ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், அவர்கள் என்மீது செலுத்திய செல்வாக்கு
"எழுத்தறிவித்தவன் இறைவன் " இப்படி சொல்லுவார்கள். ஆனால் பள்ளி பருவத்தில் அப்படி தோன்றுவதில்லை.எல்லா ஆசிரியர்களாலும் மாணவர்களின் விருப்பத்திற்குரிய ஆசிரியராக முடிவதில்லை. ஒரு சில ஆசிரியர்கள் கடமைக்கு வந்துவிட்டோம் என கற்பித்தாலும் அவர்களை வைத்து ஆசிரிய பணியை குறைத்து மதிப்பிட முடியாது.
எமது பள்ளிகூடத்தை பொறுத்தவரை ஆண்டு 6 (தரம் 5) இல் ஒரு வகுப்பசிரியரும், கணிதம், விஞ்ஞானம் (அறிவியல்), தமிழ், சமயம் ... என 8 (இப்போது 10) பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் ஆண்டு 11 (தரம் 10/ க. பொ.த சா/த) வரையும் அவர்கள் தான் எமக்கு ஆசிரியர்கள். சொல்ல போனால் பெற்றாருக்கு அடுத்து எம்முடன் நீண்டகாலம் தொடர்ந்து எம் வளர்ச்சியை கண்டு வருபவர்கள் அவர்களாக தான் இருப்பர். (இது எமது பாடசாலையில் இருந்த முறை. வேறு பாடசாலைகளிலும் அவ்வாறா இருந்தது என்பதை மற்றவர்கள் கூறினால் தான் தெரியும்.)
கற்பிக்க வருபவர்களுக்கு பட்டம் சூட்டுவதும், பட்டப்பெயர் கொண்டே அந்த ஆசிரியர்கள் இல்லாத நேரம் அவர்களை மாணவர்கள் அழைப்பது வழக்கம்.
சுகாதாரம் கற்பிக்க வந்த ஆசிரியர் அல்லூட்ட குறைபாடுகள் பாடத்தை தாண்டி அடுத்த பாடத்துக்கு போகாத அவரது அல்லூட்டத்தால் அவரை அல்லூட்டம் என அழைத்ததும்
கணிதம் கற்பித்த ஆசிரியை குதிரை வேகத்தில் கணிதம் கற்பித்தல் குதிரை என பட்டம் வைத்து அழைத்ததும், பாலர் பிரிவில் கற்று கொண்டிருந்த அவரது மகன் வரும் போதெல்லாம் அவனையும் குதிரை என்றே அழைத்து அவனை வெறுப்பேற்றியதும்
ஒரு கதை.
ஆங்கிலம் கற்பித்த ஆசிரியருக்கு வைத்த பெயர் சவாரி: ஆங்கிலம் என்பதே வேம்பாக கசக்கும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலம் அவர்களுக்கு இரண்டாம் மொழி என்பதை உணராது அவரது கற்பித்தல் இருந்தது. சொல்ல போனால் எமக்கு ஆங்கிலம் மீதிருந்த ஆர்வமின்மையை மேலும் அதிகரிக்க வைத்த பெருமை அப்பெருமகனாரையே சாரும்.
கோயிலில் நெல்லிகாய் பிடுங்க போய், அந்த கோயிலின் நிர்வாகியாக இருந்த ஆசிரியர் திரத்த தறிகெட்டு ஓடிய என் நண்பர்கள் அவருக்கு வைத்த பெயர் நெல்லிகாய்.
