்த நாடுகளில் இருக்கிறார்கள் எதுவுமே தெரியாத நிலையில் நினைவுகளில் மட்டுமே பலரது நட்பு நிலைத்திருக்கிறது. இருந்த போதும் உயர்தர கல்வி வரை கற்ற பலரது நட்பு இன்றும் ஓரளவுக்கு நீடித்திருக்கிறது. அப்படி தொடர்பில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் செர்ந்து எமது பாடசாலை நண்பர்களின் குழுமம் ஒன்றை யாஹு வில் அமைத்திருந்தோம். அந்த குழுமத்தின் மூலம் எமது நட்பை தொடர்ந்து பேண முடிந்தது மட்டுமல்ல மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் முன் சுடப்பட்டு இறந்து போன நண்பனின் குழந்தைகளுக்காக ஒரு சிறுதொகையை சேர்த்து பிள்ளைகளின் பெயரில் வங்கி கணக்கில் இடும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். உலகம் முழுவதும் சிதறிப்போய் இருந்தாலும், எம்முடன் படித்த தோழனின் இழப்பின் துயரத்தில் இருக்கும் இன்னும் 30 களை கூட எட்டாது இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்ட அவனது குடும்பத்துக்கு சிறிதளவாவது உதவுவதில் எல்லாரும் ஒன்றுபட்டோம் என்பதில் ஓரளவு திருப்தியும் ஏற்படுகிறது.
இந்த திருப்தியுடன் நினைவில் இருக்கும் பழைய நண்பர்களை பற்றி இனி...
புதிது புதிதாக பலர் நட்பு வட்டத்துக்குள் இணைந்தாலும் பள்ளிகூடங்களில் சிறிய வயதுகளில் ஒரே வாங்கில் அல்லது ஒரே வரிசையில் இருந்த நண்பர்கள் அடிக்கடி நினைவில் வந்து போவர்கள். அதிலும் வாங்கு எனும் போது இருக்கையும், எழுதும் பகுதியும் பிணைக்கப்பட்ட ஒரு வாங்கில் குறைந்தது 3 பேர் இருக்க கூடிய வாங்குகளில் ஒவ்வோருவரும் தமது பகுதி என அளவு கோல்/ அடி மட்டத்தால் அளந்து எல்லை பிரிப்பதும், அவரவர் பகுதிகளில் இருக்கும் அழுக்கை வீட்டில் அப்பா/ அண்ணா என யாரும் சவரம் செய்து மொட்டையாய் போன பிளேட்டை கொண்டு விறாண்டி/ சுரண்டி சுத்தம் செய்வதும், எமது சுந்தர நாமங்களை அதில் பல வண்ணங்களில் பொறிப்பதும் நடக்கும். அந்த எல்லையை தாண்டி மற்றைய நண்பனின் கொப்பி, புத்தகங்கள், அல்லது கையோ வந்தால் கூட சில நேரத்தில் முரண்பாடு வரும். இருந்த போதும் ஒரே வாங்கு நண்பர்களுக்கிடையே ஏற்படும் நெருக்கம் மற்றையவர்களோடு ஒப்பிடும் போது அதிகம் தான்.
அந்த வகையில் அடிக்கடி என் நினைவில் வந்து போகும் ஏதோ ஒரு விதத்தில் மிக நெருக்கமக இருந்த நண்பர்கள் சிலர் பற்றிய ஞாபக குறிப்புக்கள் (எல்லாரையும் பற்றி எழுத ஒரு பதிவு போதாது).


பாலர் பிரிவின் ஒரே வாங்கார்


பாலர் பிரிவு, முதல், இரண்டாம் வகுப்பு வரை என்னுடன் ஒரே வாங்கில் இருந்த இரு நண்பர்களை பிரிந்து பாட்சாலை மாறி போக வேண்டிய சந்தர்பம் ஏற்பட்டது. இருந்த போதும் அந்த இருவரது பெயரையும் இன்றும் மறக்க முடிவதில்லை. நான் எமது ஊரிலேயே இருக்கும் பிரபலமான பாடசாலைக்கு மாறி சென்றுவிட, அவர்கள் ஆண்டு 6 இல் புலமை பரீட்சையில் சித்தியடைந்து யாழ் இந்துகல்லூரிக்கு சென்றுவிட்டார்கள். இருந்த போதும் அவர்கள் இருவரில் ஒரு நண்பன் நாம் படித்த தனியார் (ரியூசன்) கல்வி நிறுவனத்துக்கு ஆண்டு 9 இல் இருந்து மீண்டும் வந்ததான் அதன் பிற்பாடு அவனது நட்பை மீண்டும் பேண முடிந்தது. அவன் தொடர்ந்து உயர்தர வகுப்பில் கணித பிரிவுக்கு எனது பாடசாலைக்கே வந்து விட்ட பின் அவனும் நானுமாக பாட்சாலை லியோ கழக பணிகளை இணைந்து செய்திருந்தோம். மீண்டும் 95 இடப்பெயர்வில் அவன் யாழ்குடா நாட்டை விட்டு வெளியேறி எங்கெங்கோ போய் சிங்கபூருக்கு கல்வி கற்க சென்று இப்போது சிங்கபூரிலேயே பணியேற்றியும் வருகிறான். அடிக்கடி இல்லாவிட்டாலும் இடையிடையே எம் எஸ் என் தூதர் மூலமும், தொலை பேசி மூலமும் தொடர்பை பேணிவருகிறோம். மற்றைய நண்பன் இப்போது ஐக்கிய இராச்சியத்தில் இருக்கிறான் என அறிந்திருந்தாலும் இதுவரை அவனுடன் எந்த தொடர்பும் இல்லை.


