Saturday 31 March 2007

நானே நானா இல்லை கிறுக்கா - Wierd





ஆளாளுக்கு போட்டி போட்டு நானா நீயா கிறுக்கன்/ கிறுக்கி, லூஸ் எண்டு எழுதி இப்ப கொஞ்சம் ஓய்ஞ்சிட்டாங்க போல கிடக்கு. என்னையும் உந்த விளையாட்டுக்கு கானா பிரபா வாத்தியாரும், மலைநாடானும் கூப்பிட்டு இருந்திச்சினம். கானா பிரபா வாத்தியார் கொஞ்சம் கூட போய் 1000 சொல்லிலை :))))) காட்டுரை எழுத சொல்லி இருந்தார். சரி நானும் என்னோட வித்தியாசமான நடவடிக்கையள சொல்லுறன். அதை கிறுக்கெண்டு சொன்னா கிறுக்கன், லூசு தனாமான காரியங்கள் எண்டா லூசன் எப்பிடியும் சொல்லலாம்.....



கோபம் வரும் எப்ப வரும் ஏன் வருமெண்டு தெரியா.... ஊரிலை சுடுதண்ணி குடிச்ச மாதிரி எண்டு சொல்லுவினம்.... அப்பிடி வரும். இப்ப அதை குறைக்க வேணும் எண்டு நினைச்சு, கோபத்தை அடக்கி கொண்டு வாறன்... அதோட இப்ப ஆக்களோட கதைக்கிறதெல்லாம் தொலைபேசிலை தானே தொலைபேசி உரையாடல் அப்பிடி கோபம் வர செய்ய தக்க மாதிரி இருக்காது தானே.
கோபம் வந்தா பேசுறதுக்கெண்டு தனியா விசேசமான சொல்லுகள் எல்லாம் தேவையில்லை நான் கதைக்கிற விதமே காட்டி குடுக்கும் அத. ஆனா கோபம கதைச்சு அடுத்த சில நிமிசத்தில்லையே ஏனடா அப்பிடி செய்தன் எண்டு வருத்தம் வரும்... ஆனா கிறுக்கு குணம் விடாது கொஞ்ச நேரத்துக்க போய் சமாதானம் ஆக.

சின்ன வயதிலை என்னோட கோபத்தாலை ஒரு கோழி குஞ்சு உயிர் பலியாகி இருக்கு. ஊரிலை வீடுகளிலை கோழி வளக்கிறதும்,அடைகட்டி குஞ்சு வளக்கிறதும் வழக்கம்.எனக்கு பொரிச்ச 2- 3 நாள் கொழி குஞ்செண்டா கொள்ளை விருப்பம்.
பள்ளிகூடத்தாலை வந்து கொழிகுஞ்சுகளுக்கு தீன் போட்டு மேய திறந்து விடுறதும், இடைக்கிடை அதுகளை காகம், வல்லூறு பருந்து/ பிராந்து பிடிக்காம கவனிக்கிறதும் நான் தான். ஒரு நாள் அப்பிடி திறந்து விட்டிடு இருக்க வல்லூறு குஞ்ச பிடிக்க வந்து விழுந்திச்சு , ஆனா கோழி கலைச்சு போட்டுது. முதல் முறை தோத்த வல்லூறு அடுத்த முறை விழ முதல் குஞ்சுகளை கரப்புக்க அடிக்க வேணும் எண்டிட்டு கரப்புக்க தீன போட்டு கூப்பிட்ட தாய் கோழி வராம அடம்பிடிச்சு கொண்டு நிண்டிச்சு எனக்கு சரியான கோபம் வந்திட்டு... பக்கத்திலை கிடந்த பாளை ஒண்டால எடுத்து அடிக்க விசுக்கினா தாய் கோழிலை படாம சின்ன குஞ்சிலை பட்டு துடிக்க தொடங்கீட்டு உடன கோபம் போய் அந்த குஞ்ச தூக்கி வச்சு தடவினது தான் ஆனா அது சில நிமிசத்திலை செத்து போச்சு... :(

ஆனா என்னை புதுசா சந்திக்கிற ஆக்கள், எங்கயும் போற இடங்களிலை என்னை கண்டாக்கள் சாந்த சொரூபி எண்டும் , கோபமே வராத ஆள் எண்டும் கணக்கு போடுவினம்.... :) அவையே ஒரு கொஞ்ச நாள் பழகிச்சினம் எண்டால் தலைகீழ சொல்லுவினம்...:)


வேலையோ படிப்போ ... படிக்க வேணும் , அந்த வேலையா செய்து முடிக்க வேணும் எண்டு கொஞ்ச நாளா யோசிப்பான் ஆன ஒண்டுமே செய்யம சும்மா நேரத்தை போக்காட்டி கொண்டு திரிவன். எனகே ஒரு பயம் வரும் இத நேரத்துக்கு செய்து முடிக்க மாட்டன் எண்டு.. .... பிறகு இரவு பகல் எண்டு சாப்பாட்டையும் கவனிக்காம அந்த வேலைய செய்து முடிச்சு போட்டு தான் அடுத்த அலுவல் நடக்கும்.... அப்பிடியான நேரங்களிலை நான் இருக்கிற அறை தான் உலகமா இருக்கும்.
ஊரிலை சோதினைக்கு படிக்கிறதெண்டா பிலத்து கத்தி கத்தி தான் படிப்பன்.... சுத்தி இருக்கிற வீட்டு காரர் எல்லாருக்கும் நான் எப்ப படிக்கிறன் எத்தினை மணிக்கு நித்திரைக்கு போறன் எண்டது தெரியும். அப்பிடி என்னோட கத்தல் இருக்கும்...
சோதினைக்கு போக முதல் படிப்பிச்ச முழுதையும் ஒருக்கா வாசிச்சு முடிக்காட்டி திருப்தியே வராது....
உதாரணத்துக்கு ஒரு 10 (120 பக்கம் கொண்ட) கொப்பியளிலை விஞ்ஞான குறிப்புக்கள் இருந்தா, அத்தனையையும் சோதினைக்கு முன் இருக்கும் 1 அல்லது 2 நாளுக்க வாசிச்சு முடிக்க பாப்பன். வாசிச்சு முடிச்சு தான் சோதினைக்கு போறது. க .பொ .த சாதாரண தரம் முடிக்கும் மட்டும் எனக்கு பழைய சோதினை வினா தாள் களை வாச்சு கொண்டு அதுக்கேத்த மாதிர் தயார் பண்ணுற பழக்கமே இருக்கேல்லை. அதிலை நம்பிக்கையும் இருக்கேல்லை. பிறகு உயர் தர வகுப்புக்கு வந்தா பிறகு தான் கொஞ்சம் கொஞ்சம் பழைய பரீட்சை வினா தாளுகளை செய்து பாத்தது. ஆன அப்பிடி படிக்கிறதிலை எனக்கு திருப்தியே வாறேல்லை.

