"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்"
இந்த 2 வரிகளையும், இதை இயற்றியவர் மகா கவி எனும் கவிஞர் என்பதையும் 1999 ஆண்டில் அறிந்து கொண்டேன். அதை அறிவதற்கு காரணமான சம்பவம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வுடன் இணைந்தது என்பதால் இரு வசனங்களும் அடிக்கடி நினைவில் வந்து வந்து போகும்.
அதனாலேயே இந்த இரு வரிகளையும் எனது வலைப்பதிவின் மகுட வாக்கியமாக இணைத்து கொண்டேன்.
எனது வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது இப்பாடலை பற்றி வினாவிய போது
இப்பாடலை எனக்கு தந்தவர் திரு. இராஜன் முருகவேள் அவர்கள். அவருக்கு எனது நன்றிகள்.
பாடலை கேடக:
Track 03.mp3 |
படியவர்: திருச்செல்வம்
பாடல் வரிகள்: மஹாகவி
மஹாகவி பற்றிய விபரம் தமிழ் விக்கிபிடியாவில் இருக்கிறது.
http://ta.wikipedia.org/
பாடல் வரிகள்.
ஏலேலம் ஏலேலம் ஏல வலை ஏலேலம்
ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய் ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா....
ஆண்:
சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
(சிறு நண்டு)
பெண்:
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்
ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோய் ததேய் தாம் ஏல ஏலோய்
ஆண்:
வெறுவான வெளி மீது மழை வந்து சேரும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்
வெறுவான வெளி மீது மழை வந்து சேரும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்
பெண்:
நெறி மாறு கடலூடு சுழி வந்து சூழும்
நிலையானா தரை நீரில் இலைபோலியாடும்???
நெறி மாறு கடலூடு சுழி வந்து சூழும்
நிலையானா தரை நீரில் இலைபோலியாடும்???
ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய்
ஆண்:
சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சிலவேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
(சிறு நண்டு)
பெண்:
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்
ஏலோ ஏல ஏலோ தத்தெய்தாம் ஏல ஏலோ ததேய் தாம் ஏல ஏலோய்.......
16 comments:
வணக்கம் வி.ஜே
இப்பாடல் "மண் சுமந்த மேனியர்" அரங்க நிகழ்விலும் பயன்படுத்தப்பட்டது. வடதமிழீழத்துக்கு ஒரு மகாகவி, தென் தமிழீழத்துக்கு ஒரு நீலாவணன் என்பார்கள். அழகான கவிதை இது.
இப்பாடல் கண்ணீரும் குருதியும் காத்திருப்பு என்ற இசைத்தட்டில் வெளியாகி நானும் கேட்டிருந்தேன்.
வாங்கோ பிரபா
இந்த பாட்டு புலரும் வேளையில் இசைதட்டில் இருப்பதாக தமிழமுதம் இணையத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
சில வேளைகளிலொன்றுக்கு மேற்பட்ட தொகுப்புக்களில் வந்திருக்க முடியும்.
மண்சுமந்த மேனியர் பாத்த மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு சரியா ஞாபகம் இல்லை.
சந்திரன்,
அருமையான பாடலை ஒலிவடிவில் இட்டதுக்கு நன்றி.
இப்பாடலை சின்ன வகுப்பில் பாடசாலையில் கேட்டிருக்கிறேன். இப்பாடலுக்கு சிறு குழுவொன்று அபிநயம் செய்தது. (ஆனால் மெட்டு சற்று வித்தியாசமாயிருந்ததாக நினைவு)
நீங்கள் தந்த பாடலுக்கு இசையமைத்தது யாரென்று தெரியுமா?
இசைவாணர் கண்ணன் அவர்கள் இசையமைத்ததாகச் சொல்லியிருக்கிறார். மண்சுமந்த மேனியர் நாடகத்துக்காகவென்று தான் நினைக்கிறேன்.
நெய்தல் இசைத்தட்டுக்குரிய பாடலொன்றுக்கு பலநாட்கள் முயன்றும் திருப்தியான மெட்டுச் சரிவராமல் கிடப்பில் போடப்பட்டிருந்த போது ஒருநாள் யாழ்.பல்கலைக்கழகத்த்தின் வழியால் சைக்களில் சென்றபோது முன்பு அங்கு நடந்த நாடகத்துக்கு தான் இசையமைத்த 'சிறுநண்டு மணல்மீது' பாடல் ஞாபகம் வந்ததாகவும், அதை அடிப்படையாக வைத்து நெய்தல் பாடலை முடித்ததாகவும் ஒரு செவ்வியில் சொல்லியிருந்தார்.
இந்தப்பாடல் பற்றி அறிந்த சம்பவமா?? அத சொல்லக்கூடாதோ ?
எனக்கிந்தப் பாட்டு படிச்சு ஞாபகம் இல்லை ஆனால் அம்மா பாடுறவா நடுக.
சோழியண்ணா எனக்கும் இந்தப்பாட்டு முந்தித் தந்தவர் கேக்க.
இந்தப் பாட்டு நாங்கள் சின்ன வகுப்பில அழகியல் பாடத்துக்கு பாடமாக்கி படிச்சது.. அதுக்கு பிறகு ஞாபகம் வரேல்ல.. உங்கட பதிவில பாக்கிற வரைக்கும்..
வசந்தன், நான் இணைத்த பாடலுக்கு இசை அமைத்தவர் பற்றிய விபரம் தெரியவில்லை.
சினெகிதி அந்த சம்பவம் சொல்ல தக்கதாக இல்லை.
படியாதவன் நங்கள் உந்த பாட்டு நாங்கள் படிக்க இல்லை, உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சந்திரன்!
