யாழ் குடா நாடு முழுமையும் இரணுவக்கட்டுபாட்டுக்குள் வந்த பின் சுற்றி வளைப்பு தேடுதல்கள், 5 கிலோ மீற்றர் தூரத்தை தாண்டுவதற்கிடையில் 5 முறை வரும் சோதனைச்சாவடிகளில் இறங்கி ஏறி, அடையாள அட்டை காட்டி, "ஆசை" யுடன் தடவி பார்க்கும் ஆமிக்கு வரும் ஆத்திரத்தை அடக்கி பல்லிளித்து வாழ்க்கையை கடத்த வேண்டிய நிர்ப்பந்தம். அவ்வாறான காலப்பகுதியில் தான் எனக்கு ஆமிக்காரன் வேலி பாயவும் பழக்கினான்.
எமது பகுதிகள் 95 ஆம் ஆண்டின் இறுதியில் எண்டு நினைக்கிறேன் முழுவதூமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வந்து சேர்ந்தவர்கள் முகாம்களை அமைச்சு நிலைப்பட்டுத்தி கொண்டாப்பிறகு சுத்தி வளைப்புக்கள் தேடுதல்கள் என சிப்பிலியாட்ட தொடங்கினார்கள்.
இந்திய இராணுவ காலத்து சுத்திவளைப்புக்களை சிறு பையனாக இருந்த்து பாத்த அனுபவம் இருந்தது. அப்ப எந்த பக்கத்து வேலியை பிச்சு கோண்டு வருவாங்கள் எண்டு தெரியா வருவாங்கள். ஊரிலை உள்ள நாயள் ஊளையிட தொடங்கினா தெரியும் இண்டைக்கு சுத்தி வளைப்பெண்டு. அதுக்கிடையில வளந்த பொடியள் கொஞ்சம் அடுத்த ஊருகளுக்கு ஓடி தப்பீரும். அப்பிடி போகாமல் ஆப்பிட்டவை நடுவெயிலுக்க சந்தி வழிய இருக்க வச்சு தலையாட்டியளின் வருகைக்காக காக்க வச்சிருக்கும். எப்பவேன், ஆமிக்கு இயக்கம் அடிச்சா அண்டையான் சுத்திவளைப்பிலை பிடிபட்டவைக்கு கொட்டனுகளாலை அடி தான். என்ன தடியாலை அடி விழுதெண்டது பக்கத்து வேலிலை என்ன கதியால் நிக்குதெண்டதை பொறுத்ததா இருக்கும். இப்பிடி சுத்தி வளைப்புக்களிலை ஆப்பிட்டு, முள்ளு கிழுவந்தடியாலை அடி வேண்டி கிழுவம் முள்ளு சதைக்க சிக்கி முறிஞ்சு போக அதை வெளில வரப்பண்ண வறுத்த விசுகோத்தை நனைச்சு கட்டினா முள்ளு வெளிலை வருமெண்டு நாட்டு வைத்தியம் பாத்த உறவுகளிடை அனுபவங்களை மறக்கேல்ல.
ஆனா சிறிலங்கன் ஆமிட சுத்தி வளைப்பு எப்பிடி இருக்குமெண்டதை மற்ற ஆக்களிடை அனுபவத்தை பத்து தெரிய வேண்டி இல்லம நானே அனுபவிக்க வேண்டி இருந்திச்சு.
அப்ப பள்ளி கூடம் போற நேரம். காலமை அம்மா வச்சு தந்த கோப்பிய குடிச்சிட்டு பள்ளி கூடம் போறதுக்கு குளிக்க வெளிக்கிட்டனான். ஆமி றோட்டு வழிய நிக்கிறாங்கள், ஏதோ வில்லங்கம் எண்டது விளங்கிச்சு, ஆனா சுத்தி வளைப்பு எண்டதை அனுமானிக்க முட்டியேல்லை. சரி எதுக்கும் குளிப்பம் எண்டு வீட்டுக்கு பின்னலை உள்ள கிணத்தடிக்கு நான்போட்டன். முன் வாசலாலை வந்தவங்கள் அப்பாவையும் அம்மாவையும் பாத்திட்டு விட்டிட்டு போட்டாங்கள். என்னை காணெல்லை. சரி போட்டங்கள் எண்டு நானும் கக்கூசுக்கு போக கிணத்திலை தண்ணியள்ளி கொண்டு கக்கூசு வாசலுக்கு போக எனக்கு பிடிச்சது சனி. பின் வீட்ட சோதிக்க வந்த இரண்டு என்னை கண்டிட்டுதுகள். பிறகென்ன, கக்கூசுக்கு போன நான் வெளீலை வருமட்டும் காவல் நிண்டு என்னை கூட்டி போறதுக்கு அதுகள் ரெடி. வேற என்ன செய்யிறது, வந்து சேட்ட கொழுவி கொண்டு அது வரை பத்திரமா புத்தம் புதிசா பாவிக்க படாம இருந்த அடையாள அட்டைய துக்கி கொண்டு வெளிக்கிட்டது தான்.