அதோட படிச்சு கொண்டிருக்கிற போது சோம்பல் முறிக்கிற குணம் இருக்கு .. அப்பிடி முறிக்கேக்க வித்தியாசமா ஒரு சத்தம் போடுவன் றூமிலை நிண்டு படிச்ச நேரம் அடுத்தடுத்த றூமிலை இருக்கிற போடியள் நக்கல் அடிப்பாங்க.. ஆன அந்த குணம் இன்னும் விட்டு போகேல்லை...

கதைபுத்தகம் வாசிக்கிறது மனதுக்குள்ள தான் அதை சத்தம் போட்டு வாசிக்க மாட்டன். ஒரு கதைபுத்தகம் வாசிக்க தொடங்கினா அத முடிக்கும் மட்டும் வேற வேலை ஓடாது. பொழுது போக்குக்கு கதை வாசிக்கிற எண்டுறதை விட அப்ப கதை வாசிக்கிறது தான் வேலை மாதிரி இருக்கும் :). செய்ய வேண்டிய வேலையள் எல்லாம் பொழுது போக்கு மாதிரி இருக்கும்.



நுள்ளு பிறாண்டி கிள்ளுபிறாண்டி கொக்காரை என்ன பூ

என்னடை இருந்த இன்னொரு குணம் நுள்ளுறது.... சின்ன பொடியனா இருக்கேக்க எங்கட ஆச்சி (அம்மம்மா), பெரியம்மா மார் எல்லாரும் என்னட்டை நுள்ளு வாங்கி இருக்கினம். அவையிடை வயது போய் சுருங்கின தோல் தொழ தொழ எண்டு இருக்கும். அத பிடிச்சு நுள்ளி போட்டு ஒரே ஓட்டமா ஒடிடுவன். வளந்த பொடியனா வந்த பிறகும் பெரியம்மா மார் கண்டா அந்த கதையை சொல்லி சொல்லி சிரிப்பினம். வளந்தா பிறகு அவைக்கு நுள்ளுறேல்லை ஆனா என்னொட சினேகிதர் மார் எல்லாம் அத தாங்க வேண்டி இருந்திச்சு. வகுப்பிலை நான் சரியான சாது, அப்பாவி ஆன இடையிலை பக்கதிலை இருக்கிறவருக்கு நுள்ளிபோட்டு இல்லை கூச்சம் காட்டி போட்டு இருந்திடுவன்.. அவை நெளிவினம் ஒண்டும் செய்ய ஏலா வத்தியார் நிப்பர் வகுப்பிலை...

ஏதாவது ஒரு பொருள் வாங்க வேணும் எண்டு நினைச்சா அதை வாங்கியே ஆக வேணும் விலை எண்டதை பற்றி யோசினை வராது. வாங்க வேணும் எண்ட பொருளை சுப்ப மாக்கட்டிலை கண்டா உடனை எடுத்து கூடையுக்க போட்டிடுவன். அதின் விலையை, அல்லது என்ன பிறாண்ட் எண்டதை எல்லாம் கவனிக்கிற இல்லை. ஆன பெரும் பாலும் அதே பொருள் வேற மலிவான பிறாண்ட் பக்கத்திலை இருக்கும் ஆனா அதை கவனிக்க யோசினை வராது. வாங்கி வீட்ட கொண்டு வந்தா பிறகு தான் யோசினை வரும் மலிவா வேற இடத்தை இருக்குமோ இல்லை அதே சுப்ப மாக்கட்டிலை இருக்குமோ எண்டு. அண்மையிலையும் உப்பிடி தான் கணனி வாங்கின்னான். எல்லாரும் கொஞ்சம் பொறு சேல் போடுவங்கள் எண்டிச்சினம், அண்ணனோட நண்பர் சொன்னார் தான் கணனி விற்பனை தான் செய்யிறன் ஒரு விலைப்பட்டியல் ஈ மெயில்லை அனுப்பிறன் அதுக்க பிடிச்சத தெரிவு செய்ய சொல்லி. சொல்லி இரண்டு மூண்டு நாளா அவர் பதில் போடேல்ல்லை. நான் போய் வாங்கி போட்டன். வெண்டி அடுத்த நாள் அவர் லிஸ்ட் அனுப்பினார்.. மலிஞ்ச விலையளிலை :(.

உடுப்பு வாங்கிறது... வீட்டிலை எனக்கு அக்கா , அண்ணா ஆக்கள் தான் உடுப்புகளை வாங்கி தாறது அந்த உடுப்புகளை போட்டு கொண்டு போன எல்லாரும் நல்ல செலக்ஷன் எண்டு சொல்லுவினம். ஊரிலை எனக்கு நான் உடுப்பு வாஙக போன எதை எடுக்கிற எதை விடுற எண்டு தெரியாம முழுசி போட்டு திரும்பி வந்திடுவன். ஆனா என்னோட நண்பர்கள் உடுப்பு வாங்கணும் எண்டா கூட்டி போய் தெரிவு செய்து குடுப்பன்.. அதை அவை போடும் போது மற்ற ஆக்களும் அதை நல்லா இருக்கெண்டு பாராட்டுவினம்.
புலம் பெயர்ந்தா பிறகு அண்ணா, அக்கா வேண்டி தாற விளையாட்டு கிடையாது தானே :( அதாலை உடுப்பெடுக்கிற போன என்னத்தை எடுக்கிற எண்டு தெரியாம பல கடையள் ஏறி இறங்கி ஒண்டும் வாங்காமலே கன நாள் திரும்பி வந்திருக்கிறன்.

