Saturday, 25 August 2007

பள்ளிக்கூடம் போகலாம்- 1

பள்ளிகூடம் ஒவ்வோருவரது வாழ்கையிலும் மறக்கமுடியாத அத்தியாயங்களை கொடுக்கும் உன்னதமான இடம். பள்ளிகூடம் படம்; சினேகா, நரேன், சீமான், தங்கர்பச்சன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஒரு பள்ளிகூடத்தின் கதையை மட்டுமல்ல, நட்பின் நெருக்கம், பள்ளி காதல் என பலதை சொல்லி சென்றுள்ளது. படத்தை பற்றிய விமர்சனங்களை பலரும் செய்துவிட்ட நிலையில் பள்ளிகூடம் படம் பற்றி நான் எதையும் நான் சொல்லப்போவதில்லை. இங்கு சொல்ல போவது எனது பள்ளிகூட நண்பர்களில் சிலர் பற்றிய ஞாபக குறிப்புக்கள்/ அல்லது ஞாபகத்தில் இருப்பவர்களை பெயரிடாமல் பட்டியலிடல் மற்றும் பள்ளிகூட வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்கள் பற்றிய ஒரு மீள் பார்வை மட்டுமே.

ஏற்கனவே நான் எழுதிய சில
1.குண்டு போட்டவர்கள் மீது விழுந்த குண்டு.....
2.ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், இன்ன பிற...
3. உயிர் பயத்தோடு கழிந்த ஒரு பாடசாலை நாள்


அடிக்கடி பழைய நண்பர்களை ஞாபகப்படுத்தி பார்த்தாலும் பலரோடு தொடர்பறுந்த நிலையில் பலர் எங்கு எந்த நாடுகளில் இருக்கிறார்கள் எதுவுமே தெரியாத நிலையில் நினைவுகளில் மட்டுமே பலரது நட்பு நிலைத்திருக்கிறது. இருந்த போதும் உயர்தர கல்வி வரை கற்ற பலரது நட்பு இன்றும் ஓரளவுக்கு நீடித்திருக்கிறது. அப்படி தொடர்பில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் செர்ந்து எமது பாடசாலை நண்பர்களின் குழுமம் ஒன்றை யாஹு வில் அமைத்திருந்தோம். அந்த குழுமத்தின் மூலம் எமது நட்பை தொடர்ந்து பேண முடிந்தது மட்டுமல்ல மனைவி, மற்றும் இரண்டு குழந்தைகள் முன் சுடப்பட்டு இறந்து போன நண்பனின் குழந்தைகளுக்காக ஒரு சிறுதொகையை சேர்த்து பிள்ளைகளின் பெயரில் வங்கி கணக்கில் இடும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். உலகம் முழுவதும் சிதறிப்போய் இருந்தாலும், எம்முடன் படித்த தோழனின் இழப்பின் துயரத்தில் இருக்கும் இன்னும் 30 களை கூட எட்டாது இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்ட அவனது குடும்பத்துக்கு சிறிதளவாவது உதவுவதில் எல்லாரும் ஒன்றுபட்டோம் என்பதில் ஓரளவு திருப்தியும் ஏற்படுகிறது.
இந்த திருப்தியுடன் நினைவில் இருக்கும் பழைய நண்பர்களை பற்றி இனி...
புதிது புதிதாக பலர் நட்பு வட்டத்துக்குள் இணைந்தாலும் பள்ளிகூடங்களில் சிறிய வயதுகளில் ஒரே வாங்கில் அல்லது ஒரே வரிசையில் இருந்த நண்பர்கள் அடிக்கடி நினைவில் வந்து போவர்கள். அதிலும் வாங்கு எனும் போது இருக்கையும், எழுதும் பகுதியும் பிணைக்கப்பட்ட ஒரு வாங்கில் குறைந்தது 3 பேர் இருக்க கூடிய வாங்குகளில் ஒவ்வோருவரும் தமது பகுதி என அளவு கோல்/ அடி மட்டத்தால் அளந்து எல்லை பிரிப்பதும், அவரவர் பகுதிகளில் இருக்கும் அழுக்கை வீட்டில் அப்பா/ அண்ணா என யாரும் சவரம் செய்து மொட்டையாய் போன பிளேட்டை கொண்டு விறாண்டி/ சுரண்டி சுத்தம் செய்வதும், எமது சுந்தர நாமங்களை அதில் பல வண்ணங்களில் பொறிப்பதும் நடக்கும். அந்த எல்லையை தாண்டி மற்றைய நண்பனின் கொப்பி, புத்தகங்கள், அல்லது கையோ வந்தால் கூட சில நேரத்தில் முரண்பாடு வரும். இருந்த போதும் ஒரே வாங்கு நண்பர்களுக்கிடையே ஏற்படும் நெருக்கம் மற்றையவர்களோடு ஒப்பிடும் போது அதிகம் தான்.
அந்த வகையில் அடிக்கடி என் நினைவில் வந்து போகும் ஏதோ ஒரு விதத்தில் மிக நெருக்கமக இருந்த நண்பர்கள் சிலர் பற்றிய ஞாபக குறிப்புக்கள் (எல்லாரையும் பற்றி எழுத ஒரு பதிவு போதாது).


