Monday, 4 August 2008
Folklorama, Tamil Pavilion 2008
Tamil Pavilion 2008
Folklorama,
Winnipeg, Manitoba, Canada
August 3-9
தமிழ் அரங்கம் 2008
இந்த பாரம்பரிய அரங்காடல் நிகழ்வுகளில் தமிழ் கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய அரங்காடல் நிகழ்வு முதல் வாரத்தில் அதாவது ஆகஸ்ட் 3- 9 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறுவது வழக்கமாகும். தமிழ் அரங்காடல் நிகழ்வு இந்த வருடத்துடன் தனது 11 ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது.
தமிழ் அரங்கம் பிரதானமாக 2 பகுதிகளை கொண்டது.
1. தமிழ் மக்களின் கலாச்சார பின்னணியை எடுத்துக்கூறும் கண்காட்சி
இப்பகுதியில் தமிழ் மொழியின் தொன்மை, மக்களின் வாழ்கை அமைப்பு, வரலாறு இசை போன்ற விடயங்களை பற்றிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்
2. அரங்க நிகழ்வுகள்
பரத நாட்டியம், கிராமிய நடனம், தபேலா, மிருந்தங்கம், பாடல் போன்ற அரங்க நிகழ்வுகளை வின்னிபெக் தமிழ் இளையவர்கள் ஆர்வத்துடன் வழங்குவார்கள்
மேலதிகமாக
தமிழ் மக்களின் உணவுகள், சிற்றூண்டி வகை பொன்றவைக்கான சிறிய விற்பனை அங்காடிகளும் இருக்கும்
முதல் நாழ் நிகழ்வின் காணொளி காட்சிகள் சில
Tuesday, 15 July 2008
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை :(
ஆடி பிறப்புக்கு நாளை விடுதலை என்று நவாலியூர் சோமசுந்தரப்புலவர் என்னவோ பாடி விட்டார். என்னக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சனி, ஞாயிறு தினங்களில் வந்த ஆடிப்பிறப்பை தவிர ஏனைய ஆடிப்பிறப்புக்களுக்கு எமக்கு விடுமுறை எல்லாம் இல்லை. அப்பா, அம்மா இருவரும் வேலை செய்பவர்கள் ஆகையால் அதிகாலையில் எழுந்து உரலில் மா இடித்து கூழ் வைத்து, கொழுக்கட்டை அவித்து சாப்பிட்டு விட்டு பள்ளிகூடம் போய் தான் பழக்கம்.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
-நவாலி சோமசுந்தரப்புலவர்
பாடல்: VSK கானா பிரபா ஆகியோரின் பதிவில் இருந்து.
ஆடி பிறப்பை நினைவுபடுத்திய கானா பிரபாவுக்கு நன்றி.
Sunday, 29 June 2008
வின்னிபெக் முருகன் வருடாந்த உற்சவம்
கனடாவின் ஏனைய நகரங்களான ரொறான்ரோ, மொன்றியால், எட்மன்ரன், வன்கூவர் போன்ற நகரங்கள் போன்று அல்லாது வின்னிபெக் நகரில் தமிழ் மக்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால் தென்னிந்திய பாணியிலான கோயில்கள் எதுவும் இல்லை. அதிக அளவில் வட இந்திய மக்கள் இருப்பதால் இங்கு இருக்கும் கோயில்கள் வட இந்திய முறையில் அமைந்திருப்பதுடன், பூசைகளும் வட இந்திய முறையிலேயே நடப்பது வழக்கம். இங்கிருக்கும் தமிழர்களால் வட இந்திய முறையில் அமைந்த கோயிலில் முருகன் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு, அவ்வாறு பிரதிஸ்டை செய்ததன் மூன்றாம் ஆண்டு நிறைவு நிகழ்விற்கு போகும் சந்தர்பம் கிடைத்தது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் தவில் நாதஸ்வர இசையை நேரடியாக ரசிக்க முடிந்தது. அத்துடன் ஊரில் சுவாமி வீதி வலம் வருவதுபோல இங்கும் செய்திருந்தார்கள்.



கோயிலை பற்றியும் குழறுபடிகள் பற்றியும் சில குறிப்புக்கள்.
சில நல்ல விடயங்கள்
1. கோயிலில் ஒவ்வொரு வெள்ளி கிழமை மாலையும் தமிழர்களது பூசை நடைபெறுமாறும் ஒழுங்கு செய்துள்ளார்கள்.
2. கோயில் பூசகர் வட இந்திய பூசகராக இருப்பதால் பூசையில் பெரும்பாலான நேரம் தேவாரம், திருவாசகம், திருப்புகள், மற்றும் தமிழ் பஜனை பாடல்களாகவே இருக்கும். இதை ரோரன்ரோவிலோ ஏனைய தமிழ் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் உரிய கோயில்களிலோ எதிர்பார்க்க முடியாது. ஆகம வழி பூசை என்று முழுவதும் சமஸ்கிருததிலேயே முடிந்து விடும். இதனாக் இங்குள்ள சிறுவர்கள் தமிழ் பேசுகிறார்களோ இல்லையோ தேவாரம் பாட தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாடல்களுக்கு தபேலா, மிருதங்கம் போன்ற இசை கருவிகளை இசைக்க தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஊரில் பாடசாலைகளில் தேவாரம் பாடி முடிய சொல்வது போல, இங்கும் பூசை முடிய இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க, தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பவை சொல்லி பூசையை முடிக்கிறார்கள். இதை எந்த ஒரு தமிழர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் தென் இந்திய கட்டிட அமைப்பில் அமைந்த கோயில்களில் எதிர் பார்க்க முடியாது.
3. விசேட பூசை தினங்களில் இலவச உணவு நிச்சயம்.
4. கோயில் மண்டபத்தில் தமிழ் வகுப்புக்கள் நடை பெறுவது வழக்கம்.
குழறுபடிகள்
தமிழன் என்றோர் இனமுண்டு, அவனுக்கு தனியே ஒரு குணம் உண்டு. அது ஒருவரையும் முன்னுக்கு வர விடமையும், எதாவது காரியங்கள் நல்லபடி நடந்தால் அதை குழப்புவது எப்படி என்று சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பது.
1. முன்னர் வட அமெரிக்க தமிழ் சங்கங்களையும், கோயில் நிர்வாகத்தையும் கைப்பற்றுவது எப்படி என யாரோ வலைப்பதிவில் எழுதியிருந்தார்கள். வின்னிபெக்கில் இருப்பதோ 30-50 தமிழ் குடும்பங்கள். அவர்களுக்குள் கோயில் நிர்வாகத்தை கூட அல்ல வட இந்திய மக்களுடைய கொயிலில் தமிழ் மக்கள் சிறப்பாக கொண்டாடும் தினங்களில் பூசைகளை ஒழுங்கு செய்யும் குழு நிர்வாகத்தை கைப்பற்றுவதில் போட்டி சண்டை, கைகலப்பு என போய் சிலர் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்படும் பூசைகளுக்கு வருவதில்லை.
2. முருகன் சிலையை வைப்பதற்கு கோயில் நிர்வாகதில் பேசி அவர்களை உடன்பட வைத்த பிற்பாடு யார் முருகன் சிலையை இந்தியாவில் இருந்து செய்து வரவளைப்பது என்பதில் நீயா நானா போட்டி. முதலில் செய்யப்பட்ட முருகன் சிலை போட்டியால் களஞ்சிய அறையில் இருக்க புதிதாக சிலை செய்வித்து வைத்திருக்கிறார்கள்.
3. கோயில் வருடாந்த உற்சவத்தில் ஊரில் சாமி காவும் போது சில உள்ளுர் மைனர் மார் முன் வரிசையில் இடம் பிடிக்க அலைவது போலவும், சாமில் இருப்பில் இருந்து புறப்படும் போதும், சுவாமி இருப்புக்கு திரும்பும் போதும் தங்களே காவ வேண்டும் என்று அலைவது போலவும் இங்கும் சில பேர்.
4. பூசகர் வட இந்தியராக இருப்பதால் வட இந்தியர்கள் சுவாமி விக்கிரகங்களை தொட்டு வணங்கவும், அவர்களே பாலால், அல்லது ஏனைய அபிசேகங்களை செய்யவும் அனுமதிப்பது போல தமிழர்களின் பூசை நேரமும் பூசகர் செய்ய முற்பட்ட போது இங்குள்ள சிலர் எமதூரில் இப்படி அனைவரும் தொட்டு வணங்கக அனுமதிப்பதில்லை. இதன் அடி நாதமே சாதி என்பதில் இருந்து தான் வருகிறது. எனவே தமிழர்களின் பூசை நேரம் அவ்வாறு அனுமதிக்க கூடாது என சண்டை பிடிததாகவும் அறிய முடிந்தது. கடவுள் வழி கொடுத்தாலும் பூசாரி வழி கொடுக்க மாடார் என பழ மொழி சொல்வார்கள். ஆனால் இங்கு பூசைக்கு இருக்கும் பிராமணர் அனைவரையும் அனுமதிக்க தயார். ஆனால் எம்மவர்கள் அதுக்கு குறுக்கே தலைகிழாக நிற்கிறார்கள்.
5. முருகன் என அழகான தமிழ் பெயர் இருக்கிறது. வலைதளத்தையும் வின்னிபெக் முருகன் என வைத்திருக்கிறார்கள். ஆனால் வலைதளத்தில்/ கோயில் விழா நிகழ்ச்சி நிரல்களில் முருகனை வட மொழி பெயரில் கார்த்திக் என எழுதுவதில் ஒரு பெருமை :(.
ஆரிடம் சொல்லியழ.
Gaypride parade
08/06/2008
ஒரு பாலினருக்கிடையேயான திருமணத்தை சட்ட ரீதியாக அங்கிகரித்த நாடுகளில் கனடாவும் ஒன்று. ஆனால் ஒரு பாலினத்தினருக்கிடையேயான உறவு என்பது இப்போதும் எல்லா கனேடிய மக்களாலும் மனத்தளவில் அங்கிகரிக்கப்பட முடியாததாகவும், வெளியே ஒரு பாலின நாட்டமுள்ளவர்களை சமமானவர்களாக மதிப்பதாக காட்டி கொண்டாலும், அவர்களுக்கேதிரான வனமுறைகளும், அவர்களை பாகுபாடாக நடத்துவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கனடாவில் நடைபெறும் பாலியல் தொடர்பான வெறுப்பு வன்முறைகளில் 80% ஒரு பாலின நாட்டமுடையவர்களை குறிவைத்தே நடாத்த படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறன.
இந்த நிலையில் பெரும்பாலான ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ஒரு பாலின நாட்டமுடையவர்களுக்கான சம உரிமையை வேண்டி வருடாந்தம் நடைபெறும் ஊர்வலத்தில் வின்னிபேக் நகரத்தில் நடந்த ஊர்வலத்தில் எடுத்த படங்கள்.
வானவில் வண்ண கொடி
ஒரு பால் நாட்டமுள்ளவர்கள், மற்றும் திரு நங்கைகளை குறிக்க பயன் படும் கொடி- அறிமுகப்படுத்தி 30 ஆண்டு ஆகிறதாக சொல்கிறாகள்.
கொடியின் நிறங்கள் குறிக்கும் விடயங்கள்
hot pink - sexuality
red - life
orange - healing
yellow - sunlight
green - nature
turquoise - magic
blue - serenity
violet - spirit





ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் மாணவர் ஒன்றிய ஊர்தி- மாணவர் பல்கலை கழக கட்டண குறைப்பை வேண்டும் பதாகை.

ஆதரவாக குழந்தைகளுடன் கலந்து கொண்ட மக்கள்

ஆதரவு தெரிவித்து ஊர்வலம் போகும் நாய்க்குட்டி


கலந்து கொண்ட மக்கள்

கடமையில் இருக்கும் பொலிஸ் வாகனம்

ஓரளவுக்கு திறந்த மனதுடன் அணுகும் சமுகத்திலேயே தமது பாலியல் நாட்டத்தை வெளியிட முடியமால் பலரும் அவதிப்படும் நிலையில், எமது சமூகங்களை பற்றி சொல்ல வேண்டியதிலை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பாடசாலை மணவர்களையும், புரிந்து கொள்ள முடியாத வயதுடைய சிறுவர்களையும் தமது உணர்வுக்கு பலிக்கடாவாக்கும் சம்பவங்கள் பல வெளியே தெரிந்தும் தெரியாமலும் எமது ஊரில் நடப்பது தெரிந்தாலும் பலரும் பேச பிரியப்படுவதில்லை என்பது ஒரு முக்கியமான விடயம்.
Sunday, 26 August 2007
இரசித்தவையும் இரசிக்க முடியாது போனவையும்
பூங்கவனத்தண்டு சாமி ஒரு ஆறு அல்லது எழுமணியளவில் எழுந்தருளி வந்து வெளிலை அதுக்கென அமைக்கப்பட்ட பந்தல் ஒண்டிலை இருந்தாரெண்டால் அர்த்தன் நிகச்சி தொடங்க போகுதெண்டது தான்.
பூங்காவனத்திலை நடை பெறும் நிகழ்ச்சிகள் என பார்த்தால்
1. மேளச் சமா/ தவில் கச்சேரி
கோயில் வித்துவாங்கள்/ கத்துகுட்டிகள்
பஞ்சாபிகேசன் குழு,
நாகேந்திரன் குழு (பஞ்சாபிகேசனின் மகன்)
இன்னும் யாரும் பிரபலாமான ஒரு குழு
2. வில்லுப்பாட்டு
சின்னமணி குழுவினர் அல்லது
சிறிதேவி குழு?? ஒரு ஐயர் ஒராள் தான் பாடுவார் (பெயர் ஞாபகம் இல்லை)
3. இசை குழு
ஈழ நல்லூர் அருணா குழு
அல்லது வேறு யாராவது
என்னுடைய மாமா (அவர் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்) யாழ்ப்பாணத்திலை இருந்து பூங்காவனம் பாக்க மட்டும் தான் வருவார் அதிலை அவருக்கு பிடிச்சது மேளச்சமா தான். ஆனா நாங்கள் பூங்காவனம் போறது வில்லுபாட்டு பாக்கவும், இசை நிகச்சி பாக்கவும் தான். ஆறு ஏழு மணிக்கே போடுவம். மேளச்சமாவை ஒழுங்கா பாக்கிறமோ இல்லையோ ஒழுங்கா கச்சானும், ஐஸ்கிறீமும் சாப்பிட்டு கொள்ளுவம். அதைவிட ஊர் கதை, எந்த பொடியன் யாரை சுத்துறான் எண்ட கதையள் பொக்கும் சில பேர் படுத்து நித்திரையா போவாங்கள் வில்லு பாட்டு தொடங்க எழுப்ப சொல்லி போட்டு. எப்பிடியும் அருணா குழுவின் பாட்டு தொடங்க விடியப்புறம் 3அல்லது 4 மணியாகும். முடிய விடிஞ்சிடும். ஆனாலும் முழு இரவும் நித்திரை கொள்ளாம கண் கொட்ட கொட்ட முழிச்சு கொண்டு இருப்பம்.
அதே போல எங்கட பள்ளிகூட மைதானத்திலை நடக்கிற நாடக நிகழ்வு, இசை நிகழ்ச்சி என எல்லத்தையும் தப்ப விடாம போய் இரவிரவா இருந்து பாப்பம்.
இந்தியனாமி போன உடன தேனிசை செல்லப்பாவினுடடய இசை கச்சேரி எல்லா ஊரிலையும் நடந்தது. எங்கட ஊரிலையும் நகரசபை மைதானத்திலை நடந்த நிகழ்ச்சிக்கு நானும் போன்னான். கரை கொள்ளாத சனம்.
தேனிசை செல்லப்பாவின் கணீர் என்ற குரல், அந்த மேடை எல்லாமே இன்றும் நிழல் போல நினைவில்.
அடுத்து ஒரு நாடகம் எங்கட ஊர் கலைஞர்கள் கொண்டு அரங்கேறியது. அதிலை ஒரு பாட்டு வரும்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்...
அதன் பிறகு நிறைய பாத்திருக்கிறன் எது எது என வரிசையா சொல்ல வராட்டிலும் ஞாபகத்தில் உள்ளதை சொல்லுறன்
முத்தமிழ் விழா எண்டு சொல்லி யாழ் குடா நாட்டின் முக்கியமான பிரிவுகளிலை 2 நாள் நிகவுகள் நடைபெற்றன. எங்கடை ஊரிலை நடந்த முதல் நாள் நிகழ்வுக்கு போய் இருந்தன். அதிலை காத்தவராயன் கூத்து , நாடகங்கள் என நிறைய நிகழ்ச்சிகள் நடந்திச்சு அதே நேரம் பலாலிலை இருந்து அடிச்ச எறிகணைகள் விழா நடந்த இடத்துக்கு கிட்ட விழுந்து வெடிச்சிச்சு. அதாலை இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு போகாமல் விட்டிட்டன். அதாலை ஒரு முக்கியமான சந்தர்ப்பம், யாருக்கும் இலகுவிலை கிடைக்காத வாய்ப்பு ஒண்டை தவற விட்டிட்டன்.
பிறகு எங்கட பள்ளி கூட திறந்த வெளியரங்கிலை
சந்தன காடு முக்கியமா ஞாபகம் இருக்கிற நாடகம் அத விட இன்னும் நிறைய நாடகங்களும் நடந்திச்சு அண்டு.
பிறகு சாந்தன் இசைகுழு?? , இராஜா இசை குழுவும் இணைஞ்சு போட்டிக்கு பாட்டு நிகழ்ச்சி ஒண்டு அதிலை சாந்தன் குழு ஒரு பாட்டு பாடினா அதுக்கு இணையா ஒரு பதில் பாட்ட இராஜா குழு பாடும்.
உதாரணமா பத்தமெண்டா இராஜா குழு வீட்டுக்கு வீடு வாசல் படி வேணும் எண்ட இளையராஜாவின் பாட்டை பாடிச்சினம் அதுக்கு போட்டியா சாந்தன் குழு ஒரு போட்டி பாட்டு பாடிச்சினம்.
அத விட தமிழீழ இசைகுழு என்ற போராளி கலைஞர்களின் இசை நிகழ்ச்சி எண்டு கனக்க நடந்திச்சு. ஒரு நிகச்சியை கூட தப்ப விட்டதில்லை. எப்பிடியும் ஒரு ஆறேழு பேரா சேர்ந்து தான் போவம். இரவு பசிக்கு வயிறு நிறைக்கிறது கச்சானும், ஐஸ்கிறீமும் தான்.
ஒரு நிகழ்ச்சிக்கு கூட போக பொறன் எண்டு கேக்க அப்பா அம்மா அனுமதி மறுத்ததில்லை அதே போல நிகழ்ச்சி முடிஞ்சு விடியப்பறம் 4 மணிக்கு கதவிலை தட்ட சினக்காம அப்பா/ அம்மா வந்து கேற்றை திறப்பினம்.
இராணுவ தாக்குதல் பயம், பொருளாதர தடைகள், எங்க போற எண்டாலும் சைக்கிள் தான். ஆனா அனைத்தையும் எம்மால் மனம் விட்டு இரசிக்க முடிந்தது.
காலம் 11/08-12/08/ 2007, இடம் மார்கம் பேயர் மைதானம், ஒன்ராரியோ, கனடா


