Monday, 30 April 2007

போருள்ளும் எதிர் நீச்சலிட்டு வெல்லும் மாணவர்கள்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர (கா.பொ. தா சா/த) முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. இந்த பரீட்சை முடிவுகளை கொண்டே மாணவர்கள் தமது உயர் தரத்திற்கு அனுமதி பெறவும் தமக்கு விரும்பிய துறைகளை தெரிவு செய்யவும் முடியும். கடந்த வருடம் முதலே தமிழர் தாயக பிரதேசத்தில் இயல்பு நிலை கேட்டு போய் இருந்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். இடம்பெயர்ந்த சிங்கள மாணவர்கள் சிறப்பு பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுத, வாகரையில் இடம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்க படாத சம்பவமும் நடந்து முடிந்தது.
பரீட்சை நடந்த தமிழ் பிரதேச முடிவுகள் எப்படி இருந்தன என்பதை சரியாக அறிய முடியவில்லை. யாழ்குடா நாட்டை சேர்ந்த ஒரு சில பிரபல பாடசாலைகளின் முடிவுகள் உதயன் பத்திரிகையில் வெளியாகி இருந்தன.

அப்படி உதயனில் வெளியான 5 பிரபல பாடசாலைகளில் மட்டும்

33 மாணவர்கள் 10 பாடங்களிலும் A தரத்திலும்
39 மாணவர்கள் 9 பாடங்களில் A தரத்திலும்
சித்தி பெற்றிருந்தார்கள் என்ற தகவலை பெற முடிந்தது.
இதில் வேம்படி மகளிர் கல்லூரியில் 100% ஆனா மாணவிகள் சித்தி பெற்று கா.பொ.தா உ/த கற்க போவதாகவும், செய்தி வந்திருந்தது.

அதை விட அதிகம் பிரச்சனைகளையும், மாணவர் கைதுகளையும் சந்தித்த ஹாட்லி கல்லூரி மாணவர்கள் (மாணவர்கள் கைது செய்யப்பட்டதும், அது தொடர்பாக தொடர்ச்சியான பல போராட்டங்கள் நடைபெற்றதும் பலரும் இணைய செய்திகள் மூலம் அறிந்திருக்கலாம்.)
6 மாணவர்கள் 10 பாடங்களிலும்
8 மாணவர்கள் 9 பாடன்ங்களிலும் A சித்தி பெற்றதாக உதயனில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த வருட பெறுபேற்று மட்டங்கள் கடந்த காலத்தில் பெறப்பட்ட பெறு பேறுகளில் இருந்து வீழ்ச்சி அடைந்ததாக கூட இருக்கலாம்.

ஆனால் அவர்கள் நாளாந்தம் எதிர்கொண்ட பிரச்சனைகள், கடுமையான உணவு தட்டுப்பாடு நாளாந்தம் தெருவில் பயணிக்கையில் என்ன நடக்குமோ என்று தெரியாத ஒரு நிச்சயமற்ற நிலை, ஆட்கடத்தல்.... என பல பிரச்சனைகள். இரவில் வீட்டில் படிப்பதற்கு விளக்கிற்கு மண்ணெண்ணெய் (Kerosene), மின்சாரம் என்பன சரியாக கிடைக்காத நிலை கடினமான சூழ் நிலைகளிலும் அவர்கள் கற்று தேறி இருக்கிறார்கள் அதற்கு அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

அப்போது 1கிலோ அரிசியின் விலை 250 ரூபாக்கும், தீக்குச்சிகள் தீபெட்டிகளாக அல்லாமல் குச்சிகளாக வாங்க வேண்டி இருந்ததாகவும் தொலைபேசி உரையாடல் மூலம் அறிந்து கொண்டேன். நான் தொலைபேசி மூலமும் இணைய செய்திகள் மூலமும் அறிந்ததை வைத்து அங்குள்ள சூழ் நிலையை வர்ணிப்பதை விட நேரே அங்கிருப்போராலேயே எழுதப்பட்ட முரண்வெளி கட்டுரை அங்குள்ள சூழ் நிலையை தெளிவாகவே உங்களுக்கு தரும் என்று நம்பலாம்.