பாலர் பிரிவின் ஒரே வாங்கார்


பாலர் பிரிவு, முதல், இரண்டாம் வகுப்பு வரை என்னுடன் ஒரே வாங்கில் இருந்த இரு நண்பர்களை பிரிந்து பாட்சாலை மாறி போக வேண்டிய சந்தர்பம் ஏற்பட்டது. இருந்த போதும் அந்த இருவரது பெயரையும் இன்றும் மறக்க முடிவதில்லை. நான் எமது ஊரிலேயே இருக்கும் பிரபலமான பாடசாலைக்கு மாறி சென்றுவிட, அவர்கள் ஆண்டு 6 இல் புலமை பரீட்சையில் சித்தியடைந்து யாழ் இந்துகல்லூரிக்கு சென்றுவிட்டார்கள். இருந்த போதும் அவர்கள் இருவரில் ஒரு நண்பன் நாம் படித்த தனியார் (ரியூசன்) கல்வி நிறுவனத்துக்கு ஆண்டு 9 இல் இருந்து மீண்டும் வந்ததான் அதன் பிற்பாடு அவனது நட்பை மீண்டும் பேண முடிந்தது. அவன் தொடர்ந்து உயர்தர வகுப்பில் கணித பிரிவுக்கு எனது பாடசாலைக்கே வந்து விட்ட பின் அவனும் நானுமாக பாட்சாலை லியோ கழக பணிகளை இணைந்து செய்திருந்தோம். மீண்டும் 95 இடப்பெயர்வில் அவன் யாழ்குடா நாட்டை விட்டு வெளியேறி எங்கெங்கோ போய் சிங்கபூருக்கு கல்வி கற்க சென்று இப்போது சிங்கபூரிலேயே பணியேற்றியும் வருகிறான். அடிக்கடி இல்லாவிட்டாலும் இடையிடையே எம் எஸ் என் தூதர் மூலமும், தொலை பேசி மூலமும் தொடர்பை பேணிவருகிறோம். மற்றைய நண்பன் இப்போது ஐக்கிய இராச்சியத்தில் இருக்கிறான் என அறிந்திருந்தாலும் இதுவரை அவனுடன் எந்த தொடர்பும் இல்லை.


புதிய பாடசாலையில் ஒரு வாங்கார்

பின்னர் புதிய பாடசாலையில் மிண்டும் ஒரே வங்கு நட்பு என நால்வர் வந்து சேர்ந்தனர் அவர்களது நட்பும் அதிக காலம் நீடிக்க வில்லை. ஒரு நண்பன் கொக்குவில் இந்து கல்லூரிக்கு மாறி போய்விட , பாடசாலையில் ஆண்டு 6 க்கு வரும் போது நடைபெற்ற பரீட்சையின் அடிப்படையில் வகுப்புக்கள் கெட்டிகாரர், நடுத்தரம், கடை நிலை என வகுப்புக்கள் பிரிக்கப்பட்ட போது என்னுடன் இருந்தவர்கள் பலரும் ஏ வகுப்புக்கு போய் விட நான் மட்டும் பி பிரிவில் சேர்க்கப்பட்டேன். பின்னர் மீண்டும் எனது ஆண்டு 6 புள்ளிகளை பார்த்து என்னை மீண்டும் ஏ பிரிவில் சேர்த்த போது பழையவர்கள் வேறு புது நட்பு வட்டத்துக்கு போய்விட நான் இருந்த வரிசையில் இருந்து புதியவர்கள் சிலர் நட்பு வட்டத்துக்குள் இணைந்து கொண்டனர். அந்த வட்டத்தில் இருந்தவர்கள் நட்புக்கூட நெடு நாள் நீடிக்க வில்லை. என்னுடன் இருந்த ஒரு நண்பன் 89 களின் இறுதியில்/ 90 இன் ஆரம்பத்தில் மீண்டும் இலங்கை அரசுடன் பொர் வெடிக்கலாம் என்ற சூழ் நிலையில் ஒருவன் இந்தியாவுக்கு சென்று விட மற்றைய நண்பனும் தனது தாயார் மட்டகளப்பில் பணி நிமித்தம் இருப்பதால் அவருடன் இணைய செல்வதாக சென்றுவிட மீண்டும் புதியவர்கள் ஒரே வாங்கில் வந்து சேர்ந்தாலும் அதன் பின் நமக்கும் ஒரளவு வயதும் வந்துவிட்டதால் ஒரே வாங்கு நட்பை விட ஒரே ரியூசன், ஒத்த குணம் உடையோர் என நட்பு வட்டம் வேறுபட தொடங்கி இருந்தது.

இந்தியாவுக்கு சென்ற நண்பன் அடிக்கடி நினைவில் வந்து போவான். எப்படி இருக்கிறான், என்ன ஆனான் என கடந்த வருடம் வரை அறிய முடியவில்லை. இருந்தால் போல் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, தனது பெயரை சொல்லி ஞாபகம் இருக்கிறதா என கேட்ட போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது தொலைபேசி இலக்கத்தை எமது பாடசாலை மாணவர் குழுமத்தில் பெற்று கொண்டதாகவும் கூறியிருந்தான். தான் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த செய்தியையும் கூறினான். உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

மட்டக்களப்புக்கு சென்ற நண்பன் மீண்டும் பல்கலைக்கழகத்தில் கற்று கொண்டிருந்த போது அவனும் மருத்துவதுறைக்கு தெரிவாகி எனது பல்கலைக்கழகத்துக்கே வந்திருந்தான். நான் இருக்கும் முகவரியை அறிந்து என்னை தேடி வந்து ஆச்சரியப்படுத்தினான். இப்போதைய யுத்த சூழல் அவனை மீண்டும் எங்கு கொண்டு போய் சேர்த்துள்ளதோ தெரியவில்லை.


பள்ளிகூடம் போவோம் இன்னும் வரும்.....

0 comments: