Tuesday, 27 February 2007

இயற்கையும் செயற்கையும்....

இயற்கையான ஊஞ்சல்...


Image Hosted by ImageShack.us


செயற்கையான ஊஞ்சல்....

Image Hosted by ImageShack.us

Monday, 26 February 2007

வேலி பாய சொல்லி தந்த இராணுவம்..

யாழ் குடா நாடு முழுமையும் இரணுவக்கட்டுபாட்டுக்குள் வந்த பின் சுற்றி வளைப்பு தேடுதல்கள், 5 கிலோ மீற்றர் தூரத்தை தாண்டுவதற்கிடையில் 5 முறை வரும் சோதனைச்சாவடிகளில் இறங்கி ஏறி, அடையாள அட்டை காட்டி, "ஆசை" யுடன் தடவி பார்க்கும் ஆமிக்கு வரும் ஆத்திரத்தை அடக்கி பல்லிளித்து வாழ்க்கையை கடத்த வேண்டிய நிர்ப்பந்தம். அவ்வாறான காலப்பகுதியில் தான் எனக்கு ஆமிக்காரன் வேலி பாயவும் பழக்கினான்.

எமது பகுதிகள் 95 ஆம் ஆண்டின் இறுதியில் எண்டு நினைக்கிறேன் முழுவதூமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வந்து சேர்ந்தவர்கள் முகாம்களை அமைச்சு நிலைப்பட்டுத்தி கொண்டாப்பிறகு சுத்தி வளைப்புக்கள் தேடுதல்கள் என சிப்பிலியாட்ட தொடங்கினார்கள்.

இந்திய இராணுவ காலத்து சுத்திவளைப்புக்களை சிறு பையனாக இருந்த்து பாத்த அனுபவம் இருந்தது. அப்ப எந்த பக்கத்து வேலியை பிச்சு கோண்டு வருவாங்கள் எண்டு தெரியா வருவாங்கள். ஊரிலை உள்ள நாயள் ஊளையிட தொடங்கினா தெரியும் இண்டைக்கு சுத்தி வளைப்பெண்டு. அதுக்கிடையில வளந்த பொடியள் கொஞ்சம் அடுத்த ஊருகளுக்கு ஓடி தப்பீரும். அப்பிடி போகாமல் ஆப்பிட்டவை நடுவெயிலுக்க சந்தி வழிய இருக்க வச்சு தலையாட்டியளின் வருகைக்காக காக்க வச்சிருக்கும். எப்பவேன், ஆமிக்கு இயக்கம் அடிச்சா அண்டையான் சுத்திவளைப்பிலை பிடிபட்டவைக்கு கொட்டனுகளாலை அடி தான். என்ன தடியாலை அடி விழுதெண்டது பக்கத்து வேலிலை என்ன கதியால் நிக்குதெண்டதை பொறுத்ததா இருக்கும். இப்பிடி சுத்தி வளைப்புக்களிலை ஆப்பிட்டு, முள்ளு கிழுவந்தடியாலை அடி வேண்டி கிழுவம் முள்ளு சதைக்க சிக்கி முறிஞ்சு போக அதை வெளில வரப்பண்ண வறுத்த விசுகோத்தை நனைச்சு கட்டினா முள்ளு வெளிலை வருமெண்டு நாட்டு வைத்தியம் பாத்த உறவுகளிடை அனுபவங்களை மறக்கேல்ல.

ஆனா சிறிலங்கன் ஆமிட சுத்தி வளைப்பு எப்பிடி இருக்குமெண்டதை மற்ற ஆக்களிடை அனுபவத்தை பத்து தெரிய வேண்டி இல்லம நானே அனுபவிக்க வேண்டி இருந்திச்சு.

அப்ப பள்ளி கூடம் போற நேரம். காலமை அம்மா வச்சு தந்த கோப்பிய குடிச்சிட்டு பள்ளி கூடம் போறதுக்கு குளிக்க வெளிக்கிட்டனான். ஆமி றோட்டு வழிய நிக்கிறாங்கள், ஏதோ வில்லங்கம் எண்டது விளங்கிச்சு, ஆனா சுத்தி வளைப்பு எண்டதை அனுமானிக்க முட்டியேல்லை. சரி எதுக்கும் குளிப்பம் எண்டு வீட்டுக்கு பின்னலை உள்ள கிணத்தடிக்கு நான்போட்டன். முன் வாசலாலை வந்தவங்கள் அப்பாவையும் அம்மாவையும் பாத்திட்டு விட்டிட்டு போட்டாங்கள். என்னை காணெல்லை. சரி போட்டங்கள் எண்டு நானும் கக்கூசுக்கு போக கிணத்திலை தண்ணியள்ளி கொண்டு கக்கூசு வாசலுக்கு போக எனக்கு பிடிச்சது சனி. பின் வீட்ட சோதிக்க வந்த இரண்டு என்னை கண்டிட்டுதுகள். பிறகென்ன, கக்கூசுக்கு போன நான் வெளீலை வருமட்டும் காவல் நிண்டு என்னை கூட்டி போறதுக்கு அதுகள் ரெடி. வேற என்ன செய்யிறது, வந்து சேட்ட கொழுவி கொண்டு அது வரை பத்திரமா புத்தம் புதிசா பாவிக்க படாம இருந்த அடையாள அட்டைய துக்கி கொண்டு வெளிக்கிட்டது தான்.
வந்ததுகள் ரெண்டும் பின் வீட்டலை வந்ததுகள், அந்த நேருக்கே போவெணுமெண்டது அதுகளுக்கு கட்டளையாக்கும். என்னையும் கூட்டி கொண்டு போன, எங்கட வீட்ட முன் பக்கம் மதிலும், மிச்சம் மூண்டு பக்கமும் பனைமட்டை வேலியும்.
அதுகள் உள்ளுட்ட நேருக்கு போக வேணுமெண்டு நினைச்சதால; நேருக்கு போக வேண்டுமெண்டா ஒண்டில் வேலியை வெட்டி பாதையாக்கோணும் இல்லை, வேலியை பாய வேணும். முந்தி இந்தியன் ஆமி குறடும் கையுமா தான் திரிவாங்கள், எங்க போக வேணுமோ அங்க வேலியை வெட்டுவாங்கள். ஆனா வந்த சிறி லங்கன் ஆமிடை கையிலை குறடு இல்லை. பேந்தென்ன செய்ய ஏலும், நானூம் சொல்லி பாத்தன் எனக்கு வேலி பாய தெரியாதெண்டு ( எவ்வளவு நல்ல பொடியன் எண்டு யோசிச்சு கொள்ளுங்கோ) நான் சொன்னது அதுகளுகெங்க விளங்கிறது. அடி வேண்டுறதை விட பாயுறது உத்தமம் எண்டு பாஞ்சாச்சு. அப்ப தான் யோசிச்சன், எங்கட சனம் சுத்து மதில் கட்டுற மாதிரி எங்கட வீட்ட கட்டாதது இப்ப உதவுதெண்டு. ஆனா என்ன மதில் கட்டி இருந்த பின் வீட்ட வந்ததுக்கள் என்னை கண்டிருக்க மாட்டுதுகள். எங்கட வேலி மட்டுமில்லை எங்கட தெருவிலை இருக்கிற எல்லார் வீட்டு வேலியும் உதே மாதிரி தான். பிறகென்ன அடுத்த குறுக்கு றோட்டு வருமட்டும் வேலி பாஞ்சது தான். அடுத்த குறுக்கு றோட்டை அடையிறதுக்கிடையிலை எனக்கு கூட்டாளி மாரா அடுத்த அடுத்த வீடுகளிலை இருந்த பொடியளும் வந்தாங்கள்.
அதுக்கங்கலை அதிகம் வீடுகள் இல்லை. வெறுங்காணியளும், பத்தையளும் தான் கனக்க. வேலியளும், கம்பி வேலி எண்டதாலை பாயிறது/ கடக்கிறது பெரிய பிரச்சனையா இருக்கேல்லை. பிடி பட்ட ஒருத்தரும் ஒருதரோட ஒருதர் கதைக்கேல்லை. கதைக்க பயம். வந்ததுகள் என்ன செய்யுங்கள் எண்டது தெரியாது. வழி வழிய இப்படியே கூட்டி சேத்த போடியளோட இந்தியனாமிட சுத்தி வளைப்புக்கு வித்தியாசமா இவங்கள் பொம்பிளை பிள்ளையளையும் கூட்டி வந்தாங்கள். எங்கட கூட்டத்திலை 3 பொம்பிளை பிள்ளையளும், 4 பொடியளும். எங்க கூட்டி போறாங்கள் எண்டது ஒருத்தருக்கும் தெரியாது, வாற காணியள் , பத்தையள் எல்லாத்துக்குளாலையும் போனம்.


ஒரு இடத்திலை, தனிச்ச இடமா ஒரு கைவிடப்பட்ட குடிசை, அது சில வேளை வலிகாமத்திலை இருந்து இடம்பெயர்ந்துவந்தாக்கள் இருந்திட்டு விட்டிட்டு போனதா இருக்கலாம். அத கண்டோடனை ஆமிக்கு ஏதோ செய்திருக்க வேணும். என்னத்தையோ கதைச்சுதுகள், அதுகள் என்ன கதைச்சாலும் எங்களுக்கு விளங்காது தானே.
பொடியள் எல்லாரையும் ஒரு பக்கமா வர சொல்லிச்சுதுகள் நினைச்சம் என்னவோ நடக்க போகுதெண்டு. பொடியள் எல்லரயும் துவக்கு முனையில 2 காவலுகு வச்சிருக்க பொம்பிளை பிள்ளையள செக் பண்ண 2 வெளிக்கிட்டிச்சுதுகள். அதிலை ஒரு பொம்பிளை பிள்ளை வரசொல்லி குடிசை வாசலிலை வச்சு "செக்" பண்ண வெளிக்கிட அந்த பிள்ளை குளறி கொண்டு திரும்பி வந்த பாதை வழியா ஓட வெளிக்கிட்டிச்சு. அதோட என்ன நினைச்சுதுகளோ, அந்த பிள்ளையை திருப்பி கூட்டி கொண்டு வந்திட்டுதுகள் பிறகு "செக்" பண்ண வெளிக்கிடேல்லை. அண்டைக்கு அதிலை நிண்ட பொம்பிளை பிள்ளையளுக்கும் சரி பொடியளுக்கும் சரி ஏதோ நல்ல காலம் இருந்திருக்க வேணும். அதிலை நிண்ட எல்லாரும் நினைக்கத/ வேண்டத கடவுள் இல்லை. பிறகு சரி போ எண்டு சொல்லி எல்லாரையும் கூட்டி கொண்டு ஒரு கோயிலடிக்குபோய் சேந்துத்கள். அந்த கோயில் எங்கடவீட்டீலை இருந்து கிட்டதட்ட 4 கிலோ மீற்றர் தூரம் இருக்கும்.அங்க எங்கள போல சாச்சு கொண்டு வந்த கனக்க பேர் இருந்திச்சினம். பிறகென்ன அங்க எல்லரையும் வரிசை கட்டி தலையாட்டிக்கு முன்ன விட்டு அடையாள அட்டைய காட்ட சொல்லிச்சுதுகள். அண்டைக்கு ஆருக்கு கெடுகாலம் இருக்கெண்டது ஒருதருக்கும் தெரியா. அண்டைக்கு கறுப்பு துணியால மூடி காட்டின தலையாட்டி எப்பிடியும் சிலருடைய வாழ்கைய இருட்டாக்குவான் எண்டது தெரியும். ஆர் எண்டது தெரியாது. ஒவ்வொருத்தரும், கடவுளே நான் தப்பீடோணும் எண்டு தான் நினைக்கிறதே தவிர, ஆரை பிடிச்சாங்கள் எண்டதை கவனிக்கிறதே இல்லை. எல்லாம் முடிஞ்சு வீட்ட போக சொல்லி வீட்ட வந்த பிறகு தான் தெரியவரும் அண்டை அயலவர்களில் ஒரு சிலர் கைது செய்யப்படிருக்கிறார்கள் எண்டது. அப்பிடி கைது செய்யப்பட்டு இன்று வரை திரும்பி வரமல் போனவர்கள் எங்கட ஊரிலை எனக்கு தெரிய 4 பேர் இருக்கிறார்கள். மகன் மார் காணமல் போதை தேடி அலைஞ்சு, மனுக்கொடுத்து களைச்சு, புத்தி பேதலிச்ச அம்மாக்களையும், நோயாளியாகி போன அப்பாக்களையும் கண்டிருக்கிறன்.
அத்தோட இது தான் எங்கட ஊரிலை நடந்த முதல் சுத்தி வளைப்பு எண்டு முதலே சொன்னான். கூட்டி போன பொடியளை விட வீட்டிலை இருக்கிற அம்மா, உறவுகளின் மனதிலை தங்கட பிள்ளையளுக்கு என்ன நடக்குமோ எண்டு நினைச்சு பதறுறதும், கடவுளை வேண்டுறதும், வார்த்தையளால சொல்ல ஏலாது.

இது மட்டுமில்லை இத போல பல பத்து சுத்திவளைப்புக்கள் நடந்துள்ளன. ஆனா ஆக்கள ஒண்டு சேர்க்குமிடம் தான் வேற வேறயா இருக்கும்.

ஒரு நாள் எங்கட வீட்டுக்கு கிட்ட ஒரு பிள்ளையார் கோயிலுக்கு கூட்டி போன ஆமி அண்டைக்கு அங்க உள்ள மடம் ஒண்டுக்க ஒவ்வொருத்தைரையும் தனிதனிய கூட்டி போய் உரிஞ்சு பாத்ததை இண்டைக்கும் மறக்க முடியாது.

அத விட சுத்தி வளைப்புக்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ஊரிலை கட்டாயம் நடக்கும். எங்கட ஊரிலை இல்லையெண்டாலும், அடுத்த ஊருக்கு ஏதும் அலுவலா போய் அடுத்த ஊர் சுத்தி வளைப்புக்களிலை மாட்டு பட வேண்டியும் வரும்.

உப்பிடி தான் ஒரு நாள் காலமை ரியுசன் எண்டு வெளிகிட்டு அடுத்த ஊரிலை உள்ள ரியுசனுக்கு போட்டன் என்ர கெடுகாலம் அண்டைக்கு அந்த ஊரிலை சுத்திவளைப்பு, வழிலை நிண்ட ஆமி என்னையும் இன்னும் அஞ்சாறுபேரையும் பிடிச்சு இருத்தி போட்டங்கள். அப்ப தான் என்னுடைய அடையாள அட்டை இருக்கோ எண்டு பொக்கற்றை தாடவி பாத்தன். நெஞ்சுக்க பகீர் எண்டுது. அடையாள அட்டையை அண்டைக்கு எடுக்காம அவசரமா வெளிக்கிட்டுட்டன். இண்டைக்கு எனக்கு எதோ நடக்க போகுதெண்டு பயம் வந்தாலும், வெளிலை காட்டாம, ஆரும் வயசு போன ஆக்கள் வரமாட்டின்னமோ எண்டு வேண்டாத கடவுள் இல்லை. வயசு போன ஆக்களுக்கு அதிலை நிக்கிற ஆமிய பொறுத்து போய் வர அனுமதி கிடைக்கும். என்னோட நல்ல காலத்துக்கு அதாலை எங்கட ஊர் வயதான ஒராள் வந்தார், அவரை கூப்பிட்டு, என்னுடைய அடையாள அட்டையை விட்டிடு வந்திட்டன், எண்டு வீட்ட சொல்லி, வீட்டு காறர் ஆரையும், அடையாள அட்டையை கொண்டு வந்து தரச்சொல்ல சொல்லி சொல்லி விட்டன். அவர் வீட்ட போய் சொல்லி என்னொட அண்ண அடையாள அட்டைய கொண்டு வந்து தந்ததாலை அண்டைக்கு தப்பினன். தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுது.

இத போல கனக்க இருக்கு. உயிர் வாழ வேண்டும் எண்டது மட்டுமே குறி. அதாலை எத்தினை அவமானங்கள், சொல்லவே கூசும், சம்பவங்களை மனசுக்குள்ள வச்சு கொண்டு திரிய வேண்டிய, வாழ வேண்டிய நிர்ப்பந்தங்கள்.

இன்றைய யாழ்ப்பாண நிலமை நான் இருந்த காலத்தை விட கொடுமை என அறியும் போதும், நாளாந்தம் காணாமலும் போய் கொண்டும், சுட்டு கொலப்பட்டும், அனதரவான பிணங்களாக மீட்டு கொண்டிருக்கபட்டும் இருக்கும் இளையவர்களை நினைக்கும் போது மனது கனாக்க செய்கிறது. தமிழ் நதி சொன்னது போன்று செய்தி குருடாக இருக்க மட்டுமே முடிகிறது. எப்போதோ டிஜே சொன்னது போல, அனைவரும் வளராமல் சிறுவர்களாகவே இருந்திருக்க கூடாத என்றும் எண்ண தோன்றுகிறது.

Thursday, 22 February 2007

மொன்றியால் செல்வகுமாரின் பாடல்கள்...

மொன்றியலில் செல்வகுமார் என்பவரின் இரண்டு பாடல்களை இணைத்துள்ளேன்.
இப்பாடலுக்கான இணைப்பு யாழ்.கொம் இணையத்தள்ளதில் பொன்னியின் செல்வன் என்பவரால் இணைக்கப்பட்டிருந்தது. இவர் காதல் வலை எனும் ஒரு இசை அல்பத்தை வெளிடிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவரை பற்றி மேலதிக விபரம் ஏதும் தெரியவில்லை.

முதலாவது பாடல்: இந்த நிலாமுகம்
பாடியது: உன்னிகிருஸ்ணன், நிலுக்ஸி ஜெயவீரசிங்கம்Intha Nila Mugam -...2. உயிரான காதல் ஒன்று
பாடியது: கிருஸ்ணராஜா

UyiranaKathal - Kr...

Saturday, 17 February 2007

சில காட்சிகள்

இதிலை இருக்கிற என்ன மரம் எண்டு சொல்லுங்க ??

பருத்திதுறை கடலோரம்

செல்வச்சன்னதி முருகன் கோயில்

Friday, 16 February 2007

நுண்ணுயிர் கொல்லிப்பாவனையும் அதன் தாக்கங்களும்

இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம்.

நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன.

பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன?

பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதனால், நோய் ஏற்படுத்தகூடிய பக்ரீரியாக்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பெருகுவதை கட்டுப்படுத்துகிறன. அத்துடன் சமிபாட்டு செயற்பாடுகளும் , உடலின் நோய் எதிர்ப்பு செயற்பாட்டையும் சரியாக நடைபெற தூண்டுகிறன.


நுண்ணுயிர்கொல்லிகளின் பயன்பாடு

மனிதனை பல்வேறு தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பதில் நுண்ணுயிர் கொல்லிகள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. இவற்றின் கண்டுபிடிப்பின் பின்பே பல தொற்று நோய்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன எனபது கவனத்திற்கு உரியது.
இவை மனிதனை மட்டுமன்றி மிருக வளர்பிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறன.


அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் மொத்த நுண்ணுயிர் கொல்லி பாவனையில் பாதிக்கும் மேற்பட்ட அளவு விலங்கு வேளாண்மைக்கும், பயிர் செய்கைக்கும் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளில் நோயை நீக்க மட்டுமன்றி அவற்றின் வளர்ச்சியை கூட்டவும் விலஙகுணவுகளில் இவை பயன்படுத்தப்படுகிறன. ஸ்ரெப்றோமைசின் , ஒட்சி ரெற்ற சைக்கிளின் (streptomycin, oxytetracycline) ஆகியவை மரக்கறிகளிலும், பழங்ளிலும் பக்ரீரியாக்களினால் ஏற்படும் நோயை கட்டுப்படுத்தப்பயன் படுத்தப்படுகிறன.

மனிதன், விலங்குகளுக்கு மருந்தாக பயன் படுத்தபடும் நுண்ணுயிர் கொல்லிகளில் ஒருபகுதி உடலில் அனுசேப செயற்பாடுகளால் பிரிந்தழிவுக்கு உள்ளனாலும், பெரும்பகுதி மனித, விலங்கு கழிவுகளுடன் சூழலுக்கு வெளியேற்றப்படுகிறன.

