Thursday, 3 May 2007

உயிர் பயத்தோடு கழிந்த ஒரு பாடசாலை நாள்

நினைவு மீட்டல் அல்லது நனவிடைதோய்தல் என்பது தவிர்க்க முடியாதது. அதிலும் சில நினைவுகள் மறக்க முயன்றாலும் அடிக்கடி ஞாபகம் வந்து கொண்டே இருக்கும். சில மகிழ்வானவை ஆனால் வருத்ததை, ஒரு வித அச்சத்தை, எமது உயிருயிருக்கு எந்த நிமிடத்திலும் அச்சுறுத்தல் வரலாம் என எண்ண வைத்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வந்து ஞாபமூட்டி கொண்டே இருக்கும்.

இந்த சம்பவமும் அப்படியானது தான். 1987-1990 க்கு இடைப்பட்ட இந்திய இராணுவ காலம். இந்திய விமானங்கள் ஒபரேசன் பூமாலை எனும் நடவடிக்கையில் விமான மூலம் உணவு பொதி போட்டதும், இந்திய இராணுவம் அமைதி காக்க ????? வந்து இறங்கிய உடனடியான பொழுதுகளில் ஒவ்வொரு கிராம பிரசைகள் குழுவும் அப்பகுதிக்கு பொறுப்பாக வந்த இராணுவ அதிகாரிக்கு நிறைகுடம் வைத்து மாலையிட்டு வரவேற்ற நிகழ்வும் நடைபெற்றதாக ஞாபகம். பின்னர் எல்லாமே பொய்த்து போய் மோதல் ஆரம்பித்த பின் ஆங்காங்கே ரோந்து என வரும் இராணுவத்துக்கும் கரந்தடி பாணியில் இருந்த புலிகளுக்கும் இடையில் மோதல் நடப்பதும் வழக்கம். மோதல் முடிவில் புலிகள் தப்பி போய் இருப்பார்கள் ஆனால் அப்பகுதியால் போய் வரும் இளைஞர்கள் அடி வாங்குவது சாதாரணமானது.

இப்படியாக ஒரு நாள் எமது பாடசாலையை அண்மித்த பகுதியில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் மோதல் வெடித்திருந்தது. சாதகமற்ற சந்தர்ப்பங்களில் புலிகள் அப்பகுதியை விட்டு விலகி செல்வது சாதாரணமான நிகழ்வு. அன்றும் அவர்கள் விலகி சென்று விட்டார்கள். ஆனால் அவர்கள் விலகி சென்ற பின்னும் இராணுவம் வேட்டுக்கள் தீர்ப்பதையோ இலகு ரக மோட்டார்கள் மூலம் தாக்குவதையோ 2-3 மணி நேரங்களுக்கு நிறுத்த வில்லை. மோதல் ஆரம்பித்தது எமது பாடசாலை அருகாமை ஆகையால் துப்பாக்கி சன்னங்கள் எமது வகுப்பு கூரைகளிலும், மோட்டார்கள் எமது பாடசாலை மைதானத்தினுள்ளும் சரமாரியாக விழ தொடங்கி இருந்தன. எமது பாடசாலை அமைப்பு மையத்தில் விளையாட்டு மைதானமும், அதை சூழ கட்டிடக்களுமாக இருந்தது.
அப்போது கணித பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியை எதுவும் செய்ய முடியாத நிலையில் எல்லா மாணவர்களையும் மேசை/ வாங்கின் கீழ் படுக்க சொல்லி விட்டு தானும் நிலத்தில் விழுந்து படுத்து கொண்டார். ஓட்டு கூரை வகுப்புக்களில் இருப்பது பாதுகாப்பற்றது அத்துடன் எமது வகுப்புக்களுக்கு முழுமையாக மூடி சுவர்கள் இல்லை; அரை சுவர் கொண்ட வகுப்பறைகள். அப்போது பாதுகாப்பு தேட வேறு எந்த மார்கமும் இல்லை. கிட்ட தட்ட அரை மணிநேரம் படிக்கும் மேசை/ வாங்குகள் தான் எமக்கு கவசங்கள்.