வந்ததுகள் ரெண்டும் பின் வீட்டலை வந்ததுகள், அந்த நேருக்கே போவெணுமெண்டது அதுகளுக்கு கட்டளையாக்கும். என்னையும் கூட்டி கொண்டு போன, எங்கட வீட்ட முன் பக்கம் மதிலும், மிச்சம் மூண்டு பக்கமும் பனைமட்டை வேலியும்.
அதுகள் உள்ளுட்ட நேருக்கு போக வேணுமெண்டு நினைச்சதால; நேருக்கு போக வேண்டுமெண்டா ஒண்டில் வேலியை வெட்டி பாதையாக்கோணும் இல்லை, வேலியை பாய வேணும். முந்தி இந்தியன் ஆமி குறடும் கையுமா தான் திரிவாங்கள், எங்க போக வேணுமோ அங்க வேலியை வெட்டுவாங்கள். ஆனா வந்த சிறி லங்கன் ஆமிடை கையிலை குறடு இல்லை. பேந்தென்ன செய்ய ஏலும், நானூம் சொல்லி பாத்தன் எனக்கு வேலி பாய தெரியாதெண்டு ( எவ்வளவு நல்ல பொடியன் எண்டு யோசிச்சு கொள்ளுங்கோ) நான் சொன்னது அதுகளுகெங்க விளங்கிறது. அடி வேண்டுறதை விட பாயுறது உத்தமம் எண்டு பாஞ்சாச்சு. அப்ப தான் யோசிச்சன், எங்கட சனம் சுத்து மதில் கட்டுற மாதிரி எங்கட வீட்ட கட்டாதது இப்ப உதவுதெண்டு. ஆனா என்ன மதில் கட்டி இருந்த பின் வீட்ட வந்ததுக்கள் என்னை கண்டிருக்க மாட்டுதுகள். எங்கட வேலி மட்டுமில்லை எங்கட தெருவிலை இருக்கிற எல்லார் வீட்டு வேலியும் உதே மாதிரி தான். பிறகென்ன அடுத்த குறுக்கு றோட்டு வருமட்டும் வேலி பாஞ்சது தான். அடுத்த குறுக்கு றோட்டை அடையிறதுக்கிடையிலை எனக்கு கூட்டாளி மாரா அடுத்த அடுத்த வீடுகளிலை இருந்த பொடியளும் வந்தாங்கள்.
அதுக்கங்கலை அதிகம் வீடுகள் இல்லை. வெறுங்காணியளும், பத்தையளும் தான் கனக்க. வேலியளும், கம்பி வேலி எண்டதாலை பாயிறது/ கடக்கிறது பெரிய பிரச்சனையா இருக்கேல்லை. பிடி பட்ட ஒருத்தரும் ஒருதரோட ஒருதர் கதைக்கேல்லை. கதைக்க பயம். வந்ததுகள் என்ன செய்யுங்கள் எண்டது தெரியாது. வழி வழிய இப்படியே கூட்டி சேத்த போடியளோட இந்தியனாமிட சுத்தி வளைப்புக்கு வித்தியாசமா இவங்கள் பொம்பிளை பிள்ளையளையும் கூட்டி வந்தாங்கள். எங்கட கூட்டத்திலை 3 பொம்பிளை பிள்ளையளும், 4 பொடியளும். எங்க கூட்டி போறாங்கள் எண்டது ஒருத்தருக்கும் தெரியாது, வாற காணியள் , பத்தையள் எல்லாத்துக்குளாலையும் போனம்.
ஒரு இடத்திலை, தனிச்ச இடமா ஒரு கைவிடப்பட்ட குடிசை, அது சில வேளை வலிகாமத்திலை இருந்து இடம்பெயர்ந்துவந்தாக்கள் இருந்திட்டு விட்டிட்டு போனதா இருக்கலாம். அத கண்டோடனை ஆமிக்கு ஏதோ செய்திருக்க வேணும். என்னத்தையோ கதைச்சுதுகள், அதுகள் என்ன கதைச்சாலும் எங்களுக்கு விளங்காது தானே.
பொடியள் எல்லாரையும் ஒரு பக்கமா வர சொல்லிச்சுதுகள் நினைச்சம் என்னவோ நடக்க போகுதெண்டு. பொடியள் எல்லரயும் துவக்கு முனையில 2 காவலுகு வச்சிருக்க பொம்பிளை பிள்ளையள செக் பண்ண 2 வெளிக்கிட்டிச்சுதுகள். அதிலை ஒரு பொம்பிளை பிள்ளை வரசொல்லி குடிசை வாசலிலை வச்சு "செக்" பண்ண வெளிக்கிட அந்த பிள்ளை குளறி கொண்டு திரும்பி வந்த பாதை வழியா ஓட வெளிக்கிட்டிச்சு. அதோட என்ன நினைச்சுதுகளோ, அந்த பிள்ளையை திருப்பி கூட்டி கொண்டு வந்திட்டுதுகள் பிறகு "செக்" பண்ண வெளிக்கிடேல்லை. அண்டைக்கு அதிலை நிண்ட பொம்பிளை பிள்ளையளுக்கும் சரி பொடியளுக்கும் சரி ஏதோ நல்ல காலம் இருந்திருக்க வேணும். அதிலை நிண்ட எல்லாரும் நினைக்கத/ வேண்டத கடவுள் இல்லை. பிறகு சரி போ எண்டு சொல்லி எல்லாரையும் கூட்டி கொண்டு ஒரு கோயிலடிக்குபோய் சேந்துத்கள். அந்த கோயில் எங்கடவீட்டீலை இருந்து கிட்டதட்ட 4 கிலோ மீற்றர் தூரம் இருக்கும்.அங்க எங்கள போல சாச்சு கொண்டு வந்த கனக்க பேர் இருந்திச்சினம். பிறகென்ன அங்க எல்லரையும் வரிசை கட்டி தலையாட்டிக்கு முன்ன விட்டு அடையாள அட்டைய காட்ட சொல்லிச்சுதுகள். அண்டைக்கு ஆருக்கு கெடுகாலம் இருக்கெண்டது ஒருதருக்கும் தெரியா. அண்டைக்கு கறுப்பு துணியால மூடி காட்டின தலையாட்டி எப்பிடியும் சிலருடைய வாழ்கைய இருட்டாக்குவான் எண்டது தெரியும். ஆர் எண்டது தெரியாது. ஒவ்வொருத்தரும், கடவுளே நான் தப்பீடோணும் எண்டு தான் நினைக்கிறதே தவிர, ஆரை பிடிச்சாங்கள் எண்டதை கவனிக்கிறதே இல்லை. எல்லாம் முடிஞ்சு வீட்ட போக சொல்லி வீட்ட வந்த பிறகு தான் தெரியவரும் அண்டை அயலவர்களில் ஒரு சிலர் கைது செய்யப்படிருக்கிறார்கள் எண்டது. அப்பிடி கைது செய்யப்பட்டு இன்று வரை திரும்பி வரமல் போனவர்கள் எங்கட ஊரிலை எனக்கு தெரிய 4 பேர் இருக்கிறார்கள். மகன் மார் காணமல் போதை தேடி அலைஞ்சு, மனுக்கொடுத்து களைச்சு, புத்தி பேதலிச்ச அம்மாக்களையும், நோயாளியாகி போன அப்பாக்களையும் கண்டிருக்கிறன்.