எந்த வித உயிர் பயமும் அற்ற சூழல், இதமான மாலை நேரம். அங்கு ஹெலிக்கு உயிரை காக்க பனை மரத்தை சுற்றிய சம்பவங்களுக்கு பதிலா இஞ்சை ஹெலியிலேயே ஏறி ஒரு சவாரி போய் வர வசதியுடன் கூடிய ஒரு களியாட்ட நிகழ்வு இரண்டு நாட்கள் நடந்தது. இரண்டு நாட்களும் போய் இருந்தேன்.ஈழத்தை போல மைதானம் நிறைந்த சனக்கூட்டம்.

ஊரில் இருந்த காலத்தில் இலங்கை சர்வதேச வானோலியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு எனும் நிகழ்ச்சியில் அறிமுகமான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ஒன்று அந்த நிகழ்சியை செய்த அப்துல் ஹமித் இனாலேயே இங்குள்ள ஆக்களுக்காக நடாத்தப்பட்டது.

அதை விட தென்னிந்திய திரைப்பட பாடகர்கள் சிலருடன் சென்னை ரிதம்ஸ்??? குழுவின் இசை நிகச்சி,
நடன நிகச்சி... என பல. ஆனால் விளம்பரம் செய்த சன் ரிவி அசத்தபோவது யாரு குழுவினர் வந்து சேரவில்லை. வந்தவர்களில் பாதிப்பேர் அவர்களை பார்க்க வந்திருப்பார்கள் என நினைக்கிறன். இங்குள்ள இசை நிகழ்ச்சிகளின் ஒலியமைப்பு போல் ஈழத்தில் பார்த்த நிகழ்ச்சிகளில் ஒலியமைப்பு சீராக இருந்ததில்லை. அத்துடன் அங்கு சில நேரங்களில் அருணா குழு இசை நிகழ்ச்சியில் டிரம் வாத்திய ஒலி பாடலின் குரலையும் தாண்டி ஒலிக்கும்.
அத்துடன் பசி தீர்க்க விதம் விதமான ஈழத்து உணவு வகைகள் சுடச்சுட வாங்கி உண்ணும் வசதி.
கொத்துரொட்டி கடைகள்,

கரம் சுண்டல் கடைகள்
வள்ளி கிழங்கு அவியல்



அப்பம், தோசை இட்டலி
வறுத்த கச்சான்,
இடியப்பம்
கூழ்
இவற்றுடன் மேலைதேய உணவுகளான
பீஸ்ஸா, சூடான நாய் :) (Hot dog)
ஐஸ் கிறீம் கடைகள் அதிலும் யாழ்ப்பாண சுவை மாறாத எனும் விளம்பரத்துடன்

என பல உணவுகள்.
இருந்த போதும் இவற்றில் ஒன்றில் கூட என்மனம் இலயிக்கவில்லை. என்னக்கு அங்கு ஒருமணி நேரத்துக்கு மேல் நிற்க பிடிக்கவில்லை. எப்படா விட்டுக்கு போவன் எண்ட மாதிரி இருந்திச்சு. ஊரிலை இரவிரவா நிகழ்ச்சி பார்த்த எனக்கு இரவு 11 மணி வரையும் இருந்து பொறுமை காக்க முடியாமல் இரண்டு நாளும் பாதியிலேயே வெளியேறிவிட்டேன்.
ஏன் என்னால் இரசிக்க முடியவில்லை? காரணம் என்ன என யோசித்து யோசித்து பாக்கிறன்?
ஏன்?....
Tuesday, 21 August 2007
கனடா கந்தசாமி கோயில் தேர்- தூக்குக் காவடிகள்


காவடிகள்


தூக்குக்காவடிகள்.