10 ஆம் ஆண்டில் புதிதாக சமூக கல்வி கற்பிக்க வந்த வழுக்கை தலை வாத்தியாரின் கற்பித்தல் பிடிக்காமல், வந்த முதல் நாளில் உலகத்தில் இருக்கும் மலைகள் பற்றிய பாடத்தில் அவர் சொன்ன காப்பந்தெரியன் மலை தொடருக்கும் அவரது மொட்டைதலையில் ஓடிய குருதி குழாய் முனைப்புக்கும்/ மண்டை ஓட்டு தவாளிப்பு அடையளத்துக்கும் தொடர்பு படுத்தி (இதை தான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறதெண்டு சொல்லுவார்கள் :) அவருக்கு காபன்தேரியன் என பெயரும் சூட்டினோம். அந்த ஆசிரியர் எமக்கு வேண்டாம் என பாடசாலை நிர்வாகத்திடமும், வகுப்பாசிரியரிடமும் சொல்லி அவரை பாடத்தில் இருந்து தூக்கி, முன்னர் இருந்த ஆசிரியரை சமூக கல்வி பாடத்துக்கு மாற்றுவித்தோம். மற்றிய பின்னும் அந்த மாற்றத்தை ஏற்காது தொடர்ந்தும் வகுப்புக்கு வந்து எமக்கு தொந்தரவு தந்தார். அவரை மற்றிய பின் புதிய நேர அட்டவணையில் சமூக கல்வி இருந்த நேரம் வேறு பாடம் வந்து விட்டாலும் பழைய நேர அட்டவணையே தன்னிடம் உள்ளதெனவும், புதிய நேர அட்டவணை தனக்கு கிடைக்கவில்லை எனவும் சொல்லி புதிய நேர அட்டவணைப்படி கற்பிக்க வந்த ஆசிரியர் கற்பிப்பதை அனுமதிக்க மறுத்துவிட்டார். இதை அறிந்த துணையதிபர் அவரிடம் வந்து புதிய நேர அட்டவணையை கருத்தில் எடுக்க கூறிய போது தனக்கு புதிய நேர சூசி கிடைக்க வில்லை என விதண்டாவாதம் செய்தார். துணையதிபர் போன பின் (இச்சம்பவம் நடந்தது மாசி மாதம்) இப்ப மாசி மாதம் தானே அதால அவருக்கு பனி பிடிச்சிட்டு எண்டு ஒரு சொல்லு சொல்லிவைத்தார். நூணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அவர் சொன்ன வாக்கியதை, தொடர்ந்து வகுப்புக்கு அவரை வராது செய்யும் ஆயுதம் ஆக்கி கொண்டது எமது வகுப்பு. அவர் சொன்னது, சொல்லாதது எல்லம் வைத்து, நேர அட்டவணை படி பாடம் கற்பிக்க விடாமல் எமது கல்வியை குழப்புகிறார் என ஒரு கடிதம் எமது வகுப்பு மாணவர்களது கையொப்பத்துடன் பாடசாலை அதிபருக்கு போனது. அடுத்த வாரம் ஆசிரியர் பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இடம் மாறறம் செய்யப்பட்டதில் எமது வகுப்பினருக்கு ஒரே புழுகம்.
எமது வகுப்பு மாணவர்களால் சூட்டப்பட்ட பட்ட பெயர்கள் தன் மேலே சொன்னவை. ஆனால் சில ஆசிரியர்களது பட்ட பெயர்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதும் நடக்கும்.
நாம் கற்பதற்கு 20 வருடத்துக்கும் முன் இருந்தே பௌதீகவியல் கற்பிக்கும் ஆசிரியை ஐ காகம் என அழைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. அதே போல துணையதிபரை "பாம்" என அழைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.
எவ்வளவு தான் ஆசிரியர்களை நக்கல்/ பட்ட பெயர் சூட்டி அழைத்தாலும் அவர்கள் ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியிலும், அவர்கள் அடையும் அடைவுகளுக்கு முக்கிய காரண கர்த்தாக்கள்.
ஆனால் நாம் பாடசாலையில் கற்ற போது எந்த ஒரு ஆசிரியரும் நானறிந்த வரையில் மாணவர்களை ஆசிரிய தொழிலுக்கு வாருங்கள் என கூறியது கிடையாது. பொடியளே ஒழுங்கா படிச்சு, கம்பசுக்கு போய் ஏதும் ஒழுங்கான வேலைக்கு போக பாருங்கோ இந்த வாத்தி வேலைக்கு மட்டும் வந்திடாதங்கோ என சொல்லிய ஆசிரியர்களே அதிகம்.
ஆரம்பத்தில் உயர் தர பாடத்தெரிவின் போது நான் வர்த்தக துறையை தெரிவு செய்வதா, அல்லது உயிரியல் துறையை தெரிவதா என குழம்பி வர்த்தக துறை எனும் முடிவுக்கு வந்திருந்தேன். வர்ததக துறை வகுப்புகளுக்கும் போக தொடங்கிவிட்டேன். ஆனால் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் பலருக்கும் அது ஏற்புடையதாக இருக்கவில்லை. அதே பாடசாலையில் கற்பித்த எனது அப்பாவிடம் எல்லாருமாக செர்ந்து என்னை உயிரியல் துறைக்கு மாற்றி விடுமாறு கொடுத்த ஆலோசனை/ நச்சரிப்பு தாங்காமல் அது வரை எனது சுதந்திரம் என விட்டிருந்த அப்பாவும் எல்லா ஆசிரியர்களும் சொல்லுகிறார்கள், நீங்கள் (அப்பா நீங்கள் என தான் சுட்டுவது வழக்கம்) உயிரியல் கற்க கூடிய மாணவன், வீணாக வர்த்தகம் கற்க வேண்டாம் என சொல்லுகிறார்கள் எனவே உயிரியலை மாறி படியுங்கள் உங்களால் அப்பாடத்தை சிறப்பாக கற்க முடியாவிட்டால் இரண்டாம் தடவை வர்த்தகத்தை படியுங்கள் என சொன்னார். ஆனால் கட்டாயமல்ல யோசித்து முடிவெடுங்கள் எனவும் சொன்னார். சரி என்னதான் நடக்கிறது பார்ப்போம் என உயிரியலை கற்க முடிவெடுத்து அதையே படித்தேன்.