புதிய பாடசாலையில் ஒரு வாங்கார்

பின்னர் புதிய பாடசாலையில் மிண்டும் ஒரே வங்கு நட்பு என நால்வர் வந்து சேர்ந்தனர் அவர்களது நட்பும் அதிக காலம் நீடிக்க வில்லை. ஒரு நண்பன் கொக்குவில் இந்து கல்லூரிக்கு மாறி போய்விட , பாடசாலையில் ஆண்டு 6 க்கு வரும் போது நடைபெற்ற பரீட்சையின் அடிப்படையில் வகுப்புக்கள் கெட்டிகாரர், நடுத்தரம், கடை நிலை என வகுப்புக்கள் பிரிக்கப்பட்ட போது என்னுடன் இருந்தவர்கள் பலரும் ஏ வகுப்புக்கு போய் விட நான் மட்டும் பி பிரிவில் சேர்க்கப்பட்டேன். பின்னர் மீண்டும் எனது ஆண்டு 6 புள்ளிகளை பார்த்து என்னை மீண்டும் ஏ பிரிவில் சேர்த்த போது பழையவர்கள் வேறு புது நட்பு வட்டத்துக்கு போய்விட நான் இருந்த வரிசையில் இருந்து புதியவர்கள் சிலர் நட்பு வட்டத்துக்குள் இணைந்து கொண்டனர். அந்த வட்டத்தில் இருந்தவர்கள் நட்புக்கூட நெடு நாள் நீடிக்க வில்லை. என்னுடன் இருந்த ஒரு நண்பன் 89 களின் இறுதியில்/ 90 இன் ஆரம்பத்தில் மீண்டும் இலங்கை அரசுடன் பொர் வெடிக்கலாம் என்ற சூழ் நிலையில் ஒருவன் இந்தியாவுக்கு சென்று விட மற்றைய நண்பனும் தனது தாயார் மட்டகளப்பில் பணி நிமித்தம் இருப்பதால் அவருடன் இணைய செல்வதாக சென்றுவிட மீண்டும் புதியவர்கள் ஒரே வாங்கில் வந்து சேர்ந்தாலும் அதன் பின் நமக்கும் ஒரளவு வயதும் வந்துவிட்டதால் ஒரே வாங்கு நட்பை விட ஒரே ரியூசன், ஒத்த குணம் உடையோர் என நட்பு வட்டம் வேறுபட தொடங்கி இருந்தது.

இந்தியாவுக்கு சென்ற நண்பன் அடிக்கடி நினைவில் வந்து போவான். எப்படி இருக்கிறான், என்ன ஆனான் என கடந்த வருடம் வரை அறிய முடியவில்லை. இருந்தால் போல் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, தனது பெயரை சொல்லி ஞாபகம் இருக்கிறதா என கேட்ட போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது தொலைபேசி இலக்கத்தை எமது பாடசாலை மாணவர் குழுமத்தில் பெற்று கொண்டதாகவும் கூறியிருந்தான். தான் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த செய்தியையும் கூறினான். உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

மட்டக்களப்புக்கு சென்ற நண்பன் மீண்டும் பல்கலைக்கழகத்தில் கற்று கொண்டிருந்த போது அவனும் மருத்துவதுறைக்கு தெரிவாகி எனது பல்கலைக்கழகத்துக்கே வந்திருந்தான். நான் இருக்கும் முகவரியை அறிந்து என்னை தேடி வந்து ஆச்சரியப்படுத்தினான். இப்போதைய யுத்த சூழல் அவனை மீண்டும் எங்கு கொண்டு போய் சேர்த்துள்ளதோ தெரியவில்லை.


பள்ளிகூடம் போவோம் இன்னும் வரும்.....

நயன்தாரா ரசிகர்களுக்காக...


சும்மா சொல்ல கூட்டாது எங்கட வலையுலக மக்கள் நயந்தாரா மீது வைத்திருக்கிற சொல்லோணாத பாசம் இந்த (நயகரா வில் பார்த்த "நயன்தாரா" ) பதிவை சூடாக்கி உச்சத்திலை வச்சது மட்டுமில்லம இந்த வாரம் சூடன பதிவுகளுக்கையும் கொண்டுவந்து வச்சிருக்கிறியள். அதுக்காக நயந்தாராக்கும், நயந்தரா ரசிக பெருமக்களான உங்களுக்கும் ஆயிரம் நன்றிகள். அந்த பதிவிலை நயந்ததராவை தேடி களைச்சு போன ரசிக பெருமக்களுக்காக நயன்தாரவின் படமும், பாட்டு காட்சிகள் சிலவும் பார்த்து ரசிச்சு தள்ளுங்க......Thursday, 23 August 2007

நயகரா வில் பார்த்த "நயன்தாரா"

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு எனது பள்ளி தோழர்களுடன் 06/08/2007 போய் இருந்த போது எடுத்த படங்களும், சிறிய ஒரு வீடியோ காட்சியும்.

Tuesday, 21 August 2007

கனடா கந்தசாமி கோயில் தேர்- தூக்குக் காவடிகள்

கனடா கந்தசாமி கோயில், ஸ்காபுரோ, ஒன்ராரியோ, கனடா. 11/08/07


காவடிகள்

தூக்குக்காவடிகள்.நான்கு வாகனங்களில் தூக்கு காவடி கட்டி இருந்தார்கள். சிலதில் 2 பேரும் சிலதில் ஒருவரும் காவடி எடுத்திருந்தார்கள். ஊரில் உழவு இயந்திரங்களில் கட்டப்படும் தூக்குகாவடி இங்கு பிக்கப் வாகனங்களுக்கு மாறி இருந்தது.


யோகன் அண்ணா தூக்குகாவடி எடுப்பது கொஞ்சம் அதீதம்/ அதிகம் என்ற பொருள் பட மாயாவின் பதிவில் சொல்லி இருந்தார். எனக்கும் பார்க்கும் போது அவர்களுக்கு வலிக்காதா? வலியை எப்படி தாங்குகிறார்கள் என்றெல்லாம் யோசித்ததுண்டு/ யோசிப்பதுண்டு. நம்பிக்கை தானே வாழ்க்கை. எம்மால் பிரச்சனையை தீர்க்க முடியாது எனகருதும் நேரங்களில் கடவுள் நம்பிக்கை தான் மனதை ஆற்ற உதவுகிறது. வேண்டுதல்கள் பலவகைப்படலாம்; புலம் பெயரும் முயற்சி தடக்காதிருக்க, உறவுகள் நலமோடிருக்க, நோய் தீர, கைது செய்யப்பட்டவர் விடுதலையை எதிர் நோக்கி என பல.

ஊரிலும் பலர் தூக்கு காவடி எடுப்பது வழக்கம்.அதில் 3 பேருடைய நேர்த்திகடனுக்கடனுக்கான காரணங்களை அறிந்திருந்தமையால் அவர்கள் இருந்த நிலையில் அவர்களின் நம்பிக்கை சரி என்றே பட்டது.

1980 களின் இறுதி என நினைக்கிறேன் ஒருவர் மன்னார் பகுதில்/ எல்லது வேறெங்கோ சரியாக ஞாபகம் இல்லை. துப்பாக்கிசூட்டால் உடல் பகுதிகள் சல்லடையிடப்பட்டு உயிர் தப்புவதே அரிது என சொல்லப்பட்ட நிலையில் இருந்தார். உயிர் பிழைத்த பின் அயலில் உள்ள பிள்ளையார் கோயில் தேருக்கு தூக்குகாவடி எடுத்தார்.

மற்றவர்கள் இருவர், சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறை இருந்து வெளியே வந்த போது நம்மூர் கண்ணகி அம்மனுக்கு அண்ணன் துலாவில் தொங்க, தம்பி அவரது பழுவில் தூங்கிய படி காவடி எடுத்தார்கள். அவர்களது வேண்டுகைகள் நிறைவேறியது கடவுளால் என்பது அவர்களது நம்பிக்கை. அதை யாரும் குறைகூறவோ, பகுத்தறிவு கொண்டு எள்ளல் செய்யவோ முடியாதென்பதே எனது கருத்து.

கனடா கந்தசாமி கோயில் தேர்

கனடா கந்தசாமி கோயில், ஸ்காபுரோ, ஒன்ராரியோ கனடா
11/08/2007

கோயிலில் திரண்டிருக்கும் மக்கள்


பிள்ளையாரின் தேர்


முருகனின் தேர்
இன்னும் வரும்

Monday, 20 August 2007

கண்டேன் டி சே ஐ........