நான்கு வாகனங்களில் தூக்கு காவடி கட்டி இருந்தார்கள். சிலதில் 2 பேரும் சிலதில் ஒருவரும் காவடி எடுத்திருந்தார்கள். ஊரில் உழவு இயந்திரங்களில் கட்டப்படும் தூக்குகாவடி இங்கு பிக்கப் வாகனங்களுக்கு மாறி இருந்தது.
யோகன் அண்ணா தூக்குகாவடி எடுப்பது கொஞ்சம் அதீதம்/ அதிகம் என்ற பொருள் பட மாயாவின் பதிவில் சொல்லி இருந்தார். எனக்கும் பார்க்கும் போது அவர்களுக்கு வலிக்காதா? வலியை எப்படி தாங்குகிறார்கள் என்றெல்லாம் யோசித்ததுண்டு/ யோசிப்பதுண்டு. நம்பிக்கை தானே வாழ்க்கை. எம்மால் பிரச்சனையை தீர்க்க முடியாது எனகருதும் நேரங்களில் கடவுள் நம்பிக்கை தான் மனதை ஆற்ற உதவுகிறது. வேண்டுதல்கள் பலவகைப்படலாம்; புலம் பெயரும் முயற்சி தடக்காதிருக்க, உறவுகள் நலமோடிருக்க, நோய் தீர, கைது செய்யப்பட்டவர் விடுதலையை எதிர் நோக்கி என பல.
ஊரிலும் பலர் தூக்கு காவடி எடுப்பது வழக்கம்.அதில் 3 பேருடைய நேர்த்திகடனுக்கடனுக்கான காரணங்களை அறிந்திருந்தமையால் அவர்கள் இருந்த நிலையில் அவர்களின் நம்பிக்கை சரி என்றே பட்டது.
1980 களின் இறுதி என நினைக்கிறேன் ஒருவர் மன்னார் பகுதில்/ எல்லது வேறெங்கோ சரியாக ஞாபகம் இல்லை. துப்பாக்கிசூட்டால் உடல் பகுதிகள் சல்லடையிடப்பட்டு உயிர் தப்புவதே அரிது என சொல்லப்பட்ட நிலையில் இருந்தார். உயிர் பிழைத்த பின் அயலில் உள்ள பிள்ளையார் கோயில் தேருக்கு தூக்குகாவடி எடுத்தார்.
மற்றவர்கள் இருவர், சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறை இருந்து வெளியே வந்த போது நம்மூர் கண்ணகி அம்மனுக்கு அண்ணன் துலாவில் தொங்க, தம்பி அவரது பழுவில் தூங்கிய படி காவடி எடுத்தார்கள். அவர்களது வேண்டுகைகள் நிறைவேறியது கடவுளால் என்பது அவர்களது நம்பிக்கை. அதை யாரும் குறைகூறவோ, பகுத்தறிவு கொண்டு எள்ளல் செய்யவோ முடியாதென்பதே எனது கருத்து.
கனடா கந்தசாமி கோயில் தேர்
Monday, 20 August 2007
கண்டேன் டி சே ஐ........

(படத்தில் டிசெ மற்றும் சுந்தரவடிவேல்)
ரோறான்ரோ போவதற்கு முன் டி.சே ஐ தொடர்பு கொண்டு அவரது தொலைபேசி இலக்கத்தை வாங்கி இருந்தேன். அங்கு போனதன் பின் எனது உறவினர் வீட்டில் இருந்து அழைத்தால் அது குரல் மடலில் செய்தியை பதிவு செய்து சில நிமிடங்களில் டி.சே யிடம் இருந்து அழைப்ப்பு வந்தது. முதல் உரையாடலிலேயே பல நாட்கள் உரையாடியதை போல சகஜமாக நிறையவே கதைத்தார். அப்போ சுந்தரவடிவேலும் ரொறான்ரோவில் நிற்பதாகவும், அவருடனும் கதைத்து சந்திப்புக்கு ஒழுங்கு செய்வதாகவும் சொன்னார். சரி என சொல்லு உரையாடலை முடித்துகொண்டோம். பின்னர் நான் தங்கிய வீட்டு தொலைபேசி இலக்கத்தை தொலைத்துவிட்டு ஒரு வழியாக எனது கையடக்க தொலைபேசி இலக்கத்தை பெற்று எப்போ சந்திப்பது, எத்தனை மணிக்கு என்னை கூட்டி செல்ல வருவது என்ற விபரங்களை கூறினார்.
அதன் படி 10 ஆம் திகதி தமிழரின் நேரம் தவறாத பண்பை சரியாக கடைப்பிடித்து சரியாக சொன்ன நேரத்துக்கு சரியாக அவரது நண்பர் சகிதம் வந்து சேர்ந்தார். இருவரில் யார் டிசே என்ற குழப்பத்தை போக்க அவரே தான் தான் டிசெ, மற்றையது தனது நண்பர் என அறிமுகம் செய்துகொண்டார்.
அங்கிருந்து ரோறான்ரோ நகரின் மைய பகுதியில் உள்ள சுந்தரவடிவேலின் வீட்டில் போய் அவரையும் அழைத்துகொண்டு நகர பகுதியில் நடைபெற்ற கிறீஸ் நாட்டினரின் கொண்டாட்டம் ஒன்றிற்கு போனோம்.
டிசே யுடன் போகும் இடங்களில் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் காட்சிகளுக்கு பஞ்சமா என்ன.
இரவு நேர காட்சிகளில் எனது கமரா ஒளிப்படங்களை சீராக படம் பிடிக்காததால், விடியோவாக சுட்டு கொண்டேன்.
Belly Dance