கடந்த சில பத்தாண்டுகளில் மட்டும் 12500 தொன் நுண்ணுயிர் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் பாவனை வரும் காலத்தில் அதிகரிக்கும். உடலியல் செயற்பாட்டால் பிரிந்தழிந்தவை பொக மிகுதியான பல ஆயிரம் தொன் நுண்ணுயிர் கொல்லிகள் சூழலுக்கு மனித / விலங்கு கழிவுகளுடன் வெளியேற்றப்பட்டுள்ளன. அண்மைய சோதனைகளின் படி இவற்றை நகர கழிவுகள், விவசாய கழிவுகள் என்பவற்றில் மீந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கழிவு பொருட்களில் மீந்திருக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் ஆறுகள், நீர்தேக்கங்கள், நிலத்தடி நீர் நிலைகளை சென்றடைவதில் ஆச்சரியபட ஏதுமில்லை.

ஐக்கிய அமெரிக்க நாடுக்ளில் மட்டும் ஆறுகளில்: 170,750 miles, நீர் தேகங்களில் 2,417,801 acres , கண்டல் நிலங்களில் 1,827 square miles விவசாய நடவடிக்கையால் மாசாக்கம் அடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறன. ( இக்கணிப்பு தனியே நுண்ணுயிர் கொல்லி மாசாக்கத்தை மட்டும் கருதவில்லை. ஆனால் விவசாய நடவடிக்கை எனும் போது அதற்குள் நுண்ணுயிர் கொல்லிகளின் மாசாகமும் அடங்கும்.)
இவை எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறன.

இயற்கை சூழலில் பல்வேறு பக்ரீரியாக்கள் ஒன்றாக காணப்படுகிறன. இவை ஒரு சமனிலையை தமக்குள் பேணி வருகிறன. சில நுண்ணங்கிகள் நுண்ணுயிர் கொல்லிகளை உற்பத்தி செய்வதன் மூலம் தமக்கு பொட்டியான நுண்ணங்கிகளை அழித்து தாம் சூழலில் நிலைத்திருக்க முயற்சிக்கும். அதே நேரம் மற்றைய நுண்ணங்கிகள் நுண்ணுயிர் கொல்லிகளை செயல் இழக்க செய்யும் பொருட்களை சுரந்து அவற்றில் இருந்து தப்பிவாழ முயற்சி செய்யும். இயற்கையில் இது ஒரு சமநிலையில் பேணப்படுவதால் பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் கழிவுகள் மூலம் சூழலை அடையும் நுண்ணுயிர் கொல்லிகள் இச்சமனிலையை குழப்பி, நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பு உள்ளவை போக ஏனைய நுண்ணங்கிகளை அழிக்கிறன. இதனால் நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பான நுண்ணங்கிகள் அசாதாரணமாக பெருக்கமடைய ஆரம்பிக்கிறன.


இவற்றில் மனிதனுக்கு நோய் விளைவிக்கும், நோய் விளைவிக்காத நுண்ணங்கிகளும் அடங்கும். இவ்வகை பக்ரீரியாக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் பெருக்கம் அடைந்தாலும் ( அதாவது நுண்ணுயிர் கொல்லிகள் கழிவகற்றப்படும்/ மாசாக்கப்படும் இடங்கள்) இலகுவில் பல்லாயிரம் கிலோமீற்றர் தூரத்துக்கு காற்று, நீர், உணவு, விலங்குகள், மனிதன் மூலம் கடத்தப்படக்கூடியவை.

உதாரணமாக

Cefotaxime எனும் நுண்ணுயிர் கொல்லிகளிற்கு எதிராக தொழிற்படும் நொதியங்கள் (Enzyme) Cefotaximases (CTX-M என்ற குறிட்டு பெயரை கொண்டவை) உற்பத்தி செய்கின்ற நுண்ணங்கிகள் பல நாடுகளிலும் அறியப்பட்டுள்ளன. இவற்றில் CTX-M 15 எனுன் குறியீட்டு பெயர் உடைய நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகள் 1999 ஆண்டு இந்தியாவின் புது டெல்லியில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பாட்ட நோயாளிகளில் முதன் முதல் கண்டரறியப்பட்டன. இதற்கு 3 ஆண்டுகளின் பின் 2002 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் இதே நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகள் நோயளிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டாண்டு காலத்துக்குள் இதே நொதியத்தை உற்பத்தி செய்யும் நுண்ணங்கிகள் போலந்து, கனடா, பல்கேரியா, இத்தால், ரஸ்யா, ஐக்கிய இராச்சியம், தாய்வான் என உலகெங்கிலும் கண்டறியப்பட்டுள்ளன. கனடாவில் ஆரம்பத்தில் CTX-M 14 எனும் நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகளே அதிகளவில் இருப்பதாக அறியப்படிருந்தன. ஆனால் தற்போது CTX-M 15 ஐ சுரக்கும் நுண்ணங்கிகளின் அளவு வைத்திய சாலை நுண்ணங்கிகளில் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.


மிக முக்கியமாக கருத்தில் எடுக்க வேண்டிய விடயம் இந்த நுண்ணுயிர் கொல்லிக்கு எதிரான நொதியத்தை சுரப்பதற்கு காரணமான பரம்பரை அலகுகள் (Genes) ஒரு நுண்ணங்கியில் இருந்து இன்னுமொரு நுண்ணங்கிக்கு பிளஸ்மிட்டுக்கள் (Plasmids) எனும் பொருட்கள் மூலம் கடத்தப்படக்கூடியவை. இதனால் இவற்றை கொண்டிருக்காத சாதாரண நுண்ணங்கிகளும் இலகுவில் இவற்றை தமது பரம்பரை அலகுகளில் சேர்த்துகொண்டு நுண்ணுயிர் கொல்லிகளில் இருந்து தம்மை காத்துகொள்ள ஏதுவாகிறது

இதனால் ஏற்படுக்கூடிய பாதிப்புக்கள்மனிதனில் பாதிப்பை ஏற்படுத்தாத பக்ரீரியாக்களில் இருந்து இவ்வகையான பரம்பரை அலகுகள் மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியாக்களுக்கு கடத்தப்படலாம். இவ்வாறு நிகழும் போது இப்பக்ரீரியாக்கள் சாதாரணமாக பாவிக்கும் நுண்ணுயிரி கொல்லிகளுக்கு கட்டுப்படாது உடலில் பெருகி கொள்ளகூடிய சூழல் ஏற்படும்.
Staphylococcus aureus, Mycobacterium tuberculosis, Escherischia coli நோய் விளைவிக்கும் சில பக்ரீரியாக்கள் இவை நுண்ணுயிர் கொல்லிக்கான எதிர்ப்பு திறனை கொண்டுள்ளன.
இவ்வாறு ஏற்கனவே இருந்த நுண்ணுயிர் கொல்லிகளுக்கு கட்டுப்படாத நுண்ணங்கிகள் பெருக்கத்தொடங்கியதால் 1ம் ,2ம், 3ம் 4ம் என பல சந்ததி?? (Generation) நுண்ணுயிர் கொல்லிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

ஆனால் என்ன இவற்றுக்கும் எட்டிக்கு போட்டியாக பக்ரீரியாக்களும் நொதியங்களை உருவாக்கிய வண்ணம் தான் இருக்கிறன.

மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. இவ்வகை பக்ரீரியாக்கள் (எதிர்புள்ள) மனித குடல்களிலும் காணப்படுகிறன. ஒருவர் பல நாடுகளுக்கும் பயணம் செய்வாராக இருந்தால அவர் பயணம் செய்யும் அனைத்து நாடுகளிலும் இவ்வகை பக்ரீரியாக்களை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு தான் தன் நாட்டுக்கு திரும்புவார்.

அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் பயனாக கழிவு நீரை சுத்திகரிக்குக் புதிய படிமுறைகளின் மூலம் இன் நுண்ணுயிர் கொல்லிகளை அகற்ற முடியும் என அறியப்பட்டுள்ளது.

இம்முறை உலக நாடுகளில் பாவனைக்கு வர எவ்வளவு நாட்கள் எடுக்கும், பொதுவாக இவை மனித, குடிசார் கழிவு நீரே சுத்திகரிப்புக்கு உடபடுத்தப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிப்புக்கு உட்படாது நீர் நிலைகளை அடையும் கழிவு நீர், அபிவிருத்தி அடந்து வரும் நாடுகளில் எந்த பரிகரிப்புமே சரியாக நடைபெறாமல் அகற்றப்படும் கழிவு நீர் என்பவை எல்லாம் பிரச்சனைக்குரிய விடயங்களாகவே இருக்க போகிறன.உசாத்துணை, படங்கள்:


http://earthwatch.unep.net/emergingissues/health/antibioticresistance.php

http://www.tufts.edu/med/apua/Ecology/EIA.html

http://www.epa.gov/agriculture/ag101/impacts.html#table1

http://www.dhushara.com/book/genes/genaug/antibio.htm

Thursday, 15 February 2007

சாப்பிடலாம் வாங்கோ

இண்டைக்கு சுடச்சுட செய்த கரட் ரொட்டி எப்பிடி செய்யிறது எண்டத சொல்லப்போறன் :)


தெவையான பொருட்கள்


250 கிராம் கோதுமை மா

2 கரட்

1 வெங்காயம்

2 பச்சை மிளாகாய்

2 மேசைக்கரண்டி மாஜரின்

உப்பு சுவைக்கேற்ப

நீர்


வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை நல்ல குறுணலாக வெட்டிக்கொள்ளவும்.

கரட்டை கரட் சீவும் தட்டால் சீவி கொள்ளவும்.

சுவைக்கேற்ப உப்பு, மாஜரின், வெங்காயம், மா என்பவற்றை ஒன்றாக சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்.


பிசைந்த மாவை 3 அல்லது 4 பிரிவுகளாக பிரிக்கவும்


அடுப்பில் தோசைக்கல்லை சூடக்கி எண்ணேய் பூசி மாவை வட்ட வடிவில் தட்டி வேக விடவும். சிறிது நேரத்தில் மறுபக்கம் பிரட்டி சுட்டு எடுக்கவும்.


சம்பலும் இந்த ரொட்டியும் ஒரு பால் தேத்தண்ணியும் குடியுங்கோ.Tuesday, 13 February 2007

வல்லிபுரக்கோயில்......

யாழ்க்குடா நாட்டில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய விஸ்ணு கோயில் களில் வல்லிபுரக்கோயில் முக்கியமானது. (ஏனையவை யாழ்ப்பாணம் பெருமாள் கோயில், பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில்) யாழ்குடா நாட்டில் இருக்கும் கோயில்களில் மிகபெரிய இராஜ கோபுரம் உடைய கோயில்.


Image Hosted by ImageShack.us


முதன் முதலாய் கோயிலுக்கு போனது கடல் தீர்த்ததுக்கு.அதுக்கு பிறகு ஒரு நாளும் கடல் தீர்த்ததுக்கோ, அல்லது திருவிழாக்களுக்கோ போனதில்லை. ஈழத்தில் சைக்கிள் தான் பிரதான போக்குவரத்து சாதனம். அது எங்களுக்கும் விதி விலக்கல்ல. அந்த நேரம் தான் இந்திய ஆமி வந்து இருந்த நேரம், சண்டை ஏதும் தோடங்கேல்லை. நானும் சின்ன பொடியன். அக்காவும், அக்கவுடைய சினேகிதிகள், சகோதரர்கள் என ஒரு பட்டாளமே போச்சுது நானும் அவையோட சேர்ந்து போய் வந்தன்.
அதுக்கு பிறகு இந்திய இராணுவந்த்துடனான சண்டை தொடங்கி, இராணுவம் வெளியேறும் மட்டும் கோயிலுக்கு போனதில்லை.

இந்திய இராணுவம் போன பிறகு யாழ்குடா நாடு முழுக்க முழுக்க புலிகளின் கட்டுபாட்டுக்குள் வந்த பின் பல முறை போய் இருக்கிறேன்.


விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அப்பப்போ நடக்கும் விமான குண்டு வீச்சு, ஹெலி மூலமான தாக்குதல் என்பவற்றை தவிர்த்து எந்த நேரத்திலையும், எங்கையும் போய் வரலாம் எண்டு இருந்தது.

92/ 93 ஆண்டுகளிலை, ரீயுசனிலை படிச்ச பொடியள் கொன்ச பேரச்சேந்து சைக்கிளிலை மார்கழி ஞாயிறு க்கு வெளிக்கிடுவம். காலமை 6.30 /7 மணிக்கு எல்லாருமா செந்து வெளிக்கிட்டமெண்டா கண்டி வீதி (ஏ9) , கொடிகாமம் பருத்திதுறை வீதி வழியே பயணம் இருக்கும் ( பயண பாதையை வரைபடதிலை பச்சை கோட்டாலை போட்டு காட்டி இருக்கிறன். படத்திலை அழுத்தி பெரிசாக்கலாம்).

Free Image Hosting at www.ImageShack.us

(வரைபடம்: www.eelamweb.com இணையம்)
வழிலை சுட்டிபுரம் (சிட்டிபுரம்) அம்மன் கோயிலிலை நிண்டு கும்பிடுவம். அப்பிடியே பொன முள்ளி வெளி வரும், அதாலை தான் உப்பாறு பாயிறது.

காத்து எதிர் காத்தா இருக்கும். சைக்கிள் உழக்கிறது கஸ்டம். வெளிமுடிய கோயில் கோபுரம் தெரியும். எப்பிடியும் ஒரு எழேமுக்கால்/ எட்டு மணிக்கு கோயிலுக்கு போய் செந்திடுவம்.

கொயிலடிக்கு போனா முதல் போறது வல்லிபுர கோயிலுக்கு பின் பக்கமா உள்ள பிள்ளையார் கோயிலுக்கு. அங்க உள்ள கேணிலை குளிச்சு போட்டு பிள்ளையார கும்பிட்டு, அங்க வாற பிள்ளையளையும் கும்பிட்டு கொண்டு வல்லிபுர கோயிலுக்கு போவம்.

அங்க போய் ஆழுக்கொரு அரிச்சனை ரிக்கற் எடுத்து அரிச்சனைனை எவ்வளவு கெதியா முடிக்கேலுமோ முடிச்சு கொண்டு கடற்கரைக்கு போறதிலை தான் எங்கட தவனம் இருக்கும். அரிச்சனை முடிச்சு, கச்சான் வாங்கி கொண்டு, கடற்கரைக்கு போவம்.


Image Hosted by ImageShack.us
கடற்கரை கோயில்லை இருந்து 3 கிமீ இருக்கும். கோயில்லை இருந்து சைக்கிளிலை போகேலாது,நடை தான். நடக்கிறதிலையும் ஒரு சுகமிருக்கும். கடற்கரையை அடையிறதுக்கிடையிலை எப்பிடியும் இரெண்டு மூண்டு மண் புட்டியளை ஏறி கடக்க வேண்டி இருக்கும். ஒவ்வொண்டும் சரியான உயரமானவை (பனையளவு உயரம் வருமோ??)
யார் அந்த புட்டியளை முதல் ஏறிகடகிறது எண்டதிலை போட்டி வரும். எனக்கும் ஓட்டத்துக்கும் வெகுதூரம் எண்டதாலை நான் தான் கடைசியாளா இருப்பன். கடந்தா வாறது வங்க க்டல்.
கொண்டு போன கச்சானை எடுத்து கொறிச்சு போட்டு, கடறரையிலை ஓடி திரியிற நண்டை திரத்துறது, பிடிக்க போறது. ஆனா ஒரு நண்டும் ஆப்பிடாது.

பொற ஆக்கள் ஒருதருக்கும் நீச்சல் தெரியாது, ஆருக்குமேதும் நடந்தா கூப்பிட்ட குரலுக்கு வாறதுக்கு ஆக்களும் இல்லை. குடிமனையும் இல்லை. எல்லாரும் அரையளவு தழுமட்டும் தான் இறங்கி அடிக்கிற அலையிலை குளியல் போடுவம். ஒருதரும் குளிக்க எண்டு உடுப்பெல்லம் கொண்டு போறதிலை. போட்டு கோண்டு போன உடுப்புகளோட அப்பிடியே தான் குளியல். திரும்பி கோயிலுக்கு 3கிமீ நடக்கிறதுக்கிடையிலை எல்லா உடுப்பும் கடல் காத்துக்கு கய்ந்திடும், பிரச்சனை இல்லை.


Image Hosted by ImageShack.us


கொயிலடிக்கு திரும்ப 1/2 மணி ஆகும். அந்த நேரங்களிலை எப்பிடியும் மடங்களிலை பொங்கிற ஆக்கள் அன்னதானம் குடுக்கிற ஆக்கள் எண்டு கன பேர் இருப்பினம். அதிலை சாப்பிட்டு சைக்கிளை எடுத்து பிடிச்சா அடுத்து போய் நிக்கிறது வெளிச்ச வீட்டா அல்லது பருத்தி துறை துறைமுகமா இருக்கும். வெளிச்ச வீட்டிலை ஒரு முறை ஏறி பாத்திருகிறம்.ஏறும் போது எந்த சிக்கலும் இருக்காது , ஆனா இறங்கும் போது தான் பயமா இருக்கும்.

அப்ப சில வீடுகளிலை எள்ளுபாகு/ புண்ணாகோ? செய்து சுட்டச்சுட செய்து வாசலிலை வச்சிருப்பினம். எனக்கு நல்ல விருப்பமான ஒரு சிற்றுண்டி. அதை வேண்டி சாப்பிட்டு கொண்டு பருத்திதுறை யாழ்ப்பாணம் வீதியால வீட்ட திரும்புவம்.வழிலை 1 ம் கட்டை எண்டு நினைக்கிறன் ஒரு பூங்கா இருந்தது அதோட ஒரு சின்ன வாசிக சாலையும் இருந்தது. அந்த பூங்கவிலை போய் கொன்ச நேரம் இருப்பம், சிலர் ஏதும் புத்தகம் வாசிப்பாங்கள். அங்கயிருந்து வெளிக்கிட எப்பிடியும் 4.30 / 5 மணியாவது ஆகும். அதுக்கு பிறகு தான் வீட்டை வெளிக்கிடுவம் பயணம் பருத்திதுறை-சாவச்சேரி வீதியாலை கனகம் புளியடி புத்தூர் சந்தி போய் வீட்ட போக இரவு 7 மணியாகும்.

மிக மிக இனிமையான நாட்கள். பல முறை இவ்வாறு போய் இருக்கிறம் எத்தனை முறை போனாலும் எங்கடை பயண பாதையும், செய்யிற வேலையளும் ஒண்டு தான். எத்தனை முறை சென்றாலும், சலிக்காத பயணங்கள் அவை.
எனறைக்கு யாழ்குடா நாடு இலங்கை அரச கட்டுபாட்டுக்குள் வந்ததோ அன்றைக்கு துலைந்தது எங்கட சந்தோசங்களும், சுததிரமான பயணங்களும்.

என்னவளே என்னவளே

Image Hosted by ImageShack.us

இந்த பையனை போல பாட்ட மட்டும் பாடி கொண்டு, சொல்ல வேண்டிய விசயத்தை சொல்லம இருந்திடாம


என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்


என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்

என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்

என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

உயிரில் பூப்பறித்த காதலியும் நீதான்
உள்ளம் தேடுமொரு தேவதையும் நீதான்
இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும் பூமழையும் நீதான்

வேர்க்க வைத்தாய் நீதான் நீதான்
விசிறிவிட்டாய் நீதான் நீதான்
தேடி வந்தாய் நீதான் நீதான்
தேட வைத்தாய் நீதான் நீதான்
புதையலைப் போலவந்த்தே கிடைத்தவளும் நீதான்
தெரியாமல் என் மனதைப் பறித்ததும் நீதான்

என்னவளே என்னவலே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்

என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

என்னை மூடிவிடும் பெண்பனியும் நீதான்
குளிரும் மார்கழியில் கம்பளியும் நீதான்
என்னைத் தூஙவைக்கும் தலையணையும் நீதான்
தூக்கம் கலைத்துவிடும் கனவுகளும் நீதான்
மோகமெல்லாம் நீதான் நீதான் முத்தஙளும்
நீதான் நீதான்
புன்னகையும் நீதான் நீதான் கண்ணீரும்
நீதான் நீதான்
கண்களை மூடிவிட்டே ஒளிந்தவளும் நீதான்
ஒளிந்தவனின் அருகில் வந்து அணைத்ததும் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்

என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

(இந்த பாடலின் முதல் இரண்டு வரிகளும் தேவையற்றவை என கருதியதால் இங்கு இடவில்லை)

இந்த பாடலை பாடினது மனோ, சுஜாத்தா
இசை தேவா
எழுதினது??

இந்த பையன் போல துணிவா சொல்லிடுங்க

Image Hosted by ImageShack.us

Thursday, 8 February 2007

இரண்டு இரண்டு

எல்லாரும் இரண்டு இரண்டா படம் காட்டீனம். சயந்தன் இரண்டு திகதிலை எடுத்தன் எண்டு படம் காட்டினார். சினேகிதி இரண்டு காலத்திலை எடுத்தன் எண்டு படம் காட்டினா.
இப்பத்தையான் தமிழ்மண பொது விதியை நானும் மீறகூட எண்டதுக்காக நானும் படம் காட்டுறன். :) :)
ஆனா நான் காட்டுற படங்கள் இரண்டு காலம், இரண்டு நாடுகள், இரண்டு வெவ்வேற இயற்கை சூழல் , இரண்டு குவியதூரங்கள்/ பார்வைப்புலங்கள் ??? எண்டு கனாக்க இரண்டுகளை ஒண்டா சேத்து காட்டி இருக்கிறன். ஆனா படங்களிலை ஒரு ஒற்றுமை, இரண்டு தொகுதியும் மாலையிலை எடுத்தவை.
பாத்து ரசியுங்கோ.


Wednesday, 7 February 2007

Reduce tution fee- Day of action

Reduce tution fee- National Day of Action- Feb 07 இது கனடாவில் இன்று அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைகழக மாணவர்களால் பல்கலைகழக, கல்லூரி கட்டணத்தை குறைக்குமாறு நடத்தப்பட்ட போராட்டம்.
இந்த நிகழ்வு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது/ அதை எப்படி இங்குள்ள ஊடகங்கள் செய்தியாக்குகிறன என்பதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மாநில அரசும் , கனேடிய மத்திய அரசும் இதற்கு எவ்விதத்தில் செயற்படப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

இது சம்பந்தமாக நடந்த அறிமுக கூட்டம் ஒன்றில் மாணவர் தலைவர் ஒருவரால் சொல்லப்பட்ட செய்தி ஒன்று எனக்கு ஒரு உண்மையை தெளிவாக்கியது. எல்லா ஊரிலும் அரசியல் வாதிகள் தமது வாக்கில் தான் குறியாக இருப்பார்கள் என்பது. இங்குள்ள மாநில கல்வி அமைச்சரை சந்தித்த போது கல்வி அமைச்சர் கூறினாராம், கனேடிய மாணவர்களுக்கு கட்டண குறைப்பை பற்றி பரிசீலிக்கலாம். ஆனால் சர்வதேச மாணவர்கள் தமது கவனத்துக்கு உரியவர்கள் அல்ல என்பதாக. மாணவ தலைவர் கூறியது உண்மையானால் அரசியல்வாதிகளின் நோக்கம் எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.வின்னிபெக் இல் உள்ள மாநில பாராளுமன்றின் முன் இரண்டு பலகலை கழக மாணவர்கள் ஒன்றுகூடி இருந்தனார். அங்கு கூடி இருந்த மாணவர் எண்ணிக்கை எனக்கு ஏமாற்றத்தை தந்தது. பல்கலைகழக வகுப்புக்களும் நடந்தன. பெரும் எண்ணிக்கையானோர் வகுப்பில் தான் இருந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்.


மிகக்குளிரான வெளிச்சூழல் குறைவான மாணவர் பங்களிப்புக்கு ஒரு காரணமாக இருக்க முடியும். அல்லது அனைத்து நிகழ்வுகளுமே இப்படி குறைவான மாணவர் பங்களிப்புடன் தான் நடைபெறுமா?? அதை இங்கு நெடு நாட்களாக இருப்பவர்கள், அறிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.

இங்கு மாணவர் போராட்டத்தை அடுத்து நியு பவுண்லாந்து மாநிலம் கட்டணத்தை ஏற்கனவே குறைத்ததாகவும் அறிய முடிந்தது.

எனக்கு ஏன் எண்ணிக்கை ஏமாற்றத்தை கொடுத்தது என்றால், எனது ஒப்பிடுகை ஈழத்து நிகழ்வுகளொடான ஒப்பீடாகவே இருந்தது.ஈழத்தில் இருக்கும் காலத்தில் பல்வேறுவகையான மாணவர் நிகழ்வுகளை பார்த்திருக்கிறேன். ஒவ்வோரு நிகழ்வும் மிகவும் உணர்வு பூர்வமாக, பல்லாயிரக்கணக்கான மாணவர்களால் ஒருங்கிணைவாக நடாத்தப்படும். போராட்டம்/ பகிஸ்கரிப்பாக இருந்தால் ஒருமித்து மாணவர் சமூகமே அந்நிகழ்வில் இறங்கி இருக்கும். அண்மையில் கூட வடமராட்சி மாணவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து 2 வாரமாக யாழ்குடா நாடு தழுவிய பொராட்டம் பகிஸ்கரிப்பு போராட்டம் நடாத்தப்பட்டு வருவதாக தமிழ்நெட் செய்தி தெரிவிக்கிறது. அந்த போராட்டம் யாராலும் கண்டுகொள்ளப்படாமலே போய்கொண்டு இருக்கிறது.

அதே போன்றே நான் ஈழத்தில் இருந்த காலப்பகுதியில் பொங்குதமிழ் நடாத்துவதில் முன்னின்று உழைத்த யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயலாளர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட போது பல்கலைகழக மாணவர் பகிஸ்கரிப்பை ஆரம்பித்தனர். அன்று இருந்த அரசு உடனடியாக பல்கலைகழகத்தை மூடி மாணவர்கள் பலகலைகழகத்துக்குள் நுளைய தடை வித்தித்தது. இதன் மூலம் மாணவர்களின் போராட்டத்தை தோற்கடிக்க முனைந்தது.

கடந்த வருடம் கூட துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற ஊர்வலம் இராணுவத்தால் அடாவடியாக அடக்கப்பட்டது.

அண்மையிலும் யாழ் பல்கலைகழக மாணவர் தலைவர் ஒருவர் கைதுசெய்யப்ப்பட்டார். யாழ் பல்கலைகலைகழகம் இன்று வரை மூடப்பட்டே உள்ளது.

மாணவர் போராட்டங்கள் பல கோரிக்கைகளை வைத்து ஈழத்தில் ஆயினும் சரி தென் இலங்கையில் ஆயினும் சரி நடாத்தப்பட்டாலும் அவற்றிற்கான விளைவுகள் எதுவுமே கிடைத்ததாக அறியவில்லை.

Tuesday, 6 February 2007

ஒரு வெண் மாலை பொழுது...

ஆற்றம் கரையை நோக்கி ஒரு நடை போன போது எடுத்தது


இந்த படங்களில் பனி உறைந்து போய் உள்ள Red river இன் மேல் அமைக்கப்பட்ட பனிசறுக்கு திடலில் பலரும் பனி சறுக்கு (ice skating) விளையாடுறதை பார்க்கலாம். முதலாவது படத்திலை பாத்திங்கள் எண்டால் ஆத்தின் ஒருபக்கம் நீர் போதுமான அளவு உறையாது இருப்பதால் ஆபத்து எச்சரிகைக்காக வேலி போட்டிருக்கு.
நான் இன்னும் ஒரு நாளும் உந்த விளையாட்டுக்கு போகேல்லை.போக வேணும் எண்டு ஆசை தான். ஆனா அண்மையிலை ரொரண்டோவிலை நீர் நிலை (குளம்???) ஒண்டுக்கு மேலாலை நடந்து கடக்க வெளிக்கிட்டு பனி உடைந்து விழுந்து இறந்த 2 பள்ளி மாணவர்களின் கதையை கேட்ட பிறகு இறங்க யோசினையா தான் கிடக்கு.

