Monday, 26 March 2007

குண்டு போட்டவர்கள் மீது விழுந்த குண்டு.....படம்: தமிழ்நெட்


விமான குண்டு வீச்சு பற்றிய ஞாபக பதிவை 4 நாட்களுக்கு முன் (சயந்தன் -சோமி இருவரின் குரல் பதிவு வந்த போது) எழுத வெளிக்கிட்டு பாதியிலேயே எழுதியதை அழிச்சு போட்டு விட்டிட்டன்.

கட்டுநாயக்க விமான தளம் மீதான் தாக்குதல் இதை எழுத மீண்டும் தூண்டியது.

சியாமா செட்டி,அவ்ரோ, வை 8, 12 (சரக்கு விமானங்கள் ஆனா குண்டும் போடும்), ஹெலி புக்காரா, கிபிர், ..... இப்படி பல விமானங்களின் குண்டு வீச்சுக்களையும் பார்த்து சிதறிய உடல்களை கண்டு பழகி இப்ப இஞ்சை வந்தா பிறகும் எதிர்பாரத நேரங்களிலை ஹெலியோ இல்லை பிளேனுகளோ பறந்தா என்னையறியாமலே ஒரு திகில், பயம் வந்து போகும்.
ஹெலி, 50, 90 கலிபர் துப்பாக்கியால் சுடும் போது பனை மரம் சுத்தின அனுபவம், பாடசாலைக்குள் இருக்கும் போது இந்திய இராணுவ தாக்குதல் நடந்து அதுக்கு வாங்குகளுக்கு கீழ ஒழிச்ச அனுபவம், மல்ரி பரல் (பல்குழல் எறிகணை) எமது வீட்டுக்கு மேலால் கூவி சென்று அடுத்த ஊரை துவசம் செய்ய, பயத்தொடு படுத்திருந்தது.... இப்பிடி கனக்க இருக்கு. அத மாதிரி கன பேருக்கு இருக்கும்.

இதிலை ஒரு குண்டு வீச்சு சம்பவம் பற்றின நினைவை மட்டும் சொல்ல போறன்.

அப்ப 1993, யாழ்தேவி (கொழும்பு யாழ்ப்பாணம் ஓடின ரயிலின் பெயர்) எண்ட பெயரிலை ஆனையிறவில் இருந்து கிளாலி நோக்கி யாழ்கடனீரேரி ஓரமாக இராணுவம் தக்குதல் நடத்தி முன்னேறின நேரம். (கிளாலி, சாவகச்சேரி, என்பவை தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள இடங்கள். சாவகச்சேரி சண்டை நடக்கும் இடத்திற்கு அண்மையில் இருக்கும் சந்தையுடன் கூடிய சன செறிவான நகரபகுதி.)
அப்ப சண்டை நடந்து வெடிகேட்டாலும், சோதினையள், பள்ளிகூடங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.யாழ்தேவி இராணுவ நடவடிக்கை நேரம் எங்களுக்கு சோதினை ஒண்டு நடந்து கொண்டு இருந்தது.

ஒரு நாள் காலமை எங்களுக்கு சோதினை தொடங்கி ஒரு 1 மணித்தியாலம் இருக்கும் (3 மணி நேரம் ஒரு பாட சோதினை இருக்கும்). விமானங்கள், ஹெலி என்பனவற்றின் இரைச்சல் கேட்டக தொடங்கி இருந்தது. பயம் இருந்தாலும் சோதினை எழுதுவதில் தான் எங்கட சிந்தனை எல்லாம். ஆனா வந்த விமானங்கள் எமது பாடசாலை சூழலை வட்டமிட தொடங்கி இருந்தன.
விமானம் சுத்தும் சத்ததை வச்சு, விமானம் கிட்ட வருகிறதா? இல்லை தூரவா? விமானம் குண்டு வீச குத்துகிறதா? குண்டு வீசி மேலெழுகிறதா? என்பதை விமானத்தை பாக்காமலே மூடிய ஓரிடத்திலை இருந்து அனுமானிக்க கூடிய அளவுக்கு எங்களுக்கு அனுபவம் வந்திருந்தது.
பரீட்சை நிலையம், எமது பாடசாலை பிரதான மண்டபம், மற்றும் அதனோடு இணைந்த ஒரு மாடி கட்டிடத்தின் தரை தளம். பிரதான மண்டபத்தில் ஆண்களும், அடுத்த மாடி கட்டிட்டத்தின் தரை தளத்தில் பெண்களும் சோதினை எழுதி கொண்டிருந்தோம்.
விமானங்கள், ஹெலியின் வட்டமிடல் நாம் இருக்கும் இடத்தை மையம் வைத்து இருப்பதை உணர்ந்த போது மனம் படபடக்க தொடங்கினாலும், கட்டிடத்துக்கு வெளியே பாதுகாப்பு தேடி போவதால் ஏதும் வந்துவிடப்போவதில்லை என்பதும்,அத்தோடு சோதினை எழுதிய குறை வேறு. பொடியள் எல்லாரும் விமான பறப்பு சந்தம் கிட்டவா கேட்டா, குண்டு போட குத்துற சத்தம் கேட்டா சோதினை எழுதி கொண்டிருக்கிற மேசைக்கு கீழ போறதும், விமானம் தூர போக வெளீல வந்து எழுதுறதுமா இருந்தம்.மேசைக்கு கீழ போய் இருக்கிறதாலை எந்த பாதுகாப்பும் இல்லை எண்டாலும் ஒரு மன ஆறுதலுக்கு மட்டுமே அந்த முயற்சி.