இந்த பெறு பேறுகளை வைத்து கொண்டு அங்கு நிலவும் சூழல் எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தியது என்பதை கணிப்பது சிரமம். உயர்தர பரீட்சை முடிவுகளையும், அதன் பின்னான பல்கலைகழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் தெரியவரும் போதே இப்போதைய சூழ் நிலையின் தாக்கத்தை சரியாக உணர முடியும்.

1990 களில் இருந்தே பொருளாதார தடை, மின்சாரமின்மை, மண்ணெணெய் தடை, இதனால் விளக்கொளி கூட சரியாக கிட்டாத நிலை, இடப்பெயர்வு, பாடசாலைகள் சீராக இயங்காமை என்பவற்றுக்குள்ளால் தான் மாணவர்களின் கல்வியும் மக்களின் வாழ்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் 2000 ஆம் ஆண்டில் இருந்து நிலவிய ஒரு தற்காலிக சுமூக நிலை அதற்கு பழக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக ஏற்படும் நெருக்கீடுகளை சகித்து அவர்களின் திறமையை வெளிகொண்டு வர முடிந்ததில் மகிழ்ச்சியே.



1990 களிலான பொருளாதார தடையை எப்படி மக்கள் எதிர் கொண்டார்கள் என்பதை எழுத மட்டுமே பல பதிவுகள் வேண்டும்.

அப்போதைய வாழ் நிலை, குழந்தைகள், சாதாரண பேச்சு வழக்கு சொற்களை அறியும் முன்னமே போர் உபகரணங்களின் பெயர்களை உச்சரிக்க தொடங்கி இருந்தார்கள். அதை பற்றி சக பதிவரான ஹரனின் பதிவில் இருந்து

" 'சீ' பிளேன் (கோள் மூட்டி) அஃப்ரோ, புக்காரா, சகடை, கெலி (மணிக் கெலி, முதலைக் கெலி, மற்றும் பல), பொம்பர், சுப்பர் சோனிக், கிஃபிர் ஆகிய சொற்களே எம் ஈழத்துக் குழந்தைகள் அம்மா, அப்பா சொல்லும் முன்னரே சொல்லத் தெரிந்து கொள்ளும் வார்த்தைகள். ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவராலுமே எவ்வகையான பிளேன், அல்லது கெலி வானில் வருகின்றது என்பதனை அதனைப் பார்க்காமலேயே, அதன் சத்தத்தினை வைத்துக் கூறக் கூடியதாக இருந்தது.

சிறுபிள்ளைப் பராயத்தில், ஏதுமறியா வயதினிலே வானில் பறக்கும் விமானத்தைப் பெருமூச்சுடன் அண்ணார்ந்து வேடிக்கை பார்த்த காலம் மாறிப் போய்; தலைதெறிக்கக் கால் கடுக்க உயிரைக் கையிற் பிடித்தபடி ஓடத் தொடங்கிய காலம் வந்தது, ஓடிப் பதுங்கு குழிக்குள் பகல் இரவாய்ப் பதுங்கும் நிலை வந்தது."



அப்போதும் மண்ணெண்ணெய்க்கான தடை இருந்தது. உழவு இயந்திரங்கள் டீசலுக்கு பதிலாக மரக்கறி எண்ணெய் (Palm oil)பாவித்தும், மோட்டர் சைக்கிள்கள் மண்ணெண்ணெயிலும் ஓடி திரிந்தன. அப்போதைய காலத்து படம் பார்த்தலை பற்றி கானா பிரபா அண்மையில் ஒரு பதிவை எழுதி இருந்தார்.

மண்ணெண்ணேய் தட்டுபாடான சூழலில் படிப்பதற்கு விளக்கிற்கு மண்ணெண்ணெய் வாங்குவதே மாணவர்கள் உள்ள வீடுகளில் ஒரு பெரும் சுமையான விடயம். அந்த நேரம் பாவனையில் இருந்த விளக்கான ஜாம் போத்தல் விளக்கு பற்றி வசந்தன் ஒரு பதிவு எழுதி இருந்தார்.