எனக்கெண்டு சில இலக்குகள் விருப்பங்கள் இருக்கும் பொதுவா அதை யாருக்கும் சொல்ல மாட்டன். குடும்பத்தினருக்கு ஒரு மேலோட்டமான தகவல் தான் சொல்லுவன். பல சந்தர்பங்களில் என் குடுபத்தினருக்கே நான் இதை தான் குறிப்பா செய்ய போறன் எண்டு தெரியாம இருக்கும். சில பேர் எண்டா தாங்கள் இப்பிடி வர வேணும் அப்பிடி செய்வம், அத அடைய இப்பிடி செய்து கொண்டு இருக்கிறம் எண்டு சொல்லுவினம். என்னட்டை அப்பிடி வாடிக்கை கிடையாது. எதை செய்ய வேணும், அல்லது அடைய வேணும் எண்டு நினைக்கிறனோ அதை என்னொட பாட்டிலை செய்து கொண்டிருப்பன். சில நேரம் ஆருக்கும் தெரிஞ்சா நாவுறு படுத்தி காரியத்தை கெடுத்து போடுங்கள் எண்டு நினைக்கிறதும் உண்டு. அதை ஊரிலை சனம் வாயிலை போட்டிட்டும் எண்டு சொல்லுறது உண்டு. அதோட நான் நினைச்சதை சொல்லி அது கிடைக்காம போக சுத்தி இருக்கிறாக்கள் கவலைப்படாத, எண்டு அனுதாப வார்த்தைகள் சொல்லி இருக்கிற கவலையை இன்னும் கூட்டி போடுவினம் எண்டும் பயம் அல்லது முன்னெச்சரிக்கை எண்டும் சொல்லலாம். நான் நினைச்சதை செய்து முடிச்சு/ அடைஞ்சா பிறகு எல்லாரொடையும் பகிர்ந்து கொள்ளுவன். அப்ப மற்றவை ஆச்சரிய படுறதை பாக்கிறதிலையும் ஒரு சந்தோசம் வரும் :). அதே நேரம் என்னுடைய இந்த குணத்தால பல நண்பர்கள் என்னொட சண்டை/ மனஸ்தாப பட்டிருக்கிறார்கள். நான் நசுக்கிடம காரியங்கள் செய்யிறனான் எண்டு.



பயம்...


சின்னனிலை இரவிலை வெளில போறதெண்டா பயம்... அது கொஞ்சம் வளந்தா பிறகு குறைஞ்சிட்டு. ஆனா முதலே சொல்லி இருக்கிறன் விமான சத்தம் ஏற்படுத்தும் ஒரு பய உணர்வு. அதற்கு அடுத்ததாக கொஞ்சம் வளர்ந்திருக்கிற புற்தரை, ஆட்களால் பயன்படுத்தப்படாத புற்தரை. சில நேரங்களில் தெருவோர நடைபாதையின் அருகில் உள்ள புல் தரையில் கால் வைக்க வேண்டி வந்தாலும் அதில் நடக்க பொதுவாக மனம் ஒப்பாது. ஊரிலை ஆள் அரவமற்ற பகுதிகள் தெருவோரங்களில் மிதி வெடி எச்சரிக்கை குறிப்புக்களை பார்த்து பார்த்து அதை அப்பகுதிகளை தவித்து பழகி, அதனால் ஏற்பட்ட பய உணர்வு இன்றும்.. மனதில் இருக்கிறது.



இன்னும் கனக்க சொல்லாம் ஆனா கானா பிரபா வாத்தியாரோட 1000 சொல்லு கணக்கை :)))) விட கூடி போம் இதோட நிப்பாட்டுறன் :))).


என்ன நான் கிறுக்கனோ?

Monday 26 March 2007

குண்டு போட்டவர்கள் மீது விழுந்த குண்டு.....



படம்: தமிழ்நெட்


விமான குண்டு வீச்சு பற்றிய ஞாபக பதிவை 4 நாட்களுக்கு முன் (சயந்தன் -சோமி இருவரின் குரல் பதிவு வந்த போது) எழுத வெளிக்கிட்டு பாதியிலேயே எழுதியதை அழிச்சு போட்டு விட்டிட்டன்.

கட்டுநாயக்க விமான தளம் மீதான் தாக்குதல் இதை எழுத மீண்டும் தூண்டியது.

சியாமா செட்டி,அவ்ரோ, வை 8, 12 (சரக்கு விமானங்கள் ஆனா குண்டும் போடும்), ஹெலி புக்காரா, கிபிர், ..... இப்படி பல விமானங்களின் குண்டு வீச்சுக்களையும் பார்த்து சிதறிய உடல்களை கண்டு பழகி இப்ப இஞ்சை வந்தா பிறகும் எதிர்பாரத நேரங்களிலை ஹெலியோ இல்லை பிளேனுகளோ பறந்தா என்னையறியாமலே ஒரு திகில், பயம் வந்து போகும்.
ஹெலி, 50, 90 கலிபர் துப்பாக்கியால் சுடும் போது பனை மரம் சுத்தின அனுபவம், பாடசாலைக்குள் இருக்கும் போது இந்திய இராணுவ தாக்குதல் நடந்து அதுக்கு வாங்குகளுக்கு கீழ ஒழிச்ச அனுபவம், மல்ரி பரல் (பல்குழல் எறிகணை) எமது வீட்டுக்கு மேலால் கூவி சென்று அடுத்த ஊரை துவசம் செய்ய, பயத்தொடு படுத்திருந்தது.... இப்பிடி கனக்க இருக்கு. அத மாதிரி கன பேருக்கு இருக்கும்.

