90 கும் 95 க்கும் இடைப்பட்ட காலங்களில் ஈழத்தில் குறிப்பா யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சிகள் பற்றி அந்த நேரத்தில் இருந்தாக்களுக்கு ஞாபகம் இருக்குமெண்டு நினைக்கிறன். மின்சாரமற்ற, பொருளாதார தடைகளுடன், ஹெலி (உலங்கு வானூர்தி), விமான குண்டுவீச்சுக்கள், இருந்தால் போல் பலாலி முகாமில் இருந்து ஏவப்படும் தொலைதூர எறிகணைகள் இவற்றுக்குள்ளும் எங்கட கோயில்களிலை திருவிழாக்கள் இரவிரவா நடக்கும். பள்ளிகூட திறந்த வெளி அரங்குகளிலை நாடகங்கள், சாந்தன், இராஜா, தமிழீழ், இசை குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் என அடிக்கடி ஏதாவது இரவிரவா நடக்கும். என்ன இரவிலை ஜெனரேற்றர்/ லைற் என்ஜின் போன்றவற்றில் இருந்து எடுக்கிற மின்சாரத்தை கொண்டு தான் கோயிலில் மின் விளக்குகள் ஒளிரும். இரவிலை ஹெலி சத்தம், அல்லது விமான இரைச்சல் கேட்டல் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு கோயிலே இருட்டில் முழ்கும். ஆனாலும் அந்த திருவிழாக்கள் உணர்வு பூர்வமாகவும், எங்களை போல இருக்கிற பதின்ம வயது பொடியழுக்கு ரசிக்கத்தகவையாகவும் இருந்தன. அதிலும் கொடியேறி தீர்த்த திருவிழா முடிஞ்சு அடுத்த நாள் நடக்கும் பூங்கவன திருவிழா முழுக்க முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டதா இருக்கும்.
பூங்கவனத்தண்டு சாமி ஒரு ஆறு அல்லது எழுமணியளவில் எழுந்தருளி வந்து வெளிலை அதுக்கென அமைக்கப்பட்ட பந்தல் ஒண்டிலை இருந்தாரெண்டால் அர்த்தன் நிகச்சி தொடங்க போகுதெண்டது தான்.
பூங்காவனத்திலை நடை பெறும் நிகழ்ச்சிகள் என பார்த்தால்
1. மேளச் சமா/ தவில் கச்சேரிகோயில் வித்துவாங்கள்/ கத்துகுட்டிகள்
பஞ்சாபிகேசன் குழு,
நாகேந்திரன் குழு (பஞ்சாபிகேசனின் மகன்)
இன்னும் யாரும் பிரபலாமான ஒரு குழு
2. வில்லுப்பாட்டு
சின்னமணி குழுவினர் அல்லது
சிறிதேவி குழு?? ஒரு ஐயர் ஒராள் தான் பாடுவார் (பெயர் ஞாபகம் இல்லை)3. இசை குழு
ஈழ நல்லூர் அருணா குழு
அல்லது வேறு யாராவதுஎன்னுடைய மாமா (அவர் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்) யாழ்ப்பாணத்திலை இருந்து பூங்காவனம் பாக்க மட்டும் தான் வருவார் அதிலை அவருக்கு பிடிச்சது மேளச்சமா தான். ஆனா நாங்கள் பூங்காவனம் போறது வில்லுபாட்டு பாக்கவும், இசை நிகச்சி பாக்கவும் தான். ஆறு ஏழு மணிக்கே போடுவம். மேளச்சமாவை ஒழுங்கா பாக்கிறமோ இல்லையோ ஒழுங்கா கச்சானும், ஐஸ்கிறீமும் சாப்பிட்டு கொள்ளுவம். அதைவிட ஊர் கதை, எந்த பொடியன் யாரை சுத்துறான் எண்ட கதையள் பொக்கும் சில பேர் படுத்து நித்திரையா போவாங்கள் வில்லு பாட்டு தொடங்க எழுப்ப சொல்லி போட்டு. எப்பிடியும் அருணா குழுவின் பாட்டு தொடங்க விடியப்புறம் 3அல்லது 4 மணியாகும். முடிய விடிஞ்சிடும். ஆனாலும் முழு இரவும் நித்திரை கொள்ளாம கண் கொட்ட கொட்ட முழிச்சு கொண்டு இருப்பம்.
