Tuesday, 1 May 2007

எல்லமே அழகு தான்

எது அழகு? எல்லாமே அழகு தான். ஆனால் எல்லாமே எல்லா நேரமும் அழகாய் தோன்றாது. இன்றைக்கு அழகாய் தோன்றுவது நாளைக்கு அழகாய் தோன்றாது போகலாம். மனதும், வயிறும் நிறைந்திருந்தால் எல்லாமே அழகுதான். அழகு பற்றிய சுழற் பதிவில் சினேகிதி என்னை அழைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவருடைய அழைப்பை இன்று தான் நிறைவேற்ற முடிந்தது.

1. கடலழகு அதன் கரை அழகு


பருத்திதுறை கடலோரம்

பதின்மங்களில் மார்கழி ஞாயிறுக்கு வல்லிபுரகோயிலுக்கு போவது பற்றியும், அங்குள்ள கடலோரம் போவது பற்றியும் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அங்கு கடலோரம் இருக்கும் வெண்மணல் திட்டுக்கள், மண்ணில் கால் புதைய புதைய ஏறி இறங்கும் சுகமே தனி. மதியம் மண்டை காயும் வெயில் நேரமாக இருந்தாலும் கடலோரம் வீசும் காற்றில் அந்த வெக்கை தெரியாது. 2005 ஆம் ஆண்டில் கோயிலுக்கு போன போது கடற்கரைக்கு போக வேண்டும் என மனம் தவித்தாலும் போக முடியாத சூழல். அந்த மணற்திட்டை கோயிலுக்கு அண்மையில் இருந்து ஒளிப்படம் எடுக்க மட்டுமே முடிந்தது :(.

யாழ்குடா நாட்டின் தீவு பகுதிகளுக்கு போவதில், அந்த படகு பயணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி, அதிலும் ஊர்காவற்துறையில் இருந்து புறப்படும் படகில் நயினா தீவுக்கு போகும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. ஊர்காவற்துறையில் இருந்து புறப்படும் படகில் நயினா தீவுக்கு போகும் போது மறுகரையில் தெரியும் காரைநகர் (காரைதீவு), அங்குள்ள ஒல்லாந்தர்? கால கடற்கோட்டை, எழுவை தீவு, பருத்தி தீவு?, அனலை தீவு, தீவுகளின் அழகான தோற்றத்தை கடற்காற்றை வாங்கியபடி யாருடனும் எதுவுமே பேசாது அனுபவிப்பது ஒரு சுகமான அனுபவம்.அப்படியே நயினா தீவு அம்மன் கோயிலை கும்பிட்டு, கோயில் மடத்தில் ஒரு பிடி பிடிக்கலாம். அங்குள்ள மடத்தில் வழங்கப்படும் உணவும் ஒரு தனி சுவை தான்.

புலம் பெயர்ந்த பின் ஒரு கடல் பயணத்தின் போது


2. நெல்வயலழகு


சிறு வயதில் இருந்தே எங்கள் வயலுக்கு அப்பாவுடன் செல்வது வழக்கம். நெல் முளைத்ததில் இருந்து, மட்டம் வெடித்து குடலையாக்கி, கதிர் தள்ளி, பாலடைந்து, கதிர் முற்றி தலை வணங்கி, அருவி வெட்டி சூடடிக்கும் வரை ஓவ்வோரு பருவத்திலும் நெல் வயல் அழகானது. மென் பச்சை இரண்டிலை பயிரும், யூரியா போட்ட பின் கரும் பச்சை நிறமும், நெல் முற்றி தலை வணங்கி சலசலக்கும் போது காட்டும் பொன் நிறமும்.... இன்றும் என்றும் அழகானது. எனக்கு மட்டுமல்ல அங்கிருக்கும் என் உறவுகளுக்கும் இவை இப்போது நினைவுகளே. மிதி வெடி விளையும் வயல்களாகிவிட்ட எம் வயல்களில் எப்போது நெல் விளையும், எம் வீட்டில் எப்போது சொந்த அரிசி சோறு போங்கும் :(