இதிலை ஒரு குண்டு வீச்சு சம்பவம் பற்றின நினைவை மட்டும் சொல்ல போறன்.

அப்ப 1993, யாழ்தேவி (கொழும்பு யாழ்ப்பாணம் ஓடின ரயிலின் பெயர்) எண்ட பெயரிலை ஆனையிறவில் இருந்து கிளாலி நோக்கி யாழ்கடனீரேரி ஓரமாக இராணுவம் தக்குதல் நடத்தி முன்னேறின நேரம். (கிளாலி, சாவகச்சேரி, என்பவை தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள இடங்கள். சாவகச்சேரி சண்டை நடக்கும் இடத்திற்கு அண்மையில் இருக்கும் சந்தையுடன் கூடிய சன செறிவான நகரபகுதி.)
அப்ப சண்டை நடந்து வெடிகேட்டாலும், சோதினையள், பள்ளிகூடங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.யாழ்தேவி இராணுவ நடவடிக்கை நேரம் எங்களுக்கு சோதினை ஒண்டு நடந்து கொண்டு இருந்தது.

ஒரு நாள் காலமை எங்களுக்கு சோதினை தொடங்கி ஒரு 1 மணித்தியாலம் இருக்கும் (3 மணி நேரம் ஒரு பாட சோதினை இருக்கும்). விமானங்கள், ஹெலி என்பனவற்றின் இரைச்சல் கேட்டக தொடங்கி இருந்தது. பயம் இருந்தாலும் சோதினை எழுதுவதில் தான் எங்கட சிந்தனை எல்லாம். ஆனா வந்த விமானங்கள் எமது பாடசாலை சூழலை வட்டமிட தொடங்கி இருந்தன.
விமானம் சுத்தும் சத்ததை வச்சு, விமானம் கிட்ட வருகிறதா? இல்லை தூரவா? விமானம் குண்டு வீச குத்துகிறதா? குண்டு வீசி மேலெழுகிறதா? என்பதை விமானத்தை பாக்காமலே மூடிய ஓரிடத்திலை இருந்து அனுமானிக்க கூடிய அளவுக்கு எங்களுக்கு அனுபவம் வந்திருந்தது.
பரீட்சை நிலையம், எமது பாடசாலை பிரதான மண்டபம், மற்றும் அதனோடு இணைந்த ஒரு மாடி கட்டிடத்தின் தரை தளம். பிரதான மண்டபத்தில் ஆண்களும், அடுத்த மாடி கட்டிட்டத்தின் தரை தளத்தில் பெண்களும் சோதினை எழுதி கொண்டிருந்தோம்.
விமானங்கள், ஹெலியின் வட்டமிடல் நாம் இருக்கும் இடத்தை மையம் வைத்து இருப்பதை உணர்ந்த போது மனம் படபடக்க தொடங்கினாலும், கட்டிடத்துக்கு வெளியே பாதுகாப்பு தேடி போவதால் ஏதும் வந்துவிடப்போவதில்லை என்பதும்,அத்தோடு சோதினை எழுதிய குறை வேறு. பொடியள் எல்லாரும் விமான பறப்பு சந்தம் கிட்டவா கேட்டா, குண்டு போட குத்துற சத்தம் கேட்டா சோதினை எழுதி கொண்டிருக்கிற மேசைக்கு கீழ போறதும், விமானம் தூர போக வெளீல வந்து எழுதுறதுமா இருந்தம்.மேசைக்கு கீழ போய் இருக்கிறதாலை எந்த பாதுகாப்பும் இல்லை எண்டாலும் ஒரு மன ஆறுதலுக்கு மட்டுமே அந்த முயற்சி.

ஆனா பெண்கள் குண்டு விழுந்து வெடிச்ச உடனம் வெளீல சத்தம் போட்டு கொண்டு வெளி விறாந்தைக்கு வாறதும், சோதினை மேற்பார்வையாளர்கள் அவர்கள் மேலும் வெளீல போகமல் உள்ள போக பண்ணுறதுமா இருந்திச்சினம்.
குண்டுகள் அண்மையாகவே வீசப்பட்டு சத்தங்கள் கேட்டாலும் எம்மால் வெளியே உடனே போக முடியாது. போனாலும் பயன் இல்லை.

குண்டு வீசி முடிந்து விமானங்கள் போன பின், சோதினையை குறையிலேயே நிறுத்தி விட்டார்கள். ஏன் எண்டா சண்டை நடக்கும் போது, மீண்டும் மீண்டும் வந்து குண்டு வீசுவார்கள்.
சோதினை மண்டபத்துக்கு வெளியே வந்து பார்த்த போது சாவகச்செரி நகரத்தில் இருந்த எரிபொருள் (மண்ணேணெய்) விறபனை நிலையங்கள் பாதிப்புக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்தன. ஆனால் அங்கு போக யாரும் தாயாரில்லை. அடுத்த சுற்று குண்டு வீச வரமுன் வீட்ட போக வேணும் எண்டது தான் எல்லாரோட நினைப்பும். உடன வீட்ட போட்டம். எதிர் பாத்த மாதிரியே அண்டைக்கு பின்னேரம் மீண்டும் விமானங்கள் குண்டு வீச வந்தன. அந்த நேரம் எமது பாடசாலையை அண்மித்தா இருக்கிற ஒரு பதுங்கு குழிக்கு 2 / 3 வீட்டு ஆக்கள் ஓடி போய் பாதுகாப்பு தேடி இருக்கிறார்கள். அதை சுத்தி சுத்தி வட்டமிட்ட விமானிகளும் அவதானித்து அந்த பதுங்குகுழியை இலக்கு வைத்து குண்டு வீசியதில் அந்த பதுங்கு குழிக்குள் இருந்த 8 பேர் இறந்து போனார்கள்.
அதில் எமது வகுப்பு தோழியும் ஒருத்தி, அவரும், அவரது அப்பா, அக்கா என 3 பேர், இன்னும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 8 பேர். காலையில் சோதினையில் சந்தித்த தோழி மலை பாதுகாப்பு தேடிய பதுங்கு குழிக்குள்ளேயே பிணமான அவலம். இன்றும் மறக்க முடியாது. அவர்களது குடும்பத்தில் தாயும், சகோதரன் ஒருவரும் அன்று வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்கள்.

