Wednesday 25 April 2007

ஊரடங்கில் ஒரு திருவிழா

யாழ்குடாவில் கோயில் இல்லாத ஊர் என்று எதுவும் இருக்காது. எங்கள் ஊரும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடாந்த திருவிழாக்கள் நடைபெறும், அல்லது விசேடமான திருவிழாக்கள் நடைபெறும் 3 முருகன் கோயில்களும் ஒரு பிள்ளையார் கோயிலும் இருந்தாலும், பிள்ளையார் கோயில் திருவிழா தான் பிரபலமாகவும், அதிக மக்கள் கூடும் திருவிழா ஆகவும் இருக்கும். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று திருவிழா நடைபெறுவது ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறைக்காலத்தில் என்பதாகும். நல்லுர் கந்தசுவாமி கோயிலிலும் எமது ஊர் பிள்ளையார் கோயிலிலும் ஒரே நாளில் கொடியேற்றம் நடைபெற்றாலும், எமது ஊர் கோயிலில் 10 நாள் திருவிழாவே நடைபெறும்.

பதின்ம வயதிற்கு முன்பும், பதின்ம வயதின் ஆரம்ப காலத்திலும் திருவிழா காலத்தில் காலையில் எழுந்து குளித்து, எங்கள் வீட்டில் வேலி போல நிறைய வளர்த்திருந்த செவ்வரத்தை மரங்களில் பூத்திருக்கும் பூக்களை ஆய்ந்து கொண்டு பூசை 9 மணிக்கு ஆரம்பிக்கும் என்றால் 8 மணிக்கே கோயிலுக்கு போய் விடுவது வழக்கம். அங்கு போய் பூக்கள் சேகரிப்பதற்கு என இருக்கும் ஒரு அறையில் மற்றையவர்கள் கொண்டு வரும் பூக்களை சேகரிப்பதும், யாரும் றோஜா பூக்கள் கொண்டு வந்தால் அன்றைய எழுந்தருளி பிள்ளையாருக்கு சாத்துவதற்கு அவற்றை கொடுப்பதும், பெரிய பூக்களை பிரித்து சுவாமி வலம் வரும் போது பூ சொரிவதற்கும் கொடுப்பது வழக்கம்.
சுவாமி வலம் வரும் போது வீசப்படும் சாமரம் பொதுவாக சிறுவர்களிடமே கொடுக்கப்படும் என்பதால் 6-9 வயதுக்கு இடைப்பட்ட வயதில் வசந்த மண்டப பூசை ஆரம்பிக்கும் போது மண்டப வாசலில் முதலாவதாக இடம்பிடித்து இருப்பதும், பூசையின் போது சாமரம் வீச தயாராய் எழுந்து நின்று அதை எனக்கு போட்டிக்கு இருக்கும் சக தோழர்களிடம் சென்று விடாமல் அடிபட்டு வாங்குவதும், அதில் வென்று சாமரம் கையில் கிடைத்தால் வரும் புழுகத்துக்கும் அளவிருக்காது. அதே போல மாலை பூசை என்றால் தீவட்டி பிடிப்பதற்கு போட்டி வரும். தீவட்டி ஏந்துபவர் மாலை சுவாமி வெளி வீதி வலம் வரும் சகடையில் ஏறி இருக்கலாம். அதற்காகவே போட்டி வரும். போட்டி வந்து மாலை பூசை 6 மணிக்கு ஆரம்பமாகும் என்றால் 4.30-5.00 மணிக்கே போய் தீவட்டியை எடுத்து ஒழித்து வைத்து பூசை தொடங்கும் நேரமாக போய் அதை எடுத்து எரிய விடுவதும் நடக்கும். பொதுவாக நான் தீவட்டி பிடிக்க அதிகம் போவதில்லை. 2-3 முறை பிடித்த ஞாபகம்.