விடுமுறையில் இரண்டு வாரகாலம் ரொறான்ரோ போய் இருந்தேன். அப்போது டி.சே. தமிழன், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து விடுமுறையில் வந்திருந்த சுந்தரவடிவேல் ஆகிய இருவரையும் டி.சே தமிழனோடு வந்த அவரது நண்பரையும் சந்தித்தேன்.(படத்தில் டிசெ மற்றும் சுந்தரவடிவேல்)

ரோறான்ரோ போவதற்கு முன் டி.சே ஐ தொடர்பு கொண்டு அவரது தொலைபேசி இலக்கத்தை வாங்கி இருந்தேன். அங்கு போனதன் பின் எனது உறவினர் வீட்டில் இருந்து அழைத்தால் அது குரல் மடலில் செய்தியை பதிவு செய்து சில நிமிடங்களில் டி.சே யிடம் இருந்து அழைப்ப்பு வந்தது. முதல் உரையாடலிலேயே பல நாட்கள் உரையாடியதை போல சகஜமாக நிறையவே கதைத்தார். அப்போ சுந்தரவடிவேலும் ரொறான்ரோவில் நிற்பதாகவும், அவருடனும் கதைத்து சந்திப்புக்கு ஒழுங்கு செய்வதாகவும் சொன்னார். சரி என சொல்லு உரையாடலை முடித்துகொண்டோம். பின்னர் நான் தங்கிய வீட்டு தொலைபேசி இலக்கத்தை தொலைத்துவிட்டு ஒரு வழியாக எனது கையடக்க தொலைபேசி இலக்கத்தை பெற்று எப்போ சந்திப்பது, எத்தனை மணிக்கு என்னை கூட்டி செல்ல வருவது என்ற விபரங்களை கூறினார்.

அதன் படி 10 ஆம் திகதி தமிழரின் நேரம் தவறாத பண்பை சரியாக கடைப்பிடித்து சரியாக சொன்ன நேரத்துக்கு சரியாக அவரது நண்பர் சகிதம் வந்து சேர்ந்தார். இருவரில் யார் டிசே என்ற குழப்பத்தை போக்க அவரே தான் தான் டிசெ, மற்றையது தனது நண்பர் என அறிமுகம் செய்துகொண்டார்.

அங்கிருந்து ரோறான்ரோ நகரின் மைய பகுதியில் உள்ள சுந்தரவடிவேலின் வீட்டில் போய் அவரையும் அழைத்துகொண்டு நகர பகுதியில் நடைபெற்ற கிறீஸ் நாட்டினரின் கொண்டாட்டம் ஒன்றிற்கு போனோம்.

டிசே யுடன் போகும் இடங்களில் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் காட்சிகளுக்கு பஞ்சமா என்ன.
இரவு நேர காட்சிகளில் எனது கமரா ஒளிப்படங்களை சீராக படம் பிடிக்காததால், விடியோவாக சுட்டு கொண்டேன்.

Belly Dance

இதில் பாவிக்கப்பட்ட இசை நமது தவில் கச்சேரிகளில் கேட்கும் இசை போல இருந்தது.

2 பெண்களுடன் 6 ஆண்கள் விளையாடிய கைப்பந்தாட்டம்

பிறேசில் நாட்டு உணவுச்சாலை ஒன்று
டிசே, நான் மற்றும் சுந்தரவடிவேல்

சுந்தரவடிவேல் அவர்களை சந்தித்த போது அவரது தோற்றம், வயது பற்றி வைத்திருந்த கற்பனையிலும் இளமையாக தெரிந்தார்.

சந்திப்பின் போது டி.சேயின் கவிதை புத்தகம் ஒன்றை பெற்றுவராலாம் என்றால் முடியவில்லை. மறுபடியும் டி.சே ஐ சந்திக்க முடியவில்லை. அதனால் கவிதை புத்தகம் பற்றி விமர்சனம் எழுதும் எண்ணம் நிறைவேறவில்லை.

டிசே அடிக்கடி சொல்லி கவலைப்பட்ட விடயம் பொதுவாக கவிதை எழுதும் ஆண்களுக்கு நிறைய ரசிகைகள் இருப்பார்களாம் ஆனால் தனக்கு ரசிகைகள் இல்லையாம் என்று. இதை தீர்க்க என்ன செய்யலாம்? வலைபதியும் பெண் பதிவர்களுக்கு சமர்ப்பணம்.
டிசேயின் கைத்தொலைபேசிக்கு அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்தவர்கள் பற்றி சொல்லாதிருப்பதே இன்னும் அதிக ரசிகைகள் கிடைக்க என்பங்குக்கு நான் செய்ய கூடிய உதவி.

Friday, 3 August 2007

மலர்-6