Wednesday, 9 July 2008

சோயா இறைச்சி பொரியல்

  • சோயா இறைச்சி பொரியல்


    தேவையான பொருட்கள்


    2 பேருக்கு

    50 கிராம் - சோயா மீற்/ chunks/இறைச்சி
    2- பெரிய சிவப்பு வெங்காயம்
    3 தே.கரண்டி - யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள் இருக்கிறதாலை நம்ம ஊர் கறி தூளுக்கு யாழ்ப்பாண கறி தூள் எண்டு பெயர் போட்டிருக்கும்)
    சுவைக்கேற்ப - உப்பு
    1/4 தே. கரண்டி - மஞ்சள் தூள்
    5 மேசை கரண்டி - நல்லெண்ணேய்/ சூரிய காந்தி எண்ணேய்
    3 கப் - சுடு நீர்
    2 நெட்டு - கறி வேப்பிலை
  • 1- தேசிக்காய்




    செய்முறை

  • நன்கு கொதித்த சுடு நீரை மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் இட்டு சுவைக்கு உப்பு சேர்த்து அதனுள் சோயா இறைச்சியை கொட்டி 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும்
  • வெங்காயத்தை தோல் உரித்து, நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும்
  • வெங்காயத்துக்கு சுவைக்கேற்ப உப்பு, 2 தேக்கரண்டி கறித்தூளை சேர்த்து கிளறி 2 நிமிடம் வைக்கவும்
  • ஊறிய சோயா சோயா இறைச்சியை வடிகட்டி எடுத்து குளிர் நீரில் களுவி கொள்ளவும், பெரிய துண்டுகளாக இருந்தால் சிந்தாமணி கடலை அளவு துண்டுகளாக வெட்டவும், (சந்தையில் சிறிய துண்டுகாள உள்ள சோய இறைச்சியும் கிடைக்கும், அதை வெட்டி துண்டாக்க தேவையில்லை)
  • வெட்டிய/ வடி கட்டி எடுத்த சோயா துண்டுகளுக்கு 1 தே கரண்டி கறித்தூள், மஞ்சள், உப்பு என்பவற்றை போட்டு பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்
  • பொரிக்கும் (அடிப்பிடிக்காத/ ஒட்டாத/ non stick) சட்டியில் 3 மேசகரண்டி எண்ணேய் விட்டு மென்சூட்டில் சூடக்கி அதில் கறித்தூள், உப்பில் பிரட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வெங்காயம் மெதுமையாக வரும் வரை வதக்கவும்/ பொரிக்கவும்
  • வெங்காயம் வதங்கி வந்ததும் ஊற வைத்த சோயா இறைச்சியை கொட்டி, மிகுதியாக இருக்கும் எண்ணேயை சேர்த்து மேலும் ஒரு 2-3 நிமிடம் கிளறி, கறிவேப்பிலையை சேர்த்து இறக்கவும்
  • பொரியல் சாப்பிடக்கூடிய சூட்டை அடைந்ததும் புளிப்பு சுவையை விரும்புபவர்கள் பாதி தேசிக்காயை பிளிந்து, நன்கு கிளறவும்
  • இப்போ சுவையான சோயா இறைச்சி பொரியல் தயார்.
  • இதனை சோறு, புட்டு ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.


Wednesday, 2 July 2008

யாழில் இருந்து லங்கா முடித்தவில் திருமலைக்கு - 1

யாழ் குடா நாடு 95 இல் இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் யாழ் குடா மக்களுக்கான பாதையாக இருந்து வந்த, அதே நேரம் பல பேரை பலி கொண்டதுமான கிளாலி பாதையூடான பயணம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் யாழ் மக்களுக்கான போக்கு வரத்துக்கு காங்கேசன் துறையில் இருந்து திருகோணமலைவரையான கப்பல் மார்க்கமும், பலாலியில் இருந்தான விமான பயணமுமே அமைந்திருந்தது. முதலில் கப்பலிலும், பின்னர் விமானத்திலும் பயணம் செய்திருக்கிறேன். அந்த பயணங்களை மேற்கொள்ள முன்னர் நாம் பட்ட அலைச்சல்கள் கொஞ்ச நஞமல்ல. இந்த பதிவில் கப்பல் பயணத்தின் அனுமதி, பயணசீட்டு பெறல், கப்பலில் பயணித்து திருகோணமலையை சென்று சேரும்வரை பட்ட அவஸ்தைகளை பார்க்கலாம். கப்பல் என்றால் அது பயணிகள் கப்பல் அல்ல, சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு கப்பலில் எந்த அடிப்படை வசதியும் இன்றி பயணிக்க வேண்டும்.
அந்த கப்பல் கீழே உள்ள கப்பலின் தரத்தில் அல்லது அதை விட சிறிது நல்ல நிலையில் இருக்கும்.