ஆண் பெண் வகுப்புக்கள் வேறு வேறானவையாக பாடசாலையில் இருந்தாலும், அந்த தோழியும், நானும் ஒரே தனியார் கல்விநிலையத்தில் கல்விகற்றோம். அவருடன் 1/ 2 முறை சில வார்த்தை மட்டுமே கதைதிருந்தாலும் அவரின் மீது மதிப்பிருந்தது. அந்த தோழி ஒரு நல்ல விளையாட்டு வீராங்கனை, எமது பாடசாலைக்கு மாவட்ட போட்டிகள் வரை சென்று வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். அதுடன் அவர் வகுப்பில் இருந்தால் எப்போதும் பெண்கள் பக்கம் கல கலப்பாகவே இருக்கும். அதனாலேயே எங்கள் ரியூசனில் எல்லாருக்குமே அவரை பிடிக்கும்.

இதே போல இன்னுமொரு குண்டுவீச்சில் எமக்கு முதல் வகுப்பில் படித்த ஒரு அண்ணாவும், அவரது சகோதரியும் பதுங்கு குழிக்கு மேல் விசிய குண்டில் இறந்து போக, அவர்களது அப்பா அம்மா வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்கள். ஆனால் அவர்களது இரண்டு பிள்ளைகளுமே இறந்து போனார்கள்.


இறுதியா சயந்தன் சொன்னது போலவே கட்டு நாயக்க மீது தாக்குதல் நடந்ததாம் எனும் போது மனத்தில் ஏற்பட்ட இனம்புரியாத ஒரு பூரிப்பு. அதில் ஏற்பட்ட மனித இறப்புக்களை பற்றி கவலைப்படவும் முடியவில்லை. வலைப்பதிவில் பல சந்தர்ப்பங்களில் இராணுவ இறப்பும் ஒரு மனிதனின் இறப்பு தானே, அவனுக்கும் உறவுகள் இருக்கிறர்கள் தானே என அந்த இறப்பை பார்த்து சந்தோசப்பட முடியாது/ கூடாது என்பதாக சொல்லி இருந்தார்கள். எய்தவன் இருக்க அம்பை ஏன் நோவான் என்ற கருத்தும் வந்திருந்தது.

ஆனால் குண்டுகள் வீசும் போது, ஹெலி, சி பிளேன் போற விமானங்களின் வழிகாட்டலுடன், சுற்றி வட்டமிட்டு இலக்கு பார்த்து பொது மக்களது வீடுகள் மீதும், பாதுக்கப்புக்கு பதுங்கிய பதுங்கு குழி மீதும், அடைக்கலம் தேடிய ஆலயம் மீதும் குண்டு வீசுபவர்களின் இறப்பை பார்த்து அவர்களும் மனிதர்கள் தான் என சொல்லும் பக்குவத்தை நான் இன்னும் அடையவில்லை.

Sunday 25 March 2007

சுண்டினா சிவக்கிற சிவப்பு !!

மொழி படம் பார்த்தேன். வலைப்பதிவில் பலரும் எழுதியதை போல படம் நன்றாகவே இருந்தது. அதை விட மேலதிகமாக நான் என் பங்குக்கு விமர்சனம் எழுத விரும்பவில்லை. (விமர்சனம் செய்ய தெரியா எண்டே சொல்லலாம்)
படத்திலை ஒரு நகைச்சுவை காட்சி வரும்.

பிரகாஸ்ராஸ், பிரித்வி இருவரும் புதிதா போன அப்பாட்மெண்ட் இன் செயலாளர் பச்சிலேர்சுக்கு வீடு வாடைக்கு கொடுப்பதில்லை என்பதாக. அதன் பின்னணியில்

பிரகாஸ்ராஜ்: பிரித்விய கல்யாணம் செய்ய சொல்லி, பிரித்விகிட்ட அம்மா பார்க்கிற பொண்ண கல்யாணம் செய்ய சொல்லுவார்

பிரித்தவிராஜ: கல்யாணம் தானா அமையணும், பொண்ண பாத்த உடன தெரியணும், அவகூட வாழணும் என்பதாக

பிரகாஸ்ராஜ்: அதெப்பிடிடா தெரியும்
பிரித்த்விராஜ்: நடக்கணும், கமேடி புக்கில சொன்ன மாதிரி தலைக்கு மேல பல்ப் எரியணும், மணி அடிக்கணும் என்பார்

பிரகாஸ்ராஜ்: அப்பிடி பல்ப் எரியணும் எண்டா நீ எலக்ரீசியனாவோ இல்லை சேர்சிலை மணி அடிக்கிறவனாவோ இருக்கணும் எண்டு.


அதே மாதிரி எங்கட பள்ளி காலத்திலையும் ஒரு நண்பி தனக்கு வரும் கணவனை பற்றிய எதிர்பார்ப்பை சொன்னார்.
தனது கணவன் தன்னை விட மேலான ஒரு இடத்தில் (ஸ்டேடஸ்), நல்ல சிவப்பா இருக்க வேணும் என்பதாக. அதை வைத்து எமது வகுப்பில் ஒரு நகைச்சுவையே உருவாக்கி இருந்தார்கள். பின்னர் அந்த நகைச்சுவை பள்ளி படிப்பு முடித்து வெளியேறும் போது எமக்கு கொடுக்கப்பட்ட பிரியாவிடை மலரிலும் ஒரு காட்டூனாக இடம்பெற்றது.
அந்த காட்டூனை கீழே இணைத்துள்ளேன்.