அத்தோட இது தான் எங்கட ஊரிலை நடந்த முதல் சுத்தி வளைப்பு எண்டு முதலே சொன்னான். கூட்டி போன பொடியளை விட வீட்டிலை இருக்கிற அம்மா, உறவுகளின் மனதிலை தங்கட பிள்ளையளுக்கு என்ன நடக்குமோ எண்டு நினைச்சு பதறுறதும், கடவுளை வேண்டுறதும், வார்த்தையளால சொல்ல ஏலாது.
இது மட்டுமில்லை இத போல பல பத்து சுத்திவளைப்புக்கள் நடந்துள்ளன. ஆனா ஆக்கள ஒண்டு சேர்க்குமிடம் தான் வேற வேறயா இருக்கும்.
ஒரு நாள் எங்கட வீட்டுக்கு கிட்ட ஒரு பிள்ளையார் கோயிலுக்கு கூட்டி போன ஆமி அண்டைக்கு அங்க உள்ள மடம் ஒண்டுக்க ஒவ்வொருத்தைரையும் தனிதனிய கூட்டி போய் உரிஞ்சு பாத்ததை இண்டைக்கும் மறக்க முடியாது.
அத விட சுத்தி வளைப்புக்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ஊரிலை கட்டாயம் நடக்கும். எங்கட ஊரிலை இல்லையெண்டாலும், அடுத்த ஊருக்கு ஏதும் அலுவலா போய் அடுத்த ஊர் சுத்தி வளைப்புக்களிலை மாட்டு பட வேண்டியும் வரும்.
உப்பிடி தான் ஒரு நாள் காலமை ரியுசன் எண்டு வெளிகிட்டு அடுத்த ஊரிலை உள்ள ரியுசனுக்கு போட்டன் என்ர கெடுகாலம் அண்டைக்கு அந்த ஊரிலை சுத்திவளைப்பு, வழிலை நிண்ட ஆமி என்னையும் இன்னும் அஞ்சாறுபேரையும் பிடிச்சு இருத்தி போட்டங்கள். அப்ப தான் என்னுடைய அடையாள அட்டை இருக்கோ எண்டு பொக்கற்றை தாடவி பாத்தன். நெஞ்சுக்க பகீர் எண்டுது. அடையாள அட்டையை அண்டைக்கு எடுக்காம அவசரமா வெளிக்கிட்டுட்டன். இண்டைக்கு எனக்கு எதோ நடக்க போகுதெண்டு பயம் வந்தாலும், வெளிலை காட்டாம, ஆரும் வயசு போன ஆக்கள் வரமாட்டின்னமோ எண்டு வேண்டாத கடவுள் இல்லை. வயசு போன ஆக்களுக்கு அதிலை நிக்கிற ஆமிய பொறுத்து போய் வர அனுமதி கிடைக்கும். என்னோட நல்ல காலத்துக்கு அதாலை எங்கட ஊர் வயதான ஒராள் வந்தார், அவரை கூப்பிட்டு, என்னுடைய அடையாள அட்டையை விட்டிடு வந்திட்டன், எண்டு வீட்ட சொல்லி, வீட்டு காறர் ஆரையும், அடையாள அட்டையை கொண்டு வந்து தரச்சொல்ல சொல்லி சொல்லி விட்டன். அவர் வீட்ட போய் சொல்லி என்னொட அண்ண அடையாள அட்டைய கொண்டு வந்து தந்ததாலை அண்டைக்கு தப்பினன். தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுது.
இத போல கனக்க இருக்கு. உயிர் வாழ வேண்டும் எண்டது மட்டுமே குறி. அதாலை எத்தினை அவமானங்கள், சொல்லவே கூசும், சம்பவங்களை மனசுக்குள்ள வச்சு கொண்டு திரிய வேண்டிய, வாழ வேண்டிய நிர்ப்பந்தங்கள்.
இன்றைய யாழ்ப்பாண நிலமை நான் இருந்த காலத்தை விட கொடுமை என அறியும் போதும், நாளாந்தம் காணாமலும் போய் கொண்டும், சுட்டு கொலப்பட்டும், அனதரவான பிணங்களாக மீட்டு கொண்டிருக்கபட்டும் இருக்கும் இளையவர்களை நினைக்கும் போது மனது கனாக்க செய்கிறது. தமிழ் நதி சொன்னது போன்று செய்தி குருடாக இருக்க மட்டுமே முடிகிறது. எப்போதோ டிஜே சொன்னது போல, அனைவரும் வளராமல் சிறுவர்களாகவே இருந்திருக்க கூடாத என்றும் எண்ண தோன்றுகிறது.