**********


இப்போதும் யாழ் குடா நாட்டு மக்கள் வெளியே பயணிப்பதற்கான பாதைகளாக விமான பயணமும், கப்பல் பயணமுமே அமைந்திருக்கிறது. முன்னரை விட இப்போது பயண அனுமதியை பெறுவதற்கு இன்னும் சிரமப்பட வேண்டியிருப்பதாக அறிய முடிந்தது.


**************


யாழ் குடாநாடு இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் திறந்த வெளிச்சிறைசாலையான யாழில் இருந்து மக்கள் வெளியே மக்கள் செல்வதற்கு நிறைய கட்டுப்படுகள் இருந்தன. யாரும் தமக்கு தேவையான நேரத்தில் யாழ் குடா நாட்டுக்கு வெளியே சென்றுவிட முடியாது. பயணத்துக்கான அனுமதியை பெறுவதற்கு குறைந்தது ஒரு மாதங்களாவது காத்திருக்க வேண்டும். அலுவலக, கல்வி நிமித்தம் செல்பவர்களுக்கு வேறு நடைமுறையும், சாதாரண பொதுமக்களுக்கு/ தனிப்பட்ட காரணமாக பயணிப்பவர்களுக்கு வேறு நடைமுறையும் இருந்தன.

சாதாரண பொதுமக்களாக/ தனிப்பட்ட தேவைகளுக்கு பயணிப்பவர்களாக இருந்தால்

இராணுவத்திடம் இருந்து பாதுக்கப்பு பயண அனுமதி பெறும் விண்ணப்பப்படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம், 2 அல்லது 3 (சரியாக நினைவில் இல்லை) புகைப்படங்களுடன் கிராம அதிகாரியிடம் சான்று படுத்தவேண்டும், பின்னர் உதவி அரசாங்க அதிபர் (இந்தியாவில் சப்-கலக்டர்) அலுவலகத்தில் சான்றுபடுத்தி, குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ முகாம் அதிகாரியிடம் உறுதிபடுத்தல் கையொப்பம் வாங்க வேண்டும். இவர்கள் அனைவரது உறுதிப்படுத்தலும் குறிப்பிட்ட நபர் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர் என்ற சாரப்பட இருக்க வேண்டும். சிவில் அரச அலுவலர்களின் கையொப்பத்தை 2 நாட்களில் பெற்றுவிட முடியும். ஆனால் குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியின் கையொப்பம் பெற பல முறை அலைந்து கையொப்பத்தை பெற ஒரு வாரம் ஆகிலும் தேவைப்படும். அத்துடன் குறிப்பிட்ட நபர் நேரடியாக இராணுவ முகாமுக்கு செல்ல வேண்டியிருக்கும். இந்த மூன்று பேரிடமும் கையொப்பம் பெற்ற பின் அந்த பிராந்தியத்திற்கு பொறுப்பான இராணுவ முகாமில் விண்ணப்பத்தை கையளிக்க வேண்டும். அவர்கள் அதை உறுதிப்படுத்தி பலாலியில் உள்ள இராணுவ சிவில் (இராணுவம் அதில் என்ன பின் சிவில் என்று ஆச்சரிய படுகிறீர்களா? பொதுமக்களின் பயண ஒழுங்கு அனுமதியை வழங்கும் அலுவலகம் அப்படி தான் அழைக்கப்படும்) அலுவலக்கம் எல்லா தகவல்கள், ஆவணங்களையும் சரி பார்த்து நிராகரிக்கும் அல்லது அனுமதிக்கும். அந்த அனுமதி கிடைக்க குறைந்தது 2 வாரங்களாவது செல்லும். ஆனால் இரண்டு வாரத்தில் கிடைக்கும் என்று வீட்டில் இருந்தால் 2 மாதம் ஆனாலும் கிடைக்காது. இரண்டு வாரம் முடியும் தறுவாயில் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு பொறுப்பான இராணுவ முகாமுக்கு போனால் இன்று வா, நாளை வா என இழுத்தடித்து பயணத்துக்கான அனுமதி முன்று அல்லது நான் கு வார முடிவில் கையில் கிடைக்கும். கிடைத்த அனுமதி கூட 1 அல்லது 2 மாதம் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் கப்பலில் அல்லது விமானத்தில் இடம் கிடைக்காவிட்டால் மீண்டும் பாதுகாப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுவே அலுவலக காரியமாக/ அல்லது கல்வி காரணங்களுக்காக செல்வோருக்கு பதுகாப்பு அனுமதி முறை வேறானது, சற்று இலகுவானது. எனது பயணம் கல்வி பயணமாக இருந்ததால் இந்த முறையிலேயே நானும் எனது பள்ளி தோழர்கள், மற்றும் எம்முடன் துணை வந்த ஆசிரியர்களும் அனுமதி பெற்றோம். அதைப்பற்றியும், கப்பல் பயண சீட்டு பெறுவது பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.