அந்த தோழி தனக்கு பிடித்த ஒருவரை மணம் முடித்து இப்போ மகிழ்வாக இருக்கிறார். ஆனால் அவர் பள்ளி பருவத்தில் சொன்ன நிபந்தனைகளை அவரது தெரிவு நிறைவு செய்ததா என்பது தெரியவில்லை.

Saturday 24 March 2007

சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்


"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்"


இந்த 2 வரிகளையும், இதை இயற்றியவர் மகா கவி எனும் கவிஞர் என்பதையும் 1999 ஆண்டில் அறிந்து கொண்டேன். அதை அறிவதற்கு காரணமான சம்பவம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வுடன் இணைந்தது என்பதால் இரு வசனங்களும் அடிக்கடி நினைவில் வந்து வந்து போகும்.
அதனாலேயே இந்த இரு வரிகளையும் எனது வலைப்பதிவின் மகுட வாக்கியமாக இணைத்து கொண்டேன்.

எனது வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது இப்பாடலை பற்றி வினாவிய போது
இப்பாடலை எனக்கு தந்தவர் திரு. இராஜன் முருகவேள் அவர்கள். அவருக்கு எனது நன்றிகள்.


பாடலை கேடக:

Track 03.mp3



படியவர்: திருச்செல்வம்

பாடல் வரிகள்: மஹாகவி
மஹாகவி பற்றிய விபரம் தமிழ் விக்கிபிடியாவில் இருக்கிறது.
http://ta.wikipedia.org/


பாடல் வரிகள்.

ஏலேலம் ஏலேலம் ஏல வலை ஏலேலம்
ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய் ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா....

ஆண்:
சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
(சிறு நண்டு)


பெண்:
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்

ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோய் ததேய் தாம் ஏல ஏலோய்

ஆண்:
வெறுவான வெளி மீது மழை வந்து சேரும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்

வெறுவான வெளி மீது மழை வந்து சேரும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்

பெண்:
நெறி மாறு கடலூடு சுழி வந்து சூழும்
நிலையானா தரை நீரில் இலைபோலியாடும்???
நெறி மாறு கடலூடு சுழி வந்து சூழும்
நிலையானா தரை நீரில் இலைபோலியாடும்???

ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய்
ஆண்:
சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
(சிறு நண்டு)

பெண்:
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்


ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய்.......

Thursday 22 March 2007

அம்மாவின் அன்பும் .....

ஒவ்வொரு வயதிலும் தாய் காட்டும் அன்பும், தாயினது அரவணைப்பும், அதற்கு பிரதி உபகாரமாக பிள்ளைகள் செய்வது என்ன என்பதையும் இந்த மின் மடல் மூலம் வந்த ஆங்கில குறிப்பு சொல்கிறது.

Image Hosted by ImageShack.us

Sunday 11 March 2007

உப்பு தூள் மாங்காய்

உப்பு தூள் மாங்காய் யாருக்காவது வாய் ஊறுதா?

பள்ளிப்பருவத்திலை எத்தினை பேர் களவாய் மாங்காய் ஆய்ஞ்சு, உப்பு தூளோட சாப்பிடிருக்கிறியள்? அந்த நேரம் எந்த மாங்காய திண்டாலும் ருசியா தான் இருக்கும். ஆனா மாங்காய சாப்பிட சேலம், பச்ச தின்னி மாங்காய்கள் தான் திறம்.
அதிலையும் மாங்காய கத்தியால வெட்டாம மரத்திலை குத்தி திண்டா அதிலை ஒரு சுவை இருக்கு.

கானா பிரபா நல்ல ஒரு பதிவே போட்டிருந்தவர்.
அப்பிடி எல்லாம் அதிகமா எழுதேல்லை நான் இப்ப சும்மா படங்காட்ட தான் வெளிக்கிட்டனான். அதுக்கு உப்பையும் தூளையும் இழுத்தன் வேற ஒண்டுமில்லை.

அண்டைக்கு இலுப்பங்காய மாங்காய் எண்டு அடையாள படுத்தின்னியள். இண்டைக்கு இதிலை போட்டிருக்கிற மாங்காயளிடை பேருகளை சொல்லுங்கோ ;)

கடைசியா இருக்கிறத மா எண்டு சொல்லி போடதங்கோ :)



























கண்ணகி சிம்மவாகினியாகும் கதை

கண்ணகி சிலப்பத்கார நாயகி அதற்கப்பால் வணக்கத்துகுரிய தெய்வமாகவும் மாற்றம் பெற்றவள். கண்ணகி வழிபாடு எப்படி எங்கு தொடங்கியது என்பதை பற்றியெல்லாம் ஆராயும் எண்ணம் எனக்கு இல்லை. தமிழகத்தில் கண்ணகி வழிபாடு இருக்கிறதா? நான் சந்தித்த தமிழக நண்பர்களிடம் கேட்ட போது இல்லை என்றார்கள்.
ஈழத்தில் கண்ணகி வழிபாடு இருக்கிறதா என்றால் இருக்கிறது. சிங்களவர்களும் பத்தினி தெய்யோ என்பது கண்ணகியை என கேள்விபட்டேன் ஆனால் சரியாக அதுவும் தெரியாது கிழக்கு மாகாணத்தில் இருப்பதாக சொன்னார்கள் அதை பற்றி எனக்கு சரியாக தெரியாது.
யாழ்ப்பாணத்தில் கண்ணகிக்கு கோயில் உண்டா என கேட்டால் பலரும் இல்லை என்பார்கள். என்வயதொத்தவர்களில் பலருக்கு தெரியாத போது இனி வரும் சந்ததிக்கு தெரிய வருமா என்பதை சொல்ல முடியவில்லை. ஏன் எனில் பெண் தெய்வங்களும் அம்மன் எனும் பொதுமைக்குள் அடக்கப்பட்டு விட்டதும்; பாரம் பரிய பூசகர்களிடம் இருந்து, ஆகம விதிக்கு உட்படாத கோயில்கள் ஆகம விதியோடு மாற்றியமைக்கப்படுவதும், பட்டதும் காரணம்.