எங்கள் வீட்டில் நான் ஒராள் மட்டும் தான் படிக்கும் வயதில், அதனால் எனக்கென படிப்பதற்கு ஒரு பெரிய மேசை விளக்கு தரப்பட்டிருந்தது. இது எல்லா வீடுகளிலும் சாத்தியபடும் விசயமாக இருக்காது.
அத்தோடு முழுமையாக விவசாயம் செய்வதற்கு போதுமான மண்ணெணெய் கிடையாத சூழல், பல தொழில் துறைகளும் முடங்கி போய் இருந்த காரணத்தால் பலர் விறகு, தேங்காய் பொச்சு என்பவற்றை சைக்கிளில் கட்டி விற்று வாழ்க்கையை ஓட்டினார்கள்.



படம்: அப்பால் தமிழ் இணையம்



படம்: கூகுல் தேடுபொறியின் தேடலில் கிடைத்தது

இப்படியானா வாழ்க்கை போராட்டங்களோடு தான் நாளாந்த வாழ்க்கை இருந்தது அப்போது.

ஆனால் பல்கலை கழக அனுமதிக்காக நடாத்தப்படும் க.பொ.த. உ/த பரீடசையில் பல தடவை யாழ்மாவட்ட மாணவர்கள் கணித பிரிவில் அகில இலங்கை மட்டத்தில் முதல், இரண்டாம் , அல்லது முதல் 10 மாணவர்களில் ஒருவராக பெறு பேறுகளை பெற்ற சந்தர்ப்பங்கள் அதிகம்.

போரின் தாக்கத்தால் உயர் தர பெறு பேறுகளில் யாழ்மாவட்டம் சடுதியான வீழ்ச்சியை சந்தித்த 2 சந்தர்பங்களை அவதானித்திருக்கிறேன்.

1. 1995 இடப்பெயர்வுக்கு பின் நடந்த 1996 உயர் தர பரீட்சை பெறு பேறுகள்.
2. 1999- 2000 யாழ்குடாவை மீள கைப்பற்றும் முயற்சியின் போதான காலப்பகுதி.


1995 முன்னேறி பாய்தல் நடவடிக்கை நடந்த அண்மைய காலப்பகுதியில் தான் 1995 ஆம் ஆண்டுக்கான உயர் தரபரீட்சைகள் நடை பெற்றன. ஆனால் அந்த பரீட்சை பெறு பேறுகளில் அதிக வீழ்ச்சி தெரியவில்லை. ஏன் எனில் மாணவர்கள் பரீட்சைக்கு தயார் படுத்தும் காலப்பகுதியில் போர் பயம் இருந்தாலும் படிக்க முடிந்தது. ஆனால் அதன் பின்னர் மக்களின் பாரிய இடப்பெயர்வின் பின் நடந்த உயர் தரபரீட்சை பெறு பேறுகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

அதற்கு உதாரணமாக
வருடாந்தம் 60- 64 மாணவர்கள் அனுமதி பெறும் மருத்துவத்துறைக்கு அந்த வருடம் 39 மாணவர்கள் மட்டுமே அனுமதி பெற்றிருந்தனர் என்பதை வைத்து சொல்ல முடியும்.

பொதுவாக அப்போதிருந்த பல்கலை கழக அனுமதி வெட்டு புள்ளி முறையை பார்த்தால் (இப்போது Z-score எனும் முறை எப்படி செயற்படுத்துகிறார்கள் தெரியாது).

மருத்துவ துறைக்கு 900 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்
அவர்களில்
a) 40% (சரியாக ஞாபகம் இல்லை) அகில இலங்கை ரீதீயிலான திறமை அடிப்படையிலும், அதாவது முழு இலங்கை ரீதியிலும் முதல் 360 இடங்களுக்குள் வந்தவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
b) மிகுதி 60% மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை அடிப்படையிலும் கல்வி, பின் தங்கிய மாவட்டம் எனும் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.(இதில் மாவட்ட அடிப்படை என தனியாகவும், பின் தங்கிய மாவட்டங்கள் என பட்டியல் இடப்பட்ட மாவட்டங்களுக்கு ஒரு குறிபிட்ட சதவீதமும் அனுமதி இருகும்)

(இலங்கை பல்கலைகழக அனுமதி பற்றிய விபரங்களையும் யாரோ வலைப்பதிவில் எழுதி இருந்தார்கள் யார் என தெரியவில்லை)


அதன் படி அண்ணளவாக 24 மாணவர்கள் யாழ்மாவட்டதிலிருந்து தெரிவு செய்யப்படுவர்.