தொடரும்...............

Monday, 30 June 2008

Our lady of Lourdes church, Cook's creek

Our lady of Lourdes church, Cook's creek, Manitoba, Canada
22/06/08

மனிரோபா மானிலத்தில் இருக்கும் கூக்ஸ் கிறீக் எனும் இடத்தில் உக்கிரேனிய சமூகத்தவர்களால் அமைக்கப்பட்ட தேவாலயம். இது பொதுவாக யாத்திரை தலமாகவும் விளங்கிவருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பொதுவாக பல இடத்திலிருந்தும் இங்கு யாத்திரையாக வந்து மக்கள் கூடுவார்கள். மனிரோபா மானிலத்தின் தலைநகரான வின்னிபெக்கில் கூட இப்படி பெரிய தேவாலயங்களை காண முடியாது.













Sunday, 29 June 2008

வின்னிபெக் முருகன் வருடாந்த உற்சவம்

Winnipeg Murugan annual festival 20/06/08


கனடாவின் ஏனைய நகரங்களான ரொறான்ரோ, மொன்றியால், எட்மன்ரன், வன்கூவர் போன்ற நகரங்கள் போன்று அல்லாது வின்னிபெக் நகரில் தமிழ் மக்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால் தென்னிந்திய பாணியிலான கோயில்கள் எதுவும் இல்லை. அதிக அளவில் வட இந்திய மக்கள் இருப்பதால் இங்கு இருக்கும் கோயில்கள் வட இந்திய முறையில் அமைந்திருப்பதுடன், பூசைகளும் வட இந்திய முறையிலேயே நடப்பது வழக்கம். இங்கிருக்கும் தமிழர்களால் வட இந்திய முறையில் அமைந்த கோயிலில் முருகன் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு, அவ்வாறு பிரதிஸ்டை செய்ததன் மூன்றாம் ஆண்டு நிறைவு நிகழ்விற்கு போகும் சந்தர்பம் கிடைத்தது.



நீண்ட நாட்களுக்கு பின்னர் தவில் நாதஸ்வர இசையை நேரடியாக ரசிக்க முடிந்தது. அத்துடன் ஊரில் சுவாமி வீதி வலம் வருவதுபோல இங்கும் செய்திருந்தார்கள்.























கோயிலை பற்றியும் குழறுபடிகள் பற்றியும் சில குறிப்புக்கள்.

சில நல்ல விடயங்கள்

1. கோயிலில் ஒவ்வொரு வெள்ளி கிழமை மாலையும் தமிழர்களது பூசை நடைபெறுமாறும் ஒழுங்கு செய்துள்ளார்கள்.