Monday, 26 February 2007
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
பழைய நினைவுகள் மலர்கின்றன உங்கள் பதிவைப் பார்த்ததும்.
எனக்கு 87 இலை ஒரு அனுபவம்.
\\வரப்பண்ண வறுத்த விசுகோத்தை நனைச்சு கட்டினா \\
அப்பிடியெண்டால் என்ன?
எங்கட ஊரிலயும் ஒருமுறை இப்பிடி நடந்தது பார்த்தனான்.2 மாமாவையையும் பிடிச்சுக்கொண்டுபோனவை.காலம விடிய ஆறு மணிக்கு நடந்தது சுற்றி வளைப்பு இரவுதான் ஆக்களை விட்டது.அக்காவையும் ஒருநாள் பள்ளிக்கூடத்தில வச்சுப்பிடிச்சுக்கொண்டு போனது நிறையப்பேரோட சேர்த்து.
இன்னொருநாள் பள்ளிக்கூடம் போய்க்கொண்டு இருக்கேக்க எங்கோயோ குண்டுச் சத்தம் கேட்டதெண்டு சொல்லி ஒரு பத்து கேர்ள்ஸ் ஐ ஒரு வையிரவர் கோயில்ல கூட்டிக்கொண்டுபோய் விட்டிட்டு சைக்கிளையும் பறிச்சுக்கொண்டு போட்டாங்கள்.
ஆசை ஆசையா ஆறாம் வகுப்புக்குப் புதுப்ள்ளிக்கூடத்தில சேர்ந்து படிக்கப்போனா இவங்களின்ர ஆக்கினை தாங்காமல் அப்பா பள்ளிக்கூடத்தை வேற மாத்தி விட்டிட்டார் அடுத்த கிழமையே :-(
சுற்றிவளைப்புச் சம்பவத்தில் மறக்க மூடியாத இரண்டு சம்பவங்கள்.
ஒன்று எனக்கு மூன்று வயதாய் இருக்கும்போது மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் சித்திரை விடுமுறைக்கு வந்து நின்ற மாமாவை ஆமிக்காரர் கூட்டிக்கொண்டுபோய் இன்றுவரை இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாது.
அவரோடு சேர்த்து பூசாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட சித்தப்பாக்கள் எல்லாம் திரும்ப வந்திட்டினம் சில மாதங்களில்.
மற்றது அப்பாவின் நண்பர் ஒருவர் ஆமிக்காரரால் கடத்திச்செல்லப்பட்டு எலும்புகள் எல்லாம் நொறுங்கி இரத்தமும் சதையுமாய் குற்றுயிராய் இருக்கும்போது பார்க்க நேர்ந்தது.ஆனால் பலவருட சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர் நலமேயுள்ளார்.
ம் ஞாபகங்களிலும் சிலவற்றை அழிக்கக்கூடியதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
சந்திரன், இவ்வாறான அனுபவங்கள் தொடர்ந்து எழுத்தில் பதிவு செய்யப்படவேண்டும். இப்போது ஒருவித நகைச்சுவையுடன் சொல்ல முடிகின்ற காலம் நம்மைப்போன்றவர்களுக்கு கனிந்துவிட்டாலும், அந்தக்கணத்தில் அந்தச்சம்பவம் எப்படியிருந்திருக்கும் என்பது....? அதைவிட இன்னும் பலர் இப்படியான சம்பவங்களினூடாக இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்என்பதும்....?
நன்றி.
எனக்கு இந்த சுற்றிவளைப்பு அனுபவம் ஒருநாளும் கிடைக்கேல்ல,,
தட்டாதெரு சந்திக்கு அங்கால அடிக்கடி சுத்திவளைப்பு எண்டு கதைப்பினம்,, நன்னும் சின்னப் பொடியன் தானே, ஆ அப்பிடியா எண்டு கேட்டிட்டு பள்ளிக்கூடத்துக்கு போயிருவன், பாத்தா அங்காலயிருந்து வாற பொடியள் ஒருத்தரும் வந்திருக்கமாட்டினம்,
பிறகு இடைக்கிடை பேப்பர் பாத்தா கிடக்கும் அங்க இத்தனை பேர் கைது.,. அப்பிடீண்டு..