அதே போல எங்கட பள்ளிகூட மைதானத்திலை நடக்கிற நாடக நிகழ்வு, இசை நிகழ்ச்சி என எல்லத்தையும் தப்ப விடாம போய் இரவிரவா இருந்து பாப்பம்.
இந்தியனாமி போன உடன தேனிசை செல்லப்பாவினுடடய இசை கச்சேரி எல்லா ஊரிலையும் நடந்தது. எங்கட ஊரிலையும் நகரசபை மைதானத்திலை நடந்த நிகழ்ச்சிக்கு நானும் போன்னான். கரை கொள்ளாத சனம்.
தேனிசை செல்லப்பாவின் கணீர் என்ற குரல், அந்த மேடை எல்லாமே இன்றும் நிழல் போல நினைவில்.
அடுத்து ஒரு நாடகம் எங்கட ஊர் கலைஞர்கள் கொண்டு அரங்கேறியது. அதிலை ஒரு பாட்டு வரும்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும்...அதன் பிறகு நிறைய பாத்திருக்கிறன் எது எது என வரிசையா சொல்ல வராட்டிலும் ஞாபகத்தில் உள்ளதை சொல்லுறன்
முத்தமிழ் விழா எண்டு சொல்லி யாழ் குடா நாட்டின் முக்கியமான பிரிவுகளிலை 2 நாள் நிகவுகள் நடைபெற்றன. எங்கடை ஊரிலை நடந்த முதல் நாள் நிகழ்வுக்கு போய் இருந்தன். அதிலை காத்தவராயன் கூத்து , நாடகங்கள் என நிறைய நிகழ்ச்சிகள் நடந்திச்சு அதே நேரம் பலாலிலை இருந்து அடிச்ச எறிகணைகள் விழா நடந்த இடத்துக்கு கிட்ட விழுந்து வெடிச்சிச்சு. அதாலை இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு போகாமல் விட்டிட்டன். அதாலை ஒரு முக்கியமான சந்தர்ப்பம், யாருக்கும் இலகுவிலை கிடைக்காத வாய்ப்பு ஒண்டை தவற விட்டிட்டன்.
பிறகு எங்கட பள்ளி கூட திறந்த வெளியரங்கிலை
சந்தன காடு முக்கியமா ஞாபகம் இருக்கிற நாடகம் அத விட இன்னும் நிறைய நாடகங்களும் நடந்திச்சு அண்டு.
பிறகு சாந்தன் இசைகுழு?? , இராஜா இசை குழுவும் இணைஞ்சு போட்டிக்கு பாட்டு நிகழ்ச்சி ஒண்டு அதிலை சாந்தன் குழு ஒரு பாட்டு பாடினா அதுக்கு இணையா ஒரு பதில் பாட்ட இராஜா குழு பாடும்.
உதாரணமா பத்தமெண்டா இராஜா குழு வீட்டுக்கு வீடு வாசல் படி வேணும் எண்ட இளையராஜாவின் பாட்டை பாடிச்சினம் அதுக்கு போட்டியா சாந்தன் குழு ஒரு போட்டி பாட்டு பாடிச்சினம்.
அத விட தமிழீழ இசைகுழு என்ற போராளி கலைஞர்களின் இசை நிகழ்ச்சி எண்டு கனக்க நடந்திச்சு. ஒரு நிகச்சியை கூட தப்ப விட்டதில்லை. எப்பிடியும் ஒரு ஆறேழு பேரா சேர்ந்து தான் போவம். இரவு பசிக்கு வயிறு நிறைக்கிறது கச்சானும், ஐஸ்கிறீமும் தான்.
ஒரு நிகழ்ச்சிக்கு கூட போக பொறன் எண்டு கேக்க அப்பா அம்மா அனுமதி மறுத்ததில்லை அதே போல நிகழ்ச்சி முடிஞ்சு விடியப்பறம் 4 மணிக்கு கதவிலை தட்ட சினக்காம அப்பா/ அம்மா வந்து கேற்றை திறப்பினம்.
இராணுவ தாக்குதல் பயம், பொருளாதர தடைகள், எங்க போற எண்டாலும் சைக்கிள் தான். ஆனா அனைத்தையும் எம்மால் மனம் விட்டு இரசிக்க முடிந்தது.
காலம் 11/08-12/08/ 2007, இடம் மார்கம் பேயர் மைதானம், ஒன்ராரியோ, கனடா