எல்லா ஆசிரியர்களும் வர்த்தக துறையை தெரிவு செய்ய வேண்டாம் (எமக்கு 9, 10, 11 ஆம் ஆண்டுகளில் வர்த்தகம் கற்பித்த ஆசிரியர் உட்பட) என கூறியதன் காரணம் வர்த்தம் கற்றால் ஈழத்தை பொறுத்தவரை பொதுவாக செய்ய கூடிய வேலை ஆசிரியர் வேலை மட்டும். ஆசிரியர் பணிக்கு தமது மாணவர்கள் வருவதை விரும்பாத ஆசிரியர்கள் அதை விட வேறு எதை சொல்லுவார்கள்.
இரண்டு வருட காலம் தற்காலிகமாக ஆசிரியராக கற்பித்த அனுபவத்தில் இருந்து எனக்கு ஆசிரியர் பணி மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அதில் கிடைத்த ஆத்ம திருப்தி எனது தற்பொதைய கற்றலை முடித்த பின் தேடி பெற போகிற வேலையில் கிடைக்குமா தெரியவில்லை.
Thursday, 3 May 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பள்ளி நாட்களை மீட்டுப் பார்க்க வைத்தீர்கள்...
சவாரி வாத்தியார் எனக்கு ஆங்கிலம் கற்பித்தார்... ஒரு முறை நான் ஆங்கிலம் தொடுத்து எழுதப் பாழகிவிட்டு, பரிசோதனையின் பொழுது ஆங்கிலத்தில் தொடுத்தெழுதி எனக்கு ஆங்கிலத்திற்கு அந்தத் தவணை கிடைத்த புள்ளி எவ்வளவு தெரியுமா?? 9/100 - சவாரி எனது பரீட்சைத் தாளைத் தான் திருத்த மாட்டேன் என்று கூறி விட்டார்... (fill in the blanks க்கு மட்டும் தான் எனக்கு மாக்ஸ் வந்தது) ஏன் என்றால் தான் தொடுத்தெழுதும்படி கூறவில்லையாம். ஆகையால் தன்னால் திருத்த முடியாது என்று விட்டார்... மற்றைய பாடங்களில் நல்ல புள்ளிகளைப் பெற்று அவ் வருடம் பரிசளிப்பு விழாவில் பரிசிலைத் தவறவிட்டேன் ஆங்கிலத்திற்கு குறைவாகப் புள்ளி கிடைத்ததால். அப்படிச் சவாரி செய்த அநியாயங்கள் பல... ஹஹஹ
கொய்யாக்காய் ரீச்சரை ஞாபகமா? அவர்... யாராவது வகுப்பறையில் பழங்கள் கொண்டு வந்தால் பறித்து விடுவார்... பறித்து விட்டு.. பாடசாலைக்கு இதெல்லாம் கொண்டு வரக் கூடாது என்று சொல்லி விட்டு வகுப்பறையில் எம் முன்னேயே அதைத் தான் உண்பார்.
ம் ஞாபகம் இருக்கு கொய்யாகாய் ரிச்சர், இன்னும் பலரையும்.....
சாவரி ஆங்கிலம் கற்பிக்க வந்து கழுத்தறுத்தது போல வேற ஆரும் செய்யேல்லை
ஆகா விஐ எங்களுக்கு ஒரு பூணை வாத்தி என்று ஒருவர் இருந்தவர். அவருக்கு நில நிறக் கண். ஆதனால் தான் அப்படி கூப்பிடுவார்கள். அவரை கண்டவுடனே எல்லோரும் மியாவ் மியாவ் என்பார்கள்.
எவ்வளவு இனிமையான காலம் அது?
இன்றுதான் வாசித்தேன் விஜே டக்கென்டு முடிச்ச மாதிரியிருக்கு இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் :-) பள்ளிக்கூடத்தில ஒன்றையும் ஒளிச்சு வைக்கேல்லயா:-)
என்ர தமிழ் ரீச்சர் என்னை, என் நண்பிகளைப் பல தடவை கேட்டிருக்கிறா ஒருத்தியாவது ரீச்சரா வாங்கோ என்று.
எனக்கப்பிடி ரீச்சர் மாருக்கு பட்டப்பெயர் வச்சமாதிரி ஞாபகம் வராதாம் ஆனால் கூடப்படிக்கிற ஆக்களுக்குப் பட்டப்பெயர் வைச்சு அதால நிறையப் பிரச்சனை எல்லாம் வந்திருக்கு உதாரணம் 1:
ஆறாம் வகுப்பு வரலாறுப் புத்தகத்தில குசுமாசனதேவி என்றொராள் வருவா அவா யாரென்று மறந்திட்டன் ஆனால் அப்பிடியொரு பட்டம் வைச்சதால பிரச்சனை வந்தது மட்டும் ஞாபகமிருக்கு.
Post a Comment