Tuesday, 5 June 2007

மலிந்து போன இறப்புக்கள்........

யாரால் எதற்காக என கூட சொல்ல முடியாது நாளாந்தம் கொல்லப்படுவோர் பற்றிய செய்தித் தலைப்புகள் ஊடகங்களை நிரப்பும் மரணங்கள் மலிந்த இன்றைய பொழுதில் எமக்கு தெரிந்தவர்கள் யாருக்கும் ஏதும் ஏற்பட்டுவிடகூடதே, என எண்ணியபடி நமக்கு தெரிந்த யாரும் அகப்படவில்லை என்பதை உறுதி படுத்திகொள்ளும் பொருட்டு மட்டுமே செய்தியை வாசிக்கும் மனநிலையை எப்படி சொல்லுவது? ஆனால் அப்படி ஒரு மனநிலைக்கு கடந்த ஒரு வருடத்துக்குமேலாக ஈழத்தில் நிலவும் சூழல் மனதை மற்றிபோட வைத்திருக்கிறது.

இருந்த போதும் தொலைபேசும் போதும், செய்திகளை வாசிக்கும் போதும், நண்பனின் தம்பியோ, அண்ணனோ சுடப்பட்ட செய்திகள், நாளாந்தம் காலை தினசரி வாங்கும் கடை நண்பன் தெருவில் சுடப்பட்ட செய்தி எல்லாம் மிக பழசாகி போக மீண்டும் மீண்டும் .... தொடரும் படுகொலை, காணாமல் போதலில் தெரிந்த யாரேனும் ஒருவர்

திருமலையில் கொல்லப்பட்ட 17 பட்டினிக்கெதிரான நிறுவன பணியாளரில் ஒருவனாக எமது கல்லூரி நண்பன் ஒருவனும் கொல்லப்பட்ட செய்தி, கல்லூரி காலத்தில் காதலித்து, திருமணமாகி 4 வருடங்கள் கூட கடக்காத நிலையில் அவனது குடும்பத்தில் அது எத்தகைய இழ்ப்பு ......

மீண்டும் நேற்றைய தினம்

பள்ளி தோழன்,தபாலதிபர், திருமணமாகி 4 வருடம் கூட கடக்காத நிலையில் 2 குழந்தைகளின் தந்தை மனைவி குழந்தைகளின் முன்னே சுடப்பட்டு இறந்தான் என்பதும், அவனது உடல் 18 மணி நேரமாக சுடப்பட்ட இடத்திலேயே இருந்தது என்பதையும் வாசித்த போது ஏற்பட்ட கவலை, மன உழைச்சல்....

இப்படி நடக்கும் சம்பவங்களை வாசித்து ஏதுவுமே செய்யமுடியாது இருக்கும் நிலையை எண்ணி நொந்து கொள்வதை தவிர வேறெதுவும் இல்லை.

தொலைபேசும் போது உறவுகள், "இப்ப கொஞ்சம் கொஞ்சம் எல்லா பொருட்களும் கிடைக்கிறன, இடைஇடையே செக்கிங் (சுத்திவளைப்பு), நாளாந்தம் ஆமியின் வாகன தொடரணி போகும் போது தொலைபேசி இணைப்பு துண்டிப்பு, வீதி போக்குவரத்து 1 அல்லது இருமணி நேரம் முடக்கம் அப்பப்போ நடக்கும் சூடுகள் தவிர பறுவாயில்லாமல் இருக்கிறோம்" எனும் கூற்றை எப்படி எடுப்பது.......


நேற்றைய தினம் மட்டும் படுகொலை செய்யப்பட்டதாக வந்த செய்திகள்
1. Red Cross condemns murder of staff
2. 3 civilians killed in Jaffna
3. Postmaster shot dead in Chaavakachcheari

5 comments:

said...

சந்திரன் வருத்தம் தரும் செய்தி என்பதைத் தவிர என்னத்தைச் சொல்ல? 87கள் தான் நினைவுக்கு வருகின்றது. அதைவிட மோசமான நிலையாய் இன்றைய நிலை....! எவரையும் எவர் எப்போது போட்டுத்தள்ளுவார்கள் என்ற எந்த நிகழ்தகவும் இல்லாது :-(.

said...

உங்கள் ஆதங்கம் விளங்கின்றது விஐ. எத்தனை கொடுமைகள் நம் இனத்திற்கு. உங்கள் நண்பனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

said...

நிலமை வர வர மோசமாகிக் கொண்டே வருகிறது. கையறு நிலையில் நாம்....:(

said...

இதுவே எங்கட சனங்களுக்கு நாளாந்த வாழ்க்கையாப் போச்சு.
மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதே உங்களைப் போன்றவர்களின் நிலை.

said...

டிசே, நந்தியா, மலைநாடான், வசந்தன்...

எதுவும் செய்யமுடியாத கையறு நிலை.