3. மலையழகு
யாழில் இருந்து விட்டு மலை நாட்டுக்கு போகும் போது மலை நாடு மிக குளிரான இடமாகவே இருந்தது (இப்ப அது குளிரே இல்லை எண்டு சொல்ல கூடியதா இருக்கும்). அங்குள்ள தேயிலை தோட்டங்கள், முகில் தவளும் மலை முகடுகள், சல சலத்தொடும் அருவிகள் எல்லாமே அழகு தான். (அட்டை காலில் ஏறாத வரை :))

4. குழவியழகு

சிறு குழந்தைகள் மட்டுமில்லை, ஆடு, மாடு, கோழி, வாத்து எல்லாமே அவற்றின் இளம் பருவத்தில் மிக அழகானவை.


5. பனியழகு

பார்க்கும் இடம் எங்கும் வெண்மையாய் படர்ந்திருக்கும் பனியழகு. காற்றோடு மறை -53 பாகை டிகிரி செல்சியசாக உணரும் போதில், கையில் போட்டிருக்கும் கையுறையையும், காலில் போட்ட பனி கால காலணியூடும் உட்சென்று நக கண்ணில் குண்டூசி குத்துவது போல் வருத்தம் தந்தாலும் வெண்பனி அழகுதான்.


5 comments:

Anonymous said...

ஆழகு... எல்லாம் பார்ப்பவர் கண்ணைப் பொறுத்தது...

கரன்

said...

\\அட்டை காலில் ஏறாத வரை :))\\

அப்ப ஏறியிருகு்குது போல :-))) நாங்கள் ஒரு திருமண வீட்டுக்கு ஹற்றன் பக்கம் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தம் றப்பர் காட்டுப்பக்கம் ஒரு தடவை நடக்கப்போவம் என்று வெளிக்கிட்டு வேற எங்கயோ பாதைமாறிப்போய் அட்டைட்ட மாட்டுப்பட்டு ஐயோ ஜென்மத்துக்கு மறக்கேலாது.

வல்லிபுரக்கோயில் மணல் ஒரு தனி அழகுதான்.அந்த மணல்ல இருந்துகொண்டு கச்சான் சாப்பிடுறதும் குழந்தைப்பிள்ளைகளைக் குளிக்கவாக்கிறதைப் பார்க்கிறதும் கூட:-)


அழகே அழகே பாட்டு அதில் வரும் ழ ல ள க்கள் கூட அழகு.

said...

நீங்கள் சொல்வது போல் மனமும் வயிறும் நிறைந்திருந்தால் எல்லாம் அழகு தான்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வல்லிபுரக்கோயில் மணல் ஒரு தனி அழகுதான்.அந்த மணல்ல இருந்துகொண்டு கச்சான் சாப்பிடுறதும் குழந்தைப்பிள்ளைகளைக் குளிக்கவாக்கிறதைப் பார்க்கிறதும் கூட:-)

ஆமாம் சினேகிதி ஆலமர நிழலில் நானும் அமர்ந்து காச்சான் சாப்பிட்டு இருக்கேன்.

said...

அழகாத்தான் சொல்லியிருக்கிறியள், சோதினை முடிஞ்ச உடனை நானும் சில அழுக்கு மன்னிகவும் அழகுக்குறிப்பு எழுத வேணும்.

//Anonymous said...
ஆழகு... எல்லாம் பார்ப்பவர் கண்ணைப் பொறுத்தது...

கரன்//

இப்பிடியே சொல்லிக்கொண்டு போனால் புத்தராகிவிடுவியள் அண்ணை

said...

//அழகாத்தான் சொல்லியிருக்கிறியள், சோதினை முடிஞ்ச உடனை நானும் சில அழுக்கு மன்னிகவும் அழகுக்குறிப்பு எழுத வேணும்.//

எழுதுங்கோ

//இப்பிடியே சொல்லிக்கொண்டு போனால் புத்தராகிவிடுவியள் அண்ணை //

அவர் ஏற்கனவே புத்தர் மாதிரி தான் கதைக்கிறார்