2. கோயில் பூசகர் வட இந்திய பூசகராக இருப்பதால் பூசையில் பெரும்பாலான நேரம் தேவாரம், திருவாசகம், திருப்புகள், மற்றும் தமிழ் பஜனை பாடல்களாகவே இருக்கும். இதை ரோரன்ரோவிலோ ஏனைய தமிழ் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் உரிய கோயில்களிலோ எதிர்பார்க்க முடியாது. ஆகம வழி பூசை என்று முழுவதும் சமஸ்கிருததிலேயே முடிந்து விடும். இதனாக் இங்குள்ள சிறுவர்கள் தமிழ் பேசுகிறார்களோ இல்லையோ தேவாரம் பாட தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாடல்களுக்கு தபேலா, மிருதங்கம் போன்ற இசை கருவிகளை இசைக்க தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஊரில் பாடசாலைகளில் தேவாரம் பாடி முடிய சொல்வது போல, இங்கும் பூசை முடிய இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க, தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பவை சொல்லி பூசையை முடிக்கிறார்கள். இதை எந்த ஒரு தமிழர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் தென் இந்திய கட்டிட அமைப்பில் அமைந்த கோயில்களில் எதிர் பார்க்க முடியாது.

3. விசேட பூசை தினங்களில் இலவச உணவு நிச்சயம்.

4. கோயில் மண்டபத்தில் தமிழ் வகுப்புக்கள் நடை பெறுவது வழக்கம்.

குழறுபடிகள்

தமிழன் என்றோர் இனமுண்டு, அவனுக்கு தனியே ஒரு குணம் உண்டு. அது ஒருவரையும் முன்னுக்கு வர விடமையும், எதாவது காரியங்கள் நல்லபடி நடந்தால் அதை குழப்புவது எப்படி என்று சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பது.


1. முன்னர் வட அமெரிக்க தமிழ் சங்கங்களையும், கோயில் நிர்வாகத்தையும் கைப்பற்றுவது எப்படி என யாரோ வலைப்பதிவில் எழுதியிருந்தார்கள். வின்னிபெக்கில் இருப்பதோ 30-50 தமிழ் குடும்பங்கள். அவர்களுக்குள் கோயில் நிர்வாகத்தை கூட அல்ல வட இந்திய மக்களுடைய கொயிலில் தமிழ் மக்கள் சிறப்பாக கொண்டாடும் தினங்களில் பூசைகளை ஒழுங்கு செய்யும் குழு நிர்வாகத்தை கைப்பற்றுவதில் போட்டி சண்டை, கைகலப்பு என போய் சிலர் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்படும் பூசைகளுக்கு வருவதில்லை.

2. முருகன் சிலையை வைப்பதற்கு கோயில் நிர்வாகதில் பேசி அவர்களை உடன்பட வைத்த பிற்பாடு யார் முருகன் சிலையை இந்தியாவில் இருந்து செய்து வரவளைப்பது என்பதில் நீயா நானா போட்டி. முதலில் செய்யப்பட்ட முருகன் சிலை போட்டியால் களஞ்சிய அறையில் இருக்க புதிதாக சிலை செய்வித்து வைத்திருக்கிறார்கள்.

3. கோயில் வருடாந்த உற்சவத்தில் ஊரில் சாமி காவும் போது சில உள்ளுர் மைனர் மார் முன் வரிசையில் இடம் பிடிக்க அலைவது போலவும், சாமில் இருப்பில் இருந்து புறப்படும் போதும், சுவாமி இருப்புக்கு திரும்பும் போதும் தங்களே காவ வேண்டும் என்று அலைவது போலவும் இங்கும் சில பேர்.

4. பூசகர் வட இந்தியராக இருப்பதால் வட இந்தியர்கள் சுவாமி விக்கிரகங்களை தொட்டு வணங்கவும், அவர்களே பாலால், அல்லது ஏனைய அபிசேகங்களை செய்யவும் அனுமதிப்பது போல தமிழர்களின் பூசை நேரமும் பூசகர் செய்ய முற்பட்ட போது இங்குள்ள சிலர் எமதூரில் இப்படி அனைவரும் தொட்டு வணங்கக அனுமதிப்பதில்லை. இதன் அடி நாதமே சாதி என்பதில் இருந்து தான் வருகிறது. எனவே தமிழர்களின் பூசை நேரம் அவ்வாறு அனுமதிக்க கூடாது என சண்டை பிடிததாகவும் அறிய முடிந்தது. கடவுள் வழி கொடுத்தாலும் பூசாரி வழி கொடுக்க மாடார் என பழ மொழி சொல்வார்கள். ஆனால் இங்கு பூசைக்கு இருக்கும் பிராமணர் அனைவரையும் அனுமதிக்க தயார். ஆனால் எம்மவர்கள் அதுக்கு குறுக்கே தலைகிழாக நிற்கிறார்கள்.