அருமையான பாடல். தந்தமைக்கு மிக்க நன்றி.
வசந்தன்!
மண்சுமந்த மேனியர் நாடகநிகழ்வின் போது இப்பாடலுக்கு இசையமைத்தவர் கண்ணன்தான். நான் பார்த்திருக்கின்றேன். அதன் பின், இது ஒலிநாடா வடிவில் வந்துவிட்டதே.
நன்றி மலைநாடான்.
அந்நாடகத்து அவர் இசையமைத்தார் சரி, ஆனால் இசைத்தட்டு வெளியானபோது வேறு யாராவது செய்தார்களா? இசைவாணர் கண்ணனுக்கு முன்போ பின்போ வேறும் யாராவது முயற்சித்திருக்கலாமல்லவா?
அச்சந்தேகத்தில்தான் கேட்டேன்.
ஆனால் இந்தக் கோப்பிலுள்ள பாடல் கண்ணனின் இசையமைப்பென்றுதான் படுகிறது. ஏனென்றால் முன் தொகையறாவில் வரும் 'ஏலஏலோ'.. மெட்டு அப்படியே திருமலைச்சந்திரனின் குரலில் நெய்தலில் பதிவாகியுள்ளது.
ஈழத்து இசைவரலாற்றில் இசைவாணர் கண்ணனின் பங்களிப்பும் முக்கியமானது.
எழுச்சிப்பாடல்கள் அனைத்தும், 'பாட்டெழுதி பின் மெட்டமைக்கும்' வழிமுறையிலேயே உருவாக்கப்படுகின்றன.
நானறிய ஒரேயொரு பாடல் 'மெட்டுக்குப் பாட்டு' என்ற வடிவத்தில் வந்தது. அதைச் செய்தது கண்ணன் அவர்கள்தான்.
கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் நினைவான பாட்டுக்கு இசைவாணர் மெட்டுப் போட, போராளிக் கவிஞன் செம்பருதி பாட்டெழுதி, குட்டிக்கண்ணன் குரலில் அப்படைப்பு வெளிவந்திருந்தது.
நல்லதொரு பாடல் சந்திரன். ஈழத்தில் இருக்கையில் இப்பாடலை நாடக வகுப்பில் ஆதிதாளத்துடன் பாடியது நினைவிலுண்டு. சங்கீதமும் நானும் இருவேறு துருவங்கள் என்பது வேறுகதை.
.....
பிரபா, இந்தப்பாடல் 'கண்ணீரும் குருதியும் காத்திருப்பில்' இல்லை. 'புலரும் வேளை'யில் இருக்கக்கூடும்.
//பிரபா, இந்தப்பாடல் 'கண்ணீரும் குருதியும் காத்திருப்பில்' இல்லை. 'புலரும் வேளை'யில் இருக்கக்கூடும்//
புலரும் வேளையிலிருப்பதாக தான் தமிழ் அமுதம் இணயத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
ஆமாம், கண்ணீரும் குருதியும் காத்திருப்பும் இசைத்தட்டில் மண் சுமந்த மேனியரில் வரும் இன்னொரு பாடல் சேரன் எழுதியது பனியிரவில் உள்ளது.
வி.ஜே
நான் "மண் சுமந்த மேனியரில்" இந்தப் பாடல் கேட்டதற்குப் பினிப்போதான் கேட்கிறேன்.
தந்தமைக்கு நன்றி
எனது நினைவிற்கெட்டியவரை இந்தப் பாட்டு கனடாவில் வெளியான 'புலரும் வேளையில்'இருப்பதாகத்தான் ஞாபகம். பாடகர் திவ்யராஜன் என்று நினைக்கிறேன். பெண் குரல் சாந்தினி வர்மனாக இருக்கவேண்டும்.
//'புலரும் வேளையில்'இருப்பதாகத்தான் ஞாபகம். பாடகர் திவ்யராஜன் என்று நினைக்கிறேன். பெண் குரல் சாந்தினி வர்மனாக இருக்கவேண்டும்.//
தமிழ்நதி எனது புதிய பதிவில் இரண்டு பாடலை பாடியவர்களையும், அமைந்த இசைத்தட்டையும் குறிப்பிட்டுள்ளேன். பெண் குரலுக்கு சொந்தகாரராக வேறு பெயர் குறிப்பிட்டு இருந்தார்கள்.
http://viriyumsirakukal.blogspot.com/2007/04/blog-post_09.html
புலரும் வேளையில் இசைத்தட்டில் இடம்பெற்ற இப்பாடலுக்கு குரல் கொடுத்தவர்கள் வி.திவ்யராயனும் சங்கீதா திவ்யராயனும்.
இவ் இசைத்தட்டில் இடம் பெற்ற எல்லாப் பாடல்களுக்குமே
மெட்டு அமைத்தது வி.திவ்யராயன்
இசையமைத்தது s.v.வர்மன்
70களில் (1975 என நினைக்கிறேன்) திரு தாஸீசியஸ் அவர்களால் மகாகவியின் புதியதொருவீடு கொழும்பில் (Lionel Wendt?) மீண்டும் நடிகர் ஒன்றியத்தினூடாக மேடையேற்றப்பட்டது. இந்தப்பாடல் அந்த நாடகத்தில் ஒரு பகுதியாகும் (theme song), தாஸீசியஸ் அவர்களே நாடகப்பாடல்கள் அனைத்துக்கும் மெட்டமைத்தார் என்பது எனது ஊகம். முதன்முறையாக திரு தாஸீசியஸின் நாடோடிகள் குழுவினால் 60 களில் புதியதொருவீடு மேடையேற்றப்பட்டபோது நடித்தவர்கள் சிலரும் இதில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!
Gowri Gowrishankar
Post a Comment