ஆமி யாழ்ப்பாணம் பிடிச்சாப்பிறகு இருந்தாக்களுக்கு தெரிஞ்சிருக்கும் 96,97 இல தட்டாதெரு சந்தி பண்ட் கடக்கிறது யமனை பச்சடி போட்ட வேலையெண்டு.,அதால வலிகாமப்பக்கம் போறதே சரியான குறைவு...
//தலையோட வந்தது தலைப்பகையோட பொச்சுது.//
தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுது??
வறுத்த விசுக்கோத்து எண்டு றஸ்கை சொல்லுறிங்களா?
//பழைய நினைவுகள் மலர்கின்றன உங்கள் பதிவைப் பார்த்ததும்.
எனக்கு 87 இலை ஒரு அனுபவம்.//
கானா பிரபா வருகைக்கு நன்றி.....
அந்த நாள் நினைவுகளை எழுதுங்கள். நீங்க சொல்லுறதை பாத்தா நீங்க 87 இலை வயதுக்கு வந்திட்டீங்களா ;). ஆள பாத்தா அப்பிடி தெரியலையே
//\\வரப்பண்ண வறுத்த விசுகோத்தை நனைச்சு கட்டினா \\
அப்பிடியெண்டால் என்ன?//
சினேகிதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தசையில் சிக்கிய முள்ளை வெளியாலை எடுக்கிறதுக்கு
//டிசே தமிழன் said...
சந்திரன், இவ்வாறான அனுபவங்கள் தொடர்ந்து எழுத்தில் பதிவு செய்யப்படவேண்டும். //
டிஜே உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
//வறுத்த விசுக்கோத்து எண்டு றஸ்கை சொல்லுறிங்களா? //
படியாதவன் றஸ்கை தான் அப்பிடி சொல்லுறது.
வணக்கம் வி ஜெ சந்திரன்,
கானா ப்ரபாவின் தளத்ஹ்டில் நீங்கள் மலையாள படங்கள் பற்றி கேட்டீர்கள். நான் கனடாவில் ஸ்கார்பரோவில் இருக்கிறேன். என்னுடன் தொடர்பு கொள்ளவும், அனுப்புகிறேன் எனது இ - மெய்ல் -sutharshan@hotmail.com
//வணக்கம் வி ஜெ சந்திரன்,
கானா ப்ரபாவின் தளத்ஹ்டில் நீங்கள் மலையாள படங்கள் பற்றி கேட்டீர்கள். நான் கனடாவில் ஸ்கார்பரோவில் இருக்கிறேன். என்னுடன் தொடர்பு கொள்ளவும், அனுப்புகிறேன் எனது இ - மெய்ல் -sutharshan@hotmail.com //
வணக்கம் அருண்மொழி/ சுதர்சன்
விரைவில் தொடர்பு கொள்கிறேன்.
உங்கள் வருகைக்கும் நட்புக்கும் நன்றி.
நீர் இருப்பது கனடாவா பெல்ஜியமா?
//நீர் இருப்பது கனடாவா பெல்ஜியமா?//
என்ன அனனி நண்பரே குழப்புறீங்க/ குழம்புறீங்க. ;)
தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேனே கனடா என்று.
இதை கேட்க அனனியாகவா வர வேண்டும் :)
வி. ஜெ. சந்திரன் said...
//நீர் இருப்பது கனடாவா பெல்ஜியமா?//
என்ன அனனி நண்பரே குழப்புறீங்க/ குழம்புறீங்க. ;)
எனக்கெண்டால் கேட்டவர் சிறீலங்கன் ஆமி போல கிடக்கு எதுக்கும் கவனமா இரும் ;-)
\\எனக்கெண்டால் கேட்டவர் சிறீலங்கன் ஆமி போல கிடக்கு எதுக்கும் கவனமா இரும் ;-) \\
haha haha prabanna ..that's a gud one :-)
Post a Comment