எனக்கு தெரிந்த கோயில்களை பட்டியல் இடுகிறேன்.

1. பன்றிதலைச்சி மட்டுவில் சாவகச்சேரி- கண்ணகை அம்மன் என்பதாக சொல்லபட்டாலும் ஆகம விதிக்கமைய கோயில் அமைக்கப்பட்டு, பார்வதி, பரமேஸ்வரனாகிவிட்ட ஆலயம். பங்குனி திங்கள் சிறப்பானது. பல ஊர்களிலும் இருந்து மக்கள் பொங்க வருவார்கள். சிலம்பு தாங்கிய கண்ணகி சிலை இருந்ததா/ இல்லையா ஞாபகம் இல்லை.

2. மண்டுவில் கண்ணகை அம்மன், மீசாலை சாவகச்சேரி (சோலையம்மன்)
கோயிலை சுத்தி சோலை/ காடு இருக்கு.









ஆகம விதிக்கமைய கோயில், பூசைகள் நடக்கும் ஆலயம். வருடாந்தம் மகோற்சவம் நடக்கும். ஆனால மூலஸ்தானதில் இருந்த சிற்பங்கள் சிலம்பு தாங்கிய பெண் தெய்வ சிலைகள். யுத்ததால் சேதமான பின் மீளமைக்கப்படும் ஆலயத்தில் கண்ணகி சிங்க வாகனம், சூலாயுததுடன் காட்சி தரும் சிலைகள் அமைக்கப்படுகிறன.


3. சுட்டிபுரம் கண்ணகை அம்மன்- கோயில் ஆகம விதிக்கமைய அமைக்கப்படா விட்டாலும் பூசைகள் ஆகம விதிக்கமைய

4. கச்சாய கண்ணகை அம்மன்- கோயில் ஆகம விதிக்கமைய இல்லை-பூசை ஆகம விதிகமைய
5. விடத்தற்பளை கண்ணகை அம்மன்- பூசை பரம்பரை பூசகர்.


வன்னியில் பூனகரியில் ஒரு கண்ணகை அம்மன் ஆலயம் உண்டு என்பது தெரியும். அதை விட மேலதிகமாக எனக்கு தெரியாது.

அடுதது வன்னியர் கோயில் எனும் ஒரு கோயிலை பற்றியும் சொல்ல வேண்டும்.

இது சாவகச்சேரியில் இருந்து கச்சாயூடாக கிளாலி செல்லும் வீதியில் விடத்தற்பளையில் இருக்கிறது.

வீதியொரம் இருந்தாலும், மிகுதி மூன்று பக்கமும் பற்றைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஒரு குளம்.
கடவுளுக்குரிய உருவமோ சிலைகளோ இல்லை.
தகரத்தால் கூரையிடப்பட்ட பந்தல்கள். நான்கு பக்கமும் திறந்தவை.
வன்னியர் அப்பந்தல்களுக்கு வெளியே மூன்று பக்கமும் கிடுகு வேலியால் சூழப்பட்டு, கூரையற்று மழை வெயில் காய்ந்தபடி இருந்தார். வருடத்தில் ஒரு முறை பொங்கல் படையல் அதை தொடர்ந்து எட்டம் மடை மட்டுமே அவருக்கான பூசை
அண்மையில் (2005) போன போது பார்தால் கூரையற்று இருந்தாருக்கு சிறு சிமேந்து கட்டிடம், ஓட்டு கூரை என ஆலய வடிவம் பெற்றது மட்டுமல்ல கோயில் வாசலி திரையில் வள்ளி தெய்வானை சமேதராக முருகன் காட்சி தந்தார்.
இன்னும் பத்து வருடங்களில் ஆகம விதிக்கமைய கோயில் அமைக்கப்பட்டலாம். வன்னியரோட பெயர் சிறி சுப்பிரமணியர் ஆகலாம்.

இதை எழுதியது எனக்கு தெரிந்த ஒரு இரு பத்தாண்டு காலதுக்குள்ளே கண்ணகி என்று சிறுவயதில் சொல்லப்பட்ட ஆலயங்கள் துர்க்கை/ பார்வதியாக மாறுவதும், வன்னியர் சுப்பிரமணியர் ஆவதும் நடக்கிறதென்றால். இதே போல எவ்வளவு மாறியிருக்கும் என்பதை எண்ணி பார்ப்பதற்கே.

Sunday 4 March 2007

2 எப்பிடி 42 ஆனது

உண்மையில் ஆச்சரியமாக போய்விட்டது. சயந்தன் குறைந்த பின்னூட்டம் உடைய பதிவை தமிழ்மணம் அதிக பின்னூட்டம் உடையதாக காட்டியதாக. இன்றைக்கு 2 பின்னூட்டமே கொண்ட என்னுடைய பதிவை 42 பின்னூட்டம் கொண்ட பதிவாக காட்டி முன் பக்கத்திலிருந்தும் வெளியேற்றி விட்டது தமிழ்மண திரட்டி. இதே போல வேறு யாருக்கெல்லம் நடந்தது?

எங்கோ ஒரு தவறு....

Saturday 3 March 2007

என்ன தம்பி கறுத்து போனாய்

இந்த வார நட்சத்திரம் கூத்தாடியின் கறுப்பு சிவப்பு எனும் பதிவு எனது பழைய ஞாபகங்களை கிளறி விட்டது. எங்கட ஆக்களிட்டை இருக்கும் வெள்ளை? , வெளிறிய/ சிவப்பு நிறம் மீது இருக்கும் ஈர்ப்பும் அதை பற்றி அடிக்கடி கதைக்கும் பழக்கமும், பலருக்கு சிறுவயதில் இருந்தே ஆழ்மனதில் பதிவு செய்யப்பட்டு விடுகிறது. அது எங்களுக்கு தெரியாமலே பல சந்தர்ப்பங்களில் எட்டி பார்க்கவும் செய்யும்.