பதின்ம வயதின் ஆரம்பத்தை அடைந்து விட்டால் கொஞ்சம் புறமோசன் கிடைச்ச மாதிரி. வீதி வலம் வரும் எழுந்தருளி பிள்ளையார் ,முருகன் விக்கிரகங்களை பெரியவர்களும், சண்டேசுரர் விக்கிரகத்தை சிறுவர்களும் தோளில் காவுவது வழக்கம். பதின்ம வயதிலை சண்டேசுரரை காவுவதற்கு போட்டி. அதனால் சுவாமி காவ பயன்படும் பிள்ளை தண்டை காவ விரும்புபவர்கள் எடுத்து ஒழித்து வைப்பது வழக்கம்.

திருவிழாக்கள் போர் காலங்களிலும் எந்த வித தடங்கலும் இல்லாமல் நடப்பது வழமை (ஆனால் அது பொய்த்து போனது யாழ்குடா இராணுவ கட்டுபாட்டில் வந்த பின்னான 1999-2000 ஆண்டு காலப்பகுதில்)

எத்தனையாம் ஆண்டில் என சரியாக ஞாபகத்தில் இல்லை. 1990 களின் ஆரம்பம்; போர்க்காலம். சிறி லங்காவின் வான்படை யாழ்குடா நாட்டின் வான் பரப்பை ஆக்கிரமித்திருந்த நேரம் அது. இரவு பகல் என்று பாராமல் ஊரடங்கு சட்டம் இடப்பட்டிருந்த ஒரு காலமும் இருந்தது. மக்கள் கூட்டமாகவோ அல்லது தெருவில் வாகனங்களோ சென்றால் ஹெலிகள் திரத்தி திரத்தி தூப்பாக்கி சூட்டை நடத்துவதும், துணைக்கு குண்டு வீச்சு விமானங்களை அழைத்து குண்டு வீச்சு நடப்பதும் அப்போதைய சாதாரண நிக்ழ்வுகள். பிரதான வீதிகளில் சென்று கொண்டிருக்கும் போது ஹெலி சத்தம் கேட்டால் போகும் பாதையை மாத்தி உள்ளே மரங்கள் அடர்ந்த ஒழுங்கைகளுக்குள் சைக்கிளை செலுத்திசெல்வதும் நாளாந்த நிகழ்வுகள்.

ஆனால் அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் தொடரும் என்பது போல நாளந்த நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள் என்பனவும் நடந்து கொண்டிருந்தன.

எமது ஊர் கோயில் திருவிழா ஒரு வருடம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்ட காலத்தில் வந்த காரணத்தால், திருவிழாவை நிறுத்தாமல், நடாத்துவதெனவும், ஆனால் கோயிலின் வெளி வீதியில் எந்த நிகழ்வுகளும் நடாத்துவதில்லை என்பதாகவும் தீர்மானித்தார்கள். அப்படி நடந்து கொண்டிருந்த ஒரு நாள் நானும் வழமை போல காலையில் பூக்களை பிடுங்கி கொண்டு வெள்ளணவே கோயிலுக்கு போய்விட்டேன். அன்று எப்படியும் சண்டேசுரரை காவ வேண்டும் என தீர்மானம். அதானால் வெள்ளணவே போய் பிள்ளை தண்டை எடுத்து பூசேகரிக்கும் அறைக்குள் ஒழித்துவிட்டு வழமை போல பூ சேகரிது முடித்து பூசை ஆரம்பமாக பூசை பார்க்க போய்விட்டேன்.