அப்போது மோட்டார் வீச்சு/ துப்பாக்கி குண்டில் இருந்து ஓரளவு பாதுகாப்பானது என கருதுவது நாலு பக்கங்களும் மூடி கட்டப்பட்ட மாடி கட்டிடங்களின் தரை தளங்கள்.
இடையிடையே மோட்டார் வீச்சில் ஓய்வு கிடைக்கும் இடைவெளிக்களை அவதானத்தின் மூலம் தெரிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவர்களை அப்படியான மாடி கட்டடங்களுக்கு அழைத்து சென்று பாதுகாப்பு தேடுவதில் ஈடுபட்டனர். அவ்வாறு தனது வகுப்பு மாணவர்களின் நிலையறிய சென்ற அதே பாடசாலையில் கற்பித்த எனது தந்தை காலில் சிறு காயத்துகுள்ளகி இருந்தார். காயம் பட்ட உடனடியாக அவரால் உணர முடியவில்லை, தன் வகுப்பு மாணவர்களை பாதுகாப்பான மாடி கட்டிடத்துக்கு அழைத்து செல்லும் போது செருப்பில் நீர் போல ஏதோ தேங்கிய உணர்வை கொடுத்த போது தான் அவரால் அவரது காலில் காயம் பட்டதையே உணர முடிந்திருக்கிறது. ஆனால் அந்த காயம் பெரிதாக ஏற்படாதது ஒரு வகையில் மகிழ்ச்சி தான்.

இராணுவம் பாடசாலையுள் நுளைந்து சுடுவார்களோ என்றும் அப்போது எமக்கு பயமாக இருந்தது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் பாடசாலைக்கு வெளியில் நின்று 2- 3 மணி நேரமாக தீர்த்த துப்பாக்கி வேட்டுக்களும், மோட்டார்களும் எமது பாடசாலையையே அதிர வைத்தன. 10- 11 வயதே ஆன எங்களுக்கு அருகிலான துப்பாக்கி வேட்டுக்களும், மைதானதில் விழுந்து வெடித்து புகை கிழப்பிய மோட்டார்களும் எவ்வாறான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அன்று இராணுவம் பாவித்த மோட்டார்கள் இறப்பர் மோட்டார்கள் தான் என்றும் அவை பாரிய சத்ததை தான் தரும், அதிக சேதம் தராது என்பதையும் பின்னர் சொல்லி கேள்விப்பட்டோம்.

5 comments:

said...

ஆமாம் விஐ அந்த பயங்காரத்தின் வலியை நானும் அனுபவத்து இருக்கின்றேன். ஒரு முறை பாடசாலையால் வரும்போது எங்கள் ஊரில் குண்டு போட வந்த சூப்பர்சோனிக் எங்கள் தலைக்கு மேலாக பறந்து போக நம் மீது தான் அமு குண்டு போடுகின்றது என்று கத்தினது இப்பவும் தாழப் பறக்கும் விமானங்களை காணும் போது அந்த அச்ச உணர்வு மீண்டு ஒரு முறை வந்து போகும்.
அனுபவ மீட்டலுக்கு நன்றி விஐ.

said...

சந்திரன்,
எனக்கும் இது ஒரு மறக்க முடியாத சம்பவமே. நான் அப்போது தான் ஆண்டு ஆறுக்கு வந்ததாக ஞாபகம்... இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்த பொழுது வாங்கின் கீழ் படுத்திருந்தோம்... பின்பு எனது மாமி வீட்டினர் (தக்காளி வீடு)... எமது பாடசாலையின் பின்புறமே இருந்ததால் அவர்கள் வீட்டிற்கு ஓடிப் போய் (துப்பாக்கி வேட்டு, செல் வீச்சு ஓய்ந்த நேரத்தில்) அவர்களுடைய பதுங்கு குளியில் பதுங்கினோம்...

நாமெல்லாம்.. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... செல்வீச்சினிலே.. பதுங்கு குழியிலே... பாம்பு கடி வாங்கி இறந்த என் தோழன் ஞாபகம் வருதே என்று தான் பாட வேண்டும்.. என்ன செய்ய எமது நிலை இப்படி...

said...

நந்தியா இது ஒரு சம்பவம் இதே போல பல உண்டு. முன்னர் இரண்டு பதிவிகளில் குண்டு வீச்சு அனுபவம் பற்றியும் எழுதியிருந்தேன். ஒரு குண்டு வீச்சில் எமது வகுப்பு தோழி பலியானார்.

ஹரன் ம் ம்... அப்போது கற்ற யரால் இதை மறக்க முடியும்.

தக்காளி காணாமல் போய் விட்டதாக :(( ரொரண்டோ போன போது நண்பர்கள் சொன்னார்கள். அதை உறுதி படுத்த முடியவில்லை. உங்களுக்கு தெரியுமா?

said...

எல்லாருக்கும் உள்ள அனுபவம் ,நிறய தடவை நடந்திருக்கு நல்லா யாபகம் இருக்கிற்து.
நான் ஆண்டு 6 முதன் முதல CHC க்கு போகேக்க எற்பட்டது. அதேயே தமிழ் பாட சோதனைக்கு கட்டுரைய எழுதினான்.

// தக்காளி // சங்கதனையோ???

said...

// தக்காளி // சங்கதனையோ???


ஆமாம்