5. முருகன் என அழகான தமிழ் பெயர் இருக்கிறது. வலைதளத்தையும் வின்னிபெக் முருகன் என வைத்திருக்கிறார்கள். ஆனால் வலைதளத்தில்/ கோயில் விழா நிகழ்ச்சி நிரல்களில் முருகனை வட மொழி பெயரில் கார்த்திக் என எழுதுவதில் ஒரு பெருமை :(.
ஆரிடம் சொல்லியழ.








Gaypride parade

Gaypride, Winnipeg, Manitoba
08/06/2008

ஒரு பாலினருக்கிடையேயான திருமணத்தை சட்ட ரீதியாக அங்கிகரித்த நாடுகளில் கனடாவும் ஒன்று. ஆனால் ஒரு பாலினத்தினருக்கிடையேயான உறவு என்பது இப்போதும் எல்லா கனேடிய மக்களாலும் மனத்தளவில் அங்கிகரிக்கப்பட முடியாததாகவும், வெளியே ஒரு பாலின நாட்டமுள்ளவர்களை சமமானவர்களாக மதிப்பதாக காட்டி கொண்டாலும், அவர்களுக்கேதிரான வனமுறைகளும், அவர்களை பாகுபாடாக நடத்துவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கனடாவில் நடைபெறும் பாலியல் தொடர்பான வெறுப்பு வன்முறைகளில் 80% ஒரு பாலின நாட்டமுடையவர்களை குறிவைத்தே நடாத்த படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறன.

இந்த நிலையில் பெரும்பாலான ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ஒரு பாலின நாட்டமுடையவர்களுக்கான சம உரிமையை வேண்டி வருடாந்தம் நடைபெறும் ஊர்வலத்தில் வின்னிபேக் நகரத்தில் நடந்த ஊர்வலத்தில் எடுத்த படங்கள்.


வானவில் வண்ண கொடி



ஒரு பால் நாட்டமுள்ளவர்கள், மற்றும் திரு நங்கைகளை குறிக்க பயன் படும் கொடி- அறிமுகப்படுத்தி 30 ஆண்டு ஆகிறதாக சொல்கிறாகள்.



கொடியின் நிறங்கள் குறிக்கும் விடயங்கள்




hot pink - sexuality
red - life
orange - healing
yellow - sunlight
green - nature
turquoise - magic
blue - serenity
violet - spirit















ஆதரவாக பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர்



ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் மாணவர் ஒன்றிய ஊர்தி- மாணவர் பல்கலை கழக கட்டண குறைப்பை வேண்டும் பதாகை.






ஆதரவாக குழந்தைகளுடன் கலந்து கொண்ட மக்கள்


ஆதரவு தெரிவித்து ஊர்வலம் போகும் நாய்க்குட்டி






கலந்து கொண்ட மக்கள்



கடமையில் இருக்கும் பொலிஸ் வாகனம்









ஓரளவுக்கு திறந்த மனதுடன் அணுகும் சமுகத்திலேயே தமது பாலியல் நாட்டத்தை வெளியிட முடியமால் பலரும் அவதிப்படும் நிலையில், எமது சமூகங்களை பற்றி சொல்ல வேண்டியதிலை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பாடசாலை மணவர்களையும், புரிந்து கொள்ள முடியாத வயதுடைய சிறுவர்களையும் தமது உணர்வுக்கு பலிக்கடாவாக்கும் சம்பவங்கள் பல வெளியே தெரிந்தும் தெரியாமலும் எமது ஊரில் நடப்பது தெரிந்தாலும் பலரும் பேச பிரியப்படுவதில்லை என்பது ஒரு முக்கியமான விடயம்.