கொடிதம்ப பூசை நடந்து கொண்டிருந்த நேரம் ஹெலி ஒன்று வந்து சுற்றி சுற்றி சுட தொடங்கி விட்டது. ஹெலி சுடுவதும் மிக அருகாமையில் என்பது சத்தம் மூலம் விளங்கிவிட்டது. எல்லாருக்கும் ஒரு பயம் உளவாளி யாரும் திருவிழா நடப்பதை சொல்லி விட்டார்களோ என. ஐயரும் பூசையை நிறுத்திவிட்டு கொடி தம்பத்துக்கு முன்னால் இருந்து கண்ணை மூடி மந்திரம் உச்சரிக்க தொடங்கிவிட்டார்.
சிறிது நேரந்தில் குண்டு வீச்சு விமானமும் வந்து வானில் வட்டமிட ஆரம்பித்திருந்தது. அந்த சத்ததை கேட்டதும் அதிகம் பயந்தவர்களில் ஒரு பகுதியினர் கோயிலின் மூலஸ் தானத்துக்குள்ளும், சுற்றி இருந்த பரிவார தெய்வங்களின் ஆலயங்களுக்குள்ளும் நுளைந்து விட்டனர். அவை தான் பலமான தளம் கொண்ட கட்டிடங்கள், குண்டின் சிதறல்கள், ஹெலியின் துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத கனமானவை. மிகுதி கட்டிடம் ஓட்டு கூரை இவற்றில் எதையும் தாங்க மாட்டதவை. ஒரு அரை மணி நேரம் ஹெலியும், விமானமும் மாறி மாறி கோயிலுக்கு அண்மையாகவே குண்டு வீசி தள்ளின. எதற்கு என்பது கோயிலுக்குள் இருக்கும் போது தெரியாது. ஹெலியும் விமானமும் போன பின் சண்டேசுரர் தூக்கும் ஆசையும் போய், பிள்ளை தண்டு ஒழித்ததையும் மறந்து வீட்டை போட்டன். பிறகு பூசை தொடர்ந்து நடந்து, சுவாமி சுத்த பிள்ளை தண்டை தேடினா அது எங்க கிடைக்கும், நான் தான் ஒழிச்சு போட்டு வந்திட்டன். சண்டேசுரருக்கு எல்லா விக்கிரகங்களையும் விட சிறிய பிள்ளை தண்டு, மற்ற விக்கிரகங்களை காவ பயன்படும் பிள்ளை தண்டுகள் சண்டேசுரருக்கு பொருந்தாது. பிறகு தேடி களைச்சு, வெள்ளி கிழமையளிலை பிள்ளையார் உள் வீதி சுத்த பயன்படும் சிறிய சகடையிலை சுத்தினார்களாம், மாலை திருவிழாவிற்கு போன போது என்னோடு பூ செகரிக்கும் அறையில் சேர்ந்து நிற்கும் அண்ணா சொன்னார். அவருக்கும் நான் அங்கு தான் பிள்ளை தண்டை ஒழிச்சு வச்சன் எண்டது தெரியாது.

அன்று குண்டு விச்சுக்கு இலக்கானது வீதியால் சென்று கொண்டிருந்த, எங்கள் ஊரவர் ஒருவரின் பார ஊர்தி (Ashok leyland lorry). லொறி துப்பாக்கி சூட்டால் சல்லடை இடப்பட்டு, பாவனைக்கு உதவாத நிலைக்கு வந்திருந்தது. போட்ட குண்டுகள் அதன் மீது சரியாக விழாததால் சுக்கு நூறாகமல் உருவம் இருந்தது. அந்த லொறியை வைத்து மிகவும் வசதியக வாழந்த அவர்களது குடும்பம் அதை இழந்த பின் மிகவும் நொடித்து போய் விட்டது. அவரால் பழைய நிலைக்கு மீள முடியவில்லை. இப்போது நாட் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் அவர்.

8 comments:

said...

நல்ல ஒரு பதிவு சந்திரன்... இது எந்தக் கோவில் என்பதனை நீங்கள் கூறவில்லையே???

கரன்

said...

ஏனோ தெரியேல்ல....இந்தக் கோயிலுக்குப் ப+ப்பறிக்கிறது மாலை கட்டுறது சாமரம் வீசுறது இதெல்லாம் பெடியங்கள் செய்யமாட்டினம் என்ற நினைப்பு எனக்கு இருக்கு.