இதில் பாவிக்கப்பட்ட இசை நமது தவில் கச்சேரிகளில் கேட்கும் இசை போல இருந்தது.
2 பெண்களுடன் 6 ஆண்கள் விளையாடிய கைப்பந்தாட்டம்

பிறேசில் நாட்டு உணவுச்சாலை ஒன்று

டிசே, நான் மற்றும் சுந்தரவடிவேல்

சுந்தரவடிவேல் அவர்களை சந்தித்த போது அவரது தோற்றம், வயது பற்றி வைத்திருந்த கற்பனையிலும் இளமையாக தெரிந்தார்.
சந்திப்பின் போது டி.சேயின் கவிதை புத்தகம் ஒன்றை பெற்றுவராலாம் என்றால் முடியவில்லை. மறுபடியும் டி.சே ஐ சந்திக்க முடியவில்லை. அதனால் கவிதை புத்தகம் பற்றி விமர்சனம் எழுதும் எண்ணம் நிறைவேறவில்லை.
டிசே அடிக்கடி சொல்லி கவலைப்பட்ட விடயம் பொதுவாக கவிதை எழுதும் ஆண்களுக்கு நிறைய ரசிகைகள் இருப்பார்களாம் ஆனால் தனக்கு ரசிகைகள் இல்லையாம் என்று. இதை தீர்க்க என்ன செய்யலாம்? வலைபதியும் பெண் பதிவர்களுக்கு சமர்ப்பணம்.
டிசேயின் கைத்தொலைபேசிக்கு அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்தவர்கள் பற்றி சொல்லாதிருப்பதே இன்னும் அதிக ரசிகைகள் கிடைக்க என்பங்குக்கு நான் செய்ய கூடிய உதவி.
Sunday, 1 July 2007
கனடா தினம் ஜீலை 1

மனிரோபா மானில தமிழ் கலாச்சார அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் மக்களது ஒன்று கூடல் நிகழ்வு வின்னிபெக் நகரில் உள்ள St Vital பூங்காவில் காலை 11.00 மணி முதல் 3.30 மணிவரை சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
இன்றைய நிகழ்வில் பங்கு கொண்டவர்களில் ஈழ தமிழ் மக்கள் பெரும் பான்மையினராக இருந்தாலும் இந்தியா, சிங்கபூர், மலேசியா, மொரீசியஸ் என பல நாடுகளையும் சேர்ந்த தமிழ் மக்கள் கலந்து சிறப்பித்தமை முக்கியமானது.
மொரிசியஸ் தமிழ் மக்கள் தமிழ் மொழியை பேசாத போதும் தமிழர் எனும் அடையாளத்துடன் கலந்து கொண்டமையை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
மனிரோபா மானில ஈழ தமிழ் இளம் சந்ததியில் பெரும் எண்ணிக்கையானோர் தமிழ் பேச்சை புரிந்து கொள்ள கூடியவர்களாக இருந்த போதும், தமிழை பேச முடியாதவர்களாகவே உள்ளனர். ஆனால் இன்றைய நிகழ்வை ஒழுங்கு செய்து முன்னின்று நடத்தியவர்கள் கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் சந்ததியினரே. அவர்களது தலைமையிலேயே அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன. எதிர் காலத்தில் மொரிசியஸ் தமிழ் மக்களை போல கனடா வாழ் தமிழரும் தமிழ் பேசாத, ஆனால் தமிழர் எனும் அடையாளத்துடன் தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

பங்குபற்றிய இளையோர்


சுடச்சுட உணவு தயாரிப்பு (BBQ)

மதிய உணவுக்கு குழுமி நிற்கும் மக்கள்


தமிழ் மக்களது நிகழ்வுக்கு பின் அதே இடத்தில் ஒன்று கூடியிருக்கும் பாக்கிஸ்தானியர்கள்