ஆனா பெண்கள் குண்டு விழுந்து வெடிச்ச உடனம் வெளீல சத்தம் போட்டு கொண்டு வெளி விறாந்தைக்கு வாறதும், சோதினை மேற்பார்வையாளர்கள் அவர்கள் மேலும் வெளீல போகமல் உள்ள போக பண்ணுறதுமா இருந்திச்சினம்.
குண்டுகள் அண்மையாகவே வீசப்பட்டு சத்தங்கள் கேட்டாலும் எம்மால் வெளியே உடனே போக முடியாது. போனாலும் பயன் இல்லை.

குண்டு வீசி முடிந்து விமானங்கள் போன பின், சோதினையை குறையிலேயே நிறுத்தி விட்டார்கள். ஏன் எண்டா சண்டை நடக்கும் போது, மீண்டும் மீண்டும் வந்து குண்டு வீசுவார்கள்.
சோதினை மண்டபத்துக்கு வெளியே வந்து பார்த்த போது சாவகச்செரி நகரத்தில் இருந்த எரிபொருள் (மண்ணேணெய்) விறபனை நிலையங்கள் பாதிப்புக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்தன. ஆனால் அங்கு போக யாரும் தாயாரில்லை. அடுத்த சுற்று குண்டு வீச வரமுன் வீட்ட போக வேணும் எண்டது தான் எல்லாரோட நினைப்பும். உடன வீட்ட போட்டம். எதிர் பாத்த மாதிரியே அண்டைக்கு பின்னேரம் மீண்டும் விமானங்கள் குண்டு வீச வந்தன. அந்த நேரம் எமது பாடசாலையை அண்மித்தா இருக்கிற ஒரு பதுங்கு குழிக்கு 2 / 3 வீட்டு ஆக்கள் ஓடி போய் பாதுகாப்பு தேடி இருக்கிறார்கள். அதை சுத்தி சுத்தி வட்டமிட்ட விமானிகளும் அவதானித்து அந்த பதுங்குகுழியை இலக்கு வைத்து குண்டு வீசியதில் அந்த பதுங்கு குழிக்குள் இருந்த 8 பேர் இறந்து போனார்கள்.
அதில் எமது வகுப்பு தோழியும் ஒருத்தி, அவரும், அவரது அப்பா, அக்கா என 3 பேர், இன்னும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 8 பேர். காலையில் சோதினையில் சந்தித்த தோழி மலை பாதுகாப்பு தேடிய பதுங்கு குழிக்குள்ளேயே பிணமான அவலம். இன்றும் மறக்க முடியாது. அவர்களது குடும்பத்தில் தாயும், சகோதரன் ஒருவரும் அன்று வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்கள்.

ஆண் பெண் வகுப்புக்கள் வேறு வேறானவையாக பாடசாலையில் இருந்தாலும், அந்த தோழியும், நானும் ஒரே தனியார் கல்விநிலையத்தில் கல்விகற்றோம். அவருடன் 1/ 2 முறை சில வார்த்தை மட்டுமே கதைதிருந்தாலும் அவரின் மீது மதிப்பிருந்தது. அந்த தோழி ஒரு நல்ல விளையாட்டு வீராங்கனை, எமது பாடசாலைக்கு மாவட்ட போட்டிகள் வரை சென்று வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். அதுடன் அவர் வகுப்பில் இருந்தால் எப்போதும் பெண்கள் பக்கம் கல கலப்பாகவே இருக்கும். அதனாலேயே எங்கள் ரியூசனில் எல்லாருக்குமே அவரை பிடிக்கும்.