எந்த வித உயிர் பயமும் அற்ற சூழல், இதமான மாலை நேரம். அங்கு ஹெலிக்கு உயிரை காக்க பனை மரத்தை சுற்றிய சம்பவங்களுக்கு பதிலா இஞ்சை ஹெலியிலேயே ஏறி ஒரு சவாரி போய் வர வசதியுடன் கூடிய ஒரு களியாட்ட நிகழ்வு இரண்டு நாட்கள் நடந்தது. இரண்டு நாட்களும் போய் இருந்தேன்.ஈழத்தை போல மைதானம் நிறைந்த சனக்கூட்டம்.

ஊரில் இருந்த காலத்தில் இலங்கை சர்வதேச வானோலியில் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு எனும் நிகழ்ச்சியில் அறிமுகமான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ஒன்று அந்த நிகழ்சியை செய்த அப்துல் ஹமித் இனாலேயே இங்குள்ள ஆக்களுக்காக நடாத்தப்பட்டது.

அதை விட தென்னிந்திய திரைப்பட பாடகர்கள் சிலருடன் சென்னை ரிதம்ஸ்??? குழுவின் இசை நிகச்சி,
நடன நிகச்சி... என பல. ஆனால் விளம்பரம் செய்த சன் ரிவி அசத்தபோவது யாரு குழுவினர் வந்து சேரவில்லை. வந்தவர்களில் பாதிப்பேர் அவர்களை பார்க்க வந்திருப்பார்கள் என நினைக்கிறன். இங்குள்ள இசை நிகழ்ச்சிகளின் ஒலியமைப்பு போல் ஈழத்தில் பார்த்த நிகழ்ச்சிகளில் ஒலியமைப்பு சீராக இருந்ததில்லை. அத்துடன் அங்கு சில நேரங்களில் அருணா குழு இசை நிகழ்ச்சியில் டிரம் வாத்திய ஒலி பாடலின் குரலையும் தாண்டி ஒலிக்கும்.
அத்துடன் பசி தீர்க்க விதம் விதமான ஈழத்து உணவு வகைகள் சுடச்சுட வாங்கி உண்ணும் வசதி.
கொத்துரொட்டி கடைகள்,
கரம் சுண்டல் கடைகள்
வள்ளி கிழங்கு அவியல்

அப்பம், தோசை இட்டலி
வறுத்த கச்சான்,
இடியப்பம்
கூழ்இவற்றுடன் மேலைதேய உணவுகளான
பீஸ்ஸா, சூடான நாய் :) (Hot dog)
ஐஸ் கிறீம் கடைகள் அதிலும்
யாழ்ப்பாண சுவை மாறாத எனும் விளம்பரத்துடன்

என பல உணவுகள்.
இருந்த போதும் இவற்றில் ஒன்றில் கூட என்மனம் இலயிக்கவில்லை. என்னக்கு அங்கு ஒருமணி நேரத்துக்கு மேல் நிற்க பிடிக்கவில்லை. எப்படா விட்டுக்கு போவன் எண்ட மாதிரி இருந்திச்சு. ஊரிலை இரவிரவா நிகழ்ச்சி பார்த்த எனக்கு இரவு 11 மணி வரையும் இருந்து பொறுமை காக்க முடியாமல் இரண்டு நாளும் பாதியிலேயே வெளியேறிவிட்டேன்.
ஏன் என்னால் இரசிக்க முடியவில்லை? காரணம் என்ன என யோசித்து யோசித்து பாக்கிறன்?
ஏன்?....