கோயில்ல நிக்கும்போது இப்பிடி பொம்மர் வாறது ஹெலி வாறதெல்லாம் எனக்கும் ஞாபகம் வருது ஆனால் எங்கட வீட்டுக்கு முன்னால இருக்கிறது ஒரு சின்னக் கோயில் அங்க ஒளியறதுக்கெல்லாம் இடமில்லை அதால நாங்கள் என்ன செய்யிறதெண்டா றோட்டில இருக்கிற பாலத்துக்குக் கீழ போய் ஒளிச்சு நிக்கிறது.

said...

//நல்ல ஒரு பதிவு சந்திரன்... இது எந்தக் கோவில் என்பதனை நீங்கள் கூறவில்லையே???//

உங்கள் ஊரும் தானே. ஆகஸ்ட் மாதம் எந்த ஊரில் எந்த கோயில் திருவிழா வரும் என ஞாபக படுத்த முடிந்தால் எந்த கோயில் என கண்டு பிடிப்பதில் சிரமம் இருக்காது.

//சாமரம் வீசுறது //

கோயிலிலுக்கு அதிகம்பெண்கள் தான் பூ கொண்டு வருவார்கள். ஆனால் கோயிலில் சாமரம் விசவோ , பூக்களை சேகரிக்கவோ அனுமதி இல்லை

said...

\\கோயிலிலுக்கு அதிகம்பெண்கள் தான் பூ கொண்டு வருவார்கள். ஆனால் கோயிலில் சாமரம் விசவோ , பூக்களை சேகரிக்கவோ அனுமதி இல்லை \\

discrimination!!!!!!!!!!!

said...

எல்லாம் சரி ஐசே,
ஓராள் உமக்கு மட்டும் தமிழில பின்னூட்டம் போடுறதும், மற்ற இடங்களில தமிழை இங்கிலீசில எழுதி எல்லோரையும் கொல்லிறதும் ஏனெண்டு தெரியுமோ?
அப்பிடி எழுதவைக்க என்ன தந்திரம் பாவிக்கிறீர் எண்டதைச் சொன்னால் நாங்களும் செய்து அவஸ்தையில இருந்து தப்பலாமெல்லே?

said...

நல்ல பதிவு விஜே, ஏறக்குறைய சமகாலத்தின் எனக்கும் இந்த அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன

said...

ஆகா நல்ல பகிடி வேலையள் எல்லாம் செய்து இருக்கின்றீர்கள்.
ஆமா உந்த சின்னப்பிள்ளை சண்டைகள் கடைசியில் பெரியவர்கள் வரை போய் முடிவாதாகவும் அறிந்திருக்கின்றேன்.
நல்லா ஞாகபப்பதிவு.

said...

//எல்லாம் சரி ஐசே,
ஓராள் உமக்கு மட்டும் தமிழில பின்னூட்டம் போடுறதும், மற்ற இடங்களில தமிழை இங்கிலீசில எழுதி எல்லோரையும் கொல்லிறதும் ஏனெண்டு தெரியுமோ?
அப்பிடி எழுதவைக்க என்ன தந்திரம் பாவிக்கிறீர் எண்டதைச் சொன்னால் நாங்களும் செய்து அவஸ்தையில இருந்து தப்பலாமெல்லே? //

என்னுடைய பிழைப்பிலை மண்ணள்ளி போட நான் தயாரில்லை :)

//நல்ல பதிவு விஜே, ஏறக்குறைய சமகாலத்தின் எனக்கும் இந்த அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன //

ம் ம் நன்றி

//உந்த சின்னப்பிள்ளை சண்டைகள் கடைசியில் பெரியவர்கள் வரை போய் முடிவாதாகவும் அறிந்திருக்கின்றேன்.
நல்லா ஞாகபப்பதிவு.//

ம் அப்பிடி நானும் சண்டை பிடிச்சு வீடுவரை விசாரணை வந்தது :))