சின்ன வயதிலேயே, இவன் வெள்ளை பொடியன், அந்த பொடியன் நிறம் குறைந்த/ கறுப்பு பொடியன் எண்டு சொல்லி கேட்டு கேட்டு மனதில் நான் வெள்ளை எண்டதும், வெள்ளை எண்டால் ஏதோ பெரியாக்கள் எண்டும் மனதில பதிவு செய்யப்பட்டு இருந்தது. எது சரி பிழை எண்டு பிரித்துணர முடியாத வயது அது. ஆனால் உயர்தர வகுப்பு படிக்கும் போது கூட அந்த மன நிலையிலை பெரிசா ஏதும் மாற்றம் இருக்கேல்லை எண்டது தான் உண்மை. பல்கலைகழகத்தில் பயிலும்போது தான் அந்த உணர்வு சிறிது சிறிதாக குறைய தொடங்கியது.

சிறுவயதில் என் மனதில் ஊட்டப்பட்ட எண்ணம் எப்படி வெளிப்பட்டது எண்டதுக்கு ஒரு சின்னா உதாரணம் இது.


பாலர் வகுப்புக்கு பள்ளிகூடம் போன போது நடந்த சம்பவம். அப்ப அம்மாவும் அங்க தான் படிப்பிச்சு கொண்டிருந்தவ. அப்ப எங்கட பள்ளிகூடத்திலை ஏ, பி எண்டு இரண்டு பிரிவுகள். என்னை ஏ வகுப்பு எண்ட பிரிவுக்க விட்டாச்சு. வகுப்புக்க கொண்டு போய் அம்மா எனது வகுப்பு ரீச்சரிடம் சொல்லி போட்டு விட்டிட்டு போட்ட. ஆனா எனக்கு ரீச்சரை பாத்த உடனம் அந்த வகுப்புக்க இருக்கவே பிடிக்கேல்லை. எனேண்டா ரீச்சர் கறுப்பா இருந்தா. பக்கது பி வகுப்பு ரீச்சார் நிறமான ரீச்சர். அவவை கண்டிட்டு நான் பக்கத்து வகுப்புக்கை போய் இருந்திட்டன், என்ரை வகுப்புக்குரிய ரீச்சர் எவ்வளவு கூப்பிட்டும் போகேல்லை.
பள்ளிகூடம் முடிஞ்சு வீட்ட போன பிறகு அம்மாட்டை கறுப்பு ரீச்சரின் வகுப்பிலை இருக்க மாட்டன் எண்டு சொல்ல்லி அடம் பிடிச்சன். ஆனா அம்மா என்ன செய்ய முடியும். என்னை ரீச்சர் வகுப்பிலை வச்சிருக்க கண்டு பிடிச்ச வழி என்னெண்டா, எனக்கு அ, ஆ, மற்றும் பெயர்கள், படங்களை இணைக்கும் அட்டைகள், சிறுவர்களுக்கான பாட்டு பாட பயன் படுத்தும் கிலிகட்டி?? எல்லாம் தந்து, வீட்ட கொண்டு போய் விளையாட ஒரு மாதமா விட்டது தான். உண்மையில் நானும் ஒரு ரீச்சரின் பிள்ளையாக இருந்தது தான் இவ்வளவு தன்மையாக விளையாட்டு பொருட்காளை தந்து என்னை வகுப்புக்குள் வைத்திருக்க முயன்றதன் காரணமாக இருக்குமோ எண்டு யோசிசிருக்கிறன். இதையே வேறயாரும் போடியள் செய்திருந்தா அந்த ரீச்சர் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார் எண்டாதை சொல்ல முடியவில்லை.

இதே மன நிலை வளந்தா பிறகும் அடி மனதிலை இருக்கும். வெள்ளையா வரோணும் எண்டதுக்காகவே fair and lovely பூசிய பல நண்பர்கள் இருக்கிறார்கள். இது தான் எங்கட நாட்டிலை நடக்கிற நிகழ்வெண்டா, எங்கட ஆக்கள் புலம்பெயர்ந்து வந்தா பிறகும் அதை மறக்காம கவிவச்சிருக்கிறதை நேரையே கண்டனுபவித்திருக்கிறேன். நான் புலம் பெயர்ந்தது மிக அண்மையில் தான். என்னை சின்ன பொடியனா ஊரிலை கண்டிட்டு இஞ்சை வந்து கன காலமா என்னை காணத ஆக்கள் எல்லாம் என்னை கண்டோடனம் சொல்லுற சொல்லு என்ன ஊரிலை நல்ல வெள்ளை பொடியனா இருதாய் இங்க வந்து கறுத்து போனாய் எண்டுறது தான்.

எங்கட ஆக்கள் ஊரிலை இருந்து கனக்க விசயத்தை காவி வந்தது போல, உந்த வெள்ளை, கறுப்பு எண்டதையும் காவி வந்து இன்னும் அதை கைவிடாம தான் வச்சிருக்கினம்.

Friday 2 March 2007

சிகிரியா.....

சிகிரியா, இலங்கையை ஆண்ட சிங்கள மன்னன் காசியப்பனால் (கிபி 447-495) எதிரிகளில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட கோட்டை.
இங்கு சில ஓவியங்கள் உள்ளன. அவற்றை ஒளிப்படம் எடுக்க முடியவில்லை.

(படங்களில் அழுத்தி பெரிதாக்க முடியும்)

சிகிரியா குன்றின் தோற்றம்.



இரண்டு பெரும் பாறைகளுக்கூடு செல்லும் பாதை





உச்சிக்கு ஏறுவதற்காக அமைக்கப்பட்ட படிகள்



உச்சியில் அமைக்கப்பட்ட நீர்த்தடாகம்




மேலிருந்து பார்க்கும் போது குன்றின் முன் அமைக்கப்பட்ட மண்டபம், பாதைகளின் அழிந்த பகுதிகள்




உச்சியில் இருந்து குன்றின் இடைத்தளதின் பார்வை



மேலிருந்து ஒரு காட்சி :)