இதே போல இன்னுமொரு குண்டுவீச்சில் எமக்கு முதல் வகுப்பில் படித்த ஒரு அண்ணாவும், அவரது சகோதரியும் பதுங்கு குழிக்கு மேல் விசிய குண்டில் இறந்து போக, அவர்களது அப்பா அம்மா வேறு இடத்தில் இருந்ததால் உயிர் தப்பினார்கள். ஆனால் அவர்களது இரண்டு பிள்ளைகளுமே இறந்து போனார்கள்.


இறுதியா சயந்தன் சொன்னது போலவே கட்டு நாயக்க மீது தாக்குதல் நடந்ததாம் எனும் போது மனத்தில் ஏற்பட்ட இனம்புரியாத ஒரு பூரிப்பு. அதில் ஏற்பட்ட மனித இறப்புக்களை பற்றி கவலைப்படவும் முடியவில்லை. வலைப்பதிவில் பல சந்தர்ப்பங்களில் இராணுவ இறப்பும் ஒரு மனிதனின் இறப்பு தானே, அவனுக்கும் உறவுகள் இருக்கிறர்கள் தானே என அந்த இறப்பை பார்த்து சந்தோசப்பட முடியாது/ கூடாது என்பதாக சொல்லி இருந்தார்கள். எய்தவன் இருக்க அம்பை ஏன் நோவான் என்ற கருத்தும் வந்திருந்தது.

ஆனால் குண்டுகள் வீசும் போது, ஹெலி, சி பிளேன் போற விமானங்களின் வழிகாட்டலுடன், சுற்றி வட்டமிட்டு இலக்கு பார்த்து பொது மக்களது வீடுகள் மீதும், பாதுக்கப்புக்கு பதுங்கிய பதுங்கு குழி மீதும், அடைக்கலம் தேடிய ஆலயம் மீதும் குண்டு வீசுபவர்களின் இறப்பை பார்த்து அவர்களும் மனிதர்கள் தான் என சொல்லும் பக்குவத்தை நான் இன்னும் அடையவில்லை.

6 comments:

said...

உங்கட நண்பியைப்போல எத்தின பேருக்கு நடந்திருக்கும்.காலம கண்டு கதைப்பம் பின்னேரம் ஆளிருக்காது.

\\குண்டு வீசி முடிந்து விமானங்கள் போன பின், சோதினையை குறையிலேயே நிறுத்தி விட்டார்கள்\\

எங்களுக்கொருநாளும் எக்ஸாம் ரைம் அப்பிடி நடக்கேல்ல.ஆனால் மேசைக்குக் கீழ விழுந்து படுக்கிறதெல்லாம் நடந்திருக்கு.

said...

//உங்கட நண்பியைப்போல எத்தின பேருக்கு நடந்திருக்கும்.காலம கண்டு கதைப்பம் பின்னேரம் ஆளிருக்காது.//

இப்படியான அனுபவங்களை வைத்திருக்காத எம் வயதொத்தவர்களை விரல் விட்டு எண்ணலாம் :(

Anonymous said...

All the arm chair generals are talking, a guy named Raman even suggested UN should confiscate all TAF aircrafts. Where were these guys when women and children are massacred indiscriminately by sri lankan army ?

No more peace talks, throw the norweigiens out.

said...

சந்திரன்,
மனதைக் கனக்க வைத்த பதிவு.

said...

//சந்திரன்,
மனதைக் கனக்க வைத்த பதிவு.//
வெற்றி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

said...

சந்திரன்,
நான் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலே படித்தவன், நீங்கள் கூறிய அந்தச் சினேகிதியுடன் நானும் பல... கொத்தணி, கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்திருக்கின்றேன்... அந்தச் சகோதரியை இழந்தது எமது பாடசாலைக்குப் பெரும் இழப்பு... மிகவுப் துக்கமான சம்பவம்... அவர் இறந்த பொழுது அவருக்கு 16 வயது இருக்கலாம்... நான் அவரிலும் விட ஒரு வகுப்புக் குறைவு...
கரன்