மருத்துவ துறைக்கு 64 மாணவர்கள் மொத்தமாக யாழ்மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யபடும் போது அவர்களில் 40 பேர் அகில இலங்கை திறமை அடிப்படையிலும், 24 மாணவர்கள் யாழ்மாவட்ட அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள் என எடுத்து கொள்ள முடியும்.

(மேலே சொல்லப்பட்ட கணித்தல் பல்கலைகழக மனியங்கள் ஆணைக்குழு மாணவர்களுக்கு அனுப்பும் கையேட்டை வாசித்து நான் புரிந்து கொண்டதை வைத்து சொல்லி இருக்கிறேன்)

ஆனால் எமது மாணவர்களில் பலர் வருடாந்தம் 64 பேருக்கு சராசரியாக மருத்துவத்துறைக்கு அனுமதி கிடைக்கிறது. அதே போல 1996 ஆம் வருடமும் கிடைக்கும் என கணக்கு போட்டனரே தவிர, அகில இலங்கை ரீதியில் யாழ்மாவட்டத்தில் இருந்து திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்படக்கூடிய எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததை கவனிக்கத் தவறி விட்டனர். இதனால் மருத்துவத் துறை கிடைக்கும் என கற்பனையில் இருந்து அது கிடைக்காது ஏமாற்றம் அடைந்தனர்.


ஆனாலும் தொடர்ச்சியாக பல்கலை கழக அனுமதிக்கான வெட்டு புள்ளிகளில் கொழும்புக்கு அடுத்த படி பொறியியல் பிரிவுக்கு அதிக வெட்டு புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் மாவட்டமாக யாழ்மாவட்டமே இருந்து வந்திருக்கிறது. மருத்துவ துறைக்கு கொழும்பு, காலிக்கு அடுத்து முன்றாம்/ நான்காம் நிலையில் வெட்டு புள்ளிகள் யாழ் மாவட்டத்துகே நிர்ணயிக்கப்படுவது வழமை.
அதாவது இடப்பெயர்வு, பொருளாதார தடை, போரின் தாக்கத்துக்கு முகம் கொடுத்து இலங்கையின் போரின் வீச்சுக்கு முகம் கொடுக்காத ஏனைய மாணவர்களுக்கு சமனாக பெறு பேறுகளை பெறுவதென்பது பாராட்டப்பட வேண்டிய விசயம்.
ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் அனுமதி பெறும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் வீழ்ச்சியடைந்து வரும் என்றே நினைக்கிறேன். அது கவலைக்குரியது.

இறுதியாக
"நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக பெறு பேறுகளை பெறுகிறார்கள்"
என்ற நிறை அன்பு I.A.S என்ற கூற்று ஈழத்து தமிழ் மாணவர்களுக்கும் பொருந்தும்.

6 comments:

said...

//கா.போ//

திருத்தம்
க.பொ.


குப்பி விளக்கில் படித்து, பிளேன் வரும் போது அணைத்து வாழ்ந்த பெருமை எனக்கும் இருந்தது. இப்படியான பதிவுகள் மூலம் இதை அனுபவித்திராதவர்களுக்கு எங்கள் உலகத்தைக் காட்டலாம்.

said...

திருகோணமலையில் வளர்ந்ததால் குப்பி விளக்கு, ஹெலி போன்ற அனுபவங்கள் இல்லை, ஆயினும் அங்குள்ள உறவினர்கள் மூலும் அனைத்தும் அறிந்தவன்..!!!!