Sunday, 4 February 2007

வின்னிபெக்- Winterpeg

நான் இப்ப இருக்கிறது வின்னிபெக் (Winnipeg), கனடாவிலை. இங்க வாறதுக்கு முதல் ஒரு பஸ் பயணத்திலை கனடாலை இருந்து சுற்றுலாக்கு வந்த ஒராளை சந்திச்சன். அவா வங்கூவரிலை இருந்து வந்த எண்டா. அப்ப நான் சொன்னன் குறுகின காலத்திலை நான் வினிபெக்குக்கு தற்காலிகமா குடிபெயர போறன் எண்டு. அப்ப அவ ஒரு புன் சிரிப்போட சொன்னா என்னோட கனடா வாழ்க்கைக்கு நல்வாழ்த்துக்கள் எண்டு. பிறகு சொன்னா ஒரு விசயம், வின்னிபெக் ஐ தாங்கள் Winterpeg எண்டு தானாம் சொல்லுறது, சரியான குளிரான இடம் எண்டும் சொன்னா. அப்ப எனக்கும் தெரியும் கனடா குளிர் எண்டு தான் சொல்லுறவை எண்டு வலு துணிவா சொல்லிபோட்டன். இங்க வந்த பிறகு தான் விளங்கிச்சுது அவ சொன்னதின்ரை தாற்பரியம்.
இண்டைக்கு காலமை -34 டிகிரி செல்சியஸ், ஆனா காத்தோட -43 டிகிரி செல்சியஸ் ஆ தெரியும் எண்டு இருந்திச்சு. நான் இருக்கிற வீட்டு காரன் சொன்னார் இண்டைக்கு இரவு காத்தோட -52 டிகிரி செல்சியசா உணரலாம் எண்டு.சரி நான் இருக்கிற இடத்தை பற்றி சொல்லுவம்...
இது

கனடாவின் மேற்கு பகத்திலை இருக்கிற ஒரு மனிரோபாமானிலம். மற்றைய மேற்கு மானிலங்களான சஸ்கடர்சுவான், அல்பேட்டா, பிரிட்டிஸ் கொலம்பிய போன்றவற்றையும், கிழக்கு மானிலங்களான ஒன்ரரியோ, கியுபெக் என்பவற்றையும் இணைக்கும் இடமாக இருக்கிறது.தலை நகரம் வின்னிபெக்.நகரமக்கள் : தொகை 619,544


சிவப்பு ஆறு (Red river), Assiniboine River எண்டு இரண்டு ஆறுகள் பாயுது.1738 இல் முதல் விற்பனை மையம் திறக்கப்பட்டது.
1870 இல் மனிரோபா கனடாவின் கொன்பெடரேசனாக இணைந்து கொண்டது

இந்த மானிலத்தின் பாரளுமன்ற கட்டிடம் (Manitoba Legislative Building) 1920 இல் கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்தின் உச்சிலை "தங்க பையன்" (Golden boy) எண்டு ஒரு சிலை வச்சிருக்கு.
அந்த கட்டிடத்திலை இருந்து மேலும் சில படங்கள்
இது தான் பைசன் (bison) எனும் மாடு?? இங்கு வெள்ளையர்கள் குடியேறிய காலத்திலை வேட்டையாடி பெருமளவு அழிந்துவிட்டது. இப்ப அது தான் இந்த மானிலத்தின் சின்னம்.


மேலும் இந்த இடத்தை பற்றி வாசிக்க http://en.wikipedia.org/wiki/Winnipeg,_Manitoba க்கு போங்கோ.

ஒருக்கா யோசிச்சு பாத்தன் இத மாதிரி சிறிலங்கா பாரளுமன்றத்துக்கை போய் படம் எடுக்க முடியுமோ எண்டு?யாருக்கும் இப்படி அனுபவம்??

வலைப்பதிவிலை நிறைய பேர் நல்ல சுவாரசியமா எழுதீனம். சிலரோடை எழுத்தை வாசிக்கேக்க, அவை எழுதின கதையோ/ கவிதையோ என்னை அறியாமலே உணர்வுகளை கிளறி விட்டிடும். சொந்த அனுபவங்களையும் நிறைய பேர் எழுதீனம். அதுகளை அப்பப வசிச்சு பொட்டு நானும் ஏதும் எழுதி பாப்பம் எண்டு இருப்பன். ஆனா ஒண்டுமே எழுத வராது. பள்ளிகூடம் பொற நேரம் சைக்கிள் ஓடேக்கையோ இல்லை எங்கையன் தொடருந்துகளிலை போகேக்கயோ பழைய நினைப்புகள் எல்லாம் ஒண்டொண்டா வந்து போகும். அப்ப நினைப்பன் இதுக்கள் எல்லத்தையும் எழுதினா எவ்வளவு நல்லா இருக்கும் எண்டு. ஆனா வீட்டை வந்து எழுதோணும் எண்டு வெளிக்கிட்டா ஒண்டுமே வராது. உப்பிடி கனதடவை எழுதொண்டுமெண்டு பேப்பரும் பேனையோடையும் மணித்தியால கணக்கா இருந்திருக்கிறன். ஆனா கடைசியா பத்த இரண்டு வரிகூட பேப்பரிலை எழுதுபட்டிருக்காது. நேரம் வீணா போனது தான் மிச்சமா இருக்கும்.

உங்கள் ஆருக்கும் இப்பிடி அனுபவம் இருக்கோ?
ஆனாலும் இனி எதாவது எழுத வேணும் எண்டு முடிவெடுத்திருக்கிறன். முடியுமோ?? எனக்கு தெரியேல்லை.

புதிசாய் ஒரு பதிவு

வணக்கம்,
என்னை பற்றி சொல்லிறதெண்டா ஈழத்திலை இருந்து அண்மைய காலத்தில் புலம்பெயர்ந்த மிக மிக சாதாரணமான ஒருத்தன். ஈழப்போர் ஆரம்பித்த காலத்தில் பிறந்து, போருக்குள்ளேயே வளர்ந்தவன்.

வலைப்பதிவுகள் அறிமுகமான நாளிலை இருந்து எனக்கும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்க வேணும், எழுத வேணும் எண்டு ஆசை. ஆனா என்னத்தை எழுதுறது?
கதையா, கவிதையா இல்லை அரசியலா? இதுகளிலை எதுகும் தலைகிழா நிண்டாலும் வராதெண்டது தெரியும்.

ஆனாலும் எதாவது எழுதி பாப்பம் எண்டு வந்திருக்கிறன்.