என்னைப் பொறுத்தவரையில்.... இராணுவக் கட்டுப்பாடு வரும்வரை யாழ்ப்பாண இளைஞர்களிடம் படிப்பு நோக்கி இருந்த ஆர்வம் இப்போது இல்லை என்பது கசப்பான உண்மை!!!!

said...

ஆகா அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே......
ஒவ்வொன்றுக்கும் பொருளாதார தடை வர எம்மவர்கள் கண்டு பிடித்த பொருட்கள் எண்ணிலடங்காது.
அந்த வகையில் இந்த குப்பி விளக்கும் ஒன்று.
பதிவுக்கு நன்றிகள்

said...

vanakkam,
mannikkavum.. intha computer la tamil font illa...

nalla oru pathivu... naanum ithai patri enta anupavaththa eluthuvam endu josichanaan.. paruvaai illa neengal eluthidingal.. message matravarkaluku pooi sernthaal sari (nammada naadila enna nadakkuthu endu)

“The Tamil students received two serious blows. The Sinhala Only act of 1956 made it difficult for them to secure employment. A policy of standardisation made it much more difficult to get admission to a university. In the original form in 1971, discrimination was on the basis of language and the region the student came from. The system that has prevailed since 1977 is as follows: 30% are filled on island-wide merit; 55% by allocation to revenue districts in proportion to their population, and filled within each district on merit; 15% are given to districts deemed educationally underprivileged. How this operated against Tamil students can bee seen from the following quotation” Brian Senewiratne: Sri Lanka, A Synopsis Of the Racial Problem", p 3



“Students in the North (almost certainly Tamils) and those in Colombo (two-thirds Sinhalese and one-third Tamils) continue to suffer serious discriminations. In 1983/4, 530 students who had the necessary grades for admission to the Faculties of Medicine, Science and Engineering were excluded, to accommodate 519 who had lesser marks. Of the excluded students, over 50% were Tamils." Brian Senewiratne: Sri Lanka, A Synopsis Of the Racial Problem", p 3

haran

said...

சந்திரன்,
நல்ல பதிவு. நான் கடந்த வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது உண்மையில் ஆச்சரியப்பட வைத்த சில விடயங்களில் ஒன்று தமிழ்ப்பகுதிகளில் வாழும் எம் மாணவர்கள். குண்டுகளினால் இடிபட்ட கட்டிடங்களிலும், நிலவின் வெளிச்சத்திலும், மண்ணெண்ணை விளக்கின் முன்னிருந்தும் படித்ததாக அறிந்தேன்.

எமது மாணவர்களின் சாதனை என்று தான் இதைச் சொல்ல வேண்டும். அவர்களையிட்டு நான் பெருமிதம் அடைகிறேன்.

said...

கானா பிரபா திருத்ததுக்கு நன்றி.

மயூரேசன் நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி தான் அதன் காரணங்களை யோசித்தீர்கள் என்றால் ஏன் அந்த நிலை என புரிவது சிரமமல்ல

நந்தியா.. போர் சூழலில் பல விதமான மாற்றீடுகளை எம்மவர்கள் பாவித்தனர்.. ஆங்காங்கே பலரும் வலைப்பதிவில் எழுதியுள்ளார்கள் ஆனால் ஒருவரே எல்லாவற்றையும் தொகுக்க முடியாதில்லையா

நீங்களும் உங்கள் நினைவில் உள்ளதை எழுதலாமே

ஹரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்களும் எழுதலாமே. உங்கள் பார்வையில். அது இன்னும் வித்தியாசமான வாசிப்பனுபவத்தை கொடுக்கும்.


//நான் கடந்த வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது உண்மையில் ஆச்சரியப்பட வைத்த சில விடயங்களில் ஒன்று தமிழ்ப்பகுதிகளில் வாழும் எம் மாணவர்கள். குண்டுகளினால் இடிபட்ட கட்டிடங்களிலும், நிலவின் வெளிச்சத்திலும், மண்ணெண்ணை விளக்கின் முன்னிருந்தும் படித்ததாக அறிந்தேன்.
//

வெற்றி எமது வயதோத்தவர்களின் அனுபவங்கள், பாடசாலை பருவம் அப்படி தான் கழிந்தது.